Author: கிருபாநந்தினி
•Tuesday, March 30, 2010
காப்பிய நாயகியின் பெயரைத் தன்னோட பெயரோடு ஒட்ட வெச்சிருக்கிற ஒரு கவிதாயினியம்மா ரொம்ப ஆபாசமா எழுதுதுன்னு ஒரு மேட்டர ஜூனியர் விகடன்ல படிச்சுத் தொலைச்சுட்டேன். நானே பொதுவா இந்த ஜூனியர் விகடன், நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரியான ‘மிலிட்டரி’ ரகப் புஸ்தகங்களைப் படிக்க மாட்டேன். எப்பவாவது புரட்டிப் பார்க்கிறதோட சரி! அப்படியிருக்கிற நானே எப்பவாவது அத்தி பூத்த மாதிரி படிக்கிறப்போ, கெரகம்... எனக்குன்னு இப்படியா வந்து விடியணும்? சே..! நமக்குன்னு வந்து மாட்டுதுங்கப்பா!

ஜூனியர் விகடன்ல படிச்சதுதான் படிச்சேனே, மகா பாவி அதை அத்தோட விட்டுட்டு என் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிருக்கக்கூடாதா! அங்கேதான் ரெண்டாவது தப்பைப் பண்ணிட்டேன். இன்னாவோ உலகத்திலேயே ரொம்ப அழகான பொண்ணுன்னு தன்னைச் சொல்லிக்குதே அந்தப் பொண்ணுன்னு, அதன் வலைப்பூவைத் தேடிப் போய்ப் படிச்சேன். உவ்வ்வ்வேய்ய்ய்க்க்க்க்! அப்ப ஆரமிச்ச வாந்தி எனக்கு இன்னும் நிக்கவேயில்லீங்க! தொடர்ந்து ஒரே உமட்டல், குமட்டல்தான்! அதான், பதிவு போடுறதுக்கு இம்புட்டு நாளாயிருச்சு.

ஏன் இப்படியெல்லாம் ஆபாசமா எழுதுதுன்னு கேட்டதுக்கு அந்தம்மா சொல்லுது, பாலியல் அத்துமீறல்களைப் பத்திக் குரல் கொடுக்குதாமா! பெண்ணிய வேதனைகளைப் பிரதிபலிக்குற அதன் எழுத்துக்கள் இதே வீச்சத்தோடுதான்... ஸாரி, வீச்சோடுதான் தொடருமாமா!

இது எப்படித் தெரியுமா இருக்குது... சில வருஷத்துக்கு முன்னால, கோயமுத்தூரு ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஒரு பாவப்பட்ட, பைத்தியக்காரப் பொம்பளை திரிஞ்சுக்கிட்டிருந்துச்சு. ஒடம்புல ஒட்டுத் துணி இருக்காது. ‘வாடா, வா! எத்தினி பேரு வேணாலும் வாங்கடா! இந்தாடா என் ஒடம்பு. இதானே ஓணும் உங்களுக்கு. எடுத்துக்குங்கடா!’ன்னு மானாவாரிக்கு ஆபாசமா கத்தும். யாராச்சும் பொம்பளைங்க பாத்து, அதை மறைவுக்கு இட்டுக்கினு போய், நைட்டி ஒண்ணை மாட்டி வுட்டு அனுப்புவாங்க. ரெண்டு நாள்தான் அந்த நைட்டி அதும் ஒடம்புல இருக்கும். மூணாம் நாள் மறுபடி பிறந்தமேனிக்கா திரிஞ்சிட்டிருக்கும். பாவம் அந்தப் பொம்பளை! சொல்லவே கஷ்டமா இருக்குது. எவனோ கசுமால நாயிங்க அதைக் கெடுத்துப்பிட்டிருக்காங்க. மூளைக் கோளாறாயிருச்சு. அதனால, தான் என்ன பண்றோம்னு தெரியாம, மாட்டி வுடற டிரஸ்ஸைக்கூடக் கழட்டிக் கழட்டிப் போட்டுடும்.

மனச் சிதைவுக்கு ஆளாயிட்ட அந்தப் பாவப்பட்ட பொம்பளைக்கும், இந்தப் பாட்டு எழுதுற பொம்பளைக்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியலே. ஒரே ஒரு வித்தியாசம்தான். தான் இன்னது செய்யறோம்னு தெரியாம செய்யுது அது; இது வீம்புக்குன்னே செய்யுது.

பெண் உறுப்புகளைக் கவிதையில எழுதுறதை நியாயமாக்கி வாதாடுறவங்க ஆ, ஊன்னா ஆண்டாள் கவிதையையும், கந்த சஷ்டி கவசத்தையும், இன்னும் சில பக்தி இலக்கியங்களையும் துணைக்கு இழுத்துக்கிறாங்க. அதுல எல்லாம் பெண் உறுப்புகள் பேர் சொல்லப்படலையான்னு கேக்குறாங்க. இவங்களே வேற ஒரு சந்தர்ப்பத்துல, பக்தி இலக்கியங்களைத் தாக்கணும்னு வரப்போ, ஆ... ஆபாசக் குப்பைன்னு அதையே உதாரணம் காட்டுவாங்க.

ஒண்ணு சொல்றேன். அந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் வேற. அந்தக் காலத்துல அந்த வார்த்தைகளை ஆபாச வார்த்தைகளா யாரும் எடுத்துக்கலே. இன்னிக்கு நல்ல நல்ல வார்த்தைங்களே ஆபாச வார்த்தைகளாயிருச்சே! பஜனைங்கிறது படு ஆபாசமான வார்த்தை ஆயிருச்சு. இன்னிக்குக் குமுதம் பக்தி ஸ்பெஷல் பார்த்துக்கிற ப்ரியா கல்யாணராமன் பல வருஷங்களுக்கு முன்னால குமுதத்துல அந்த ‘பஜனை’ங்கிற வார்த்தையை ஒரு சிறுகதையில படு ஆபாசமான முறையில பயன்படுத்தியிருப்பாரு. மெதுவடை, கீரைவடைங்கிற வார்த்தைகளையெல்லாம் ஆபாச வார்த்தைகளா சினிமாவுல பயன்படுத்த ஆரம்பிச்சுப் பல வருஷமாச்சு.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’னு திருவள்ளுவர் சொல்றாரு. அதுக்காக, அவர் சொல்ற அந்த வார்த்தையையும், இந்த ‘ஒலக அழகி’ தன் கவிதை(?!)யில சொல்ற அதே வார்த்தையையும் ஒரே தராசுல நிறுத்துப் பார்க்க முடியுமா என்ன?

