Author: கிருபாநந்தினி
•Sunday, January 31, 2010
விருது கொடுத்து கௌரவிக்கிறது ஒரு வகை; விருது கொடுத்துக் கேலி பண்றது ஒரு வகை! ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜுக்குச் ‘சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்’ விருது கொடுத்தது அவரை கேலி பண்ற மாதிரின்னு போன பதிவுல எழுதியிருந்தேன்.

இந்தக் குடியரசு தினத்தையொட்டி நம்மாளுங்க 13 பேருக்கு ‘பத்ம’ விருது அறிவிச்சிருக்கு மத்திய அரசு. இதைப் பத்தி எனக்குத் தோணினதை எழுதப் போறேன். இது என் கருத்து. எனக்குச் சரின்னு பட்டதை எழுதியிருக்கேன். இதுவே சரியான கருத்தா இருக்கணும்கிற அவசியமில்லே!

‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’ங்கிறாரு வள்ளுவரு.

‘காலந்தாழ்த்தித் தரும் விருது பெரிதெனினும்
கடுகினும் மாணச் சிறிது’ங்கிறேன் நான்.

பத்ம விருதுக் கமிட்டியில இருக்கிறவங்களுக்கு சுய புத்தியே கிடையாதோன்னு ஒவ்வொரு முறை பத்ம விருதுகள் அறிவிக்கும்போதும் நம்மளை யோசிக்க வெச்சுடறாங்க. விஞ்ஞானி வெங்கடராமனுக்கு பத்ம விபூஷண் கொடுத்திருக்காங்க. வேற ஒரு காரணமும் இல்லே; அவர் சமீபத்துல நோபல் பரிசு வாங்கிட்டாரில்லையா, அதான்!

தகுதியானவங்களுக்கு விருது கொடுத்து, அவங்களை மரியாதை செய்யுறது ஒரு வகை. விருது பெற்றவங்களுக்கே விருது கொடுத்து அந்த விருதுக்கே மரியாதையைத் தேடிக்கிறது இன்னொரு வகை. வெங்கடராமனுக்குக் கொடுத்த விருது இந்த ரெண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். அதே போலத்தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்ம பூஷண் கொடுத்ததும்.

உலகின் உச்சபட்ச விருதான ஆஸ்கரை ஒண்ணுக்கு ரெண்டா தட்டிக்கிட்டு வந்துட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். (போதாக்குறைக்கு ரெட்டை கிராமி விருது வேற! சரியான மச்சக்காரன்! எல்லாமே ரெட்டை ரெட்டையா வந்து கொட்டுது அவர் மடியில! இப்ப நெனைச்சிருப்பாங்க நம்மாளுங்க, அவருக்கு பாரத ரத்னாவே கொடுத்திருக்கலாம் போலிருக்கேன்னு!) அவருக்கு பத்ம பூஷணோ, விபூஷணோ கொடுக்கலைன்னு இங்கே யாரும் அழப்போறது இல்லை. அவரும் கேக்கப் போறது இல்லை. ஆனா, கொடுத்திருக்காங்கன்னா நெஜம்மாவே அவங்கவங்க தகுதியைப் பார்த்துதான் கொடுக்குறாங்களான்னு டவுட்டா இருக்கு. ஆஸ்கர் வென்ற நாயகனுக்கு நாமும் நம்ம சார்புல ஒரு விருது கொடுக்கலைன்னா நமக்கு மரியாதையா இருக்காதுன்னு நெனைச்சுக் கொடுத்தாப்பல இருக்கு. குட்டிக் குட்டிக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் ‘நான் தரேன் டாக்டர் பட்டம், வாங்கிக்க... வாங்கிக்க...’னு கூப்பிட்டுக் கூப்பிட்டு சிலருக்கு விருது கொடுப்பாங்க பார்த்திருக்கீங்களா, அது அவங்களுக்குச் செய்யுற மரியாதை இல்லை. அவங்களுக்குக் கொடுக்கிறதன் மூலம் தனக்குத் தானே தேடிக்கிற மரியாதை! மத்திய அரசும் அந்த லிஸ்ட்ல வந்துட்டதுதான் வருத்தமா இருக்கு. (அப்படித்தான் மிகப் பெரிய இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது கிடைச்சவுடனே, நம்மாளுங்க ஓடோடிப் போய் அவர் கையிலே ‘பாரத ரத்னா’வைத் திணிச்சுட்டு வந்தாங்க. நாளைப்பின்ன யாரும் நாக்குல பல்லு போட்டுப் பேசிடக் கூடாது பாருங்க!)

சரி, ரஹ்மானுக்கு ஒரு பூஷண் கொடுத்தாச்சு! கூடவே, கொறையில்லாம இளையராஜாவுக்கும் கொடுத்தாச்சு! பின்னே, ரஹ்மானுக்குக் கொடுத்துட்டு இளையராஜாவுக்குக் கொடுக்கலையான்னு கேக்க தமிழ்நாட்டுல ஒரு கோஷ்டியே இருக்கே! அதனால அவருக்கும் ஒரு பூஷண் கொடுத்துடுவோம்னு கொடுத்தாப்லதான் இருக்கு இது. என்னைக் கேட்டா சிந்து பைரவி காலத்திலேயே ராஜாவுக்கு பத்ம விருது கொடுத்திருக்கணும். இப்ப ரஹ்மானோட சேர்த்துக் கொடுத்தா, தகுதியைப் பார்த்துக் கொடுத்த மாதிரியே தெரியலை. திட்டு வாங்கிக் கட்டிப்பானேன்னு கொடுத்த மாதிரிதான் இருக்கு.

சரி, இவருக்காவது எப்படியோ ஒரு விதத்துல பூசணியை, ஸாரி, பூஷணைக் கொடுத்துட்டாங்க. பாவம், எம்.எஸ்.வி. வாயில்லாப் பூச்சி! அவருக்காவும் வாய் விட்டுக் கேக்கத் தெரியாது; அவருக்காகக் குரல் கொடுக்கவும் இங்கே யாரையும் காணோம்! சரி விடுங்க, மகா இசை மேதையான அவருக்கு ஒரு விருது கொடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக்க மத்திய அரசுக்கு யோக்கியதை இல்லை. வேறென்ன சொல்றது?

‘மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியா?’ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். ‘ஒரு தலைவன் இருக்கிறான்’னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னைத்தான்னு கூசாம சொல்லிக்கிட்டாரே முதல்வர் கருணாநிதி, அதைக் கிண்டல் பண்ணி எழுதினதுதான் அது. ஆனா, புரட்சித் தலைவியம்மா சும்மா விடுவாங்களா, ‘அம்மான்னா சும்மாவா?’ன்னு தலைப்புப் போட்டு ஒரு பதிவு எழுத என் கையைத் துறுதுறுக்க வெச்சுட்டாங்க.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ?’ன்னு பாடினது என்னைத்தான்’னு திருவாய் மலர்ந்தருளியிருக்காங்க. எனக்கு நெஜம்மாவே புரியலீங்க, இவங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்டு நம்மளையெல்லாம் முட்டாளாக்குறாங்களா, இல்லே, சீரியஸாதான் இதையெல்லாம் சொல்றாங்களான்னு புரியவே இல்லே! யார் யாரோ எழுதின சினிமா பாட்டுக்கெல்லாமா இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து முட்டி மோதுவாங்க?

சரி, அப்படின்னா நான் ஒரு பாட்டு சொல்றேன். அதையும் எம்.ஜி.ஆர். இந்தம்மாவைப் பார்த்துதான் பாடியிருக்காரு. அதையும் ஒத்துக்குறாங்களா?

‘என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ?
ஏறி வந்த ஏணி தேவையில்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ?
பட்டோடு பருத்தியைப் பின்னியெடுத்து
உங்க பகட்டுக்குப் புத்தாடை யார் கொடுத்தா?
கட்டாந்தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைச்சா?’ன்னு அந்தக் கதாபாத்திரத்தை நினைச்சுப் பாடலே, ஜெயலலிதாவைத்தான் அப்படிக் குற்றம் சொல்லிப் பாடுறார் எம்.ஜி.ஆர்.னு எடுத்துக்கலாமா?

போங்கய்யா, போங்கம்மா... வேற வேலை வெட்டி இல்லே!

நான் பதிவெழுத வந்ததே இப்பக் கொஞ்ச நாளாதான்! ‘எனது ரசனை’ங்கிற வலைப்பூவுல ‘ரசிக்கும் சீமாட்டி’யம்மா ஒரு போட்டோவைக் கொடுத்து, அதுக்குத் தோதா ஒரு கமென்ட் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. கீழே இருக்கு பாருங்க, அதான் அந்தப் படம்! அதுக்கு நான் எழுதின கமென்ட்: “யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”

நான் என்னவோ சும்மா ஜாலியாதான் எழுதிப் போட்டேன். அட, என்ன ஆச்சரியம்! ரசிக்கும் சீமாட்டியம்மா என் கமென்ட்டை செலக்ட் பண்ணி, ‘கமென்ட் குயின்’கிற அவார்டையும் கொடுத்து கௌரவிச்சுட்டாங்க! நான் எழுதின ஒண்ணு நல்லாருக்குன்னு மத்தவங்களால செலக்ட் ஆனது முதல் முறையா இதுதான்கிறதால, எனக்கு ரெட்டை ஆஸ்கர், ரெட்டை கிராமி விருது கிடைச்ச மாதிரி இருந்துது. மறுபடி ஒருக்கா, ரசிக்கும் சீமாட்டியக்காவுக்கு என் நன்றிகளைச் சொல்லிக்கிறேன்.

அடுத்தபடியா எனக்கு ரொம்பச் சந்தோஷம் தந்த விஷயம், பிரபலமான ‘இட்லிவடை’ பிளாக்ல, நான் என் பதிவுல எழுதியிருந்த நடிகர் விஜய் சம்பந்தமான ஜோக்ஸையெல்லாம் எடுத்துப்போட்டு, என் பிளாகுக்கு லின்க்கும் கொடுத்து என்னைப் பிரபலமாக்கினது. இட்லிவடைக்கு தேங்க்ஸ்!

மூணாவது சந்தோஷம், என் பேர் நல்லா எழுதும் வலைப்பதிவர்கள் லிஸ்ட்ல ‘தினமணி’ பேப்பர்ல வந்தது!

தொடர்ந்து, மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரன் ஐயா என் பதிவை நேரம் ஒதுக்கிப் படிச்சதோடல்லாம, வேலை மெனக்கிட்டு அதைப் பாராட்டிப் பின்னூட்டமும் இட்டிருக்காரு. இது என் நாலாவது சந்தோஷம்.

