Author: கிருபாநந்தினி
•Wednesday, March 03, 2010
ணக்கமுங்க! எல்லாரும் நல்லாருக்கீங்களா? மத்தவங்களோட வலைப்பூவெல்லாம் படிக்கிறீங்களா? மறக்காம பின்னூட்டம் போடறீங்களா? சந்தோஷமுங்க.

கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு ஒரு பக்கம் பெரிய மனுசங்க சில பேர் அனத்திக்கிட்டு இருக்காங்க. கனி பொண்ணும் கார்த்தி புள்ளையும்கூட ‘கருத்து’ன்னு ஒரு அமைப்பு ஏற்படுத்தி, அது இப்ப எந்த நிலைமையில இருக்குன்னு தெரியல. ஆனா, மனசுல உள்ள கருத்த வெளிய சொல்றதுக்கு இந்த நாட்டுல இன்னும் சுதந்திரம் வரலேன்னுதான் எனக்குத் தோணுது. அதுலயும் என்னைப் போல பொண்ணாப் பொறந்தவ கருத்தே சொல்லக் கூடாதுன்னு ஒரு கோஷ்டியே வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சுக்கிட்டிருக்குன்னு சமீபத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். மீறி கருத்து சொன்னா, அவ ஜாதியிலேர்ந்து, அப்பன் ஆத்தா வரைக்கும் சந்தியில இழுத்து வெச்சு, நாராச வார்த்தையால நாறடிக்கக் காத்துக்கிட்டிருக்கு.

புள்ளைய கவனி, புருசனுக்கு ஆக்கிப்போடுன்னு வந்த ஆணாதிக்கப் பின்னூட்டங்கள்கூடப் பரவாயில்லை. ஆபாசமா, வக்கிரமா வந்த பின்னூட்டங்களைக் கண்டுதான் வருத்தமா இருக்கு. இப்படி வருத்தமா இருக்குன்னு போன பதிவுக்கான பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருந்ததைப் பார்த்துக் குஷியாகி, ‘ஆஹா! இவ வருத்தப்படுறாடோய்! இன்னும் இன்னும் எழுதி இவ மனசை நோகடிப்போம்!’னு கெளம்பிட்டாய்ங்க.

ஆனா, நான் வருத்தப்பட்டது அவங்க ஆபாசமா எழுதினதுக்காக இல்லே. பெண்ணோட பாலியல் உறுப்புகளின் பெயர்களையே ஆபாச ஆயுதங்களா நினைச்சு உபயோகப்படுத்தியிருக்காங்களே, அவங்க இந்த உலகத்துக்கு ‘வந்த வழி’யும் அதுதான்கிறதை மறந்துட்டாங்களேங்கிற வருத்தம்தான் எனக்கு!

‘ரதி’ என் பதிவைக் கண்டிச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், அதுல ஒரு கண்ணியம் இருந்தது. தவிர, தமிழ்நதியோட ‘இளவேனில்’ வலைப்பூவுல அவங்க, ‘கிருபாநந்தினிக்கு வந்த தனி நபர் தாக்குதல் பின்னூட்டங்களைப் பற்றி நீங்க கண்டிக்காதது ஏன்?’னு கேட்டிருந்தாங்க. கூடவே, “அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?”னும் கேட்டிருந்தாங்க. அது மனசுக்கு ஆறுதலா இருந்தது. ரதிக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

ரதிக்கு பதில் தெரிவிச்சிருக்கும் தமிழ்நதி, “ஆம். குறிப்பிட்டிருக்க வேண்டும். மிக மனவேதனையுடன் அந்தப் பதிவை நான் எழுதினேன். அப்போது கிருபாநந்தினியை அப்படிச் சாடி எழுதியிருந்ததைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒருவேளை அப்படிச் சாடி எழுதியிருந்தது 'எனக்குச் சார்பாகப் பேசியிருக்கிறார்கள்' என்ற உள்ளார்ந்த திருப்தியை எனக்கு அளித்திருந்ததனால் சுலபமாக மறந்துவிட்டேன் போலும். மனித மனத்தின் விசித்திரத்தை யார்தான் புரிந்துகொள்வது? தவறுக்கு மன்னிக்கவும். பெண் என்றால், சமையல், அழகுக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் மனதுள் படிந்துபோய்விட்டிருக்கின்றன. இது அகல நூற்றாண்டுகள் ஆகும்”னு உண்மையை வெளிப்படையா ஒப்புக்கிட்டு எழுதியிருக்காங்க. இதுக்கு ரொம்ப மனத் துணிவும் நேர்மையும் வேணும். தமிழ்நதிக்கு என் நன்றி!

எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தெரிஞ்ச மொழியும் அது ஒண்ணுதான். ‘படித்துறை’ங்கிறது நதிக் கரையில் இருப்பது; நதிக்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் கலகலப்பாகக் கூடிப் பேசுகிற இடம். ‘தமிழ்நதி’ பேர்ல எனக்கு எந்தத் தனி நபர் கோபமும் இல்லை; காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை. ‘டமில்ரிவர்’னு அவங்க பெயரை ஆங்கிலப்படுத்தியதில் வன்மமோ, குரூர உணர்வோ இல்லை. அது சும்மா ஒரு நையாண்டிதான்!

ஓ.கே.! பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்!

***

நித்யானந்தரின் திருவிளையாடல்களை, ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’கிற நோக்கோடு சன் நியூஸ் ராவும் பகலுமா ஒளிபரப்பி மகிழ்ந்தது. நாமெல்லாம் ‘மிட்நைட் மசாலா’ போல பார்த்து மகிழ்ந்தோம்.

அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, டாக்டர், வாத்தியார், கவர்னர், அர்ச்சகர், பாதிரியார், இந்துச் சாமியார்னு எந்த வேறுபாடுமே இல்லாம இந்த மாதிரி காம லீலைகள்ல மூழ்கித் திளைக்கிறதை அப்பப்போ தமிழ்ப் பத்திரிகைங்களும், தொலைக்காட்சிகளும் படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டு வருதுங்க. அவங்க நோக்கம் என்னவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதா இருக்கலாம். ஆனா, எனக்கு என்ன பயம்னா, இதையெல்லாம் அடிக்கடி ஒளிபரப்பி, அதுல ஒரு டேஸ்ட் ஏற்பட்டு, “என்னப்பா, இன்னிக்கு எதுவும் புதுசா யாரோட லீலையும் இல்லையா? அட போப்பா! போரடிக்குதே! அந்த கவர்னர் கேஸட்டையாவது மறு ஒளிபரப்புச் செய்யலாம்ல?”னு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதுற அளவுக்கு ஜனங்க ஆளாயிடப் போறாங்களேங்கிறதுதான். போகிற போக்கைப் பார்த்தா, “தூத்துக்குடி வேல்முருகன், ராமகிருஷ்ணன், திண்டிவனம் இரா.சுப்பையா, செங்கல்பட்டு ராஜேஷ், சக்திவேல், செய்யாறு சுப்பிரமணி, மாணிக்கம் ஆகியோர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்...’னு நேயர் விருப்பமாவே இந்த காம கேஸட்டுங்களை ஒரு நிகழ்ச்சி நிரலாவே ஆக்கிடுவாங்க போலிருக்கு.

நித்யானந்தர் குமுதத்துல முன்னே ‘ஜன்னலைத் திற; காற்று வரட்டும்’னு எழுதினாரு; இப்ப, ‘ஆத்மாவைத் திற; ஆனந்தம் பெருகட்டும்’னு எழுதிக்கிட்டு வர்றாரு. குமுதம்காரங்க இதைத் தொடருவாங்களா, நிப்பாட்டிடுவாங்களான்னு தெரியலை. ஆனா, அவங்களுக்கு என்கிட்டே ஒரு அருமையான யோசனை இருக்கு. அது குமுதம் பத்திரிகைக்கேத்த யோசனைதான். இதே நித்யானந்தரை விட்டு, அடுத்த இதழ்லேர்ந்து ‘கதவைத் திற; நடிகை வரட்டும்’னு ஒரு ஜிலுஜிலு கட்டுரைத் தொடரை ஆரம்பிச்சுடலாம். ‘ஒரு நடிகையின் கதை’ வெளியானப்போ இத்தனை ஆயிரம் பிரதிகள் சர்க்குலேஷன் ஏறிச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டவங்கதானே! இப்ப இந்த யோசனையால முன்னைவிட டபுள் மடங்கு சர்க்குலேஷன் எகிறும். அதுக்கு நான் கியாரண்ட்டி!

சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு... ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’

சரியாத்தான் சொல்லியிருக்காரு. நித்யானந்தர் நிஜமான யோகி இல்லை. சாதாரண மனிதர்தான். அதனாலதான் அவர் புலன்களை அடக்க முயற்சி பண்ணவே இல்லை. எல்லாம் சரி. கூடவே, அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாத்துறதையும் இத்தோடு நிப்பாட்டிக்கிட்டார்னா அவருக்கும் நல்லது; அடுத்தவங்களுக்கும் நல்லது. அடுத்த வாரம் ஞாநி ஐயா, நியாயவானா இருந்தா, இந்த நித்யானந்தருக்கு ஒரு குட்டு வைக்கணும். அப்படி வெச்சா, ஞாநிக்கு நான் பூச்செண்டு தரேன்.