ஜூனியர் விகடன்ல இந்தம்மா கவிதை பத்தி வேலை மெனக்கிட்டு ஏழெட்டுப் பேர் கிட்ட கருத்து கேட்டுப் போட்டிருக்காங்க. ரொம்ப முக்கியம் பாருங்க!

சில பேரோட கருத்துங்களைப் பார்ப்போம்.

சாகித்திய அகாதமி விருது வாங்கினவராம் நீல பத்மனாபன். போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கிய ஆராய்ச்சி நடத்துவதற்கான அனுபவமோ நேரமோ இருக்குமான்னு இவருக்குச் சந்தேகமாம். அதனால இதைச் சட்டரீதியா அணுகக் கூடாதுங்களாம். எனக்குப் புரியலீங்க. ஏங்க... போலீஸ்காரங்கன்னா முட்டாளுங்களா என்ன? காவல்துறை அதிகாரிகள்ல எத்தனை எத்தனை பேர் நல்ல இலக்கிய அறிவோட இருந்திருக்காங்க! அதுவுமில்லாம இந்தம்மா எழுதின குப்பையை இலக்கியம்னு தலையில தூக்கிட்டு வராரே இவரு, கஷ்டம்டா சாமி! இதைச் சட்ட ரீதியா அணுகக்கூடாதுன்னா, நாளைக்கு நித்தி சாமியாரும், “நான் பண்றது யோகம். அன்னிக்கு வீடியோவுலயும் அந்த நடிகையோடு யோக ஆராய்ச்சிதான் நடத்திக்கிட்டிருந்தேன். அதைப் புரிஞ்சுக்கிறதுக்கான அனுபவம் போலீஸ் அதிகாரிங்களுக்கு இருக்குமான்னு சந்தேகம்”னு சொல்வாரு. ஒத்துக்குவீங்களா?

அடுத்தாப்ல சாரு நிவேதிதா. இவரைப் பதிவுலகத்திலயும் பத்திரிகையுலகத்திலயும் ரொம்பப் பேரு காமெடியனாத்தான் பாக்குறாங்க. இவரு வாயைப் புடுங்கி எதுனா விவகாரம் கெளப்பலாமான்னு ஆசைப்பட்டிருக்கு ஜூனியர் விகடன். நித்தி சாமியார் விவகாரத்துல இவர் அடிச்ச பல்டி, அந்த வீடியோவைவிட சூப்பரு! இவர் சொல்றாரு, பாலியல், அந்தரங்கம் குறித்த படைப்புகளை ஓர் ஆண் எழுதியிருந்தா இந்த அளவு பிரச்னையாகி இருக்காதாம். ஏங்க... பாய்ஸ் படத்துல எழுதின ஆபாச வசனத்துக்காக எழுத்தாளர் சுஜாதாவைத் தொரத்தித் தொரத்தி அடிச்சாங்களே, மறந்துட்டீங்களா? ஆபாசத்துக்கு எதிரானவங்க சினிமாவையும் சின்னத் திரையையும் விட்டுட்டு எழுத்தாளர்கள் மேல பாயுறது எந்த விதத்துல நியாயம்னு கேக்குறாரு சாரு. யாருங்க விட்டது? யாரும் விடலீங்க. அப்பப்போ எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. சொல்லப்போனா, ஆ, ஊன்னா சாணி வாளியைத் தூக்கிட்டு ஆபாச சினிமா போஸ்டர்கள் மேல ஊத்தக் கெளம்பிடற, நியூ படம் எடுத்ததுக்காக டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு காட்டுக் காட்டின மகளிர் அமைப்புங்க, இந்தம்மா எழுத்தைக் கண்டும் காணாம இருக்குங்கிறதுதான் உண்மை.

‘எழுதுவதற்குச் சுதந்திரம் இருக்குங்கிறதுக்காக எதையும் எழுதிக் குவிக்கலாம் என்பது சரியா? சமூகத்தின்மீது நமக்கு இருக்கும் பொறுப்போடு நாகரிகத்துடன் நம் படைப்புகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் நியாயம்’னு சொல்லியிருக்கும் டைரக்டர் மதுமிதா, ‘சமூகத்தில் விபசாரம் செய்வோர் உருவாக இலக்கியங்கள் காரணமாகும் நிலை வந்தால், அந்தச் சமூகம் உருப்படுமா?’ன்னு பொட்டில் அடித்தாற்போல் கேட்டிருக்குற பிரான்ஸ் வலைப்பதிவாளர் தமிழச்சி, ‘எழுத்துக்கும் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்கிற போராட்டங்களுக்கான காரண கர்த்தாக்களில் ....வும் இருப்பார்’னு நறுக்குனு சொல்லியிருக்கிற வழக்கறிஞர் திலகவதி மூணு பேருக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைத் தெரிவிச்சுக்கிறேன்.

முன்னேயே ஒருமுறை நான் சொன்னதுதான்... மறுபடியும் சொல்றேன். பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்னு உசுப்பேத்தி உசுப்பேத்தி சில ஆம்பிளைங்க பெண்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து எக்ஸ்ப்ளாய்ட் பண்ணத் துடிச்சிட்டிருக்காங்க. ரொம்பப் புத்திசாலின்னு தன்னைத் தானே நெனைச்சிட்டிருக்கிற சில பொம்பிளைங்களும் அந்தப் பேச்சுல மயங்கித் தப்பான வழியில போயிடறாங்க.