இப்ப அஞ்சாவதா ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு. ‘என் டயரி’ பதிவுல ரவிபிரகாஷ் தன்னோட ஒரு புத்தகத்துக்குப் பேர் வைக்கச் சொல்லிக் கேட்டிருந்தாரு. ஏதோ எனக்குத் தோணினதையெல்லாம் எழுதி அனுப்பினேன். சத்தியமா என்னோடதை அவங்க செலக்ட் செய்வாங்கன்ற நம்பிக்கையே எனக்குக் கிடையாது. நான் பிளாக்னு முதல்முதலா படிக்க ஆரம்பிச்சது ரவிபிரகாஷோட ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ பிளாக்குகளைத்தான். அதுல முன்னே அவர் தான் விரும்பிப் படிக்கிற பிளாகுகளையெல்லாம் லின்க் கொடுத்திருந்தாரு. அதன் மூலமாதான் லதானந்த் பக்கம், இட்லிவடை, யுவகிருஷ்ணானு மத்த வலைப்பூக்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அதனால ஒரு ஆர்வத்துல எனக்குத் தோணின பேர்களையெல்லாம் எழுதினேன். அதுல ஒண்ணை (புதுமொழி 400) செலக்ட் பண்ணிட்டதா இப்ப அறிவிச்சிருக்காரு. அதுக்குப் புத்தகப் பரிசும் அனுப்புறதா சொல்லியிருக்காரு. அதைவிட சந்தோஷம் என்னன்னா, தலைப்பு கொடுத்ததுக்காக அந்தப் புத்தகத்துலேயே எனக்கு நன்றியும் சொல்லியிருக்காராம்.

ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது. நன்றிங்ணா! நன்றிங்கக்கா! என் பதிவைப் படிக்கிற, பாராட்டுற, குட்டு வைக்கிற ‘தமிழ்நதி’யக்கா உள்பட எல்லாருக்கும் நன்றி!
.
Author: கிருபாநந்தினி
•Wednesday, January 27, 2010
ல்லாருக்கும் என் அன்பான குடியரசு தின வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேங்க!

சில நாளைக்கு முன்னால, ஆனந்த விகடன்ல யார் யாருக்கெல்லாமோ 25 குறிப்புகள் போடுறாங்க; சிவாஜி பத்திப் போடவே இல்லியேன்னு ஆதங்கப்பட்டு எழுதியிருந்தேன். இந்த வார விகடன்ல போட்டுட்டாங்கய்யா! என் வலைப்பூவை அவங்க படிச்சாங்களோ இல்லியோ, அது எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு, ஏதோ நான் எழுதினதைப் படிச்சுட்டுத்தான் ‘சிவாஜி 25’ போட்டுட்டாய்ங்கன்ற மாதிரி ஒரு ஃபீலிங்!

ஆர்வமா படிச்சுப் பார்த்தேன். என் ஆர்வம் மொத்தமும் புஸ்ஸுனு போயிருச்சுங்கய்யா. ‘சிவாஜி’ பட்டம் கொடுத்தது பெரியார்தான், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச ஒரே படம் கூண்டுக்கிளி, பெருமாள்தான் சிவாஜியை அறிமுகம் செய்தாரு, கூட்டுக் குடும்பமா வாழ்ந்தாரு, காமராஜர் மேல பக்தி கொண்டவருன்னு ஆண்டாண்டு காலமா படிச்சு, அலுத்து, சலிச்சு, உளுத்துப் போன குறிப்புகளா, கடனேன்னு போட்டு ரொப்பியிருந்தாங்க. ஏங்க, தெரியாமதான் கேக்கறேன்; கலைத் தாயின் தவப் புதல்வனான சிவாஜிக்குப் பெருமை சேர்க்கிற விதமா, சுவாரஸ்யமான ஒரு 25 குறிப்புகளை உங்களால தேத்த முடியலையா? சரி விடுங்க, இவ்ளோ நாள் கழிச்சு இத்தயாச்சும் போட்டாங்களேன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்!

த்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட முழுப் பக்க பத்திரிகை விளம்பரத்துல, பாகிஸ்தான் விமானப் படை முன்னாள் தளபதி தன்வீர் முகமது படமும் இருக்குதாம். அதுதான் இப்போ பெரிய சர்ச்சையாம். பேப்பர்ல போட்டிருக்காங்க.

“உங்க அம்மா பிறக்க அனுமதிக்கப்படாம இருந்தா, நீங்கெல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு ஒரு கேள்வியோடு அந்த விளம்பரம் வந்திருக்குது. இந்தக் கேள்வியை அந்த விளம்பரம் யார் யாரைப் பார்த்துக் கேட்குது தெரியுமா... நம்ம பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சேவாக், பிரபல சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான் இவங்களைப் பார்த்து! இந்தப் படங்கள் வரிசையிலதான் பாகிஸ்தான் ஆளும் எப்படியோ நுழைஞ்சுட்டாப்ல!

அவர் படம் இந்த விளம்பரத்துல எப்படி இடம்பெறலாம்கிற சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்; இந்த விளம்பரம் என்ன, நாகரிகமாகவா இருக்கு?

“உங்கள் தாய் பிறக்க அனுமதிக்கப்படாமல் இருந்தால்...”னா என்ன அர்த்தம்? அதாவது, “உங்க அம்மாவைக் கருவிலேயே அழிச்சிருந்தா, நீங்க எல்லாம் எங்கே இருப்பீங்க?”ன்னு கேக்குறாங்க. இது யாரைப் பார்த்துக் கேக்க வேண்டிய கேள்வி? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க மக்கா..! யார் யாரெல்லாம் பெண் குழந்தையை வேணாம்னு ஒதுக்குறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலையை ஆதரிக்கிறாங்களோ, யார் யாரெல்லாம் பெண் சிசுக் கொலை பண்றாங்களோ அவங்களைப் பார்த்தல்லவா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கணும்? மன்மோகன் சிங் மாதிரி மதிப்புக்குரியவங்களைப் பார்த்தா கேக்குறது?

புரியலையா? விளக்கமாவே சொல்றேன். தன் பெண்டாட்டி வயித்துல வளர்றது பெண் சிசுன்னு தெரிஞ்சுக்கிட்ட ஒருத்தன், அதை உடனே கலைக்கச் சொல்லி அவளை டார்ச்சர் பண்றான்னு வெச்சுக்குவோம்; அப்ப அவன் பெண்டாட்டியோ அவளைச் சேர்ந்தவங்களோ அவனை, “ஏண்டா நாயே! உங்க அம்மாவைக் கருவுலேயே அழிச்சிருந்தா, நீ எங்கேடா இருப்பே?”னு அவனைக் கேக்கலாம். சரியா?

அப்படின்னா, இந்த விளம்பரம் வேறெப்படி வந்திருக்கலாம்? மதிப்புக்குரிய பெரியவங்க படத்தைப் போட்டு, ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.

ஹூம்.. இங்கிதமில்லாத விளம்பரம்; அதுல வெட்டித்தனமான ஒரு சர்ச்சை! ஹையோ, ஹையோ!
‘பாய்ஸ்’ படத்தை நேத்து குடியரசு தின சிறப்புப் படமா ‘கலைஞர் தொலைக்காட்சி’யில் பார்த்தேன். ‘என்னது... பாய்ஸா?!’ன்னு குழம்பாதீங்க. ‘பசங்க’ளைத்தான் அப்படி இங்கிலீஷ்ல சொன்னேன்.

இந்தப் படம் ரிலீசானப்பவே, அற்புதமான படம்கிறாங்களே, அவசியம் போய்ப் பார்க்கணும்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். முடியாம போச்சு!

சரி, மேட்டருக்கு வரேன். நெஜம்மாவே சூப்பர் படம்தான். பாண்டிராஜுக்கு இதுதான் முதல் படம்னு நினைக்கிறேன். ஆனா, படம் பார்க்குறப்போ அப்படித் தெரியலை. ஒவ்வொரு சீனும், சும்மா சொல்லக்கூடாது... அசத்திட்டாரு! பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் மொக்கைப் படங்கள் கொடுத்திட்டிருக்கிறப்போ, ஸ்டார் வேல்யூ, பன்ச் டயலாக், குத்துப்பாட்டெல்லாம் இல்லாம, ஆரம்பத்துலேர்ந்து கடைசி வரைக்கும் இன்ச் பை இன்ச்சா பார்த்து ரசிக்கும்படியா ஒரு படத்தைத் தந்திருக்கிறது கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

அப்பாவியா ஒரு இளைஞன், வெகுளியா ஒரு பொண்ணு - இவங்களோட காதல், ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லாம, அவ்ளோ ரம்மியமா இருக்கு.

தடக் தடக்குனு எல்லாரும் நல்லவங்களா திருந்திடறது, காலமெல்லாம் சண்டை போட்டுக்கிட்டிருந்த கணவன் மனைவி சடக்குனு ராசியாயிடறது, க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு. சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?

பாண்டிராஜுக்கு என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிக்கிறேன். இந்தப் படத்தைத் தியேட்டர்ல போய்ப் பார்க்காம விட்டுட்டேனேன்னு இப்ப வருத்தப்படுறேன்.

‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்.

விருது கொடுத்துக் கேலி பண்றதுங்கிறது இதுதான்!

பசங்களை வெச்சுப் படமெடுத்தா அது குழந்தைகள் படமா? அடங் கொங்காங்கோ! விருது கொடுத்த பெரிய மனுஷங்களா, ‘பசங்க’ படம் குழந்தைகள் படம் இல்லீங்கய்யா! பெரியவங்களுக்கான படம். பெரியவங்க எப்படி நடந்துக்கணும்னு சொல்ற படம். இது கூடப் புரியாம, பாண்டிராஜுக்குச் சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்ங்கிற விருதைக் கொடுத்துக் கவுத்திட்டீங்களேய்யா!

இது எப்படியிருக்குன்னா... ஒரு ஜோக் சொல்றேன்.

“நம்ம கட்சியோட கொள்கைகளை விவரிச்சுப் பேசினதை ஒளிபரப்பினதுக்காகவா நம்ம தலைவர் அந்த சேனல் மேல கடுப்புல இருக்காரு?”

“ஆமாம்! ‘சிரிப்பொலி’ சேனல்ல சிறந்த நகைச்சுவைக் காட்சின்னு ஒளிபரப்பினாங்களாம்!”

...அப்படியிருக்கு!

ஞாபகம் இருக்கா, ‘தாரே ஜமீன் பர்’ படத்துல நடிச்ச அந்தக் குட்டிப் பையன் தர்ஷீல் தனக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கொடுத்தா வாங்க மாட்டேன்னு அடம் புடிச்சு, சிறந்த கதாநாயகனுக்கான விருதை வாங்கிக்கிட்டது?