சாமியார்கள் சபலத்துக்கு ஆளாவது புராண காலத்துலேர்ந்து இருக்குற விஷயம்தான். அதனாலதானே முனிவர்களின் யாகத்தைக் கெடுக்க இந்திரன் தன் கிட்டே இருக்குற ரம்பை, ஊர்வசிகளை அவங்க முன்னே போய் டான்ஸ் ஆடுன்னு அனுப்பி வெச்சான்!

மைக்கேல் ஜாக்ஸனோட நிகழ்ச்சியில, அவர் மேல எத்தனைப் பெண்கள் பைத்தியமா, வெறியா இருந்தாங்கன்னு ஒரு இசை நிகழ்ச்சியின்போது தெரிஞ்சுது. ஹாலிவுட் வரைக்கும் போவானேன்... நம்ம எம்.கே.டி. பாகவதர் காலத்துல, அவர் பொது இடத்துக்கு வந்தார்னா, அவர் மேல எத்தனைப் பொம்பளைங்க விழுந்து பிறாண்டினாங்கன்னு அந்தக் காலத்து ஆளுங்களைக் கேட்டா, ரசனையா விலாவாரியா சொல்வாங்க.

கிருஷ்ணப்ரேமின்னு ஒருத்தர்... கர்நாடக சங்கீதம் பாடி, உபந்நியாசம் பண்றவர். செய்யுறது பக்திமயமான தொழில். ஆனா, உபந்நியாசம் பண்றப்பவும் அவர் பார்வை பெண்கள் பக்கம்தான் மேயும். நான் சொல்றது அம்பது, அறுபது வருஷத்துக்கு முன்னாடி! இப்பத்தான் பெண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் போய் தறிகெட்டு அலையுறாங்கன்னு நெனைச்சிட்டிருக்கோம். அதான் இல்லே. அந்தக் காலத்திலேயே நிறையப் பெண்களுக்கு லஜ்ஜைங்கிறது போயிடுச்சு. கிருஷ்ணப்ரேமியோட பார்வை தன் மேல படாதான்னு ஒவ்வொரு பெண்ணும் ஏங்கினாங்க. அந்த கிருஷ்ணப்ரேமி தன்னையே கிருஷ்ணனாவும், மத்த பெண்களையெல்லாம் கோபிகைகளாவும் நினைச்சுக்குவார். பெண்களும் அப்படியே நினைச்சுக்கிட்டு, கிருஷ்ணப்ரேமியைப் பார்த்ததும், ‘கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னையும் உன்னோட அழைச்சுக்கிட்டுப் போயிடுடா!’ன்னு ஜுர வேகத்துல அனத்துறது மாதிரி அனத்துவாங்களாம். அவர் ஒரு ஊருக்குள்ள வந்தார்னா, அவர் பார்வைல படாத மாதிரி தன்னோட பெண்டாட்டியைப் பாதுகாக்கிறது ஒவ்வொரு புருஷனுக்கும் பெரும்பாடா ஆயிடுமாம். இதையெல்லாம் என் தாத்தா கதை கதையா சொல்லுவார்.

அப்பெல்லாம் இத்தனை காண்டிட் காமிராக்கள் இல்லை; தொலைக்காட்சிகள் இல்லை. இருந்திருந்தா, அந்தக் காலத்துக்கு இந்தக் காலம் எத்தனையோ மேல்; முன்னைவிட ஒழுக்கம் அதிகமாவே வளர்ந்திருக்குன்னுதான் சொல்லத் தோணும்! ‘காலம் கெட்டுப் போச்சு... காலம் கெட்டுப் போச்சு’ன்னு இனியும் பெரியவங்க சொன்னா, நம்புறதுக்கு நாங்க தயாரா இல்லை.
.
|
This entry was posted on Wednesday, March 03, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On Mar 3, 2010, 3:15:00 PM , Anonymous said...

krina prami irukirar innum srirangathil கிருஷ்ணப்ரேமி இருக்கிறார் ஸ்ரீரங்கத்தில் இன்னும்

--
வாழுங்கள் வாழ்த்துங்கள்
நன்றிகள் பல
எஸ்.ஸ்ரீநிவாசன்

 
On Mar 3, 2010, 3:35:00 PM , ✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு... ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’
}

ஒருவேளை அப்படி முயற்சில இறங்கி வெற்றி பெறத்தான் முயற்சி செஞ்சிருப்பாரோ...
:))

 
On Mar 3, 2010, 3:42:00 PM , Anonymous said...

