Author: கிருபாநந்தினி
•Sunday, November 29, 2009
புதிர் 1:
சின், த்ரிஷா, ஸ்ரேயா மூணு பேரும் ஒரு ‘பப்’ல... - வேணாம், கோவிச்சுப்பாங்க; - ஒரு காபி ஷாப்ல யதேச்சையா ஒண்ணா சந்திச்சாங்க.

நடிகைகள் மூணு பேரு ஒண்ணாச் சந்திச்சா கேக்கணுமா... என்னென்னவோ அரட்டைகள்!

பேச்சு நடுவுல திடீர்னு ஸ்ரேயா சொன்னாங்க... “ஹாய்! ஒரு விஷயம் கவனிச்சீங்களா? நாம மூணு பேரும் இப்ப நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் மூணுமே கிராமத்து சப்ஜெக்ட். நம்ம கேரக்டர் பேரெல்லாமே பச்சையம்மா, சிவப்பி, நீலான்னு வேடிக்கையா, விநோதமா இருக்கு. கேரக்டர் பேர்ல கலர்கள் இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதே கலர் டிரெஸ்களைத்தான் நாம இப்ப போட்டுக்கிட்டிருக்கோம்!”

மத்த ரெண்டு பேரும் இதை அப்பத்தான் கவனிச்சு, “அட, ஆமால்ல?”னாங்க.

“இன்னொண்ணையும் கவனிங்க. நாம யாரும் நம்ம கேரக்டர் பேர்ல இருக்கிற அதே கலர் டிரெஸ்ஸைப் போட்டுக்கலை. மாத்திப் போட்டுக்கிட்டிருக்கோம்!”

ஸ்ரேயா இப்படிச் சொன்னதும், “ஆமா ஸ்ரேயா! இப்பத்தான் நாங்களே இதைக் கவனிக்கிறோம். நீ சொல்றது கரெக்டுதான்! உனக்கு நல்ல மூளைடீ! உன் கிட்ட நல்ல ஆப்சர்வேஷன் பவர் இருக்கு!”ன்னாங்க பச்சையம்மாவா நடிச்சுட்டிருக்கிற நடிகை.

சரி, இப்ப நீங்க சொல்லுங்க... எந்தெந்த நடிகை என்னென்ன கேரக்டர்ல நடிச்சுட்டிருக்காங்க?


புதிர்
2:வைகைப் புயல் வடிவேலுவும், சின்னக் கலைவாணர் விவேக்கும் வெவ்வேறு ஊர்கள்லேருந்து சைக்கிள்ல கிளம்புறாங்க. ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்கிற தூரம் சரியா 20 கி.மீ. ரெண்டு ஊருக்கும் நடுவுல நேர்க் கோடு போட்டதுபோல தார் ரோடு. ரெண்டு பேரும் எதிரெதிர் திசையில, அதாவது ஒருத்தரை நோக்கி ஒருத்தர் அந்தத் தார் ரோடுல சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துட்டிருக்காங்க. ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கிளம்பி, சரியா 10 கி.மீ. வேகத்துலதான் சைக்கிளை ஓட்டறாங்க.

அப்ப ஒரு பட்டாம்பூச்சி என்னா பண்ணிச்சு தெரியுமா? வடிவேலு கெளம்புறதுக்கு முன்னாடி அவரோட சைக்கிள் ஹேண்ட்பார்ல உட்கார்ந்திருந்த அது, அவர் சைக்கிள் மெதிக்க ஆரம்பிச்சதுமே பறக்க ஆரம்பிச்சு, எதிரே வந்துட்டிருந்த விவேக்கை நோக்கிப் போச்சு! அவரைத் தொட்டதுமே மறுபடி எதிர்த் திசையில திரும்பிப் பறந்து, இங்கே வந்துட்டிருந்த வடிவேலுவைத் தொட்டுச்சு. உடனே மறுபடி திரும்பிப் பறந்து விவேக்கை நோக்கிப் போய், அவரைத் தொட்டுச்சு. கடைசி வரைக்கும் அது ஒரே சீரான வேகத்துலதான் (மணிக்கு 15 கி.மீ.) பறந்துச்சு.

இப்படியே அந்தப் பட்டாம்பூச்சி வடிவேலுவும் விவேக்கும் மீட் பண்ற வரைக்கும் மாறி மாறிப் பறந்துட்டிருந்தது. அப்படின்னா, அது மொத்தம் எத்தனைக் கிலோ மீட்டர் தூரம் பறந்திருக்கும்?