Author: கிருபாநந்தினி
•Monday, January 25, 2010
போலிகள் எல்லாத் துறைகளிலும் நீக்கமற நெறைஞ்சிருக்குற மாதிரி, மோசமான பேர்வழிங்க எல்லாச் சாதிகளிலும்தான் நெறைஞ்சிருக்காங்க. ஆனா, ஒரு சில பேர் மட்டும் பார்ப்பான் எப்படா தப்பு பண்ணுவான், ஏறி மிதிக்கலாம்னு காத்துக்கிட்டுச் சமயம் கிடைக்கிறப்போ போட்டுத் தாளிக்குறாங்க. அதென்னவோ, அவங்களுக்கு அதுல அப்படி ஒரு சந்தோஷம்!

‘சாதிகளின் விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு தரலாமே?’ன்னு ஒருமுறை கேட்டப்போ, பெரியார் அபத்தமா ஒண்ணு சொன்னாரு... “சாதி விகிதாசாரம் என்ன வெங்காயம்? ஜெயில்ல போய்ப் பாரு. வெளியே 3 சதவிகித பார்ப்பான் இருந்தான்னா, ஜெயில்லேயும் நூத்துக்கு மூணு பேர் பார்ப்பான் இருக்கணுமில்லே? இருக்கானா? இல்லியே! அப்புறம் இட ஒதுக்கீட்டுல மட்டும் சாதி விகிதாசாரம் எப்படிச் சரியா வரும், வெங்காயம்!”

பெரியாரின் அபத்தமான அந்த வாக்கை அர்த்தமுள்ளதா மாத்தணும்னுதானோ என்னவோ, ஆசார்ய பீடத்துலேர்ந்து அர்ச்சகர் வரைக்கும் இப்ப பார்ப்பனர்கள் கச்சை கட்டிக்கிட்டு வேலை பார்க்குறாங்க போலத் தெரியுது.

தண்டத்தை எப்போ தண்டம்னு தூக்கிப் போட்டுட்டுப் போனாரோ, அப்பவே அந்த மனுஷர் மேல எனக்கு மரியாதை போயிடுச்சு. அப்புறம் கொலைவழக்கு, அது இதுன்னு வேண்டிய அளவுக்கு சந்தி சிரிச்சாச்சு. இப்ப சாட்சிகள் பல்டி, அப்படி இப்படின்னு ஒரு வழியா நிரபராதின்னு நிரூபணம் ஆனாக்கூட, போன மானம் போனதுதான்; போன மரியாதை போனதுதான்! நல்லவேளை, மகா பெரியவர் இந்தக் கண்றாவியை எல்லாம் பார்க்காம எப்பவோ போய்ச் சேர்ந்துட்டார்.

தேவநாதன்... அந்த மனுஷன் அர்ச்சகரா இருக்க மட்டுமில்லே, மனுஷனா இருக்கக்கூட லாயக்கற்றவன்.

இதுல என்ன வேடிக்கைன்னா, இவங்க பார்ப்பனர்களா இருக்கிறதொட்டு சில பேருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைச்சாப்ல கொண்டாட்டமாயிடுது. இதே மாதிரி குற்றங்கள் எல்லாச் சாதியிலும்தான் நடக்குது; பேப்பர்லல்லாம் வந்து நாறுது. ஆனா, நான் சொல்ற அந்தச் சில பேருக்கு மட்டும் பார்ப்பனர்கள் இப்படிச் சாக்கடைல விழுந்தா, அப்படி ஒரு புளகாங்கிதம்! போட்டுத் தாக்கலாமே, டவுசர் கிழிக்கலாமே!

ஆனா பாருங்க, பார்ப்பன சாதியிலதான் சொந்தச் சாதியில் இருக்கிற தப்புகளைப் புட்டுப் புட்டு வெச்சு, சவுக்கடி கொடுக்குறவங்களும் இருக்குறாங்க. ‘பேராசைக்காரனடா பார்ப்பான், அவன் ஏதும் செய்து காசு பெறப் பார்ப்பான்’னு பார்ப்பன பாரதியார்தான் ஓங்கிக் குரல் கொடுத்தார். செக்ஸ் அர்ச்சகர் லீலைகளை பார்ப்பனப் பத்திரிகையான ஜூனியர் விகடன்தான் முதல்ல வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

தள்ளாத வயதிலும் உ.வே.சாமிநாதய்யர்ங்கிற பார்ப்பான் தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி ஊர் ஊரா அலைஞ்சு சேகரிச்சுக் கொடுத்ததனாலதான், இன்னிக்குப் பெருமையோடு சொல்லிக்கிறாப்ல பல முக்கியமான தமிழ் இலக்கியங்கள் நம்ம கைவசம் இருக்கு.

ஆனா, இது எதுவுமே அந்தச் சில பேர்வழிகளுக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் தேவையில்லே! அவங்களுக்குத் தேவை, ஏறி மிதிக்கிறதுக்குத் தோதா தப்பு பண்ற பார்ப்பான் மட்டுமே! மத்தபடி தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் நல்லது பண்ணின, பண்ணிட்டிருக்குற பார்ப்பான்கள் பத்தின செய்திகள் அடிபட்டுச்சுன்னா அவங்க கண்கள் இருட்டிக்கும்; காதுகள் அடைச்சுக்கும்; கம்போஸ் பண்ண முடியாம விரல்கள் விடைச்சுக்கும்!

மத்தபடி, அமைச்சரான மூணே வருஷத்துல நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல சுருட்டின மதுகோடாக்களைப் பத்தியோ, எழுந்து நிக்கவே முடியாத வயசுலயும் ஏகத்துக்கும் விளையாடின திவாரிக்களைப் பத்தியோ இவங்க எழுத மாட்டாங்க.

இவங்க, இவங்கன்றனே... யாரு இவங்க? தமிழைத் தன் பேர்ல ஒட்ட வெச்சிருக்கிற சில வலைப்பூக்காரிங்கதான்!

விடுங்க, பார்ப்பானுக்கு நேரம் சரியில்லே!

சில சமயம் கலைஞர் பேசுறதைக் கேட்டா, அவர் மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியான்னு டவுட் வருது. ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ன்னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னை மனசுல வெச்சுத்தான்; ஜெயலலிதாவை இல்லைன்னு பேசியிருக்கார்.

போன வருஷமே அவர் பிறந்த நாளுக்கு ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ன்னு போஸ்டர் ஒட்டி அவரைக் குஷிப்படுத்தியிருந்தாங்க அவரோட தொண்டருங்க. ‘இதயக்கனி’ படத்துல எம்.ஜி.ஆரைப் பார்த்து மத்தவங்க பாடுற மாதிரி அமைஞ்ச பாட்டு அது.

தொண்டருங்கதான் அப்போ ஒரு ஆர்வக் கோளாறுல அப்படிச் செய்துட்டாங்கன்னு நெனைச்சேன். ஆனா, தலைவரே எம்.ஜி.ஆர். பாடின ஒரு பாட்டைத் தன்னை மனசுல வெச்சுத்தான்னு ஒரு டுமீல் உடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை.

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

‘பணத்தோட்டம்’ படத்துல வர்ற பாட்டு இது. கண்ணதாசன் எழுதினது. பாடுறவர் எம்.ஜி.ஆர்ங்கிறதால அறிஞர் அண்ணாவை மனசுல வெச்சு எழுதியிருக்கார்ங்கிறது எல்லாருக்கும் நல்லாவே தெரியும். 1963-ல் வந்த படம் பணத்தோட்டம். அப்போ அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உருவாகி, தலையெடுத்துக்கிட்டு வந்த நேரம். எங்கு பார்த்தாலும் அண்ணா, அண்ணானு அறிஞர் அண்ணாவின் புகழ் வளர்ந்துக்கிட்டிருந்த நேரம். தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வரலை (1967-ல்தான் ஆட்சியமைச்சுது தி.மு.க.). அம்மாதிரி ஒரு நேரத்துல எம்.ஜி.ஆர். அண்ணாவை மனசுல வெச்சுப் பாடுவாரா, கருணாநிதியை மனசுல வெச்சுப் பாடுவாரா?

அதே 1963-ம் ஆண்டு கடைசியில், மு.கருணாநிதி ‘மேகலா பிக்சர்ஸ்’ங்கிற பேனர்ல ‘காஞ்சித் தலைவன்’னு ஒரு படம் தயாரிச்சார். “காஞ்சித் தலைவன்னு நான் அண்ணாவை மனசுல வெச்சுத் தலைப்பு வைக்கலை. என்னைத்தான் அப்படிக் குறிப்பிட்டு வெச்சேன்”னுகூடக் கலைஞர் சொன்னாலும் சொல்வார். யார் கண்டது!
.
Author: கிருபாநந்தினி
•Thursday, January 21, 2010
புதுக் குமுதம் படிச்சுட்டீங்களா? மீனாக்கா அட்டைப் படம் போட்டது.

மீனா பத்தி நான் ஒண்ணும் எழுதப்போறது இல்லை. பாவம், அழகான பொண்ணு. நல்ல நடிகை. சின்ன வயசுலேயே ரஜினி, கமல்னு சீனியர் ஆர்ட்டிஸ்ட்டோட எல்லாம் ஜோடி சேர்ந்து வயசான நடிகை மாதிரி ஒரு லுக் வந்துடிச்சி அதுக்கு. அடுத்ததா ரஜினிக்கு அம்மாவா நடிக்கப் போனாத்தான் உண்டு. சரி விடுங்க, சிலருக்கு ராசி அப்படி எகனை மொகனையா அமைஞ்சுடுது. என்ன பண்றது!

ராசின்னதும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா ஞாபகம் வந்துடுச்சி எனக்கு. அந்தப் பகுத்தறிவுப் பெரியவர் “எனக்கு ராசியில்லை அதுக்கு”ன்னெல்லாம் ஒரு தடவை பேசினாரே, அதை நெனைச்சுக்கிட்டேன். இப்ப ஏன் அந்த வேண்டாத நெனைப்பு உனக்குங்கிறீங்களா?

சொல்றேன். போன பதிவுலதான் அவர் ‘நல்ல காலம்...’னு பேசினதைப் பத்திக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதுக்குள்ள அடுத்த பகுத்தறிவுச் சுடர் ஒண்ணு தெறிச்சு விழுந்திருக்கு அவர் வாயிலேர்ந்து. ‘நீராரும் கடலுடுத்த...’ன்னு தொடங்குற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்ல, ‘ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து...’ங்கிற வரிகளை ஐயா நீக்கச் சொன்னாராம். ஏன்னா, மங்கல விழாக்கள்ல அந்த மாதிரியான வரிகள் வேணாமேன்னுதானாம். அப்ப என்ன சொல்ல வரார், பெரியார் பாசறையில் பயின்றவர்? மங்கலம், அமங்கலம் எல்லாம் உண்டுன்னு ஒப்புக்கறாரா? அது மூட நம்பிக்கையாச்சுங்களே? தமிழ்ச் சொல்லுலகூட அமங்கலச் சொல்னு உண்டுன்னு ஐயா நினைக்கிறார் போலிருக்குதே!

