Author: கிருபாநந்தினி
•Thursday, November 26, 2009
ல்லாரும் மன்னிச்சுக்குங்க... நானும் வலைப்பூ எழுத வந்துட்டேன்.

நான் அதிகம் படிச்சவள் இல்லை. எனக்குச் சுவையாக எதுவும் எழுதத் தெரியாது. கதை, கட்டுரை என எதுவும் எழுதியது இல்லை. அவ்வளவு ஏன், வாசகர் கடிதம்கூட எந்தப் பத்திரிகைக்கும் எழுதிப் போட்டது இல்லை. கணினி அறிவும் அவ்வளவாகக் கிடையாது.

என் கணவர் கிருபாகரன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர். மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று பறந்துகொண்டிருப்பார். திருமணமாகி வந்ததற்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே கண்ணால் பார்த்தேன். நான் வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் பொழுதுபோவதற்காக இணையத்தில் உலவக் கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் வலைப்பூ என்று சொல்லக்கூடிய பிளாகுகளைப் படிக்கவும், அவற்றுக்கு பதில் அளிக்கவும் கற்றுக்கொண்டேன்.

எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். எனவே, சமையல் குறிப்புகளை வலைப்பூவில் போடலாமா என்று கணவரிடம் கேட்டேன். ஆனால், ‘அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிளாக் ஆரம்பிக்காதே! சுவாரசியமாக இருக்காது. உன் எண்ணங்களை, கருத்துக்களை எதையாவது எழுது!’ என்று சொல்லி, எனக்கு ஒரு வலைப்பூ வடிவமைத்துத் தந்தார். எப்படிப் பதிவிட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்.

முதலில் ‘அசரீரி’ என்று என் பிளாகுக்குப் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். அந்தப் பெயரில் வேறு யாரோ வைத்திருக்கிறார்களாம். எண்ணங்கள், என் மன வானில், மனசு, என் உலகம் என்று என்னென்னவோ பெயர்கள் சொன்னேன். எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏற்கெனவே வலைப்பூக்கள் இருந்தன. மிகச் சோர்ந்துபோய் கடைசியாக இந்தப் ‘படித்துறை’ என்ற பெயரை முயற்சி செய்யச் சொன்னேன். என் அதிர்ஷ்டம், இது கிடைத்தது.

‘படித்துறை’ என்பதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இது ஒரு இலக்கியப் பெயர் மாதிரி தோன்றுகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து, ஒருவரோடொருவர் அளவளாவி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடம் படித்துறை. எனவே, என் வலைப் பூவுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். மற்றபடி இலக்கியத்திலோ சினிமாவிலோ அரசியலிலோ எனக்கு அதிகம் பரிச்சயம இல்லை. தவிர, நான் எழுத்தாளரும் இல்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியாது. அதனால்தான் ஆரம்பத்திலேயே வலைப்பூ எழுத வந்ததற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

ஏதோ என் மனதில் பட்டதை இதில் அவ்வப்போது எழுதி வைக்கிறேன். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ‘ஐயையே! இவளெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதது?’ என்று முகம் சுளிக்காதீர்கள். அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். சுருக்கமாகத்தான் எழுதுவேன்.

இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.

மற்றபடி உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,

கிருபாநந்தினி.

என் அடுத்த பதிவு: ‘கோலங்கள்’ சீரியல் பற்றி...
|
This entry was posted on Thursday, November 26, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

67 comments:

On Nov 26, 2009, 11:20:00 PM , பின்னோக்கி said...

வருக. வாழ்த்துக்கள். நல்ல மொழி நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

 
On Nov 27, 2009, 12:02:00 AM , ஸ்ரீ.கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் ,..எழுதுங்கள்

 
On Nov 27, 2009, 12:11:00 AM , Elanthi said...

வாங்கோ வாங்கோ தாராளமா எழுதுங்க. நானும் இனி தான் எழுத ஆரம்பிக்க போறேன்.
நல்ல இந்திய சாப்பாடுகளை செய்வது பற்றி எழுதுங்க.
elanthit@gmail.com

 
On Nov 27, 2009, 9:49:00 AM , Vijayasarathy R said...

நல்ல ஆ”ரம்பம்” கிருபாநந்தினி. உங்கள் எழுத்துக்கள் எளிமையாகவும் அதே சமயத்தில் நீங்கள் சொல்லவந்த கருத்துக்களையும் சொல்கிறது.

இதையே தொடருங்கள். கோலங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்.

 
On Nov 27, 2009, 10:27:00 AM , மகா said...

buildup nalla than iruku vanga pakkalam ....

 
On Nov 27, 2009, 12:37:00 PM , SenthilMohan K Appaji said...

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

 
On Nov 27, 2009, 12:46:00 PM , உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

 
On Nov 27, 2009, 2:27:00 PM , முனைவர் இரா.குணசீலன் said...

தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். //

இது மிகப்பெரிய பலம் நந்தினி..
வலையுலகம் சார்பாபத் தங்களை வரவேற்கிறேன்..