து போல நிறைய புதிர்கள் உள்ள ஒரு புஸ்தகம் என் கிட்டே இருக்கு. அதுல எனக்குப் பிடிச்ச, சுலபமா விடை கண்டுபிடிக்கக்கூடிய புதிர்களைத்தான் இங்கே வரிகளை வேற மாதிரி புதுசா மாத்திக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சீங்கன்னா, ரெண்டு புதிர்களுக்குமே நீங்க ரொம்ப ஈஸியா விடை சொல்லிடலாம். அடுத்த பதிவு வரைக்கும் காத்திருங்க. விடை சொல்றேன்.

அதுவரைக்கும் யோசிங்க... யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க!

Author: கிருபாநந்தினி
•Saturday, November 28, 2009
தினம் தினம் பேப்பரைத் திறந்தாலே வேதனையாயிருக்குங்க. ஒவ்வொரு சமயம் எதுக்கு பேப்பர் வாங்கணும்னு தோணுது. சீரியல் பார்த்து அழுவுற மாதிரி, பேப்பர் படிச்சு ஐயோ... ஐயோன்னு நம்ம பி.பி-யை நாமே ஏத்திக்கணுமான்னு தோணுது. வேலியில போற ஓணானைப் பிடிச்சு இடுப்புல கட்டிக்கிட்டுக் குத்துதே, குடையுதேங்கிறாப்ல நாமே தேடிப் போய் பேப்பரைக் காசு கொடுத்து வாங்கி வந்து படிச்சுட்டு, ‘அட, நாசமாப் போறவனுங்களே! இப்படியுமா செய்வானுங்க’ன்னு வயித்தெரிச்சல் படுறதாயிருக்கு. இந்த மந்திரி ஊழல் பண்ணுனாரு, இவன் கள்ளக் காதலியை இவன் குத்திக் கொன்னான், இங்கே இத்தனை பேர் குண்டு வெடிச்சு செத்தாங்க, இங்கே நிலச்சரிவு, இத்தனை பேர் சாவு, கொலை, கொள்ளைன்னு பேப்பரைப் பிரிச்சாலே ரத்தம் கொட்டுது; கப்பு அடிக்குது!

பெரிய நியூஸ்தான் இப்படின்னா குட்டிக் குட்டிச் செய்திகள்கூடக் கடுப்பைக் கிளப்புது.

மதுரைல கோயில்கள் கிட்டேயும், பள்ளிக்கூடங்கள் கிட்டேயும் டாஸ்மாக் திறந்திருக்காங்களாம். அதை அகற்றணும்னு ஹைகோர்ட் உத்தரவு போட்டிருக்குது. இதுக்கெல்லாம் ஹைகோர்ட் வந்து பஞ்சாயத்து பண்ணணும்னு ஆகிப் போச்சே நம்ம ஜனங்களோட மனநிலைன்னு வேதனையா இருக்கு. ‘உன் உசிரைப் பாதுகாக்க ஹெல்மெட் போட்டுக்கோ’ன்னு கவர்ன்மென்ட் உத்தரவு போட்டாக்கூட அது நம்ம நல்லதுக்குதான்னு நம்ம ஆளுகளுக்கு உரைக்காது. செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா இத்தனை ரூபா அபராதம்னு சொன்னாத்தான் ஒழுங்கு மரியாதையா வண்டி ஓட்டுவான் நம்ம ஆளு. அவனுக்கா அந்த அறிவு இருக்காது. நம்ம ஊர் பஸ்கள்ல முதியோர் சீட்டுன்னு ஒதுக்குறதைப் பார்த்து வழிச்சுக்கிட்டுச் சிரிக்கிறான் வெள்ளைக்காரன். ‘அட என்னாங்க, பெரியவங்க வந்தா எழுந்திருச்சு இடம் விட வேண்டியதுதானே! இதுக்குக் கூடவா சீட்டு ஒதுக்குவாங்க’ன்னு அவன் நினைக்கிறான். நம்ம ஜனங்களைப் பத்தி அவனுக்குத் தெரியலை! கோயில் கிட்ட, ஸ்கூல் கிட்ட இருக்குற டாஸ்மாக்ல இந்தக் குடிமகன்கள் போய் எதுவும் வாங்கிக் குடிக்காம இருந்தா, உத்தரவு போடாமலே அவன் போணியாகலைன்னு கடையை மூட்டை கட்டிட மாட்டானா? நாய்க்கு செக்காவது, சிவலிங்கமாவதுங்கறாப்ல குடிமகன்களுக்குக் கோயிலாவது, பள்ளிக்கூடமாவது!