பெரியார் நெஞ்சுல தெச்ச முள்ளைப் பிடுங்கினார் கலைஞர் ஐயான்னு பாராட்டி சில மாசங்கள் முன்னேதான் தமிழ்நாடு பூரா போஸ்டர் ஒட்டினார் வீரமணி ஐயா. கலைஞர் இப்படி அடிக்கடி தலைவிதி, ராசி, நல்ல காலம், மங்கலம், அமங்கலம்னு பேசிக்கிட்டே இருந்தா பெரியார் நெஞ்சுல மேல மேல இவரே முள்ளைக் கொண்டு தைக்கிற மாதிரி தோணுதுங்க எனக்கு. சரி, மாண்புமிகுவாச்சு, மானமிகுவாச்சு! அவங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். நான் ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன்.

இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.

அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு.

ஈழத்துப் பிரச்னைகளைப் பத்திப் பேச, அவங்க துக்கங்களை தமிழ் மக்கள் கிட்டே கொண்டு சேர்க்க எனக்குத் தெரிஞ்சு குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், நக்கீரன்னு எல்லாப் பத்திரிகைகளுமே வரிஞ்சு கட்டிக்கிட்டு உழைச்சிருக்கு. செய்திகளை உடனுக்குடன் போட்டிருக்கு. ஈழத்து மக்களின் வலியைத் தமிழன் கொஞ்சமாவது இப்ப உணர்ந்திருக்கான்னா அதுக்குக் காரணமே தமிழ்ப் பத்திரிகைகள்தான். அப்போவெல்லாம் அது காசு பார்க்கிற கயமைத்தனமா தெரியலையா தமிழ்நதிக்கு? அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான். வார பத்திரிகைகள்னா அப்போதைக்கப்போது படிச்சிட்டு, பழைய பேப்பர் கடைக்குப் போட்டுக் காசு பார்க்கிறதோட மறந்துடுவாங்க. ஒரு புத்தகமா வந்தா, அந்த ரணம் இன்னும் ஆழமா படியும். அதைக் காசு பார்க்கிற கயமைத்தனம்னு இந்தம்மா சொல்றதுதான் மகா கயமைத்தனமா தெரியுது எனக்கு. வேடிக்கை என்னன்னா இவங்க குமுறலையும் என் அபிமான ‘குமுதம்’தான் வெளியே கொண்டு வர வேண்டியிருக்கு.

‘சோறு கிடைத்தால் போதுமல்லவா நண்பரே! அடுத்தவர்களின் ரத்தமாவது, சதையாவது!’ன்னு பஞ்ச் டயலாகோட கட்டுரையை முடிச்சிருக்காங்க தமிழ்நதி.

ஒரு தடவை, காந்திபுரம் மார்க்கெட் போயிருந்தப்போ கண்ணு தெரியாத ஒரு பொம்பளையைக் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போய் உதவி பண்ணலேமேனு போனப்போ, “லீவ் மி அலோன்! ஐ வில் மேனேஜ். உங்க பரிதாபமோ, பச்சாத்தாபமோ எனக்குத் தேவையில்லை. ஹெல்ப் பண்ணுங்க. பட், உச்சுக் கொட்டாதீங்க”ன்னு என்னென்னமோ கடுமையா சொல்லிடுச்சு அந்தப் பொம்பளை. எனக்குப் புரியலை. நாம நல்லது பண்ணத்தானே வந்தோம்னு யோசிச்சேன். கிருபா கிட்டே இதைச் சொல்லி வருத்தப்பட்டேன். “பார்வையற்ற ஒரு சிலர் இப்படிக் கடுமையா நடந்துக்கறது உண்டுதான். அவங்களுக்குள்ள ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும். தான் சுயமா, சொந்தக் கால்ல நிக்க முடியலையேங்கிற வருத்தம் இருக்கும். உதவி பண்ண வரவங்களையே இப்படி எடுத்தெறிஞ்சு பேசிடுவாங்க. அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதே!”ன்னார்.

தமிழ்நதியோட கட்டுரையைப் படிச்சப்போ, அந்தப் பார்வையற்ற பெண்மணி ஞாபகம்தான் வந்துச்சு எனக்கு.

அதே மாதிரி, ‘டமில்மீடியா டாட்காம்’கிற வலைதளத்துல, ‘தமிழகத்தில் இப்போது எழுத்து வியாபாரத்தி்ன் முதலீட்டுச் சொற்கள் ஈழமும், பிரபாகரனும். ஈழச் சகோதரர்களின் மீது தமிழக மக்கள் வைத்திருக்கக் கூடிய பரிவையும், பாசத்தையும் காசாக்கி இலாபம் பார்க்கிறார்கள் இந்த எழுத்து வியாபாரிகள். இவர்களோடு வெட்கம் விட்டுக் கைகோர்த்து நிற்பவர்கள், தமிழக அரசியல்வாதிகள். இவர்களது புனைவுகள் குறித்துக் கொதித்துப் போகும் ஒரு தமிழக வாசகனின் பதிவினை , எழுதியவருக்கே உரித்தான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம்’கிற முன்னுரையோடு ஜூனியர் விகடனை ஒரு காய்ச்சு காய்ச்சியிருக்காங்க. அதுல ஈழத்து மக்களின் பிரச்னைகளைப் பத்தி தொல்.திருமாவளவன் ‘முள்வலி’ங்கிற தலைப்புல (‘முள்வேலி’ங்கிற வார்த்தையிலிருந்துதான் முள்வலிங்கிற தலைப்பைப் பிடிச்சாரோ!) எழுதி வந்தார். அதைப் புஸ்தகமாக்கி புத்தகக் காட்சியில வெச்சிருப்பாங்கபோல! அதுக்குத்தான் தன்னோட கண்டனத்தைத் தெரிவிச்சிருக்காங்க யாரோ, ‘டமில்மீடியா டாட்காம்’ல!

ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?

போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!

என்னமோ போங்க, எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன்!

ந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!

தமிழ்நதிக்கு மறுப்பு

நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி.

அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” என்று கேட்டிருந்தேன். உடனே ‘அய்யோ நான் நொந்து கிடக்கிறேன், வெந்து கிடக்கிறேன்’ எனத் தன் கழிவிரக்க அரசியலைத் தொடங்கிவிட்டார் தமிழ்நதி.

அவர் அவ்வாறு பொய்யுரைத்ததைக் குறித்தும் மக்களிற்குப் புலிகள் செய்த துரோகத்தை நியாயப்படுத்தியதைக் குறித்தும் அவரிடம் சுயவிமர்சனமோ குற்றவுணர்வோ கிடையாது. அதுகுறித்து அவர் கள்ள மவுனம் சாதித்துக்கொண்டு குடித்துவிட்டு நான் கற்பனை செய்கிறேனென்றும் எனக்கு மனநிலை சரியில்லையா என்ற தொனியிலும் விவாதத்தை திசை திருப்பப் பார்க்கிறார்.

வால்பாறை, வட்டப்பாறையின் அழகையெல்லாம் வழித்தெடுத்து ஒயிலான அருவி, மயிலான மழை என்றெல்லாம் தமிழ்நதி ஒரு கட்டுரையில் அனுபவித்துப் பின்னியிருந்தார். நான் அதைக் கிண்டல்செய்து எழுதியிருந்தேன். “அழுதால் எப்போதும் அழுதுகொண்டிருக்க வேண்டுமா வால்பாறைக்கெல்லாம் போய் அழகை இரசிக்கக் கூடாதா” என்பது தமிழ்நதியின் கேள்வி. நிதானமாய் படித்துப் பாருங்கள் தமிழ்நதி. நான் நீங்கள் அழுவதாகச் சொல்லவில்லை. நீங்கள் அழுவதாக நடிக்கிறீர்கள் என்றுதான் சொலிலியிருந்தேன். உங்களுடைய கண்ணீர் போலிக்கண்ணீர். மாமிசம் விறைத்துப் போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர். ஒருவேளை உங்களின் பதிவொன்றில் எழுதியிருந்தது போல நீங்கள் பிரபாகரனிற்காக வேண்டுமானால் அழுதிருக்கலாம். நீங்கள் மக்களை நினைத்து அழுவதாகச் சொல்வது உள்நோக்கமுடையது. புலிகள் இஸ்லாமிய மக்களை கொன்றபோதும் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோதும் மாற்றுக் கருத்துள்ள அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கம்யூனிஸ்டுகளையும் கொன்றபோதும் நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) மீது புலிகள் தாக்குதலைத் தொடங்கிய நாளில் வெருகல் ஆற்றுப் படுகையில் நூற்றுக்கணக்கான கிழக்கு மண்ணின் மைந்தர்கள் ஆண்களும் பெண்களுமாகப் பாஸிசப் புலிகளால் வதைத்துக் கொல்லப்பட்டபோது நீங்கள் அழுதீர்களா? நீங்கள் அப்போது இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்களை கண்டித்தீர்களா? மாறாக நீங்கள் கொலைகாரர்களை விடுதலை வீரர்களாகக் கொண்டாடினீர்கள். கொலைகாரர்களைக் கண்டித்தவர்களை புலிக் காய்ச்சல் என்று நக்கலடித்தீர்கள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி பிரபாகரனை நீங்கள் கடவுள் என்றீர்கள். இப்போது மக்கள் செத்த துயரத்தில் மாசக்கணக்காய் அழுகிறேன் என்கிறீர்கள். உங்கள் அழுகை உண்மையானதென்று எங்களை நம்பச் சொல்கிறீர்களா தமிழ்நதி? புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளிற்காக அழமாட்டீர்களாம். கொன்றவர்களையே குலதெய்வம் என்பீர்களாம். ஆனால் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட மக்களுக்காக அழுதுகொண்டேயிருப்பீர்களாம். ஒரு கண்ணில் மட்டும் நீர் வரவழைக்க எங்கு கற்றீர்கள் தமிழ்நதி?

முழுக் கட்டுரையும் நீங்க படிக்க விரும்பினா, இதோ லிங்க்:

http://www.shobasakthi.com/shobasakthi/?p=443

.
Author: கிருபாநந்தினி
•Sunday, January 17, 2010
க பதிவர் IIIரோமியோIIIவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - பத்து நாளாக நான் எதுவும் எழுதவில்லையே என்று அக்கறையோடு விசாரித்ததற்காக!