தொடரந்து எழுதுங்கள்..
கணினி தொடர்பான தங்கள் ஐயங்களை கூகுளில் வினவினால் ஆயிரம் பக்கங்கள் விரியும்.....

வாழ்த்துக்களுடன்...

 
On Nov 27, 2009, 3:08:00 PM , சிங்கக்குட்டி said...

பதிவுலகில் வரவேற்பதோடு உங்கள் பதிவுகள் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

மேலும் பின்னூட்ட "வோர்ட் வெரிபிகேசனை" நீக்குவதன் மூலம் அதிக பின்னூட்டங்களை பெற முடியும் என்பது என் கருத்து.

 
On Nov 27, 2009, 3:08:00 PM , Unknown said...

நீங்கள் தாராளமாக எழுதலாம். இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆவலுடன் இருக்கிறேன்.

 
On Nov 27, 2009, 3:24:00 PM , செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

 
On Nov 27, 2009, 3:49:00 PM , பொன்னியின் செல்வன் said...

வருக ..... வாழ்த்துக்கள் ...... உங்கள் பின்னூட்டங்களே கவனிக்கும் படியாக இருக்கும். இப்போது வலைப்பூவே உங்கள் கையில்....

நீங்கள் அசரீரி தான் வலைப்பூவின் பெயராக வைப்பீர்கள் என்று எண்ணினேன். அதை விட சிறப்பாக இருக்கிறது படித்துறையின் பெயர் காரணம்.

படித்துறை பெயர் காரணம் அருமை.... ஆறோ வாய்க்கலோ உள்ள கிராமங்களின் கருத்து மேடை - படித்துறை. அதாவது 'கேணி' மாதிரி !!


ஆரம்ப இடுகையே தன்னடக்கத்தோடு இருக்கிறது. அதுவே ஒரு எடுத்துக்காட்டு, வரும் இடுகைகள் சிறப்பாக இருக்கும் என்று.

சிறப்பாக எழுத உள்ளம் கனிந்த வாழ்துக்கள் !!

 
On Nov 27, 2009, 4:00:00 PM , Rajeswari said...

வாழ்த்துக்கள் நந்தினி !!!தொடர்ந்து எழுதுங்கள்

 
On Nov 27, 2009, 4:00:00 PM , Rajeswari said...

plz remove word verification...

 
On Nov 27, 2009, 4:05:00 PM , நேசமித்ரன் said...

உங்கள் வரவு நல்வரவாகட்டும்
தொடர்ந்து எழுதுங்கள்

 
On Nov 27, 2009, 4:33:00 PM , vasu balaji said...

அசத்துங்க.

 
On Nov 27, 2009, 5:17:00 PM , லதானந்த் said...

வாழ்த்துக்கள்.
தமிழில் பிழை இன்றி எழுதுவது மிகப் பெரிய பலம். பதிவுலகில் வெகு சிலரே பிழையின்றித் தமிழில் எழுதுகின்றனர்.
மிகச் சிறப்பான எழுத்துலக அங்கீகாரம் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

டெம்ப்ளேட்டின் பின்புலத்தில் உள்ள பூக்கள் போல வேறொரு பதிவரும் வைத்துள்ளார். எனவே மாற்ற முயலலாம். “படித்துறை” மிகவும் பெரிய எழுத்துக்களில் இருக்கிறது. லேசாகச் சிறிதாக்கலாம்.

 
On Nov 27, 2009, 6:31:00 PM , ரிஷபன் said...

வாங்க கிருபா நந்தினி உங்க அடுத்த பதிவுகளுக்காக காத்திருப்பு

 
On Nov 27, 2009, 6:38:00 PM , கே. பி. ஜனா... said...

உங்கள் முன்னுரையே ஒர் நல்ல பதிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள். -- கே.பி.ஜனா

 
On Nov 27, 2009, 10:11:00 PM , Rekha raghavan said...

வாங்க மேடம். முதல் பதிவே அசத்தல் நடை. தமிழிலில் நன்றாக எழுதுவேன் என்று சொல்லிட்டீங்களே! வேறென்ன வேண்டும்? மேலும் மேலும் எழுதுங்க. கதை, கவிதை என்று உங்கள் சிந்தனையை வளர்க்க முயற்சி செய்யுங்க என்ற வேண்டுகோளுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

ரேகா ராகவன்.

 
On Nov 27, 2009, 10:43:00 PM , கிருபாநந்தினி said...

அன்பின் கிருபாநந்தினி,

வாழ்த்துக்கள்! வலையுலகில் தங்கள் வரவு நல்வரவாகட்டும்!!
தமிழில் பிழை இல்லாமல் எழுதுவதென்பது வரம். மிகச்சிலருக்கே கிடைத்திருக்கும் வரம். சந்திப்பிழைகள், இலக்கணப்பிழைகள் பற்றியும் அவ்வப்போது எழுதுங்கள். கோலங்கள் பற்றிய தங்களுடைய அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

* படித்துறையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. ஏதோ தொழில்நுட்ப கோளாறு போலிருக்கிறது.
* Followers Widget வைத்துவிட்டால், பின்தொடர ஏதுவாக இருக்கும்.