கோவை மத்திய சிறையில் சல்யூட் அடிக்கத் தெரியாத 90 காவலருக்கு மெமோ கொடுத்திருக்காராம் ஏடிஜிபி. அந்த லட்சணத்துல இருக்குது நம்ம தமிழக காவல் படை! நம்ம காவலர்கள்ல எத்தனை பேரால தலையைக் குனிஞ்சு தங்கள் கால் கட்டை விரலைப் பார்க்க முடியும்? ‘பானை வயிற்றோன் பக்தர்களைக் காப்பானா?’ன்னு கறுப்புச் சட்டைக்காரங்க கேக்குறாங்க. இந்தத் தொந்திக் கணபதிகள் திருடன்களையும், தீவிரவாதிகளையும் ஓடிப் போய்ப் பிடிப்பாங்களான்னு நான் கேக்குறேன். கெடு டயம் கொடுத்து, அதுக்குள்ள தொப்பையைக் குறைக்காத போலீஸ்காரங்க எல்லாரையும் டிஸ்மிஸ்ஸே பண்ணலாம்னு சட்டம் கொண்டு வரணும்.

மதுகோடா எக்கச்சக்கமான பணம் ஊழல் பண்ணியிருக்கார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; கோடிக்கணக்கில் ஹவாலா பணம் கைமாறியிருக்குது; ஆள் அப்ஸ்காண்டுன்னு தினம் தினம் வானிலை அறிக்கை மாதிரி மதுகோடா செய்தி ஒண்ணாவது வராம இருக்கிறதில்ல! மதுகோடா... அட, போடா!

அடுத்த சிலிண்டர் பதிவு பண்ண 21 நாள் ஆகியிருக்கணும்னு ஒண்ணும் விதியில்லையாம்; ஐஓசி மண்டல துணை மேலாளர் ராஜசேகரன் சொல்லியிருக்காரு! ஐயா, நீங்க சொல்றீங்கய்யா! கேக்க நல்லாத்தான் இருக்குது. கேஸ் ஏஜென்சிக்காரங்க கேக்கமாட்டேங்குறாங்களே! 21 நாள் ஆகலைன்னா சிலிண்டர் ரின்யூவைப் பதிவுக்கே எடுத்துக்க மாட்டேங்கிறாங்களே! அவங்களைக் கூப்புட்டு வெச்சுக் கொஞ்சம் அட்வைஸ் பண்ணினீங்கன்னா உபகாரமா இருக்கும். இதுல ஒரு வேதனை என்ன தெரியுங்களா... நாம ஒரு சிலிண்டரை பதிவு பண்ணின தேதிக்கு 21 நாள் கழிச்சு இன்னொரு சிலிண்டரை பதிவு பண்ணலாம்னு சொன்னாக் கூடப் பரவாயில்லீங்க. அவங்க சிலிண்டரைக் கொண்டு வந்து போட்ட தேதிக்கு அப்பால 21 நாள் கழிச்சுதான் பதிவு பண்ணணுமாம். சிலிண்டரைக் கொண்டு வரவே பத்துப் பதினைஞ்சு நாள் ஆக்கிடறாங்க. இதனால ரெண்டு சிலிண்டர் வெச்சிருந்தாக்கூட மாசத்துல ரெண்டொரு நாள் குமிட்டி, கரியடுப்பு மூட்டிச் சமைக்க வேண்டியதாயிருக்கு.

சிங்கப்பூர்ல உள்ள கெல்லாங் நதியைப் போல, நாறிப்போன நம்ம சென்னை கூவம் நதியைச் சுத்தப்படுத்தப் போறாராம் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் போயிட்டு வந்திருக்காப்ல. அந்த கேரிங்ல கொஞ்ச நாள் அப்படித்தான் பேசுவாப்ல. இதே கண்டி லண்டன் போயிட்டு வந்திருந்தார்னா தேம்ஸ் நதி மாதிரி ஆக்கிருவோம்னு சொல்லியிருப்பாரு. அறுபது வருஷமா நாறிக்கிட்டு இருக்குது கூவம். ஆவுற கதையப் பாருங்க!