நித்தி சாமியார் மாதிரியே இன்னொரு தாடிச் சாமியாரும் பல வருஷத்துக்கு முன்னால இப்படித்தான் பேசிப் பேசி பெண்களை வளைச்சுப் போட்டாரு. ஆம்பிளைங்க என்ன தப்பு வேணாலும் செய்யலாமா, நீங்களும் அவங்களுக்குச் சமதையா எத்தனை ஆம்பிளைங்களோடு வேணாலும் தொடர்பு வெச்சுக்குங்க, ஒண்ணும் தப்பில்லேன்னு போதிக்க ஆரம்பிச்சாரு. கல்யாணமான/ கல்யாணமாகாத ஆண்களும் பெண்களும் ஒண்ணாகக் கூடிக் கும்மாளம் அடிக்கக் கூட்டங்களும் ஏற்படுத்தினாரு. அப்புறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போலத் தெரிஞ்சதும் உஷாராகி, அந்தக் கூட்டங்களை நிப்பாட்டிட்டாரு.

ஆகவே... என் சகோதரிகளே, சிநேகிதிகளே! பாத்து புத்தியா பொழைச்சுக்குங்க. எல்லா ஆம்பிளைங்களும் அயோக்கியங்க இல்லே; அது போல, எல்லாப் பொம்பிளைங்களும் யோக்கியமும் இல்லே! அவ்வளவுதான், சொல்லிட்டேன்!
.
Author: கிருபாநந்தினி
•Sunday, March 14, 2010
ருத்ரன் ஐயா! வணக்கங்கய்யா! நல்லாருக்கீங்களா?

உங்களை நான் ரொம்ப உயர்வா மதிக்கிறேன். என் வலைப்பூவை நீங்க படிச்சுப் பார்த்ததோட மட்டுமில்லாம, பாராட்டிப் பின்னூட்டம் இட்டது எனக்குப் பெரிய கௌரவம். அதனாலதான் தலைகால் புரியாத மகிழ்ச்சியில நன்றி சொல்லி எழுதினேன். அதுக்காக தமிழ்நதி உள்ளிட்ட சில பேர்கிட்ட வசவையும் கேலிப் பேச்சையும் வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுக்காகக் கூட நான் வருத்தப்படலீங்கய்யா..! எனக்கு வக்காலத்து வாங்கினதுக்காக உங்களைக் கூட சில பேரு கன்னாபின்னானு திட்டி எழுதியிருந்தாங்க. அதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. எனக்காக நீங்க திட்டு வாங்கும்படி ஆயிருச்சேன்னு உண்மையிலேயே ரொம்ப வேதனைப்பட்டேங்கய்யா!

ஆனா, இப்ப எனக்கு அதைவிடப் பெரிய வேதனை என்னான்னா, என் மதிப்புக்குரிய உங்களையே விமர்சனம் பண்ணி, கண்டிச்சு பதிவு எழுதும்படி ஆயிருச்சேன்னுதான்!

ஆமாங்கய்யா! நான் உங்க ஃபாலோயரா இருக்கேன். தவறாம உங்க பதிவுகளைப் படிச்சுட்டு வரேன். அதுல ஓவியத் தாத்தா எம்.எஃப்.ஹுசேனுக்கு வக்காலத்து வாங்கி நீங்க எழுதியிருந்ததைப் பார்த்து எனக்குக் கடுப்பாயிருச்சுங்கய்யா! இந்து மதத்துலதான் உங்களை மாதிரி ரொம்பப் பேர், ‘நாங்க நடுநிலைமைவாதிங்க; மதச்சார்பின்மைவாதிங்க; இந்து மதத்தையே திட்டுவோம். இந்துக்களை மட்டும்தான் கண்டிப்போம். மத்தபடி எவன் என்ன செஞ்சாலும் பொத்திக்கிட்டுப் போயிருவோம்’னு யோக்கிய வேஷம் போடுறவங்க இருக்காங்க. வேற எந்த மதத்துலயும் இல்லீங்க. அப்படியே ஒருத்தன், ரெண்டு பேர் இருந்தாலும் அவன் உசுருக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சு, தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதுதான். உங்களை மாதிரி தைரியமா ஊருக்குள்ள நடமாடிட்டிருக்க முடியாது.

நாஸ்திக வாதம் பேசுறவனையும் அரவணைச்சுப் போற மதம் இந்து மதம்தான். அதனாலதான் உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் மனச்சாட்சியை அடகு வெச்சுட்டு, நம்மவங்களையே போட்டுக் காய்ச்சி எடுக்குறீங்க. அடுத்தவன் பண்ணின தப்பை தைரியமா எடுத்துச் சொல்லப் பயப்படுறீங்க; அல்லது, அடுத்தவனைக் குத்தம் சொல்றதுல என்னா இருக்கு; நம்மாளைச் சொன்னாலாவது நடுநிலைமையான ஆள்னு தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடுவாங்கன்னு நினைக்கிறீங்க.

\\அவன் செய்தது எல்லாம் சில ஓவியங்கள் வரைந்ததுதான்; அது குற்றமாகப் பார்க்கப்படுவது அவன் ஒரு முஸ்லிம் என்பதால்தான்!// நீங்கதான் அப்படிக் கோணல் புத்தியோட நினைக்கிறீங்க. வரைஞ்சது கிறிஸ்துவரா இருந்தாலும், இந்துவாவே இருந்தாலும்கூட இதே அளவு எதிர்ப்பு வந்திருக்கத்தான் செய்யும். நீங்க உங்க வசதிக்கு மதச் சாயம் பூசி மழுப்பாதீங்க.


\\அவனுக்கு என்ன எதிர்ப்பு? அவன் ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்திவிட்டானாம்! அதனால் அவன் இந்தியாவிற்குள்ளே வரக்கூடாதாம்! ஒரு மசூதியை இடித்து, அதன் மூலம் பல முஸ்லிம் மனங்களை நொறுக்கியவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.// ஐயா! மசூதியை இடிச்சது தப்புதான். அதை யாரும் சரின்னு சொல்லலே! மகா தப்பு. அதுக்காக ஹூசேன் பண்ணது சரியாயிடுமா? எதுக்கும் எதுக்கும்யா முடிச்சுப் போடுறீங்க? மசூதியை இடிச்ச மகா பாவிங்களை என்னென்ன திட்ட முடியுமோ திட்டுங்க. நாங்களும் கூடச் சேர்ந்து குரல் கொடுக்குறோம். அதுக்காக இந்த ஆளு தன் இஷ்டத்துக்கு கேவலப்படுத்தி இந்துச் சாமிகளைப் படம் வரைவாரு; நாங்க பார்த்துக்கிட்டு கம்முனு இருக்கணுமா? ஏன்யா இப்படி வரையறீங்கன்னு கேக்கக்கூடாதா? என்னாங்கய்யா நியாயம்?