ன்னிக்கு எம்.ஜி.ஆரோட 94-வது பிறந்த நாள். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர்னெல்லாம் போற்றப் படும் அவருடைய பொற்கால ஆட்சியில்தான் நான் பிறந்தேன். நான் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது தான் அவர் மறைஞ்சாரு. அவரோட படம் எதையும் நான் தியேட்டர்ல போய்ப் பார்த்ததில்லை. டி.வி-யில துண்டுத் துண்டுக் காட்சிகளா சிலது பார்த்திருக்கேன். மத்தபடி அவரைப் பத்தி சொந்தமா எதுவும் எழுதுறதுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ கிடையாது. காந்தி, காமராஜர் போல இன்னிக்கும் அவர் மக்கள் மனசுல ஒரு ஐகானா நெறைஞ்சிருக்காருங்கிறது மட்டும் தெரியுது. எங்கே திரும்பினாலும் அவரோட பாடல்கள்தான் கேட்குது. படத்துல ஒரு மாதிரி, நெஜத்தில ஒரு மாதிரின்னு ரெட்டை வாழ்க்கையை அவர் வாழலை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்’னு படத்துல அவர் பாடினார். நெஜமாவே அவர் ஆட்சியைப் பிடிச்சு, முதலமைச்சரானதும் அவர் ஆட்சியில் ஜனங்க ரொம்ப சந்தோஷமாதான் இருந்தாங்கன்னு அப்பா சொல்வார். எம்.ஜி.ஆர். மட்டும் இன்னும் உயிரோட இருந்திருந்தா, இன்னிக்கும் அவர்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சரா இருந்திருப்பாருன்னு அடிச்சுச் சொல்வார் அப்பா.

வாழ்ந்துக்கிட்டிருந்தாலும் சிலர் மறைஞ்சு போயிடறாங்க; மறைஞ்சாலும் சிலர் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அப்படி, இன்னிக்கும் மறையாம மக்கள் மனசுல வாழ்ந்துக்கிட்டிருக்கிறவர் திரு.எம்.ஜி.ஆர். இதுக்கும் மேல இந்தச் சின்னவளுக்குச் சொல்லத் தெரியலே!

‘காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ... நீ... நீ..!’

ன் முந்தைய ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்த ‘பின்னோக்கி’, என் பெயர் பேப்பர்ல வந்திருக்கிறதா சொல்லி, அதுக்குத் தன்னோட வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். அதுக்கு அடுத்த பதிவுல ‘ஆதிமனிதன்’, தினமணி பேப்பர்ல ‘வலையுலகப் படைப்பாளிகள்’ங்கிற தலைப்புல வந்த கட்டுரையிலிருந்து சில வரிகளை எடுத்து எனக்குப் பின்னூட்டமா போட்டு வாழ்த்துச் சொல்லியிருந்தார்.

//சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். // இதான் அந்த வரிகள்.


‘நெஜம்மாவா, நெஜம்மாவா? என்ன வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலையே?’ன்னு யோசிச்சேன். அப்புறம், ‘இட்லி வடை’யிலும் அந்தக் கட்டுரையை முழுசா போட்டிருந்தாங்க. அப்பவும் எனக்கு ஆறலை. கிருபாகிட்ட சொல்லி ஜனவரி 1-ந் தேதி ‘தினமணி’ பேப்பர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அதுல என் கண்ணால பார்த்ததுக்கப்புறம்தான், ‘ஆஹா... நம்மளையும் ஒரு பெரிய மனுஷியா மதிச்சுப் போட்டிருக்காங்களே! நாம என்னமோ நம்ம மனசுக்குத் தோணுறதைக் கிறுக்கிட்டுப் போற கிறுக்கியாட்டம் நெனச்சிக்கிட்டு இருக்கோம். அதைக்கூட ‘ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகள்’ லிஸ்ட்ல சேர்த்திருக்காங்களே!’ன்னு நெஜம்மாவே சிலிர்த்துப் போயிட்டேன் நான்.

சந்தோஷமா இருந்தது. ‘தினமணி’காரங்களுக்குதான் எம்மாம் பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே சமயம், அந்த லிஸ்ட்ல இருக்கிற மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிச்சவங்க; உலக அனுபவம் வாய்ஞ்சவங்க. குறிப்பா தமயந்திக்கா, விக்னேஷ்வரி தங்கச்சி இவங்கள்ளாம் ரொம்ப நல்லா எழுதுறாங்க. கவிதை, சமூகப் பிரச்னைன்னு அலசுறாய்ங்க. எனக்கு அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நான் ஏதோ பொழுதுபோக்கா என் மனசுக்குத் தோணுனதைக் கிறுக்கிக்கிட்டிருக்கேன். “பிரபாகரனுக்கும் வீரமணிக்கும் வித்தியாசம் தெரியாத நீ அம்புலிமாமா பத்தி விமர்சனம் எழுதக்கூட லாயக்கு இல்லை”ன்னு துருவன் அண்ணாச்சி பின்னூட்டத்துல சொல்லியிருந்தாரு. எனக்குக் கோபமே வரலை. சரிதானே அவர் சொன்னது? எனக்கே தெரிஞ்ச விஷயம்தான்! அப்படியிருக்கிறப்போ தமயந்தி, (தமயந்தியக்காவுக்கு ஆனந்த விகடன் பத்திரிகை ‘சிறந்த பண்பலை தொகுப்பாளினி’ விருது வழங்கிக் கௌரவிச்சு, போட்டோவும் போட்டிருந்ததைப் பார்த்ததும், சந்தோஷமா இருந்துது. அவங்க கதை எழுதுவாங்கன்னு தெரியும். காம்பியர் பண்ற விஷயமெல்லாம் தெரியாது. தமயந்திக்கா! கங்கிராஜுலேஷன்ஸ்!) விக்னேஷ்வரி, ராமலக்ஷ்மியோடல்லாம் சேர்த்து என் பெயரும் பேப்பர்ல வந்துச்சுன்னா சும்மாவா? எவ்ளோ பெரிய அங்கீகாரம் இது! அதான் சொன்னேன் கிருபா கிட்ட, இன்னியிலேர்ந்து தினகரனை நிறுத்திட்டு ‘தினமணி’ பேப்பர் வாங்க ஆரம்பிக்கலாம்னு! “இதெல்லாம் ரொம்ப ஓவரு!”ன்னு சிம்பிளா ஒரு பதிலைச் சொல்லிட்டுப் போயிட்டாரு.

எது எப்படியோ, தினமணிக்கு ஒரு தேங்க்ஸ்!

திருநெல்வேலி பக்கம் வெற்றிவேல்ங்கிற ஒரு போலீஸ்காரரை நடுரோட்டுல கண்ணுமண்ணு தெரியாம வெட்டிப் போட்டுட்டுப் போயிருக்காங்க சில பேர். வெற்றிவேல் உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்போ அந்தப் பக்கமா நாலஞ்சு கார்ல வந்த அமைச்சருங்க எட்டத்துலேயே நின்னுக்கிட்டு, வேடிக்கை பார்த்துட்டிருந்தாங்களாம்! என்னடா உலகம் இதுன்னு வயித்தெரிச்சலா இருந்தது. ஏதோ ஒரு பிளாக்ல இது பத்திப் படிச்சேன். அதுல, அந்த போலீஸ்காரர் துடியாய்த் துடிப்பதையும், அமைச்சருங்க கையக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்ப்பதையும் வீடியோ படம் எடுத்த போட்டோகிராபரையும் தாளிச்சு எழுதியிருந்தாங்க. அடிபட்டவனுக்கு உதவி செய்யாம படம் எடுத்திட்டிருக்கானே, அவன் மனுஷனா அரக்கனான்னு கேட்டிருந்தாங்க. வீடியோ படம் எடுத்தவரைத் தப்பு சொல்ல எனக்குத் தோணலை. அமைச்சருங்க, அத்தனை அதிகாரிங்க, ஏகப்பட்ட போலீஸ் உயரதிகாரிங்க எல்லாரும் இருந்தும், யாருமே எதுவும் செய்யாதப்போ, இந்த வீடியோகிராபர் மட்டும் என்ன பண்ணிட முடியும் அந்த நேரத்துல? அவர் கடமை, வீடியோ எடுக்கிறது. அதைச் சரியா செய்திருக்கார். அப்படிச் செய்ததுனாலதான் மரம் மாதிரி நின்னுட்டிருந்த இந்த மரத் தமிழர்களின் யோக்கியதை ஊர் உலகத்துக்குத் தெரிய வந்துச்சு. அவங்கவங்களும் அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, அதுவே போதும்! அந்த வீடியோகிராபரை நான் பாராட்டுறேன்!

ஹைதி தீவுல பூகம்பம் ஏற்பட்டு, ரெண்டு லட்சம் பேர் இறந்துட்டாங்கன்னு பேப்பர்ல படிச்சப்போ, பக்குனு இருந்துச்சு. கடவுளுக்கு இரக்கமில்லையானு கேக்குறது வீண் வேலை. நம்ம சௌகரியத்துக்கு நாமளா ஏற்படுத்திக்கிட்ட பணம் (ரூபாய்த் தாள்) எப்படியோ, அப்படித்தான் கடவுளும்! மன அழுத்தத்திலிருந்து நாம விடுபட, எதிர்காலத்தில் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் விலகி நல்லதே நடக்கும்னு ஒரு தைரியம் பிறக்க, நம்பிக்கை கொள்ள, நாமளா ஏற்படுத்திக்கிட்ட ஒரு விஷயம்தான் கடவுள்! (ஆஹா..! கெளம்பிட்டாய்யா கிருபாநந்தினியானந்தம்மா!) பசிக்குச் சோறு கிடைக்காதப்போ, இத்தனை ரூபாய்த் தாள்களைச் சேர்த்து வெச்சிருந்தும் இத்தைத் தின்னு பசியை ஆத்திக்க முடியலையேன்னு பணத்தை வெறுக்கிறது எப்படியோ, அப்படித்தான் இயற்கைப் பேரழிவுகள் வர்றப்ப கடவுளைத் திட்டுறதும்! இங்கே சுனாமி, அங்கே பூகம்பம்னு பேரழிவுகள் வர்றப்ப எல்லாம் மனசு கஷ்டப்படுறது தவிர, எனக்கு வேற வழி தெரியலை! எங்கேயோ நடந்தாலும் அவங்களும் நம்மைப் போல மனுஷங்கதானே! ஒரு தடவை, பூகம்ப போட்டோக்கள் ஒண்ணுல, இடிபாடுகளுக்கிடையில ஒரு குழந்தையின் கை வெளியே நீட்டிக்கிட்டிருக்குற மாதிரி படம் ஒண்ணு பார்த்தேன். சத்தியமா சொல்றேன், அன்னிக்கு எனக்குச் சோறே திங்கப் பிடிக்கலை.