வரதட்சணை கேக்குறதும் குற்றம், கொடுக்குறதும் குற்றம்னு ஒரு பக்கம் அனத்திக்கிட்டே இருக்கோம். இன்னொரு பக்கத்துல மாப்பிள்ளை யாரு, எப்படி, நல்லவனா, பொறம்போக்கானு தெரியாமலேயே, அவன் வெளிநாட்டுல எக்கச்சக்கமான சம்பளத்துல வேலையில இருக்கான்னு நெட்டுல பார்த்துட்டு, அதை நம்பி கல்யாணத்துக்கு முன்னாடியே அவனுக்கு பத்து லட்ச ரூபா, இருபது லட்ச ரூபான்னு கொண்டு போய்க் கொட்டியழுவுற ஏமாந்தகுளிகளும் இருக்காங்கன்றதை நெனைச்சா எரிச்சல் எரிச்சலா வருது. அப்படித்தான் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நளினிங்கிறவங்க எவனோ ஒரு லண்டன்(!) மாப்பிள்ளை கிட்டே 4 கோடி ரூபாயை இழந்துட்டு மதுரை ஐஜி அலுவலகத்துல போய் மூக்கால அழுதுருக்காங்க. எத்தனை பட்டாலும் அறிவே வராதா இவங்களுக்கெல்லாம்? சே..!

இது பரவால்ல... ஒரு இன்ஜினீயரு பேங்க்ல ஒன்றரை லட்ச ரூபா பணம் எடுத்தாராம். அதை ஒரு மஞ்சப் பையில போட்டு, சைக்கிள் ஹேண்ட்பார்ல மாட்டினாராம். அப்போ ஒருத்தன், “ஐயா, அங்க ஒரு பத்து ரூபா நோட்டு விழுந்து கிடக்குது. உங்களுதான்னு பாருங்க”ன்னானாம். இந்த வீணாப் போனவரும் அதைக் குனிஞ்சு எடுத்தாராம். ஹேண்ட்பார்ல இருந்த மஞ்சப் பையை ஒன்றரை லட்ச ரூபாயோட காணமாம். கோயிந்தா கோயிந்தா! ஆனா, இந்த டெக்னிக் அரதப் பழசான டெக்னிக். நான் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்தே இந்த அல்பத்தனமான டெக்னிக்கைக் கையாண்டு பணத்தைக் களவாடியிருக்காங்க. ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, ஏமாறுறதுக்கு நாம தயாரா இருக்குற வரைக்கும் ஏமாத்துறவனுக்கு பெரிய சயின்டிஃபிக் டெக்னாலஜி முறை எதுவும் தேவையில்ல. ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு ஹைதர் அலி காலத்து டெக்னிக்கையே கையாண்டு, நம்ம பணத்தை லபக்கிக்கிட்டு போயிட்டே இருப்பான். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு பாடினாரு பட்டுக்கோட்டையாரு! நாமதான் ஏமாறுறதுக்கு ரெடியா இருக்கோமே! திருடங்களே திருந்த நினைச்சாலும் விட்டுருவோமா என்ன?!

1330 குறளையும் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா, அந்தப் பிள்ளைக்கு 21 வயசு வரைக்கும் மாசம் 1000 ரூபா உதவித் தொகை வழங்குறாராம் நம்ம கலைஞரு! தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா வரி விலக்குன்னு சொன்ன அபத்தத்தைவிட இது கொஞ்சம் பெட்டர் மாதிரி தெரியுதா? அதான் இல்லே! இதுவும் படு பேத்தலான திட்டம்தான். ‘மனப்பாடம் பண்ணாதீங்க; புரிஞ்சுக்கிட்டு எழுதுங்க’ன்னு மாணவர்களுக்கு அட்வைஸ் பண்றாங்க கல்வியாளருங்க. கலைஞரு என்னடான்னா திருக்குறள் மொத்தத்தையும் மனப்பாடம் பண்ணுங்கன்றாரு. திருக்குறளை மனப்பாடம் பண்ணி ஆகப்போறது என்னன்னு புரியல. சரி, ஒரு தடவை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா போதுமா? அப்புறம் மறந்துட்டா பரவால்லியா? இல்லே, 21 வயசு வரைக்கும் அப்பப்ப போய் பாங்க் மேனேஜர்கிட்ட, இல்லாட்டி கலைஞர் கிட்டே மொத்தத்தையும் ஒரு தபா கடகடன்னு சொல்லிக் காட்டணுமா? வெறுமே மனப்பாடம் பண்ணினா போதுமா இல்லே அர்த்தமும் சொல்லணுமா? அதுல காமத்துப் பால் எல்லாம் வருதே, அதைக்கூட பசங்க படிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கணுமா?