\\அவன் என்ன அப்படிக் கேவலமாக வரைந்தான்? சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தான் என்பதே குற்றச்சாட்டு! சீதையும் அனுமனும் நெருக்கமாக இருப்பதாய் வரைந்தான் என்று ஒரு குற்றச்சாட்டு!! நெருக்கமாய் இருந்ததால்தானே தூதுவனிடம் தன் மோதிரம் தந்தாள்? நிர்வாணமான சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்ட படம் எந்தக் காலத்தில்?
// நல்லாக் கேக்குறீங்கய்யா கேள்வி. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நீங்க தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடுற ஹூசேன் ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘ஒருத்தனை மட்டம் தட்டி இகழ வேண்டுமானால், வேறெதுவும் செய்யத் தேவையில்லை; அவனை நிர்வாணமாய் வரைந்தால் போதும்!’னு. அப்படின்னா என்ன அர்த்தம்... இவரு இந்துச் சாமிகளை மட்டம் தட்டி இகழுறதுக்காகத்தானே அப்படி வம்படியா வரைஞ்சுக்கிட்டிருக்காரு!

அப்புறம் என்னா கேட்டீங்க... சரஸ்வதிக்கு ரவிவர்மா ஜாக்கெட் போட்டது எந்தக் காலத்தில்? ஐயா... நம்ம ஆதி முன்னோருங்க ஆடையே இல்லாம நிர்வாணமா சுத்திட்டிருந்தாங்க. அதுக்காக நாமளும் அப்படியே சுத்திட்டிருக்கணும்னா எப்படிங்கய்யா? இன்னிய கதைய பேசுங்க.

\\கடவுளுக்கு மனித முகம் எப்போது வந்தது? ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மாதிரிதான் அவள் இருப்பாளா? ரவிவர்மா காலத்தில் பார்டர் வைத்த ரவிக்கையை அவளுக்குப் போட்டு அழகு பார்த்தால், இப்போது ஸிலீவ்லெஸ் டாப்ஸுடன் அவளை அழகுப் படுத்தலாமா? ரவிவர்மா என்ன பிரம்மலோகத்தில் எடுத்த பாஸ்போர்ட் படத்தை மாடலாக வைத்துத்தான் அவளைப் படம் வரைந்தாரா? ஹொய்ஸாலா சிற்பங்களில் பலவற்றில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்படவில்லை! அவற்றைப் பார்க்கும் போது பாலுணர்வு தூண்டப்படுகிறதா? அவை ஆபாசமாகத் தெரிகின்றனவா?//

மன நல மருத்துவர் இல்லீங்களா... அதான், உக்காய்ந்து யோசிச்சுக் கேள்விகளைக் கேட்டிருக்கீங்க. சூப்பருங்கய்யா! பெரியார் கட்சிக்காரங்களுக்குக்கூட இப்படியெல்லாம் கேக்கத் தோணுமோ, என்னவோ! சிற்பங்களைப் பார்த்தா ஆபாசம் தோணாதுங்கய்யா; வக்கிரமான ஒரு சின்ன கோட்டுப் படத்தைப் பார்த்தா தோணும். வெள்ளைக்காரப் பொண்ணுங்க டூ பீஸ் டிரஸ்ல வந்தா தப்பா, ஆபாசமா தோணாதுங்க; நம்ம பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக்காரம்மா அப்படி வந்தா தோணும். டென்னிஸ் ஆடுற பொம்பளைங்க குட்டைக் கவுன் போட்டுட்டு வந்தா ஆபாசமா தோணாதுங்க; ஆபீஸ்ல கூட வேலை செய்யுற பொம்பளைங்க அப்படி வந்தா தோணும். நாம எப்படியான சூழ்நிலையில இருக்கோம்கிறதைப் பொறுத்ததுதான் எது ஆபாசம், எது ஆபாசம் இல்லேங்கிற விஷயம்! உங்களுக்குத் தெரியாதது இல்லீங்க. சரஸ்வதிக்கு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டு அழகுபடுத்தலாமான்னு மேதாவித்தனமா ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க. போடலாங்கய்யா! ஆனா, இப்ப இல்லே; நூறு, இருநூறு வருஷங்களுக்கப்புறம் அப்படியும் ஒரு காலம் வந்தாலும் வரும். அப்ப எல்லாருமே பழைய காட்டுமிராண்டிக் காலத்துக்குப் போய், ஆடையில்லாம திரிஞ்சுட்டிருப்பாங்களா இருக்கும். அப்ப, சரஸ்வதி ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுக்கட்டும். இப்ப வேணாங்கய்யா!

\\சிவனை, விஷ்ணுவை, முருகனை நிர்வாணமாக வரைவதில் யாருக்கும் பெரிய ஆத்திரம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் தெய்வங்களின் கற்பு பற்றித்தான் இவர்களுக்கு அதிகம் கவலை வருகிறது. வர்த்தகத் திரைப்படக் கதாநாயகன் போல உடனே சட்டையைக் கழற்றி அவள் மீது போர்த்திவிடத் துடிக்கிறார்கள்.// ஐயா, பெண்களை உயர்ந்த இடத்தில் வெச்சுக் கொண்டாடுறது இங்கேதாங்க. ‘பெண்களைச் சுயமா சிந்திக்க விடலே, அடிமைகளா வெச்சிருக்காங்க’ன்னு ஒரு கோஷ்டி புலம்பிக்கிட்டிருக்கு. மகளிரை நாங்கதான் முன்னேத்தப் போறோம்கிறாங்க. பெண்களை பிரெயின்வாஷ் பண்ணி, அவங்களுக்கு நல்லது பண்றதா பொய் சொல்லி, சுதந்திரம் வாங்கிக் கொடுக்குறதா சொல்லி, அவங்களைத் தங்களோட வலையில வீழ்த்தி லாபம் அடையத் துடிக்கிறவங்க இவங்கதான். பாவம், ஏமாந்த பொம்பளைங்க இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிங்க கிட்டேயும் ஏமாந்து நிக்கிறாங்க. நித்தியானந்தனெல்லாம் இந்தப் பசுத்தோல் போர்த்தின புலிக்கூட்டத்துல ஒருத்தன்தான். அவனை மாதிரி போலி ஆசாமிகளையெல்லாம் டார் டாரா கிழிச்சு எழுதுங்க. இந்துச் சாமிகளை விட்டுருங்க.