மிக்க மகிழ்ச்சி,

பீர் முஹம்மத்.

 
On Nov 27, 2009, 10:45:00 PM , லதானந்த் said...

அண்புள்ள திருமதி நந்தினி அவர்களுக்கு!

வாழ்த்துக்களைப் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்.

பிழையின்றித் தமிழ் எழுதுவோர் பதிவுலகில் ஒரு சிலரே!

எனவே நற்றமிழைப் பயன்படுத்தித் தொடர்ந்து எழுதுங்கள்.

நாட்குறிப்பு, சமையற்குறிப்பு, கவிதை இவைகள் ஏற்கனவே பதிவுலகில் மலிந்து கிடக்கின்றன.

இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்.

இயன்றபோது எனது பிளாக்கை வாசித்துப் பாருங்கள். வெறைட்டி என்பது என்னவென்று ஆறிய முடியும்.

அன்புடன்
லதானந்த்.

 
On Nov 27, 2009, 10:46:00 PM , ஹரீஷ் said...

கிரிபாநந்தினி அவர்களே,

வருக ..... வாழ்த்துக்கள் ...... உங்கள் பின்னூட்டங்களே கவனிக்கும் படியாக இருக்கும். இப்போது வலைப்பூவே உங்கள் கையில்.... நீங்கள் அசரீரி தான் வலைப்பூவின் பெயராக வைப்பீர்கள் என்று எண்ணினேன். அதை விட சிறப்பாக இருக்கிறது படித்துறையின் பெயர் காரணம். படித்துறை பெயர் காரணம் அருமை.... ஆறோ வாய்க்கலோ உள்ள கிராமங்களின் கருத்து மேடை - படித்துறை. அதாவது 'கேணி' மாதிரி !! ஆரம்ப இடுகையே தன்னடக்கத்தோடு இருக்கிறது. அதுவே ஒரு எடுத்துக்காட்டு, வரும் இடுகைகள் சிறப்பாக இருக்கும் என்று. சிறப்பாக எழுத உள்ளம் கனிந்த வாழ்துக்கள்

 
On Nov 27, 2009, 10:47:00 PM , ஹரீஷ் said...

//// தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். ////

போன மெயிலில், உங்கள் பெயரில் எழுத்து பிழை செய்து விட்டேன்.. வருந்துகிறேன்.

 
On Nov 27, 2009, 10:48:00 PM , லதானந்த் said...

அண்புள்ள என டைப் ஆகிவிட்டது. அன்புள்ள எனத் திருத்திக் கொள்ளவும்.

 
On Nov 27, 2009, 10:49:00 PM , கிருஷ்ண பிரபு said...

சகோதரி உஷாநந்தினிக்கு.

உங்களுடைய 'படித்துறை’ வலைப்பூவின் முதல் பதிவை என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி.

பெண்கள் சமையல் அல்லது குழந்தை வளர்ப்பு மட்டும் தான் எழுத வேண்டுமா என்ன? நீங்கள் சமூகத்தில் தானே இருக்கிறீர்கள். உங்களை பாதிக்கும் அனைத்தையும் ஏன் எழுத்தில் கொண்டு வரக் கூடாது.

1. எனக்குத் தெரிந்த ஒருத்தி நன்றாக எழுதிக் கொண்டு இருக்கிறாள்.
பெயர்: சாரதா
இடம்: சென்னை
வலைப் பூ: http://amirdhavarshini.blogspot.com
மின்னஞ்சல்: shardha2003@gmail.com

இவளுடைய பதிவுகளை படித்துப் பாருங்கள். சமையல் செய்வதைக் கூட அழகான அனுபவமாக்கிவிடுவாள். பதிவின் மூலமாகத் தான் எனக்கு இவளைத் தெரியும். நல்ல சகோதரி மற்றும் தோழி. ஆவலுடன் உரையாடுங்கள்.

2. இந்த சகோதரி உயிருடன் இல்லை. நான் மிகவும் உருகிப் படித்த பதிவு.
http://anuratha.blogspot.com

இந்த நேரெதிரான பதிவுகளை உங்களுடைய கவனத்திற்காகத் தான் அளிக்கிறேன். மற்றபடி படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படித்தால் மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் ஒரு மாதிரி தான் இருக்கும். போகப் போக சரியாகிவிடும். தொடர்ந்து எழுதுங்கள். உங்களை எழுத ஊக்கப்படுத்தும் உங்களுடைய கணவருக்கு பாராட்டுக்கள்.

உங்களுடைய கணவரிடம் கேட்டு பின் தொடர (Folowers - Activation) வசதி செய்யுங்கள். (Ask you husband to provide followers option in the blog page)

தொடர்பில் இருப்போம்.

