Author: கிருபாநந்தினி
•Tuesday, December 29, 2009
ஹா... வந்துட்டேன்யா... வந்துட்டேன்யா..!

நம்ம ‘தல’ (எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்!) பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, பெங்களூர்ல சொந்தக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம்னு போனேன். போன இடத்துல ஏகப்பட்ட சொந்தங்களைப் பார்த்தேன். அதுல முக்காவாசிப் பேரை என் கல்யாணத்தும்போது பார்த்ததுதான்! என்னைப் பார்த்ததும் விடமாட்டேன்ட்டாங்க. ‘எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டுதான் போகணும்’னு கையப் பிடிச்சு இழுக்காத குறை-னு சொல்ல மாட்டேன்; நெஜம்மாவே இழுத்துட்டாங்க! பெங்களூர்லயும், சுத்திமுத்தி உள்ள ஊர்கள்லயும் பல சொந்தங்கள் இருந்ததுனால, அங்கே ரெண்டு நாள், இங்கே மூணு நாள்னு தங்கி, வக்கணையா தின்னுட்டு, நேத்திக்கு சொந்தக் கூட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு இந்தப் பறவை!


ஆமா... தெரியாமத்தான் கேக்கறேன்... என்னடா, பிளாக் எழுதறேன் பேர்வழின்னு மொக்கை போட்டுட்டிருந்தாளே கிருபாநந்தினி கிருபாநந்தினின்னு ஒருத்தி; அவளைக் கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு; இல்லேன்னா பின்னூட்டம்தான் போட்டிருப்பீங்களா? எங்கேயாச்சும் போய்த் தொலையட்டும் சனியன், திரும்பி வந்து நம்ம கழுத்தை அறுக்காத வரைக்கும் சரின்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கபோல! அதாங் கண்ணுங்களா நம்ம கிட்ட நடக்காது!

உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடோய்..! வேற, வேற, வேர்ர்ர்ற... மொக்கை போட வேட்டைக்காரிதாண்டா வேணும்! அதான்... வந்துட்டேன்ல, வந்துட்டேன்ல..!

ooo ooo ooo


புத்தாண்டு பொறக்கப் போகுது! எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க! வருகிற 2010 உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமா? எதுக்கு இருக்கேன் இந்தக் கிருபாநந்தினியானந்தாஜி! பலன்களை அள்ளி விடுறேன், புடிச்சுக்கோங்க!

அதுக்கு முன்னால, உங்க எல்லாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

1 முதல் 9 வரையுள்ள அடிப்படைப் பிறப்பு எண்களுக்குரிய 2010-க்கான பலன்களைக் கீழே தந்திருக்கேன். அடிப்படைப் பிறப்பு எண்ணைக் கண்டுபிடிக்கிறது எப்படி? ரொம்பச் சுலபம்க! உங்க பிறந்த தேதி, மாசம், வருஷம் எல்லாத்தையும் போட்டு சிங்கிள் டிஜிட் வர்ற அளவுக்குக் கூட்டிக்குங்க. உதாரணமா, என்னோட பிறந்த தேதி 20.5.1982. (ஹூம்... அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்!) அதில் இருக்கிற எல்லா எண்களையும் கூட்டினா 27 வருதா? (அட, என் வயசு!) அதையும் கூட்டினா 9 வருதா? அதான், என்னோட அடிப்படைப் பிறப்பு எண். இதுபோல உங்க பிறப்பு எண்ணைக் கண்டுபிடிச்சு, கீழே அதுக்கான பலனைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, 2010-ஐ சந்தோஷமா கொண்டாடுங்க மகா ஜனங்களே!