பெண்கள் உரிமை விஷயத்துல முஸ்லிம் மதத்தைக் குறை சொல்லுறவங்க இருக்காங்க. உண்மையில, பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்குறது முஸ்லிம் மதம்தாங்க. அதனாலதான் புரட்சி எழுத்தாளரா இருந்த கமலா சுரையா முஸ்லிமா மதம் மாறின பின்னாடி, ‘நான் இந்த மதத்துக்கு வந்த பின்னாடிதான் பாதுகாப்பா இருக்கேன். பர்தா அணியறது எனக்குப் பாதுகாப்புக் கவசமா இருக்கு’ன்னு பேட்டி கொடுத்தாங்க.

\\யார் யாரைக் காப்பாற்றுவது? யார் யாருக்காக வக்காலத்து வாங்குவது? சர்வசக்திக்கு நீங்கள் பாதுகாப்பு தரத் துடிக்கிறீர்களா?
“அவன் தாயை அவன் நிர்வாணமாக வரைந்து கொள்ளட்டும், என் தாயை அப்படி வரையக்கூடாது” என்று சொல்பவர்கள் எந்தத் தாயை தங்கள் தாயென்று கூறுகிறார்கள்? பராசக்தியையா? அவள் என்ன உன் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் தாயா நீ பிரத்யேக உரிமை கொண்டாட? லோகமாதா என்று ஏன் அழைக்கப்படுகிறாள்? எல்லார்க்கும் அவள் தாய் என்றால் எல்லாருக்கும் அவள் மீது உரிமை இல்லையா? உனக்கு மட்டுமே தாய் என்றால் அவள் எப்படி உலகத்துக்கே தெய்வமாகிறாள்? உலகில் இத்தனை சத விகிதத்திற்கு மட்டும் அவள் தாயென்றால் மீதிக்கு யார்? உன் தெய்வத்தின் சக்தியை நீயே இவ்வளவு குறுக்குவதை உணர்கிறாயா?//

நல்லாத்தாங்க இருக்கு இந்தக் கேள்விங்க எல்லாம்! சர்வ சக்திக்கு நாம பாதுகாப்பு தர முடியாதுதாங்க. பிரச்னை அங்கே இல்லீங்கய்யா. நான் தெய்வமா வழிபடற ஒரு தெய்வத்தைக் கேவலப்படுத்தி வரைஞ்சா என் மனசு புண்படுது இல்லீங்களா? என் மனசைப் புண்படுத்த உங்களுக்கு என்ன ரைட்டு? நான்னா நான் இல்லீங்க. என்னைப் போல பல லட்சக்கணக்கான பக்தர்களைச் சொல்றேன். உங்க மத்த கேள்விங்களுக்குச் சொல்றேன்... எந்தத் தாயை அப்படிக் கேவலப்படுத்தி வரைஞ்சாலும் தப்பு தப்புதான். உங்க தாய், எங்க தாய்னு எந்த வித்தியாசமும் இல்லே. கோபத்துல ஒரு பேச்சுப் பேசுறதுதான். அதையே புடிச்சுக்கிட்டா எப்படி?

‘அடுத்த மதத்தை விமர்சனம் செய்யாதே! அடுத்த மதத்தின் கொள்கைகளைக் குற்றம் சொல்லாதே! உன் மதத்தின் பெருமைகளைச் சொல். அடுத்த மதத்தை விமர்சிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை’ன்னு குரான் சொல்லுது. ‘அல்லா’ படத்தைக் கேவலமாகூட வேணாம், கண்ணியமாதான் வரையறேன்னு ஒருத்தன் வரைஞ்சாலும் அது தப்புதான். அது முஸ்லிம் மதத்தோட நம்பிக்கை. அதைத் தப்பு சொல்ல முடியாது. ஹுசேனே அல்லாவை வரைஞ்சாலும் தப்புதான். ஆனா, வரைவாரா? மாட்டார் இல்லியா? ஏன், அவங்க மதத்தின் கொள்கைக்கு மதிப்புக் கொடுக்குறார். நல்லது. ஆனா, இந்து மதச் சாமிங்கன்னா அவருக்கு ஏனுங்கய்யா இந்த வக்கிர புத்தி! நீங்க எல்லாம் இருக்கீங்கன்ற தைரியம்தான்!

ஹூசேன் தாத்தா இந்துச் சாமிகளை இப்படி நிர்வாணமா வரையறதை பெரும்பாலான இஸ்லாமியப் பெரியவங்களே விரும்பலீங்கன்றதுதான் நிஜம். நாம எப்படி நித்தியானந்தக் கோமாளிகளை இந்துச் சாமியார்னு சொல்லிக்க வெக்கப்படறமோ அப்படித்தான் இந்த ஹுசேன் ஏன் இப்படிப் பண்ணுறார்னு பெரும்பாலான உண்மையான முஸ்லிம்கள் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்க. உங்களை மாதிரி ‘நடுநிலைமைவாதிங்க’தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கீங்க.

கீழே ஹுசேன் தாத்தா வரைஞ்ச சில படங்களைக் கொடுத்திருக்கேன். ருத்ரன் ஐயா, நீங்களே பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!

பக்கத்துல இருக்கிற படத்தை வரைஞ்சது ஹுசேன்தான். அதுக்கு அவர் கொடுத்திருக்கிற தலைப்பு ‘இந்தியக் கற்பழிப்பு’ (Rape of India). கேட்டா, ‘மும்பை தீவிரவாதம்’ எழுப்பின கோபத்தை இப்படி வெளிப்படுத்தினதா சொல்றாரு. சரி, இதே மாதிரி அரபு நாடுகள்லேயோ, இப்ப அவர் அடைக்கலமாகியிருக்கிற ‘கட்டார்’லேயோ நடந்தா Rape of UAE-னோ அல்லது Rape of Qutar-னோ தலைப்புக் கொடுத்துப் படம் வரைவாரா?