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

http://www.online-tamil-books.blogspot.com

 
On Nov 27, 2009, 10:50:00 PM , சத்யராஜ்குமார் said...

ப்ளாக் என்பது யாரும் எழுதலாம். எழுத்துப் பிழை இல்லாமல் தமிழில் எழுத வரும் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். படித்துறை என்பது அழகான பெயர். நிறைவான கட்டுரைகள் பல பதிப்பிக்க வாழ்த்துக்கள்.

 
On Nov 27, 2009, 10:57:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கின்னு பேர வெச்சுக்கிட்டாலும் முன்னோக்கி முதலாவதா வந்து வாழ்த்து சொன்னீங்களே, நீங்க உங்க பொண்டாட்டி புள்ள குட்டியோட ரொம்ப காலத்துக்கு ஒரு கொறையும் இல்லாம நல்லா இருக்கணும்!

 
On Nov 27, 2009, 11:00:00 PM , கிருபாநந்தினி said...

முனைவர் ஐயா! நீங்கள்ளாம் என் வலைப்பூவைப் படிக்கிறீங்கன்னா எனக்குக் கொஞ்சம் உதறலா இருக்குதுங்களே! நான் தப்புப் பண்ணினா தாராளமா குட்டுங்க. ஆனா, கொஞ்சம் தயவுபண்ணி வலிக்காத மாதிரி குட்டுங்க. ஏன்னா, வலிச்சும் வலிக்காத மாதிரியே என்னால நடிக்க முடியாது. அப்புறம் நான் அழுதுடுவேன்!

 
On Nov 27, 2009, 11:02:00 PM , கிருபாநந்தினி said...

உலவு டாட் காம் தெரிவித்த வாழ்த்துக்கு என் வணக்கங்கள். அது சரி, ஏங்க, இது உளவு டாட் காம் இல்லீங்களே!

 
On Nov 27, 2009, 11:04:00 PM , கிருபாநந்தினி said...

செந்தில் மோகன் கே.அப்பாஜி (ஹம்மாடி! மூச்சு வாங்குது! எம்மாம் நீளமான பேரு!) உங்க வாழ்த்துக்கு... உஸ்... உஸ்... என்னோட... உஸ்... புஸ்... நன்றியை புஸ்... புஸ்ஸு... தெரிவிச்சுக்கறேங்க!

 
On Nov 27, 2009, 11:06:00 PM , கிருபாநந்தினி said...

மகா! மகா தப்புங்க இப்படி நீங்க என்னை ‘வாங்க பாக்கலாம்’னு சவாலுக்குக் கூப்புடறது! நான் ஏதோ பாவம் தேமேன்னு எனக்குத் தெரிஞ்சதை எழுதுவோம்னுட்டு வந்தா இப்படித்தான் பயமுறுத்தறதா?

 
On Nov 27, 2009, 11:07:00 PM , கிருபாநந்தினி said...

விஜயசாரதி! ‘ரம்பம்’னுட்டீங்களே! அவ்வ்வ்... அழுகாச்சியா வருது!

 
On Nov 27, 2009, 11:09:00 PM , கிருபாநந்தினி said...

என் இதயத்திலிருந்து... ‘வாங்கோ வாங்கோ தாராளமா எழுதுங்க’ன்னு சத்தியமா ஙொப்புரான உங்க இதயத்திலிருந்துதானே கூப்புட்டீங்க? அப்படீன்னா என் நன்றிகளை என் இதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லிக்கிறேன்.

 
On Nov 27, 2009, 11:11:00 PM , கிருபாநந்தினி said...

ஸ்ரீ கிருஷ்ணா, பகவத் கீதை மாதிரி நச்சுனு ரெண்டே வார்த்தையில வாழ்த்துக்கள், எழுதுங்கள்னு சொல்லி அசத்திப்பிட்டீங்க!

 
On Nov 27, 2009, 11:13:00 PM , கிருபாநந்தினி said...

சிங்கக்குட்டி சொன்னா கேக்காம இருப்பனா? வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கிப்பிட்டேன். ஓ.கே-வா? இந்த மாதிரி வேற ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க. கேட்டுக்கறேன்.

 
On Nov 27, 2009, 11:15:00 PM , கிருபாநந்தினி said...

கிருஷ்ண பிரபு, “தாராளமாக எழுதலாம்; யாருடைய அனுமதியும் தேவையில்லை.” இது வார்த்தை! இனிமே பாருங்க எப்படி அசத்தறேன்னு! உங்க ஊக்க வார்த்தை எனக்கு ஊக்க மருந்து சாப்பிட்ட மாதிரி இருக்குது.

 
On Nov 27, 2009, 11:16:00 PM , கிருபாநந்தினி said...

செ.சரவணக்குமார், வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க! சிக்கனமா வாழ்த்தினாலும் சின்ஸியரா வாழ்த்தினீங்க பாருங்க, அது எனக்குப் புடிச்சிருக்கு.

 
On Nov 27, 2009, 11:19:00 PM , கிருபாநந்தினி said...