திருக்குறள் உலகப் பொதுமறைங்கிறதெல்லாம் சரி! பெரியவங்களுக்குக் கொடுக்குற மரியாதையை அதுக்குக் கொடுப்போம். ஆனா, அதில் உள்ள எல்லாக் குறளையும் படிச்சு அதன்படிதான் இப்ப நடக்கணும்னு சொன்னா அது சரிவராது. பெரியவங்களோட புத்திமதிகளைக் கேட்டுக்கலாம். ஆனா, எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இப்ப உள்ள சூழ்நிலைக்கு எது பொருந்துமோ, சரியா இருக்குமோ அதை மட்டும்தான் கடைப்பிடிக்க முடியும். திருக்குறளும் அப்படித்தான்! அதுல இருக்குற பல குறள்களை இப்ப ஏத்துக்கவே முடியாது. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ங்குறாரு வள்ளுவரு. கடவுளைக்கூடக் கும்பிடாம புருசனைக் கும்பிடுற பொம்பளை பெய்னு சொன்னா உடனே மழை பெஞ்சுடுமாம்! நம்புறீங்களா? அப்படி அவ சொல்லி மழை பெய்யலைன்னா அவ கெட்ட பொம்பளைன்னு சொல்லி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா? சரி விடுங்க, நாம சொல்லியா கேக்கப் போறாரு கலைஞரு!

பசங்களா! காமத்துப்பால் குறள்களை மனப்பாடம் பண்ணுங்க; ஆனா, அர்த்தத்தை நோண்டி நோண்டிக் கேக்காதீங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!

என் அடுத்த பதிவு: புதிராடுவோம் வாங்க!
Author: கிருபாநந்தினி
•Friday, November 27, 2009
ழு வாரத்துக்கும் மேல இழுத்துப் பறிச்சுக்கிட்டுக் கிடந்த பாட்டியம்மா உசுரு பொட்டுனு ஒரு நாள் போயிட்டா, அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு எத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுமோ, அத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஒரு மெகா, மகா சீரியல் முடியப் போவதைக் கேட்குறப்போ ஏற்படுது.

‘கோலங்கள்’ சீரியலைத்தான் சொல்றேன். ஏன், உனக்கு சீரியலே பிடிக்காதா, இல்லே ‘கோலங்கள்’ சீரியல் மட்டும்தான் பிடிக்காதா, அது முடியறதுல உனக்கு ஏன் இத்தனைச் சந்தோஷம்னு நீங்க கேட்கலாம்.

எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கணும். சிறுகதைன்னா அதிகபட்சம் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; நாவல் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; தொடர்கதைன்னா இத்தனை வாரங்கள் போகலாம்; சினிமான்னா இத்தனை மணி நேரம் ஓடலாம்னு முடிவு பண்ணிக்கணும். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தா தப்பில்லை. ஆனா, எந்தத் தீர்மானமும் இல்லாம, கதை எந்தத் திசையை நோக்கிப் போகுதுன்னே தெரியாம, எங்கெங்கேயோ வளைச்சு வளைச்சு இழுத்துட்டுப் போய், என்னவோ ஒரு வசனம் சொல்வாங்களே, வண்டி மாடு மூத்திரம் பேஞ்சாப்போலேன்னு, அது மாதிரி கொண்டு போய் முச்சந்தியில விடக்கூடாது இல்லையா? ஒரு சீரியல் டைரக்டர் சீரியலை மட்டும் கொண்டு போய் முச்சந்தியில நிறுத்துறார்ங்கிறது இல்லை; அதை வேலை மெனக்கிட்டுப் பார்க்கிற ரசிகர்களையும் அலைக்கழிச்சு இழுத்துட்டுப் போய் முச்சந்தியில நிறுத்துறார்னுதான் அர்த்தம்!

அந்த வேலையைத்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம்.