ஹுசேன் வரைஞ்ச துர்க்கையம்மன் படம்தான் இடப் பக்கத்துல இருக்கு. இரண்டாவதா இருக்கிறது அவர் வரைஞ்ச கடவுள் லக்ஷ்மி. அதுவே, நபிகளாரின் திருமகள், அன்னையர் திலகம் பாத்திமாவை எவ்வளவு கண்ணியமா வரைஞ்சிருக்கார் பாருங்க (வலது ஓரம் உள்ள படம்).
இடப் பக்கம் உள்ளது ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி; பக்கத்துல இருக்கிற நிர்வாண சரஸ்வதி, ஹுசேன் வரைஞ்சது.

இப்பப் புரியுதுங்களாய்யா ஹுசேன் தாத்தாவோட வக்கிர புத்தி? மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா, ஐஸ்வர்யா ராய்னு கிழ வயசுலயும் கூசாம ஜொள்ளு விட்டவர்தானே அவரு? அது அவரோட பர்சனல் விஷயம். நாம கேக்க முடியாது. ஆனா, திரும்பத் திரும்ப ஏன் இந்துக் கடவுள்களையே இப்படிக் கேவலப்படுத்தி ஓவியங்கள் வரையணும்னுதான் கேக்கறேன். இதனால இந்துச் சாமிகளோட மகிமை ஒண்ணும் குறைஞ்சுடப் போறதில்லே; ஆனா, அந்தத் தெய்வங்களையெல்லாம் மனசாரக் கும்புடற எங்களை மாதிரி பக்தர்கள் மனசை ஏன் நோகடிக்கிறீங்கன்னுதான் கேக்குறேன்.

முதல் தடவை ஹுசேன் இப்படி இந்துக் கடவுளை நிர்வாணமா வரைஞ்சப்போ, உண்மையிலேயே அதை ‘கலை’ நோக்குல அவர் வரைஞ்சிருக்கலாம். ஆனா, எப்போ பக்தர்கள் கோபப்பட்டுக் கொந்தளிச்சு, அவர் கலைக்கூடத்தை அடிச்சு, உடைச்சு நொறுக்கினாங்களோ, (அந்த வன்முறையை நான் நியாயப்படுத்தலே. மகா அக்கிரமம்தான் அது!) அப்பவே, ‘சரி, இப்படி வரையறது இந்து மதத்தில் உள்ள பக்தர்கள் மனசைப் புண்படுத்துது போலிருக்கு’ன்னு அவர் அப்படி வரையறதை விட்டிருக்கணுமா இல்லியா? அதானேங்க ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு! அப்படி விட்டிருந்தார்னா, நான்கூட, ‘பாவங்க! ஏதோ இயற்கையா வரையணும்கிற ஆசையில ஹுசேன் தாத்தா அப்படி வரைஞ்சுட்டாரு. அந்தப் படம் பக்தர்களை இந்த அளவுக்கு வேதனைப்படுத்தும்னு அவருக்குத் தெரியாது, பாவம்! அதுக்கு இந்தப் படுபாவிப் பசங்க அவர் மேல இப்படிக் காட்டுத்தனமா பாய்ஞ்சி, அடிச்சு நொறுக்கியிருக்காங்களே! சே... கொஞ்சம்கூட சகிப்புத் தன்மையே இல்லே!’ன்னு பதிவு எழுதியிருப்பேன்.

ஆனா, நடந்தது என்ன? ‘போங்கடா பொங்கிங்களா... நான் அப்படித்தான் வரைவேன். நீங்க வருத்தப்பட்டா எனக்கென்ன, வேதனைப்பட்டா எனக்கென்ன? என் படத்தை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிப் போய் வீட்டுல மாட்டி வெச்சுக்க எனக்கு ஆள் இருக்கு’ன்னு ஒரு அழும்புலதானே அவர் திரும்பத் திரும்ப இப்படியே வக்கிரமா வரைஞ்சுக்கிட்டிருக்காரு?

நித்தியானந்தனைக் கண்டிச்ச நீங்க ஹுசேனையும் கண்டிச்சிருந்தீங்கன்னா, உங்களை நடுநிலைமையாளர்னு நான் ஒப்புக்கிட்டிருப்பேன். நீங்க அப்படி இல்லேங்கிறதுதான் வருத்தமா இருக்குங்கய்யா!

என் மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். இதனால உங்க மேல உள்ள மதிப்பும் மரியாதையும் எனக்குக் கொறைஞ்சுடுச்சுன்னு அர்த்தப்படுத்திக்காதீங்க!

வணக்கம்.

பணிவுடன்,

கிருபாநந்தினி.
,
Author: கிருபாநந்தினி
•Wednesday, March 03, 2010
ணக்கமுங்க! எல்லாரும் நல்லாருக்கீங்களா? மத்தவங்களோட வலைப்பூவெல்லாம் படிக்கிறீங்களா? மறக்காம பின்னூட்டம் போடறீங்களா? சந்தோஷமுங்க.

கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு ஒரு பக்கம் பெரிய மனுசங்க சில பேர் அனத்திக்கிட்டு இருக்காங்க. கனி பொண்ணும் கார்த்தி புள்ளையும்கூட ‘கருத்து’ன்னு ஒரு அமைப்பு ஏற்படுத்தி, அது இப்ப எந்த நிலைமையில இருக்குன்னு தெரியல. ஆனா, மனசுல உள்ள கருத்த வெளிய சொல்றதுக்கு இந்த நாட்டுல இன்னும் சுதந்திரம் வரலேன்னுதான் எனக்குத் தோணுது. அதுலயும் என்னைப் போல பொண்ணாப் பொறந்தவ கருத்தே சொல்லக் கூடாதுன்னு ஒரு கோஷ்டியே வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சுக்கிட்டிருக்குன்னு சமீபத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். மீறி கருத்து சொன்னா, அவ ஜாதியிலேர்ந்து, அப்பன் ஆத்தா வரைக்கும் சந்தியில இழுத்து வெச்சு, நாராச வார்த்தையால நாறடிக்கக் காத்துக்கிட்டிருக்கு.