பொன்னியின் செல்வன், நீளமா வாழ்த்துச் சொல்லி நெகிழ வெச்சுட்டீங்க. பொன்னின்னா சீதா தேவி. அவளுக்கு லவன், குசன்னு ரெண்டு செல்வன்கள். நீங்க லவனா, ட்வெல்வா... ஸாரி, லவனா, குசனா? :)

 
On Nov 27, 2009, 11:22:00 PM , கிருபாநந்தினி said...

முதன்முதலா எனக்கு வாழ்த்துச் சொன்ன மாதர்குல மணிவிளக்கே... ராஜேஸ்வரி அக்கா! நந்தினின்னு ஷார்ட்டா, ஸ்வீட்டா கூப்பிட்ட உங்க உரிமை... ஐ லைக் இட்!

 
On Nov 27, 2009, 11:23:00 PM , கிருபாநந்தினி said...

நேசமித்ரன், அடடா! என்ன அழகான பேரு! நன்றிங்ணா!

 
On Nov 27, 2009, 11:24:00 PM , கிருபாநந்தினி said...

வானம்பாடிகள், ‘அசத்துங்க’ன்னு சொல்லிட்டீங்க. நான் கொஞ்சம் அசத்துங்க! பரவால்லீங்களா? :)

 
On Nov 27, 2009, 11:25:00 PM , கிருபாநந்தினி said...

யக்கா... ராஜேஸ்வரியக்கா! நீக்கிட்டேங்க்கா!

 
On Nov 27, 2009, 11:29:00 PM , கிருபாநந்தினி said...

வாங்கய்யா வனச்சரகர் அண்ணாச்சி, வாங்க! நீங்க வருவீங்கன்னு தெரியும். வரணும்னும் எதிர்பார்த்தேன். உங்க பதிவுகளுக்கு நான் போட்ட பின்னூட்டங்களை மனசுல வெச்சுக்கிட்டுப் பழி வாங்கிடாதீங்க எசமான்! அதுக்காகவே நல்ல புள்ளையா நீங்க சொன்ன கருத்துக்களை சிரமேற்கொண்டு வலைப்பூவை மாத்திட்டேன்; தலைப்பெழுத்தையும் குறைச்சிட்டேன்! சரியா லதானந்த் அங்கிள்?

 
On Nov 27, 2009, 11:30:00 PM , கிருபாநந்தினி said...

ரிஷபன், நீங்க சிறுகதை எழுத்தாளர்தானே? படிச்சிருக்கேன். எல்லாரும் என் முதல் பதிவுக்கு வாழ்த்து சொன்னப்ப, நீங்க மட்டும் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறதா போட்டீங்கல்ல, அங்க நிக்கிறீங்க!

 
On Nov 27, 2009, 11:33:00 PM , கிருபாநந்தினி said...

ஹை கே.பி.ஜனா! (கே.பி.ஜனார்த்தனன்தானே?) இன்னொரு எழுத்தாளர்! எழுதத் தெரியாத நான் எழுதுறதைப் படிக்க இத்தனைப் பெரிய எழுத்தாளர்கள் வரிசையா வர்றதைப் பார்த்தா, மவுசெல்லாம் உதறுதுங்கோ!

 
On Nov 27, 2009, 11:37:00 PM , கிருபாநந்தினி said...

ரேகா ராகவன்! அட, என்ன எழுத்தாளர்களா வந்திருக்கீங்க! என்னத்தையாவது அசட்டுப் பிசட்டுன்னு எழுதி உங்க முன்னாடி வழியப் போறேனோன்னு நெஜம்மாவே பயம்மா இருக்குதுங்க. உங்க உற்சாகமூட்டும் வரவேற்புக்கு நான் தகுதி உடையவளான்னு தெரியலே. எதுக்கும் என் அடுத்த பதிவைப் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!

 
On Nov 27, 2009, 11:40:00 PM , கிருபாநந்தினி said...

பீர் முஹம்மத்! வணக்கங்க! லதானந்த் அங்கிள் சொன்னாரேன்னு என் வலைப்பூ டிஸைனை மாத்திக்கிட்டிருக்கும்போது பின்னூட்டம் போட ட்ரை பண்ணியிருப்பீங்க. அதான் வரலை போலிருக்கு. இப்ப வருதுங்களா? ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டுக்கு ட்ரை பண்ணேன். என்னவோ கோளாறு. ‘இப்ப முடியாது; கொஞ்சம் வெயிட் பண்ணு’ங்குது! நீங்க அவசியம் என் பிளாகின் ஃபாலோயரா சேர்ந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

 
On Nov 27, 2009, 11:43:00 PM , கிருபாநந்தினி said...

\\இயன்றபோது எனது பிளாக்கை வாசித்துப் பாருங்கள். வெறைட்டி என்பது என்னவென்று ஆறிய முடியும்.// லதானந்த் அங்கிள், என்ன, கிண்டலா? நான்தான் உங்க ஃபாலோயரா சேர்ந்து அடிக்கடி பின்னூட்டம் போட்டுக்கிட்டிருக்கேனே? அப்புறம் என்ன இயன்றபோது? இந்த நக்கல்தானே வேண்டாங்குறது!