பொதுவா எல்லாக் கண்ணராவி சீரியல்களையும் பெண்கள் ரசிச்சுப் பார்க்குறாங்கன்னு ஒரு பேச்சிருக்கு. அப்படி இல்லை. வேலைக்குப் போகாம வீட்டோடு இருக்கிற பெண்கள்தான் வேற பொழுதுபோக்கு இல்லாம சீரியல்களை, அது எத்தனை அபத்தமா இருந்தாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு. அதுக்காக அதையெல்லாம் அவங்க ஒத்துக்குறாங்கன்னோ, ரசிக்கிறாங்கன்னோ அர்த்தமில்லை. அவங்களுக்கு அதை விட்டா வேற வழியில்லை.

‘கோலங்கள்’ ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கடந்த ஒரு வருஷமாத்தான் கோலங்கள் அலங்கோலங்கள் ஆயிடுச்சு. திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. மெகா சீரியல்ல இது ஒரு வசதி. புதுசு புதுசா சண்டையை உற்பத்தி பண்ணலாம். புதுசு புதுசா கேரக்டர்களைக் கொண்டு வரலாம். சாகடிக்கலாம். அல்லது, காணாம போக்கிடலாம். யாரும் கேட்பார் கிடையாது. அப்படித்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம். யார் யாரோ வந்தாங்க; போனாங்க. பல பேரைப் பத்தித் தகவலே இல்லை. அதையெல்லாம் லிஸ்ட் போடணும்னா இடம் பத்தாது.

ஆதிங்கிற கேரக்டர் அருமையான கேரக்டர். தொழிலில் திறமையும், மிடுக்கும் உள்ள கேரக்டர். அவனுக்கு அபியும், அபியைச் சேர்ந்தவங்களும் எதிரிங்க. அவங்களை அவன் எப்படி முன்னேறவிடாம தடுக்கிறான்னு காட்டாம, அவனை அபி எப்படி ஜெயிக்கிறாள்னு காட்டாம, அவனையும் கடைசியில கோட்டா சீனிவாசராவ் மாதிரி ஆக்கி, ‘ஏய்... ஏய்..’னு கத்த வெச்சு, (அந்த ஆளு ஆரம்பத்திலேர்ந்தே கத்திக்கிட்டுத்தான் இருந்தாரு. தொண்டைத் தண்ணி போகக் கத்தினதுக்கே அந்த ஆளுக்கு டபுள் சம்பளம் கொடுத்திருக்கணும்.) கண்டமேனிக்குச் சகலரையும் சுட்டுத் தள்ள வெச்சு, சைக்கோ மாதிரி ஆக்கி, கட்டட உச்சியிலேர்ந்து குதிக்க வெச்சு, மூளை குழம்பி, வெஜிடபிள் மாதிரி உட்கார்த்தி வெச்சா, இதுதான் ஒரு நல்ல சீரியலுக்கு லட்சணமா? அபி அவனை ஜெயிச்சதா அர்த்தமா? சகிக்கலை!

திருச்செல்வத்துக்கு திடீர்னு மூளை குழம்பி, திடீர்னு சுய நினைவு திரும்பிடுது. அதே போலவே ஆதிக்கும் திடீர்னு சுய நினைவு திரும்பி, “நான் சாகலடீ... சாகல... உங்களையெல்லாம் போட்டுத் தள்ளறதுக்காகத்தான் அப்படி நடிச்சேன்!”னு எழுந்து வந்து, இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு சீரியலை இழுத்துடுவாரோன்னு ஒரு பயம் திக் திக்னு நெஞ்சுக்குள்ள அடிச்சுக்குது.

லாஜிக் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. தோழர்னு ஒருத்தர் செந்தமிழ்ல பேசினார். செந்தமிழ்ல பேசுறது ஒண்ணும் தப்பில்ல. நல்ல விஷயம்தான்! சரித்திர நாடகமா இருந்தா ரசிக்கலாம். ஆனா, இதுல அவர் கேரக்டர் ஒட்டல. அந்தக் காலத்து அரசன் வேஷம் போட்டுக்கிட்ட ஒருத்தன் தவறுதலா சமூக நாடக மேடையில புகுந்து குழப்படி பண்ணின மாதிரி இருந்தது.