மு
த்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா சில சமயம் தெரிஞ்சுதான் பேசுறாரா, இல்ல, அவரை அறியாமயே வாய்ல வந்ததைச் சொல்லித் தொலைச்சுடறாரான்னு புரிய மாட்டேங்குது! “நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!”ன்னு சொல்லியிருக்கார். நல்ல காலம் எது, கெட்ட காலம் எதுன்னு பிரிச்சுப் பார்க்குற பகுத்தறிவு(!) முத்தமிழ் அறிஞருக்கு இருக்குறது பத்திச் சந்தோஷம்தான்! ‘என் தலைவிதி, இவ எல்லாம் கிண்டல் பண்ணி நான் கேட்டுக்கணும்னு இருக்கு!’ன்னுகூட ஐயா சொல்லலாம்; ‘இதெல்லாம் என் தலைவிதி’ன்னு ஏற்கெனவே சொன்னவர்தானே!

சரி, அத்த விடுங்க! பாயிண்ட்டுக்கு வருவோம். ‘நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!’ன்னு ஏன் சொன்னார் கலைஞர் ஐயா, எதனால அப்படிச் சொன்னார்னு ரெண்டு நாளா என் மண்டைக்குள்ள சிந்தனைப் பூரான்கள் பிறாண்டிக்கிட்டே இருந்துச்சு. (ஹையா! நானும் கொஞ்சம் இலக்கிய நயத்தோட எழுத ஆரம்பிச்சுட்டேன்ல? வேறென்ன, வசிஷ்டர் ‘தினமணி’ கையால் குட்டு!)

என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சுப் பார்த்ததுல, கீழ்க்கண்ட யோசனைகள் வந்துச்சு.

* பெரியார் அரசியலுக்கு வந்திருந்தா, அப்படியே ஆட்சிப் பொறுப்பு மணியம்மை, ஈ.வி.கே.சம்பத்னு கை மாறி, கடைசியா பெரியாரின் பேரப்புள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கைக்கு வந்து, அவர் முதலமைச்சராகி, தான் அவர்கிட்டே சீட்டு கேட்டுக் கையேந்தி நிக்க வேண்டி வந்திருக்குமேன்னு கலைஞர் ஐயா யோசிச்சுப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்.

* அல்லது, “வாரிசு அரசியல் கூடாதுன்னுட்டுச் சொன்னவர் பெரியார். அரசாங்க பணத்தைத் தானும் திங்காம, மத்தவங்களையும் திங்க விடாம பண்ணியிருப்பாரே மனுஷன்! புள்ளைங்க, பொண்ணுங்க, பேரப் புள்ளைங்கன்னு எல்லாருக்கும் இப்ப மாதிரி சப்ஜாடா செட்டில் பண்ணி வைக்க முடியாமத் திண்டாடித் தெருவுல நின்னிருப்பேனே நானு”னு நெனைச்சு கலைஞர் ஐயா அப்படிச் சொல்லியிருப்பாரோ!

* ‘எம்.ஜி.ஆரை எதிர்த்துக்கிட்டுப் பதிமூணு வருஷத்துக்கு ஒண்ணுமே பண்ணாம சும்மாக் கெடந்தோம்; பெரியாரும் தன் பங்குக்கு அரசியலுக்கு வந்திருந்தார்னா, அவரையும் எதிர்த்துக்கிட்டு இன்னும் பதினஞ்சு வருஷம் காணாம போயிருப்பமேடா சாமி’(அந்த சாமி இல்ல; ஈ.வே.ராமசாமி!)ன்னு நெனச்சுப் பீதியில அப்படிச் சொல்லிட்டாரோ?

* பெரியாருக்குச் சினிமான்னாலே புடிக்காது. அவர் இருந்திருந்தார்னா,
பாசக் கிளிகள், உளியின் ஓசை போன்ற காவியங்களைப் படைச்சிருக்க முடியுமா? அல்லது, சினிமாக்காரங்களை விட்டு இப்படி விழா கொண்டாடிக்கத்தான் முடியுமா? சும்மா இல்லாம எதையாவது சொல்லி வைப்பாரே மனுஷன்! இப்படி நினைச்சுத்தான் அப்படிச் சொன்னாரோ ஐயா!

* தமிழ் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னவரு பெரியார். புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கணும்னு சொன்னவரு. அவர் அரசியலுக்கு வந்திருந்தா, பய புள்ளைக தமிழ்ப் பற்றோட இல்லாம ஆங்கிலம் பேசிக்கிட்டுத் திரிஞ்சிருக்குமே! அப்புறம் நாம எப்படி தமிழ் உணர்வைக் காட்டுறது? தமிழ்ல பேர் வெச்சா எந்தக் குப்பைப் படத்துக்கும் வரிவிலக்கு, தமிழைச் செம்மொழியாக்குறேன், செம்மொழி மாநாடு நடத்தப்போறேன்னெல்லாம் ஆட முடியாதே! ‘முத்தமிழ் அறிஞரே’ன்னு இப்ப மாதிரி தன்னைக் கூச்ச நாச்சமில்லாம எவன் புகழ்வான்?

கலைஞர் ஐயா என்ன நெனச்சு அப்படிச் சொன்னாரோ, அதை அவரே பின்னாடி விளக்குவாரு. இப்படித்தான் வில்லங்கமா எத்தையாவது சொல்லி, நம்மையெல்லாம் மண்டையைப் பிச்சுக்க வெச்சு, அப்புறமேல்ட்டு சாவகாசமா ரோசனை பண்ணித் தானும் புரிஞ்சுக்கிட்டு, நமக்கும் புரிய வைப்பாரு. அதான் அவர் வழக்கம். அதுவரைக்கும் யார் யாருக்கு எப்படி எப்படியெல்லாம் தோணுதோ, அப்படியப்படி கற்பனை பண்ணிக்கிட்டே இருங்க. ஜாலியா பொழுது போவும்! அந்த ரெண்டு அமைச்சருங்க, அதாங்க மரத் தமிழருங்க பண்ணின காரியம் மறந்துரும்!
.
Author: கிருபாநந்தினி
•Sunday, January 03, 2010
பெங்களூர் போயிருந்த கதையில கொஞ்சம் அவுத்து வுடறேன்! (அதென்னமோ, இங்கே எல்லா பத்திரிகையிலயும் பெங்களூரு, பெங்களூருன்னே போடறாங்க. எனக்குத் தெரிஞ்ச வரையில அங்க அது மாதிரி ஒண்ணும் காணோம்! பெங்களூருன்னு மாத்தணும்னு ஒரு யோசனை இருக்கு. இன்னும் அது நடைமுறைக்கு வரலைங்கிறதுதான் உண்மை!)

அங்கே கே.ஆர்.புரத்துல (கிருஷ்ணராஜபுரம்) எங்கம்மாவோட சித்தப்பா மகளுடைய... வேணாம், உறவு முறையை விவரிச்சா ரெம்ம்ம்ப குழம்பிடுவீங்க. அதனால டைரக்டா மேட்டருக்கு வரேன்.

அங்கே லாவண்யா ராம்குமார்ங்கிற எங்க உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். லாவண்யா எனக்கு அக்கா முறை. அங்கே ரெண்டு நாள் தங்கினேன். அன்பா பார்த்துக்கிட்டா. கிளம்பி வர்றப்ப ஏகப்பட்ட டப்பர்வேர் சாமான்களை கிஃப்ட்டா மூட்டை கட்டிக் கொடுத்தனுப்பினா.


நாங்க அவ வீட்டுக்குப் போயிருந்தன்னிக்கு ஒரு தமாஷ்! வீட்டுல அவ மட்டும்தான் இருந்தா. வேற ஒருத்தரையும் காணோம். “எங்கேடி உங்க வீட்டுக்காரரு, பசங்க எல்லாம்?”னு கேட்டேன். அவளுக்கு ஒரு பையன்; ஒரு பொண்ணு. பையன் காலேஜ் படிக்கிறான். பொண்ணு டென்த். அவ வீட்டுக்காரரு பல் டாக்டரா இருக்காரு. சொந்தமா கிளினிக் வெச்சிருக்காரு.

“விக்கிக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை. நேத்திக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் வந்தாரு. பிளட் டெஸ்ட்டும் இன்னும் வேற ஏதோ சில டெஸ்ட்டுகளும் எடுக்கணும்னு சொன்னாங்களாம். எடுத்திருக்காங்க. ரிசல்ட் இன்னிக்குக் கிடைக்குமாம். மறுபடி செக்கப்புக்குக் கூட்டி வரச் சொன்னாங்க. அதான், ரெண்டு பேரும் போயிருக்காங்க”ன்னா.


“அடடா! என்ன உடம்புக்கு?”ன்னு பதற்றத்தோட கேட்டாரு கிருபா.

“வாயக் கட்டினாதானே! கண்டதையும் திங்க வேண்டியது. உடம்புக்கு வராம என்ன செய்யும்? எல்லாம் எங்க வீட்டுக்காரரு கொடுக்குற எடம். தினம் தினம் எத்தையாவது வாங்கி வந்து தரவேண்டியது. பேக்கட் ஃபுட்ஸே உடம்புக்கு அத்தனை நல்லதில்லை. சொன்னா கேட்டாத்தானே?”ன்னா.

“வயித்து வலியா? டைஜஷன் பிராப்ளமா?”னு கேட்டேன்.


“தெரியலை. ரெண்டு நாளா சரியா எதுவும் சாப்பிட மாட்டேங்கிறான். துறுதுறுன்னு இருப்பான். அங்கே ஓடுவான், இங்கே ஓடுவான், குதிப்பான்... ஒரு இடத்துல நிக்க மாட்டான். சரியான வாலு. ரெண்டு நாளா எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம அமைதியா இருந்தான். ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. என்ன ஆச்சோ பயலுக்குன்னு பதறிப் போயிட்டோம். டாக்டர்கிட்ட போகலாம், வாடான்னா வரமாட்டான். இழுத்துட்டுப் போங்க, அவன் கிடக்கிறான்னேன். ஏற்கெனவே ஒரு தடவை இந்த மாதிரி அவனுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்போ ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனோம். அப்ப எங்கே போறோம்னு இவனுக்குத் தெரியலே. பேசாம எங்க கூட வந்துட்டான். அங்கே அந்த டாக்டர் இவனுக்கு ஒரு ஊசி போட்டாரு. பெரிய ஊசி. மருந்து ஹெவி டோஸா இருந்திருக்கும்போல. வலி தாளாம கத்தினான். ரெண்டு நாளா காலை அசைக்கமுடியாம கிடந்தான். வெந்நீர் ஒத்தடம் கொடுத்தேன். அதுலேர்ந்து டாக்டர்னாலே அலர்ஜி! வரமாட்டான். படுத்துவான். ஹூம்... இவனை வெச்சுக்கிட்டு நான் படுற பாடு...”

“விக்கியோட முழுப் பேர் என்ன?”