 
On Nov 27, 2009, 11:45:00 PM , கிருபாநந்தினி said...

ஹரீஷ், நீங்கதான் பொன்னியின் செல்வனா? அவர் போட்ட அதே வரிகள்! அவரா இருந்தாலும், வேற எவரா இருந்தாலும் ஹரீஷுக்கு என் மனமார்ந்த நன்றி!

 
On Nov 27, 2009, 11:48:00 PM , கிருபாநந்தினி said...

ஹரீஷ், தமிழ்ல தப்புப் பண்ணினதுக்காக வருந்துறவரை இப்பத்தான் பார்க்குறேன். ரொம்பப் பேர் அதான் ஸ்டைலுன்னு சொல்லிக்கிட்டுல்ல திரியறாங்க. (கிருபாநந்தி-ன்னு மட்டும் தப்பாப் போட்டுடாதீங்க! :))

 
On Nov 27, 2009, 11:51:00 PM , கிருபாநந்தினி said...

\\அண்புள்ள என டைப் ஆகிவிட்டது. அன்புள்ள எனத் திருத்திக் கொள்ளவும்.// திருத்திட்டேன் லதா அங்கிள்! அப்படியே, \\இயன்றபோது எனது பிளாக்கை வாசித்துப் பாருங்கள். வெறைட்டி என்பது என்னவென்று ஆறிய முடியும்.// இதில் வெறைட்டியை வெரைட்டி என்றும், ‘ஆறிய’வை ‘அறிய’ என்றும்கூடத் திருத்திக்கிட்டேன்! :))

 
On Nov 27, 2009, 11:55:00 PM , கிருபாநந்தினி said...

சகோதரர் கிருஷ்ண பிரபு, சகோதரி என்று அன்போடு அழைத்து என்னை நெகிழச் செய்துவிட்டீர்கள். அக்கறையோடு பல ஆலோசனகள் சொல்லி, சில சகோதரிகளின் வலைப்பூ முகவரிகளைத் தந்து, வாழ்த்துக்கள் சொல்லி என் மனதைக் குளிரச் செய்துவிட்டீர்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்லி என்னால் முடியாது. \\உங்களுடைய கணவரிடம் கேட்டு பின் தொடர (Folowers - Activation) வசதி செய்யுங்கள்.// அவர் அதற்கு முயற்சி செய்தார். என்னவோ பிரச்னையாம். தற்சமயம் அது சாத்தியமாகவில்லை; சீக்கிரம் செய்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

 
On Nov 27, 2009, 11:59:00 PM , கிருபாநந்தினி said...

சத்யராஜ்குமார், பலரின் பிளாகுகளில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். இங்கேயும் வந்து, தங்கள் கருத்தைப் பதிவிட்டு, என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
On Nov 28, 2009, 8:03:00 AM , CS. Mohan Kumar said...

ரொம்ப நல்லா இருக்கு . உங்க எழுத்தும் படி துறைங்கிற தலைப்பும் . நிறைய எதிர் பார்க்கிறோம் உங்க கிட்டேருந்து. உங்களை ஊக்குவிக்கும் உங்க கணவருக்கும் வாழ்த்துக்களையும் அன்பையும் சொல்லவும்.

 
On Nov 28, 2009, 12:24:00 PM , லெமூரியன்... said...

ஆத்தீ நீங்க வலையுலகத்துல பெரிய தாதாவா ???? முதற் பதிவுக்கே இட்டதனை பின்னூட்டமா? நான் உங்களை போல இல்லிங்கோ....ஆனா வலையுலகத்திற்கு புதுசு....முடிஞ்சா கொஞ்சம் கை பிடித்து கூட்டிட்டு போங்க.....உங்க எழுத்துக்கள் மூலமாதான். வாழ்த்துக்கள்ங்க.

 
On Nov 28, 2009, 1:05:00 PM , லதானந்த் said...