சரி, அதையாச்சும் மன்னிக்கலாம், நல்ல தமிழுக்காக! (ஆனால், தோழர் முழுக்க முழுக்கத் தனித் தமிழ்ல பேசலை. அவர் பேச்சுல வேற்று மொழிச் சொற்கள் நிறைய கலந்திருந்தது. உதாரணமா, விஷயம் என்கிற வார்த்தையை அவர் விசயம், விசயம்னுதான் உச்சரிச்சார். ‘ஷ’வை ‘ச’வாக்கிட்டா அது நல்ல தமிழ் வார்த்தையாயிடுமா என்ன?) ஆனா, ஏழு வருஷத்துக்கு மேல ஒரு கதையை இழு இழுன்னு இழுத்து வந்துட்டு, கடைசி ரெண்டு மூணு எபிஸோடுல அடுத்தடுத்து பல பேர் தடாலடியா திருந்திடறதா காண்பிச்சா, பார்த்துக்கிட்டிருக்கிற அத்தனை பேரும் இளிச்சவாயங்களா? ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த பழைய தமிழ்ப் படங்கள்லதான் இந்த மாதிரி கூத்து நடக்கும்.

அசட்டுத்தனமான காட்சிகள் நிறைய. தோழர் எதிரிகள்கிட்டேர்ந்து தப்பிக்க தாவித் தாவிக் குதிச்சு ஓடறார். அப்போ அபிக்கு போன் பண்றார். பெரிய தொழிலதிபரான அந்தம்மா (பிராஜக்ட் வொர்க்குக்காக அந்தம்மா இந்த ஏழு வருஷத்துல ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடலே. என்னவோ போய் கட்டடம் கட்ட இடம் பார்த்தாங்களாம். அத்தோட சரி! ஆதியும் இதே கேஸ்தான். என்ன பிராஜக்டோ, என்ன பில்டிங் காண்ட்ராக்டர்களோ! தேவுடா!) செல்போனை கார்லயே போட்டுட்டு வந்து, பாட்டியம்மாவை ஆறுதல் படுத்துது; படுத்துது; படுத்திக்கிட்டே இருக்குது. அட, அவராச்சும் ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்; அந்தப் பொம்பளை எடுக்க மாட்டேங்குது; வேற யாருக்காச்சும் ட்ரை பண்ணுவோம்னு பண்றாரா? அவரோட சக தோழருங்க யாருக்காச்சும் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே?

அப்புறம்... தோழர் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி மீட்டிங். எல்லாரும் ஆவேசமான குரல்ல கத்திப் பேசிட்டிருக்காங்க. அப்போ அபிம்மாக்கு போன் வருது, தொல்ஸ் கிட்டேர்ந்து. எடுத்துப் பேசுதாம். குரல் கேக்கலையாம். “ஆ... சொல்லுங்க, சொல்லுங்க... கேக்கல...” இப்படியே பேசி பொழுதப் போக்கிடுச்சு. இடத்தை விட்டுக் கொஞ்சம் நகர்ந்து போய்க் கேட்போம்கிற அறிவுகூட அந்தம்மாவுக்கு இல்லே. அப்புறம் லேட்டா ஞானோதயம் ஏற்பட்டு, வெராண்டாவுக்கு வருது. அப்பவும் கத்தல் சத்தத்துல காதுல கேக்கல. படியில இறங்கிப் போய்க் கேட்க அதிக பட்சம் ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்காது. ஆனா, இந்த ஸீன் டி.வி-யில பத்து நிமிஷம் ஓடிச்சு.

கார்ல போயிட்டிருக்கும்போது, ஆதி போன் பண்றான் அபிக்கு, உன் வீட்டார் எல்லாரையும் போட்டுத் தள்ளிடுவேன்னு. இந்தம்மா உடனே என்ன பண்ணணும்? தன் வீட்டுக்கு போன் போட்டு, விஷயத்தைச் சொல்லி, உடனே வேறெங்காவது போயிடுங்கன்னு சொல்லிட்டு அப்புறம் இல்லே போலீஸுக்கோ புடலங்காய்க்கோ சொல்லணும்? அதான் இல்லே! முதல்ல சி.பி.ஐ-க்கு போன் போடுது. அந்தாளு எதையுமே சீரியஸா எடுத்துக்காம பாட்டுப் பாடிக்கிட்டுத் திரியறவரு. போயும் போயும் அவருக்கா சொல்லணும்? அவர் என்னடான்னா நான் மயிலாப்பூர்ல இருக்கேன், மாமண்டூர்ல இருக்கேன்கிறாரு. அப்புறமா வீட்டுக்குப் போன் போடுதாம் அபிம்மா. நம்பரை மாத்திட்டாங்களாம். ‘சே... சே...’ங்குது. நமக்குத்தான் சேச்சேன்னு சொல்லத் தோணுது. இவங்களே சொல்லிக்கிட்டா எப்படி?