“விக்ரம். கெட்டிக்காரன். படு புத்திசாலி. கற்பூர புத்தி”ன்னா லாவண்யா, பெருமையா. இருக்காதா பின்னே? நல்லாப் படிக்கிற பையனா இருந்தா, தன் பையன் புத்திசாலிங்கிற பெருமை எந்த அம்மாவுக்கும் இருக்கும்தானே? ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’னு வள்ளுவரே சொல்லியிருக்காரே!

“இப்போ என்ன வயசாகுது விக்ரமுக்கு?”ன்னு கேட்டார் கிருபா.

“வர்ற தையோட பதினெட்டு முடிஞ்சு பத்தொம்பது ஆரம்பமாகப் போகுது!”ன்னா. தொடர்ந்து...

“நாலு நாள் முன்னாடி எங்க மாமாவும் மாமா பசங்களும் வந்திருந்தாங்க. எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருந்த கோஷ்டிங்கதான். இவனுக்கு அவங்களைப் பார்த்ததும் உற்சாகம் தாங்கலே. சும்மாவே கேட்கவேணாம்... குரங்குத்தன சேஷ்டையெல்லாம் பண்ணுவான். அவங்க வந்ததும் சந்தோஷத்துல ரொம்ப எக்ஸைட் ஆகி, ஓவர் ரியாக்ட் பண்ணதுல மயங்கி விழுந்துட்டான். பதறிப் போய் ஈரத் துணியால மூஞ்சைத் துடைச்சு எழுப்பினோம். டாக்டர்கிட்டே உடனே அழைச்சுட்டுப் போனாரு. என்ன உடம்பு, என்னன்னு புரியலை. அவரு ஒரு ஊசி போட்டு அனுப்பிட்டாரு. அதுக்கப்புறம் முந்தாநாள் எல்லாம் நல்லாதான் இருந்தான். நேத்திக்கு வேற ஒரு ரிலேஷன் வந்திருந்தாங்க. யாருன்னு உனக்குச் சொன்னா புரியாது. இவனுக்கு அவங்களோட பையன் கீர்த்தியை ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அவன் இங்கே வந்திருக்கான். அவனோட சேர்ந்து இவன் ஒரே ஆட்டம். மறுபடியும் எக்ஸைட் ஆகி, மயக்கம் போட்டு விழுந்தான். பிபி இருக்குமா, என்னன்னே புரியலை. ஒரே கவலையா இருக்கு. வந்தாதான் தெரியும். வர நேரம்தான்” என்றாள்.

“என்னடி உளர்றே! பதினெட்டு வயசுப் பிள்ளைக்கு பிபியாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒண்ணும் இருக்காது! கவலைப்படாதே!”ன்னு அவளுக்கு ஆறுதல் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில், வேறு ஃப்ளாட்டுக்கு சிநேகிதிகளோடு விளையாடப் போயிருந்த பொண்ணு திவ்யா வந்தா. எப்படிப் படிக்கிறே, எக்ஸாம்லாம் முடிஞ்சுடுத்தான்னு பிளேடு போடாம, கடைசியா என்ன சினிமா பார்த்தே, நான் விஜய் ஃபேன், நீ யாரோட ஃபேன்னு ஜாலியா பேசவும், அவ என்னோடு ஒட்டிக்கிட்டா. என் குழந்தையைத் தூக்கிக்கிட்டு ஓடினா. ‘பார்த்துடீ... பார்த்துடீ... கீழே போட்டுடப் போறே!’ன்னு பதறினா லாவண்யா.

சாயந்திரம் மூணு மணிக்கு வாசல்ல நாய் ஒண்ணு பலமா குரைக்கிற சத்தம். “அவருதான்... வந்துட்டாரு போலிருக்கே!”ன்னா லாவண்யா. எனக்கு ஒண்ணும் புரியலை.

எழுந்து போய்க் கதவைத் திறந்தா. மெயின் கேட்டைத் திறந்துகிட்டு ராம்குமார்தான், கையில பெரிய அல்சேஷன் நாய் ஒண்ணைப் பிடிச்சுக்கிட்டு உள்ள வர்றாரு. ஆஜானுபாகுவா இருந்த அதன் சைஸைப் பார்த்ததும் எனக்குக் கை காலெல்லாம் உதறல் கண்டுடுச்சு. நான் பம்மிப் பதுங்குறதைப் பார்த்துட்டு, “பயப்படாதே நந்தினி! அவன் ஒண்ணும் பண்ண மாட்டான். ரொம்ப சாது! வேண்டியவங்க யாரு, வேண்டாதவங்க யாருன்னு அவனுக்கு நல்லாவே தெரியும்! நீங்க என்கூட இருக்கிறதை வெச்சே, வேண்டியவங்கதான்னு புரிஞ்சுப்பான். ரொம்பக் கெட்டிக்காரன்”னா லாவண்யா சிரிச்சுக்கிட்டே.

“டேய் விக்கி! என்னடா, ஊசி போட்டுக்கிட்டியா? ரொம்ப வலிச்சுதாடா என் செல்லத்துக்கு?”ன்னு அதன் தலையை வருடிக் கொடுத்தா.

‘விக்கியா? அப்ப உடம்பு சரியில்லேன்னு இவ இத்தனை நேரம் விலாவாரியா விவரிச்சதெல்லாம் இந்த நாயைத்தானா!’ன்னு தலை சுத்துச்சு எனக்கு.

“என்னடி, இந்த நாயைத்தான் இத்தனை நேரம் விக்கி, விக்கின்னியா? அப்போ விக்கிங்கிறது உன் பையன் இல்லியா?”ன்னு கேட்டேன்.

“சீ..! வாயைக் கழுவு. நாய்னு சொல்லாதடீ! அப்படிச் சொன்னா ராமுக்கு பயங்கர கோபம் வந்துடும். இவனும் எங்க குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தன்தான்! எவ்ளோ கெட்டிக்காரன் தெரியுமா? இவன் ஒருத்தன்தான் இந்த காம்பௌண்ட்ல இருக்கிற எல்லா வீட்டுக்கும் பாதுகாப்பு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே என்ன ஆச்சுன்னா...”ன்னு விக்கியின் அருமை பெருமைகளை விவரிக்கத் தொடங்கினா.

“அதெல்லாம் இருக்கட்டும்டீ! உன் மகன் பேர் என்ன?”ன்னு குறுக்கிட்டுக் கேட்டேன்.

“பிரசன்னா”ன்னா.

“அவனை எங்கே காணோம்?”னு மறுபடி கேட்டேன்.

அதுக்கு லாவண்யா சொன்ன பதில் என்னைத் தூக்கிவாரிப் போட வெச்சுது.

“அந்த நாய் எங்கே ஊரைச் சுத்தப் போயிருக்கோ, யாருக்குத் தெரியும்?” .
.
Author: கிருபாநந்தினி
•Friday, January 01, 2010
நான் ரொம்ப நாளா படிச்சிட்டு வர்ற ரெண்டு முன்னணித் தமிழ்ப் பத்திரிகைகள் குமுதமும் ஆனந்தவிகடனும்..! இரண்டின் நிறை குறைகளையும் இப்ப வாஷிங் பவுடர் நிர்மாவுல போட்டு அலசப் போறேன்.

குமுதம்:

ஆசிரியர் எஸ்.ஏ.பி. காலத்துல இந்தப் பத்திரிகை ரொம்ப நல்லாயிருந்ததா என் அப்பா சொல்வாரு. இப்ப அந்த அளவுக்கு இல்லியாம். ஆனா, எஸ்.ஏ.பி.-தான் இதன் வேர்ல வெந்நீரை ஊத்தினார்னும் சொன்னார் என் அப்பா. புதுமை பண்றதா நினைச்சு, ‘இந்த வார இதழை இன்னார் தயாரிக்கிறாங்க’ன்னு ‘இதுதாண்டா ராஜசேகர்’ல ஆரம்பிச்சு வாரம் ஒருத்தரை விட்டுக் குமுதம் தயாரிக்க ஆரம்பிச்சப்போ புடிச்ச ஏழரை நாட்டுச் சனி, படிப்படியா அதன் சர்க்குலேஷனைக் குறைச்சிட்டதா சொல்வார். குமுதம் தயாரிக்கிற வி.ஐ.பி. பாவம் என்ன பண்ணுவாரு... தன் பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பருங்க போட்டோவையெல்லாம் போட்டு, அவங்களைப் பத்தி எழுதுவாரு. இல்லேன்னா தான் போய் வந்த வெளிநாட்டைப் பத்தி எழுதுவாரு. தான் பண்ணிக்கிட்டிருக்கிற படத்தைப் பத்தி எழுதுவாரு. பெரிய பெரிய ஆளுங்கன்னா பரவாயில்ல, அவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க வாசகர்களுக்கும் ஒரு இண்ட்ரஸ்ட் இருக்கும். பெரிய ஆளுங்க லிஸ்ட்டெல்லாம் முடிஞ்சு போய், கடைசியில குமுதம் தயாரிக்கிறதுக்கு ஆளே கிடைக்காம, முத்துக்காளை, போண்டா மணியையெல்லாம் (ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன்) விட்டுத் தயாரிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? காஞ்சு கருவாடாகிக் கந்தல் கந்தலா நாறிப்போச்சு குமுதம்!

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’னு ஒரு பழமொழி இருக்கு. குமுதத்துக்குக் கண் கெட்ட பிறகும் புத்தி வரலே. சுஜாதாவை எடிட்டரா போட்டாங்க. தவுலு நல்லா அடிக்கிறாருன்னு தவுல்காரரை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னா எப்படியிருக்கும்? நாராசமால்ல இருக்கும்! சுஜாதா பாவம் நல்லா எழுதுவாரு. அவரென்ன பத்திரிகையாளரா? அவரை விட்டுப் பத்திரிகை தயாரிக்கச் சொன்னா, என்னென்னவோ ஹைடெக்கால்லாம் பண்ணி, சர்க்குலேஷனை அவரால முடிஞ்ச வரைக்கும் இன்னும் குறைச்சுட்டாரு.

சரி, புத்தியுள்ள பிள்ளையாயிருந்தா இந்தக் கட்டத்துலயாச்சும் பொழைச்சுக்கணுமா வேணாமா? அடுத்ததா மாலனைக் கொண்டு வந்து ஆசிரியரா உட்கார்த்தி வெச்சாங்க. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி. மாலன்னா யாரு? நாராயணன். மகாபலி தலையில கால் வெச்சுப் பாதாளத்துல தள்ளின மாதிரி, குமுதத்தை ஒரே அழுத்தா அழுத்தி சர்க்குலேஷனை அடி மட்டத்துக்குக் கொண்டு போயிட்டாரு. (அவருதான் இப்ப ‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியர். இதுக்கு அப்புறம் வரேன்!)