அன்பார்ந்த நந்தினி!
1) வனச் சரக அலுவலராய் இருந்தேன். இப்போது உதவி வனப் பாதுகாவலராய் இருக்கிறேன்.
2)அண்ணாச்சி என்று அழைத்து உடனடியாக எனக்கு அங்கிள் ப்ர்மோஷன் கொடுத்ததற்கு நன்றி
3)ஒவ்வொரு கமென்ட்டுக்கும் தனித் தனியே பதில் எழுதும் ட்ரண்டை நாம மாத்தி நெம்பப் பேரு அதைப் பின்பத்துறாங்களே? இதன் அனுகூலங்கள்
அ) நேரம் மிச்சம் ஆகும்.
ஆ) பின்னூட்டம் போட்டவிங்க கருத்தை நாம ரிப்பீட் பண்ண வேண்டியதில்லை. பேரைக் கூப்பிட்டுப் பதில் சொன்னாப் போதும். மறுபடி மறுபடி மித்தவிங்க ஸ்க்ரால் பண்ணிப் பாப்பாங்க. ஒரு த்ரில்ல் இருக்கும்.
இ)பின்னூட்டக் கணக்கு வேணா சாஸ்தி ஆகும்.ஆனா ஒட்டுமொத்தமா அப்பப்பப் பதில் சொல்றதுல லேசான கேஷுவல்தனத்தைக் காமிக்கலாம்.
ஈ)நம்ப பின்னூட்டத்துக்கு எழுத்து நர்த்தகி நந்தினி என்ன பதில் சொல்லியிருக்காங்கனு திரும்பத் திரும்பப் பின்னூட்டர்கள் ஒங்க பிளாக்க ஹிட் பண்ணிகிட்டே இருப்பாங்க.
4)variety அப்படிங்கிற வார்த்தைக்கு ர மற்றும் ற ரண்டும் போடலாம். ’ஆறிய’ ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான். சூடாத் திருத்திட்டிங்க.
5) நான் வருவேன்னு எப்படித் தெரியும்?
6)என்ர பதிவுகளுக்கு கோவம் வர்ராப்புல நீங்க பின்னூட்டம் எழுதினதா நாபகம் இல்லீங்களே?
7) நீங்க என்ர foloowerஆ? I feel top of earth.
8)இந்தப் பச்ச மண்ணு பேச்சைக் கேட்டு template மாத்துனதுக்கு நெம்ப சந்தோசங்க.
9) கவிதை எழுதிருவீங்களோனு ‘கெதக்”னு இருக்குது
10) மறுக்காவும் வாழ்த்துக்கள்.

 
On Nov 28, 2009, 4:33:00 PM , SenthilMohan K Appaji said...

முழுப் பேரையும் சொல்லி நன்றி நவில வேண்டாமேக்கா! இனிமேல் இரண்டில் ஏதேனும் ஒன்றினை உபயோகித்து கொள்ளுங்களேன். ஒரு வயது கூட ஆகாத குழந்தை இருக்குனு சொல்லிட்டு, வீட்டுல வேலை இல்லாம இருக்கீங்க போலிருக்கு. எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்லியிருக்கீங்க. குழந்தை உங்களை தொந்திரவு செய்றதில்லையோ? இருக்கட்டும். அப்புறமா பாத்துக்கலாம். அப்புறம் படித்துறை என்பது நல்ல இலக்கியப் பெயர் மட்டுமல்ல. அது கிராமத்துப் பெண்களின் டீக்கடை பெஞ்ச் கூட. அதனை உறுதி செய்வது போல் அடுத்த பதிவினையும் கோலங்கள் தொடர் பற்றி எழுதுவதாகக் கூறியுள்ளீர்கள்.

//*இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.**/

உங்கள் மனக் கருத்துக்களை சரி என்று தக்க காரணங்களுடன் நீங்கள் நிச்சயம் அடித்து வாதிட வேண்டும். ஏனெனில் இது உங்களது தனிப்பட்ட தளம். இங்கு கூட உங்களது சொந்த கருத்தை சரியானபடி எடுத்துக் கூறாமல் வேறு எங்கு கூறி என்ன செய்யப் போகிறீர்கள்?

இறுதியில் ஒன்று. நீங்கள் பிழையின்றி தமிழ் எழுதலாம். இருப்பினும் பதிவிடும் முன்பு ஒருமுறை Proof Reading பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ல/ள/ழ, ந/ன/ண், ர/ற பிரச்சினைகள் நிச்சயம் வரும். செம்மொழியாம் செந்தமிழின் சிறப்பு அது. பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக ஆண்கள் வரப்போகும் இந்தப் படித்துறைக்கும், உங்களுக்கும் மற்றுமொருமுறை எனது வாழ்த்துக்கள்.

 
On Nov 28, 2009, 4:33:00 PM , SenthilMohan K Appaji said...

முழுப் பேரையும் சொல்லி நன்றி நவில வேண்டாமேக்கா! இனிமேல் இரண்டில் ஏதேனும் ஒன்றினை உபயோகித்து கொள்ளுங்களேன். ஒரு வயது கூட ஆகாத குழந்தை இருக்குனு சொல்லிட்டு, வீட்டுல வேலை இல்லாம இருக்கீங்க போலிருக்கு. எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்லியிருக்கீங்க. குழந்தை உங்களை தொந்திரவு செய்றதில்லையோ? இருக்கட்டும். அப்புறமா பாத்துக்கலாம். அப்புறம் படித்துறை என்பது நல்ல இலக்கியப் பெயர் மட்டுமல்ல. அது கிராமத்துப் பெண்களின் டீக்கடை பெஞ்ச் கூட. அதனை உறுதி செய்வது போல் அடுத்த பதிவினையும் கோலங்கள் தொடர் பற்றி எழுதுவதாகக் கூறியுள்ளீர்கள்.