இந்தக் கூத்துல, கிளைமாக்ஸை யாரு கரெக்டா கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு அசத்தலான பரிசுகள் உண்டுன்னு ‘அவள் விகடன்’ பத்திரிகையில போட்டிருக்குது.

அதெப்படி கரெக்டா கண்டுபிடிக்கிறது? இந்நேரம் வரைக்கும் கரெக்டான முடிவு எதுன்னு திருச்செல்வத்துக்கே தெரியுமோ, தெரியாதோ!

எனக்குப் பரிசு வேணாம்ப்பா! எனக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது!

எனது அடுத்த பதிவு: செய்திகள் வாசித்து எரிச்சல்படுவது உங்கள் கிருபாநந்தினி.
Author: கிருபாநந்தினி
•Thursday, November 26, 2009
ல்லாரும் மன்னிச்சுக்குங்க... நானும் வலைப்பூ எழுத வந்துட்டேன்.

நான் அதிகம் படிச்சவள் இல்லை. எனக்குச் சுவையாக எதுவும் எழுதத் தெரியாது. கதை, கட்டுரை என எதுவும் எழுதியது இல்லை. அவ்வளவு ஏன், வாசகர் கடிதம்கூட எந்தப் பத்திரிகைக்கும் எழுதிப் போட்டது இல்லை. கணினி அறிவும் அவ்வளவாகக் கிடையாது.

என் கணவர் கிருபாகரன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர். மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று பறந்துகொண்டிருப்பார். திருமணமாகி வந்ததற்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே கண்ணால் பார்த்தேன். நான் வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் பொழுதுபோவதற்காக இணையத்தில் உலவக் கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் வலைப்பூ என்று சொல்லக்கூடிய பிளாகுகளைப் படிக்கவும், அவற்றுக்கு பதில் அளிக்கவும் கற்றுக்கொண்டேன்.

எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். எனவே, சமையல் குறிப்புகளை வலைப்பூவில் போடலாமா என்று கணவரிடம் கேட்டேன். ஆனால், ‘அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிளாக் ஆரம்பிக்காதே! சுவாரசியமாக இருக்காது. உன் எண்ணங்களை, கருத்துக்களை எதையாவது எழுது!’ என்று சொல்லி, எனக்கு ஒரு வலைப்பூ வடிவமைத்துத் தந்தார். எப்படிப் பதிவிட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்.

முதலில் ‘அசரீரி’ என்று என் பிளாகுக்குப் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். அந்தப் பெயரில் வேறு யாரோ வைத்திருக்கிறார்களாம். எண்ணங்கள், என் மன வானில், மனசு, என் உலகம் என்று என்னென்னவோ பெயர்கள் சொன்னேன். எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏற்கெனவே வலைப்பூக்கள் இருந்தன. மிகச் சோர்ந்துபோய் கடைசியாக இந்தப் ‘படித்துறை’ என்ற பெயரை முயற்சி செய்யச் சொன்னேன். என் அதிர்ஷ்டம், இது கிடைத்தது.

‘படித்துறை’ என்பதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இது ஒரு இலக்கியப் பெயர் மாதிரி தோன்றுகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து, ஒருவரோடொருவர் அளவளாவி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடம் படித்துறை. எனவே, என் வலைப் பூவுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். மற்றபடி இலக்கியத்திலோ சினிமாவிலோ அரசியலிலோ எனக்கு அதிகம் பரிச்சயம இல்லை. தவிர, நான் எழுத்தாளரும் இல்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியாது. அதனால்தான் ஆரம்பத்திலேயே வலைப்பூ எழுத வந்ததற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

ஏதோ என் மனதில் பட்டதை இதில் அவ்வப்போது எழுதி வைக்கிறேன். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ‘ஐயையே! இவளெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதது?’ என்று முகம் சுளிக்காதீர்கள். அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். சுருக்கமாகத்தான் எழுதுவேன்.

இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.

மற்றபடி உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,

கிருபாநந்தினி.

என் அடுத்த பதிவு: ‘கோலங்கள்’ சீரியல் பற்றி...