Author: கிருபாநந்தினி
•Saturday, May 08, 2010
தி, ரதி, ரவி... இன்னும் பலருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி ஒண்ணைக் கடைசியில சொல்றேன்.

ன்னோட ‘சட்டங்களும் தர்மங்களும்’ பதிவைப் படிச்சுட்டுக் கடுமையா திட்டி வந்த கடிதங்கள் அத்தனையையும் நான் பப்ளிஷ் பண்ணிட்டேன். வழக்கம்போல ஆபாச வார்த்தைகளைக் கொட்டி வந்த பின்னூட்டங்கள் நிறைய. அது எதையும் பதிவிடலே!

இதுல எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா... நான் ஆண்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருந்த அந்தப் பதிவைப் படிச்சுட்டு என்னை ஆபாசமா திட்டியிருக்கிறதும் ஆண்கள்தான். சொல்லப்போனா ‘வெளியூர்க்காரன்’ போல ஒரு சில பதிவர்களேகூட மகா மோசமா, ஆபாச வார்த்தைகளால என்னை அர்ச்சனை பண்ணியிருந்தாங்க. பெண்களுக்கு வக்காலத்து வாங்க இத்தனை ஆம்பிளை சிங்கங்கள் இருக்கிறதை நினைச்சு எனக்கு ஒரு விதத்துல பெருமையாவும் இருக்கு; சந்தோஷமாவும் இருக்கு.

இங்கே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க விரும்பறேன். பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுக்கணும்னு வாயளவில் பேசுற ஆண்கள் யாரும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கொடுக்க விரும்புறது இல்லே. மத்த பெண்கள் ‘சுதந்திரமா’ இருந்தாதான் அவங்களுக்குச் சந்தோஷம்.

தமிழ்நாட்டுல கவிராஜர்களா உலா வந்துட்டிருக்கிற இரண்டு கவிஞர்களைப் பத்தி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒருத்தரோட பொண்டாட்டியும் நல்ல கவிதாயினிதான். பிரமாதமா கவிதை எழுதக்கூடியவங்கதான். ஆனா, வெளியில பெண்ணைப் போற்றிப் பேசியும், கவிதைகள் எழுதியும், பாரதிக்கு அடுத்த வாரிசா தன்னை நிரூபிச்சுக்க விரும்புற அந்தக் கவிஞர், தன் பெண்டாட்டியோட எழுத்துக்குத் தடா போட்டுட்டாரு. காரணம், அந்தம்மா எழுதினா இவருக்குப் பேரும் புகழும் போயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கவ்லைதான்! அது மட்டுமில்லே; அந்தம்மா எந்தப் பத்திரிகைக்கும் பேட்டியே கொடுக்கக்கூடாது; கதைகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ எழுதித் தரக் கூடாது. அப்படியே பேட்டி கொடுத்தாலும், கதை, கட்டுரை, கவிதை எழுதினாலும், இவரோட அனுமதி வாங்கிட்டுதான் செய்யணும். அதையும் இவர் வாங்கி, வரிக்கு வரி படிச்சுத் திருத்தம் செய்வாரு. அப்புறம்தான் அதை அந்தப் பத்திரிகை வெளியிடணும். பொது நிகழ்ச்சி எதுலயும் அந்தம்மா கலந்துக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்ட உத்தரவுகளைப் போட்டு, அந்தம்மாவை வீட்டுச் சிறை போல முடக்கி வெச்சுட்டாரு.

இன்னொருத்தர் இருக்காரு. பெண்ணே தெய்வம், பெண்ணைப் போற்றாத நாடு உருப்படாதுன்னெல்லாம் வீரம் கொப்பளிக்கக் கவிதை எழுதுவாரு. அவரு இன்னும் மோசம். முந்தியெல்லாம், வெளியே போகும்போது தன் பெண்டாட்டியை வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டுதான் போவாராம். சாயந்திரம் அவர் திரும்பி வர்ற வரைக்கும் அந்தம்மாவுக்கு வீட்டுச் சிறைதான். இப்பவும் அப்படித்தான் இருக்காருன்னு தெரியலே.

இவங்கெல்லாம்தான் பெண்ணுரிமையைப் பத்தி வாய் கிழியப் பேசுறவங்க. இப்படித்தான் பல பேர் இருக்காங்க.