புள்ளைய கவனி, புருசனுக்கு ஆக்கிப்போடுன்னு வந்த ஆணாதிக்கப் பின்னூட்டங்கள்கூடப் பரவாயில்லை. ஆபாசமா, வக்கிரமா வந்த பின்னூட்டங்களைக் கண்டுதான் வருத்தமா இருக்கு. இப்படி வருத்தமா இருக்குன்னு போன பதிவுக்கான பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருந்ததைப் பார்த்துக் குஷியாகி, ‘ஆஹா! இவ வருத்தப்படுறாடோய்! இன்னும் இன்னும் எழுதி இவ மனசை நோகடிப்போம்!’னு கெளம்பிட்டாய்ங்க.

ஆனா, நான் வருத்தப்பட்டது அவங்க ஆபாசமா எழுதினதுக்காக இல்லே. பெண்ணோட பாலியல் உறுப்புகளின் பெயர்களையே ஆபாச ஆயுதங்களா நினைச்சு உபயோகப்படுத்தியிருக்காங்களே, அவங்க இந்த உலகத்துக்கு ‘வந்த வழி’யும் அதுதான்கிறதை மறந்துட்டாங்களேங்கிற வருத்தம்தான் எனக்கு!

‘ரதி’ என் பதிவைக் கண்டிச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், அதுல ஒரு கண்ணியம் இருந்தது. தவிர, தமிழ்நதியோட ‘இளவேனில்’ வலைப்பூவுல அவங்க, ‘கிருபாநந்தினிக்கு வந்த தனி நபர் தாக்குதல் பின்னூட்டங்களைப் பற்றி நீங்க கண்டிக்காதது ஏன்?’னு கேட்டிருந்தாங்க. கூடவே, “அவர் ஒர் விடயத்தை அறியாமல்,ஆராயாமல் எழுதுகிறாரா இல்லையா என்பதை சொல்வதிலிருந்து விலகி, அவர் என்ன எழுதுவது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்?”னும் கேட்டிருந்தாங்க. அது மனசுக்கு ஆறுதலா இருந்தது. ரதிக்கு என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

ரதிக்கு பதில் தெரிவிச்சிருக்கும் தமிழ்நதி, “ஆம். குறிப்பிட்டிருக்க வேண்டும். மிக மனவேதனையுடன் அந்தப் பதிவை நான் எழுதினேன். அப்போது கிருபாநந்தினியை அப்படிச் சாடி எழுதியிருந்ததைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டேன். ஒருவேளை அப்படிச் சாடி எழுதியிருந்தது 'எனக்குச் சார்பாகப் பேசியிருக்கிறார்கள்' என்ற உள்ளார்ந்த திருப்தியை எனக்கு அளித்திருந்ததனால் சுலபமாக மறந்துவிட்டேன் போலும். மனித மனத்தின் விசித்திரத்தை யார்தான் புரிந்துகொள்வது? தவறுக்கு மன்னிக்கவும். பெண் என்றால், சமையல், அழகுக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்கள் மனதுள் படிந்துபோய்விட்டிருக்கின்றன. இது அகல நூற்றாண்டுகள் ஆகும்”னு உண்மையை வெளிப்படையா ஒப்புக்கிட்டு எழுதியிருக்காங்க. இதுக்கு ரொம்ப மனத் துணிவும் நேர்மையும் வேணும். தமிழ்நதிக்கு என் நன்றி!

எனக்கு ரொம்பப் பிடிச்ச மொழி தமிழ். தெரிஞ்ச மொழியும் அது ஒண்ணுதான். ‘படித்துறை’ங்கிறது நதிக் கரையில் இருப்பது; நதிக்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் கலகலப்பாகக் கூடிப் பேசுகிற இடம். ‘தமிழ்நதி’ பேர்ல எனக்கு எந்தத் தனி நபர் கோபமும் இல்லை; காழ்ப்பு உணர்ச்சியும் இல்லை. ‘டமில்ரிவர்’னு அவங்க பெயரை ஆங்கிலப்படுத்தியதில் வன்மமோ, குரூர உணர்வோ இல்லை. அது சும்மா ஒரு நையாண்டிதான்!

ஓ.கே.! பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்!

***

நித்யானந்தரின் திருவிளையாடல்களை, ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’கிற நோக்கோடு சன் நியூஸ் ராவும் பகலுமா ஒளிபரப்பி மகிழ்ந்தது. நாமெல்லாம் ‘மிட்நைட் மசாலா’ போல பார்த்து மகிழ்ந்தோம்.

அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, டாக்டர், வாத்தியார், கவர்னர், அர்ச்சகர், பாதிரியார், இந்துச் சாமியார்னு எந்த வேறுபாடுமே இல்லாம இந்த மாதிரி காம லீலைகள்ல மூழ்கித் திளைக்கிறதை அப்பப்போ தமிழ்ப் பத்திரிகைங்களும், தொலைக்காட்சிகளும் படம் பிடிச்சுக் காட்டிக்கிட்டு வருதுங்க. அவங்க நோக்கம் என்னவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறதா இருக்கலாம். ஆனா, எனக்கு என்ன பயம்னா, இதையெல்லாம் அடிக்கடி ஒளிபரப்பி, அதுல ஒரு டேஸ்ட் ஏற்பட்டு, “என்னப்பா, இன்னிக்கு எதுவும் புதுசா யாரோட லீலையும் இல்லையா? அட போப்பா! போரடிக்குதே! அந்த கவர்னர் கேஸட்டையாவது மறு ஒளிபரப்புச் செய்யலாம்ல?”னு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதுற அளவுக்கு ஜனங்க ஆளாயிடப் போறாங்களேங்கிறதுதான். போகிற போக்கைப் பார்த்தா, “தூத்துக்குடி வேல்முருகன், ராமகிருஷ்ணன், திண்டிவனம் இரா.சுப்பையா, செங்கல்பட்டு ராஜேஷ், சக்திவேல், செய்யாறு சுப்பிரமணி, மாணிக்கம் ஆகியோர் விரும்பிக் கேட்டுள்ளார்கள்...’னு நேயர் விருப்பமாவே இந்த காம கேஸட்டுங்களை ஒரு நிகழ்ச்சி நிரலாவே ஆக்கிடுவாங்க போலிருக்கு.