இந்தக் கட்டத்துல ஆனந்தவிகடன் சுதாரிச்சுக்கிட்டு, மளமளன்னு தன் சர்க்குலேஷனை உயர்த்தி, குமுதத்தைத் தாண்டி எங்கேயோ போயிருச்சு. இன்னிய வரைக்கும் ‘ஏபிசி’ கணக்கெடுப்புப்படி (அதென்ன ‘ஏபிசி’யோ, எனக்குத் தெரியாது!) ஆதார பூர்வமா ஆனந்தவிகடன்தான் நம்பர் ஒன்னுனு எங்க வீட்டுக்காரர் சொன்னாரு. ஆனா, குமுதம் வெக்கமில்லாம அட்டையில தன்னையும் நம்பர் ஒன்னுனு போட்டுக்குது!

ஆனாலும், எனக்குப் பிடிச்ச பத்திரிகை குமுதம்தான்! எத்தயாச்சும் ஹெவியா போட்டு மண்டை காய வெக்கிறதில்லே. பாடப் புஸ்தகம் மாதிரி பண்ணாம, ஜாலியா, பொழுதுபோக்கா சில விஷயங்களைக் கொடுக்குறாங்க. ஒரு பக்கக் கதைகள் நிறைய போடுறாங்க. நித்யானந்த பரமஹம்சர் எல்லாம் குமுதத்துக்குத் தேவையில்லாத விஷயம்! புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா, விகடனைப் பார்த்துப் போட்டுக்கிட்ட சூடு இது! (சத்குரு இன்னொரு சூடு!)

எங்க வீட்டுல (எங்க வீட்டுலன்னா என் பொறந்த வீட்டுல) பழைய குமுதங்களைச் சேர்த்துத் தைச்ச பைண்டு புத்தகங்கள் நிறைய இருக்குது. சாண்டில்யன் தொடர்கதைகள், எஸ்.ஏ.பி. எழுதின தொடர்கதைகள்னு இருக்குது. அதைப் புரட்டிப் பார்க்குறப்போ குமுதம் எத்தனை ஜாலியா, படிக்கப் படிக்க சந்தோஷமா இருந்த பத்திரிகைன்னு தெரியுது.

இப்ப அத்தனை ஜாலி இல்லேன்னாலும், சர்க்குலேஷன் குறைஞ்சிருந்தாலும், என்னைப் பொறுத்தவரைக்கும் குமுதம்தான் நம்பர் ஒன்!

ஆனந்த விகடன்:

குமுதம், ஆனந்த விகடன்னு நினைச்சாலே ஒரு அழகான மாடர்ன் பொண்ணும், புத்தி சொல்ற பெரியவரும்தான் ஐகான்களா என் மனசுல வரும். பெரியவரைத் தப்பு சொல்ல முடியாது. ஆனா, அவர் படுத்துற பாடு... அப்பப்பா! தேசியம், கடமை, பொறுப்பு உணர்வு, சமூக பிரக்ஞை, தன்னம்பிக்கை, உழைப்புன்னு பேசிப் பேசி போரடிப்பாரு. மனுஷனைக் கொஞ்சம்கூட ஜாலியாவே இருக்க விடமாட்டாரு!

மதன் காலத்துலதான் விகடன் கொஞ்சம் கலகலப்பா ஆச்சுன்னு சொல்வாரு எங்க வீட்டுக்காரரு. அதுவரைக்கும் பழம்பஞ்சாங்கமாதான் இருந்துச்சாம். பெரியவரு பாலசுப்பிரமணியம் ஐயா விலகினதுக்கப்புறம் புத்தி சொல்றதுக்கு அங்கே யாரும் ஆள் இல்லையாங்காட்டியும், தறிகெட்டுப் போக ஆரம்பிச்சுது விகடன். சர்க்குலேஷனைப் புடிக்கிறேன், சர்க்குலேஷனைப் புடிக்கிறேன்னு குமுதத்துக்கே சவால் விடுற அளவுக்கு நடிகைகளோட கவர்ச்சிப் படங்களைப் போட ஆரம்பிச்சுது. தன்னை யூத்தா காமிச்சுக்குதாம்! ஆனா, எனக்கென்னவோ அது இப்படிப் பண்ணினது என்.டி.திவாரியோட யூத்துக் கூத்து மாதிரிதான் இருந்துச்சு.

பலான பலான படங்களோட கொஞ்ச நாள் அசைவமா வந்துட்டிருக்கும்; திடீர்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு ரொம்ப நல்ல புள்ளை மாதிரி சுத்த பத்தமா வரும். திருந்திடுச்சுன்னு நம்ம்ம்ம்ம்பி அதை சின்ன புள்ளைங்க கண்ல படற மாதிரி மேஜை மேல போட முடியாது. திடீர்னு ஒரு நாள் அதுல கண்றாவிப் படங்கள் வரும்.

வாசகர்கள் கருத்துக் கேட்டு விகடன்லேர்ந்து சில வருஷத்துக்கு முன்னே ஒரு குரூப் வந்துது. கடையில வாங்கிட்டிருக்கும்போதே மடக்கி, ‘இதுல என்ன புடிக்கும்? என்ன புடிக்கலை?’ன்னெல்லாம் கேள்விகள் கேட்டாங்க. “எஸ்.ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன்னு நல்ல நல்ல கட்டுரைகள்லாம் வருது. அது புடிக்கும். ஆனா, திடீர் திடீர்னு ஆபாச படங்களெல்லாம் போடறீங்க. அது புடிக்கலை”ன்னேன். “குமுதம் படிப்பீங்களா?”ன்னாங்க. “நான் குமுதம் வாசகிதான். ஆனா, விகடனும் படிப்பேன்”ன்னேன். “குமுதத்துல இப்படியான படங்கள் வருதே..?”ன்னாங்க. “அது அவங்க கேட்க வேண்டிய கேள்வி”ன்னேன்.

பாலசுப்பிரமணியன் ஐயா ஆசிரியரா இருந்தப்போ, விகடன் பத்திரிகை மேல ஒரு மதிப்பு இருந்தது; கண்ணியம் இருந்தது. அது சொன்னா சரியாத்தான் இருக்கும்கிற நம்பிக்கை இருந்தது. சமீபகாலமா அதெல்லாம் போச்சு! ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் 25 குறிப்புகள்னு போட்டுக்கிட்டு வராங்க. சிவாஜி பத்தின 25 குறிப்புகள் வருமான்னு நானும் பார்க்கிறேன், வரலை! ‘பிரபாகரன்-25’ போடுறாங்க. விட்டா சந்தன வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், அயோத்திகுப்பம் வீரமணிக்கெல்லாம் 25 குறிப்புகள் போடுவாங்க போல!

திடீர்னு இந்த வாரம் பார்த்தீங்களா, ‘எனர்ஜி பக்கங்கள்’னு சில பக்கங்கள் தனியா போட்டிருக்காங்க. அப்படியே ‘புதிய தலைமுறை’ புத்தகம் பார்க்கிற மாதிரியே இருக்குன்னு எங்க வீட்டுக்காரர் கிட்ட காட்டினேன். அவர் ஒரு விஷயம் சொன்னாரு. ‘புதிய தலைமுறை’ எடுத்த எடுப்புலயே லட்சம் பிரதிகளைத் தாண்டி சர்க்குலேஷன் எகிறிடுச்சாம் (!). அதைப் பார்த்து ஆனந்த விகடன்காரங்களுக்குப் பேதி கண்டுடுச்சாம். (இந்த வார்த்தைத் தொடுப்பு எல்லாம் என்னுது. எங்க வீட்டுக்காரரு விகடனை விட்டுக் கொடுக்காமதான் பேசுவாரு.) ‘ஆ... ஊ...ன்னா மாநாடுன்னு கெளம்பிர்றாய்ங்க’ன்னு என்னத்தே கன்னையா சொன்னாப்ல, ஆ... ஊ...ன்னா வாசகர் கருத்துக் கணிப்புன்னு கெளம்பிடுவாங்க விகடன்காரங்க. வாசகர்களுக்கு அம்புட்டு மதிப்புக் கொடுக்குறாங்களாமா! அப்படிக் கொஞ்ச நாள் முன்னாடி விகடன்லேர்ந்து ஒரு குரூப் கெளம்பி வந்து, ‘புதிய தலைமுறை படிக்கிறீங்களா? அதுல உங்களுக்குப் புடிச்சது என்ன?’ன்னெல்லாம் கேட்டுக்கிட்டுப் போனாங்களாம். அதன் விளைவுதான் ‘எனர்ஜி பக்க’மாம்! கிருபா சொன்னப்ப ‘குபுக்’னு சிரிப்பு வந்துடுச்சு எனக்கு!

அடங் கொங்காங்கோ! 80 வயசுக்கு மேல அனுபவம் உள்ள ஒரு பத்திரிகை 20 வாரம்கூட வராத ஒரு பத்திரிகையைப் பார்த்து நடுங்குதுன்னா சிரிக்காம என்ன செய்யுறது!

மத்தபடி, சமீப காலமா விகடன்ல வர்ற கவிதைகள், கதைகள் (எங்கே... ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு!), சத்குரு ஜக்கி, எஸ்.ராமகிருஷ்ணன், ராஜேஷ்குமார், பொக்கிஷம்னு எல்லாமே நல்லா இருக்கு (நானே கேள்வி, நானே பதில் பகுதி சூப்பர்!). நான் இல்லேன்னு சொல்லலை! அடுத்தவனைப் பார்த்துக் காப்பியடிப்பானேன்னுதான் கேக்கறேன். (புதிய தலைமுறை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல விக்கிறது உண்மையா இருந்தா, கண்டிப்பா அதுக்குக் காரணம் அதன் விலை வெறும் 5 ரூபாங்கிறதுதான்! முன்னொரு காலத்துல இங்கிலீஷ் பேப்பர் ஒண்ணு எக்கச்சக்கமான சேல்ஸ்ல ஓடிக்கிட்டிருந்துதாம்! ‘அப்படி என்ன தரமா நாம கொடுத்துட்டோம்’னு அவங்களுக்கே புரியலையாம். விகடன் மாதிரி வாசகர் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்காங்க. அப்பத்தான் ஒரு விஷயம் வெளங்கிச்சாம். அதை வாங்கிப் பழைய பேப்பர் கடையில எடைக்குப் போட்டா, ரெண்டு மடங்கு காசு கெடைச்சுதாம்! ‘புதிய தலைமுறை’யும் அப்படித்தான்னு இந்த எடுபட்டச் சிறுக்கிக்குத் தெரிஞ்சிருக்குற சின்ன விஷயம்கூட விகடன் மேதைங்களுக்குத் தெரியாம போயிருச்சேய்யா!
.