ஆனாலும் ரொம்ப தான் தைரியம்?குமுதத வேற இழுத்திருக்கேள்!அப்பிடி தான் போடணும்!சன் டி. பத்தித் தான் தெரியுமே!எது அதிகமா விக்கும்கிறத அவா கிட்ட தான் கேட்டு தெரிஞ்சுக்கணும்!

 
On Mar 3, 2010, 8:30:00 PM , பத்மநாபன் said...

welcome back ....
எழுத்தே ஆபாசம்ன அவங்க வாழ்க்கை முறை எப்படி இருக்கும் ? அதிலேயும் பெரும்பாலும் முகவரியே இருக்காது . முகமே இல்லாததை பற்றி பேசவேண்டாம் ..
கருத்துக்கு கருத்தாக சொன்னதற்கு ரதி, தமிழ்நதி அவர்களை நன்றி பாராட்டியது வலையின் ஆரோக்கியம் .
சரி இன்னத்த மேட்டர் ...அந்த ஆளு எழுத்து புனிதமா இருக்குதேன்னு பார்த்தா, உள்ள முழுசும் ஊத்தையால்ல இருக்குது
அதோட படத்தை வேற பெருசா போட்டுட்டிங்க ... நடிகைங்கிறதுனாலே மேட்டர் பத்திட்டு வந்துருச்சு, இல்லாட்டி
கடைசி வரைக்கும் அந்த ஆ ....சாமிகிட்டே மக்கள் ஏமாந்தே கிடக்கும் .....

 
On Mar 3, 2010, 9:21:00 PM , sathishsangkavi.blogspot.com said...

நந்தினி...

நீங்க உங்க கருத்தை ஆழமாக சொல்லுங்க அதுக்குத்தாங்க வலைப்பூ... மற்றவர்கள் அவர்கள் கருத்தை சொல்லும் போது பிடித்திருந்தால் ஏத்துக்கு இல்லை எனில் கண்டுக்காதீங்க.... மற்றவர்களைப்பற்றி எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காமல் அந்நேரத்தில் ஒரு அழகான பதிவை போடுங்க...

நித்தியானந்தர் போல் இன்னும் நிறைய சாமியார்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்...

அடிக்கடி பதிவு எழுதுங்க...

 
On Mar 4, 2010, 9:04:00 AM , புளியங்குடி said...

தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால்தான் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் வெளிவருகின்றன. மற்றவர்களை ஒப்பிடும்போது இந்தச் சாமிக்கு அதிகப்படியான தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது.

 
On Mar 4, 2010, 12:09:00 PM , Romeoboy said...

கருத்து சுதந்திரம் என்பதை நிறைய பேரு தப்ப எடுத்துகிறாங்க, அதனால் தான் இந்த மாதிரி வசைமொழி பாடும் பரதேசிகள் அதிகமா இருக்காங்க.

ரைட் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான மேட்டர் வச்சி அடிபின்னி எடுத்து இருக்கீங்க. அடிகடி எழுதுங்க இல்லைனா நாங்க உங்கள மறந்துடுவோம் :( .

 
On Mar 5, 2010, 4:17:00 PM , கிரி said...

"//கிருஷ்ணப்ரேமியோட பார்வை தன் மேல படாதான்னு ஒவ்வொரு பெண்ணும் ஏங்கினாங்க.//

கொடுத்து வைத்தவரு ;-)

 
On Mar 5, 2010, 8:16:00 PM , Paleo God said...

வணக்கம். :)

 
On Mar 9, 2010, 1:03:00 PM , பின்னோக்கி said...

திட்டு வாங்கி பெரிய ப்ளாக்கரா ஆனதுக்கு வாழ்த்துக்கள். பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் :).

---

குமுதத்துக்கு நல்லா ஐடியா குடுத்திருக்கீங்க... செஞ்சாலும் செய்வாங்க. சொல்ல முடியாது

 
On Mar 15, 2010, 10:38:00 AM , Anonymous said...

//பெண்ணோட பாலியல் உறுப்புகளின் பெயர்களையே ஆபாச ஆயுதங்களா நினைச்சு உபயோகப்படுத்தியிருக்காங்களே, அவங்க இந்த உலகத்துக்கு ‘வந்த வழி’யும் அதுதான்கிறதை மறந்துட்டாங்களேங்கிற வருத்தம்தான் எனக்கு!//

முகம் தெரியாம வருபவங்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வசதி. என்ன வேணும்னா திட்டுவாங்க. பின்னூட்ட மட்டுறுத்தல் வைச்சிருக்கீங்க. தரக்குறைவான, தனிநபர் தாக்கும் பின்னூட்டங்களை மட்டுறுத்துங்க.