//*இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.**/

உங்கள் மனக் கருத்துக்களை சரி என்று தக்க காரணங்களுடன் நீங்கள் நிச்சயம் அடித்து வாதிட வேண்டும். ஏனெனில் இது உங்களது தனிப்பட்ட தளம். இங்கு கூட உங்களது சொந்த கருத்தை சரியானபடி எடுத்துக் கூறாமல் வேறு எங்கு கூறி என்ன செய்யப் போகிறீர்கள்?

இறுதியில் ஒன்று. நீங்கள் பிழையின்றி தமிழ் எழுதலாம். இருப்பினும் பதிவிடும் முன்பு ஒருமுறை Proof Reading பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ல/ள/ழ, ந/ன/ண், ர/ற பிரச்சினைகள் நிச்சயம் வரும். செம்மொழியாம் செந்தமிழின் சிறப்பு அது. பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக ஆண்கள் வரப்போகும் இந்தப் படித்துறைக்கும், உங்களுக்கும் மற்றுமொருமுறை எனது வாழ்த்துக்கள்.

 
On Nov 28, 2009, 10:48:00 PM , கிருபாநந்தினி said...

மோகன்குமார், ரொம்ப எதிர்பார்க்காதீங்க! அப்புறம் ஏமாந்துடுவீங்க. என்னமோ எனக்குத் தெரிஞ்சதை எழுதறேன். மத்தபடி உங்கள் வாழ்த்தையும் அன்பையும் கணவருக்குச் சொல்லிட்டேன்! தேங்க்ஸுங்க அவர் சொன்னதையும் இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன்!

 
On Nov 28, 2009, 10:52:00 PM , கிருபாநந்தினி said...

செந்தில்மோகன் கே.அப்பாஜி! உங்கள் கருத்துக்கள் எனக்குத் தைரியமூட்டுகின்றன. என் குழந்தை ரொம்ப சமர்த்துங்க. படுத்தாது. பெரியவங்க இருக்காங்க பார்த்துக்க. மத்தபடி வீட்டு வேலைகளுக்கும் ஆள் இருக்காங்க. நமக்கு சூபர்வைஸர் உத்தியோகம்தான். அதான், இங்கே உங்களையெல்லாம் அறுக்க வந்துட்டேன்!

 
On Nov 28, 2009, 10:58:00 PM , கிருபாநந்தினி said...

வனப் பாதுகாவலர் அங்கிள்! (எப்படி அண்ணாச்சி... ஒட்டுமொத்த வனத்தையும் நீங்க ஒருத்தரே பாதுகாத்துடுவீங்களா? :)) பலே ஆளுதான் நீங்க!) நீங்க வருவீங்கன்னு எப்படித் தெரியுமா? நாந்தான் அப்பப்ப உங்க பிளாகைப் படிச்சு பதில் போட்டுக்கிட்டிருக்கேனே! அதுக்கு பதில் உதவியா என் பிளாகைப் படிச்சு ஆலோசனை சொல்ல மாட்டீங்களா? அதுவும் இல்லாம, ‘உங்க பிளாகைப் படிக்க முடியாம வெச்சிருக்கீங்களே, ஏன்?’னு கேட்டிருந்தீங்களே! உண்மையில் அப்ப நான் பிளாக் எழுதவே ஆரம்பிக்கலை. நீங்க அப்படிக் கேட்டதுக்கப்புறமாத்தான் ரோஷம் வந்து பிடிச்சுட்டேன் மவுஸை!

 
On Nov 28, 2009, 11:03:00 PM , கிருபாநந்தினி said...

லெமூரியன்! நீங்க வேற... நான் தாத்தாவும் இல்லே, பாட்டியும் இல்லே! இப்பத்தான் கணினி நடைவண்டி பிடிச்சு நடக்கப் பழகிட்டிருக்கேன். வந்து ஏதாச்சும் ஆலோசனை சொல்லி உற்சாகப்படுத்துவீங்களா, அதை விட்டுட்டு என்னைப் போல நீங்க இல்லைன்னு சொல்லி என்னை நக்கல் பண்றீங்களே! :))

 
On Nov 29, 2009, 10:31:00 AM , கௌதமன் said...

ஹூம் நான் சொல்ல நினைச்சதை எல்லாம்
எனக்கு முன்னாடி பின்னூட்டம் இட்டவர்கள்,
சிறப்பாக, சிக்கனமாக சொல்லிட்டாங்க!
உங்க எழுத்துக்களைப் படிக்கும்போது,
வலையுலகம் வண்ணமயமாகும்,
தமிழ் சிறப்பு பெறும் என்ற நம்பிக்கையும்
பிறக்கிறது!

 
On Dec 4, 2009, 8:57:00 PM , Nara said...

வாழ்த்துக்கள்

 
On Dec 7, 2009, 12:16:00 AM , Deepa Ram said...

Good luck.Looking forward for great articles from you.

 
On Dec 7, 2009, 4:34:00 PM , ப்ரியா கதிரவன் said...

Nice introduction. Keep blogging.