ஆனா, ஒண்ணு நிச்சயம். பெண் உரிமை, பெண் சுதந்திரம்னு வாயளவுல பேசாம, என்னோட கணவர் கிருபா போல, நிஜமாவே தங்களோட பெண்டாட்டியை அன்பாவும், மகிழ்ச்சியாவும் வெச்சிருக்கிற ஆண்கள் அதிகம்.

கிருபா டெல்லி போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது. சாஃப்ட்வேர்ல கில்லாடி அவரு. சைபர் கிரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல அவரோட பங்களிப்பும் உண்டு. சில காரணங்களுக்காக, அவரோட வேலைகளைப் பத்தி அதிகம் விவரிச்சு எழுத முடியாத நிலையில இருக்கேன்.

ஒரு வாரம் முந்தி அவர் கோயமுத்தூர் வந்தார். நான்தான் போன் பண்ணி அவரை உடனே வரச் சொன்னேன்.

எனக்கு ரொம்ப நாளாவே தலைவலி அதிகம் உண்டு. போன மாசம் ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மூளையில ஒரு கட்டி இருக்குன்னு தெரிஞ்சுது. (ஆஹா..! இப்பத்தானே புரியுது நீ ஏன் அத்தனை உளறினேன்னு!) உடனே ஆபரேட் பண்ணணும்னாங்க டாக்டருங்க. இதை கிருபாவுக்குத் தெரியப்படுத்தினா, துடிச்சுப் போயிடுவாரேன்னு சொல்லலை. கட்டியைக் கரைக்குறதுக்கு மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.

போன வாரம், தலைவலி அதிகமா போயி, மயங்கி விழுற நிலைமை. இனியும் சொல்லாம இருந்தா நல்லாருக்காதுன்னு, அவருக்கு போன் பண்ணேன். உடனே ஓடி வந்தாரு. டாக்டர்கிட்ட காண்பிச்சோம். “நிலைமை சீரியஸா இருக்கு. உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க”ன்னாரு டாக்டரு.

கிருபாவுக்கு டெல்லி வேலை முடியலை. அதனால, அங்கே அவருக்குத் தற்காலிகமா கொடுத்திருக்கிற குவார்ட்டர்ஸிலேயே போய்த் தங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவரோட அம்மாவும், தங்கச்சியும் எங்களோட வராங்க. குழந்தை புஜ்ஜிம்மாவும் எங்களோடு வருது.

டெல்லியில இருக்கிற ஒரு நல்ல ஆஸ்பத்திரியில, வர புதன்கிழமைக்குள்ள சேர்ந்துடுவேன். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு பொழைச்செழுந்து வருவேனாங்கிறது சந்தேகம்தான்! அதனால, இப்பவே உங்க அத்தனை பேர் கிட்டயும் விடைபெற்றுக்கிறேன்.

தமிழ்நதி, ரதி, செந்தழல் ரவி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம். குறுகிய காலத்துல எனக்கு ஃபாலோயரா சேர்ந்திருக்கிற 70 பேருக்கும் வணக்கம். எனக்கு முதன்முதல்ல விருது கொடுத்து ஊக்குவிச்ச ‘என் ரசனை’ பதிவர் ‘ரசிக்கும் சீமாட்டி’க்கு வணக்கம். எனக்குப் புத்தகப் பரிசு கொடுத்து ஊக்குவிச்ச பதிவர் ரவிபிரகாஷுக்கு வணக்கம். கடைசியா, என்னை ஊட்டிக்கு வரச் சொல்லி அன்போடு அழைச்ச பதிவர் லதானந்துக்கு வணக்கம்.

‘போயிட்டு வரேன்’னு சொல்லத்தான் ஆசை. ஆனா, தெரியலை! நாளை என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? மறுபடி நான் வரலாம்; வராமலும் போகலாம்!

மனுஷங்களாப் பிறந்தவங்க ஒரு நாள் போய்ச் சேர வேண்டியவங்கதான். அதனால, மரணத்தைக் கண்டு எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. ஆனா, என் புஜ்ஜிம்மாவை விட்டு.......

வரேங்க! முடிஞ்சா பின்னாடி சந்திப்போம்.

உங்க அன்புள்ள, கிருபாநந்தினி.

.