நித்யானந்தர் குமுதத்துல முன்னே ‘ஜன்னலைத் திற; காற்று வரட்டும்’னு எழுதினாரு; இப்ப, ‘ஆத்மாவைத் திற; ஆனந்தம் பெருகட்டும்’னு எழுதிக்கிட்டு வர்றாரு. குமுதம்காரங்க இதைத் தொடருவாங்களா, நிப்பாட்டிடுவாங்களான்னு தெரியலை. ஆனா, அவங்களுக்கு என்கிட்டே ஒரு அருமையான யோசனை இருக்கு. அது குமுதம் பத்திரிகைக்கேத்த யோசனைதான். இதே நித்யானந்தரை விட்டு, அடுத்த இதழ்லேர்ந்து ‘கதவைத் திற; நடிகை வரட்டும்’னு ஒரு ஜிலுஜிலு கட்டுரைத் தொடரை ஆரம்பிச்சுடலாம். ‘ஒரு நடிகையின் கதை’ வெளியானப்போ இத்தனை ஆயிரம் பிரதிகள் சர்க்குலேஷன் ஏறிச்சுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டவங்கதானே! இப்ப இந்த யோசனையால முன்னைவிட டபுள் மடங்கு சர்க்குலேஷன் எகிறும். அதுக்கு நான் கியாரண்ட்டி!

சமீபத்துல நித்யானந்தர் இப்படி எழுதியிருந்தாரு... ‘நிஜமான ஒரு யோகியால்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறுவதெல்லாம் சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களைச் சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியில்தான் முடிவடைந்துவிடுகிறது.’

சரியாத்தான் சொல்லியிருக்காரு. நித்யானந்தர் நிஜமான யோகி இல்லை. சாதாரண மனிதர்தான். அதனாலதான் அவர் புலன்களை அடக்க முயற்சி பண்ணவே இல்லை. எல்லாம் சரி. கூடவே, அவர் சாமியார் வேஷம் போட்டு ஊரை ஏமாத்துறதையும் இத்தோடு நிப்பாட்டிக்கிட்டார்னா அவருக்கும் நல்லது; அடுத்தவங்களுக்கும் நல்லது. அடுத்த வாரம் ஞாநி ஐயா, நியாயவானா இருந்தா, இந்த நித்யானந்தருக்கு ஒரு குட்டு வைக்கணும். அப்படி வெச்சா, ஞாநிக்கு நான் பூச்செண்டு தரேன்.

சாமியார்கள் சபலத்துக்கு ஆளாவது புராண காலத்துலேர்ந்து இருக்குற விஷயம்தான். அதனாலதானே முனிவர்களின் யாகத்தைக் கெடுக்க இந்திரன் தன் கிட்டே இருக்குற ரம்பை, ஊர்வசிகளை அவங்க முன்னே போய் டான்ஸ் ஆடுன்னு அனுப்பி வெச்சான்!

மைக்கேல் ஜாக்ஸனோட நிகழ்ச்சியில, அவர் மேல எத்தனைப் பெண்கள் பைத்தியமா, வெறியா இருந்தாங்கன்னு ஒரு இசை நிகழ்ச்சியின்போது தெரிஞ்சுது. ஹாலிவுட் வரைக்கும் போவானேன்... நம்ம எம்.கே.டி. பாகவதர் காலத்துல, அவர் பொது இடத்துக்கு வந்தார்னா, அவர் மேல எத்தனைப் பொம்பளைங்க விழுந்து பிறாண்டினாங்கன்னு அந்தக் காலத்து ஆளுங்களைக் கேட்டா, ரசனையா விலாவாரியா சொல்வாங்க.

கிருஷ்ணப்ரேமின்னு ஒருத்தர்... கர்நாடக சங்கீதம் பாடி, உபந்நியாசம் பண்றவர். செய்யுறது பக்திமயமான தொழில். ஆனா, உபந்நியாசம் பண்றப்பவும் அவர் பார்வை பெண்கள் பக்கம்தான் மேயும். நான் சொல்றது அம்பது, அறுபது வருஷத்துக்கு முன்னாடி! இப்பத்தான் பெண்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமா அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் போய் தறிகெட்டு அலையுறாங்கன்னு நெனைச்சிட்டிருக்கோம். அதான் இல்லே. அந்தக் காலத்திலேயே நிறையப் பெண்களுக்கு லஜ்ஜைங்கிறது போயிடுச்சு. கிருஷ்ணப்ரேமியோட பார்வை தன் மேல படாதான்னு ஒவ்வொரு பெண்ணும் ஏங்கினாங்க. அந்த கிருஷ்ணப்ரேமி தன்னையே கிருஷ்ணனாவும், மத்த பெண்களையெல்லாம் கோபிகைகளாவும் நினைச்சுக்குவார். பெண்களும் அப்படியே நினைச்சுக்கிட்டு, கிருஷ்ணப்ரேமியைப் பார்த்ததும், ‘கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னையும் உன்னோட அழைச்சுக்கிட்டுப் போயிடுடா!’ன்னு ஜுர வேகத்துல அனத்துறது மாதிரி அனத்துவாங்களாம். அவர் ஒரு ஊருக்குள்ள வந்தார்னா, அவர் பார்வைல படாத மாதிரி தன்னோட பெண்டாட்டியைப் பாதுகாக்கிறது ஒவ்வொரு புருஷனுக்கும் பெரும்பாடா ஆயிடுமாம். இதையெல்லாம் என் தாத்தா கதை கதையா சொல்லுவார்.

அப்பெல்லாம் இத்தனை காண்டிட் காமிராக்கள் இல்லை; தொலைக்காட்சிகள் இல்லை. இருந்திருந்தா, அந்தக் காலத்துக்கு இந்தக் காலம் எத்தனையோ மேல்; முன்னைவிட ஒழுக்கம் அதிகமாவே வளர்ந்திருக்குன்னுதான் சொல்லத் தோணும்! ‘காலம் கெட்டுப் போச்சு... காலம் கெட்டுப் போச்சு’ன்னு இனியும் பெரியவங்க சொன்னா, நம்புறதுக்கு நாங்க தயாரா இல்லை.
.