1
: பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். இந்த ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்தான்! அதுக்காக சீட்டுக் கம்பெனில கொண்டு போய் உங்கள் பணத்தைக் கொட்டாதீங்க. (நீங்களே சீட்டுக் கம்பெனி நடத்துபவராக இருந்தால், முதல் இரண்டு வரிகளும் உங்களுக்கு ஓ.கே.!) பொது இடத்தில் அரசியல் பேச வேண்டாம். தர்ம அடி விழ வாய்ப்புண்டு. எதுக்குங்க வம்பு... அழகிரி, ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், அத்வானி, சோனியா, மன்மோகன்சிங், மதுகோடா, பால் தாக்கரே, என்.டி.திவாரி எல்லாரும் இந்த நாட்டுக்குக் கிடைச்ச வரம்னு சொல்லிட்டுப் போவீங்களா..!

2: எதிரிக்கும் நல்லதே நினைப்பவர் நீங்கள். பணத் தட்டுப்பாடு அகலும். (பாங்க்காரங்க எஸ்.எம்.எஸ். வழியா வந்து லோன் வேணுமா, லோன் வேணுமான்னு கேட்டு நச்சரிப்பாங்களே?!) ஜனவரி 1-ம் தேதி காலை 6:30 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி இரவு 9:30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு! (அட, மத்தவங்க உயிர்ங்க!)

3: ராஜ தந்திரத்துடன் செயல்படுபவர் நீங்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். (இல்லேன்னா மேலதிகாரி கிட்ட உங்களைப் போட்டுக் கொடுத்துடுவாங்க.) நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாகக் கிட்டும் (அப்படி யாராச்சும் உங்களுக்கு இருந்தா!). டி.வி., ஃபிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். (பின்னே, பத்து வருஷத்துக்கு முன்னே வாங்கியதையே இன்னும் கட்டிக்கிட்டு அழுதா எப்படி? புத்தாண்டு ஆஃபர்ல எல்லாத்தையும் புதுசா வாங்கிப் போடுவீங்களா..!)

4: பிறரது மனம் கோணாமல் நடப்பவர் நீங்கள். (ஆமாங்க, ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு என் ஃப்ரெண்டு கூப்பிட்டப்போ கூட மறுக்காம, ரிஸ்க் எடுத்து அவன்கூடப் போனேன்னு எனக்குப் பின்னூட்டம் போடக் கூடாது! அப்புறம் என் மனசு கோணிடும்!) வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு ஆகிய உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம். (கண்டதையும் உள்ள தள்ளாதீங்க. புத்தாண்டுங்கிற பேர்ல ஆளாளுக்கு கேக், சோன்பப்டின்னு கொண்டு வந்து தருவாங்கதான். எல்லாத்தையும் நாமே மொசுக்கணும்கிறது இல்லே!) நெடுநாள் வராமல் இருந்த பாக்கி வசூலாகும் - அவங்க பிறப்பு எண் 5-ஆக இருந்தால்!

5
: நாணயம் மிகுந்தவர் நீங்கள். வாங்கின கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தூக்கமே வராது உங்களுக்கு. அதுவும் பிறப்பு எண் 4-க்கு உரியவரிடமிருந்து வாங்கிய கடன் ஒன்றை இந்த ஆண்டு பைசல் (பதறாதீங்க! 2010 டிசம்பர் 31 வரைக்கும் டயம் இருக்கு!) செய்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது! (இன்னும் எத்தனை பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கீங்களோ!) உங்களைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவார்கள். (யாரைப் பத்திதான் எவன்தான் அவதூறா பேசாம இருக்கான்!) காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவன் அளிப்பான் (உங்களுக்கு அளிச்ச மாதிரியே!).

6: நிஜத்தில் கலகலப்பானவர் நீங்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உங்கள் வீட்டில் தினமும் அழுகையும், புலம்பலுமாகவே இருந்ததல்லவா... அந்த நிலை அநேகமாக
2010-ல் மாறிவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. (நாலஞ்சு மெகா சீரியல்கள் முடிஞ்சு போயிடுச்சு போலிருக்கே! புதுசா எதையும் பார்த்துத் தொலைக்காதீங்க!) சேமிப்பு கரையும். (ஸ்கூல்ல, காலேஜ்ல சேர்ற பசங்க இருக்கா உங்களுக்கு?) உடல் நிலை பாதிக்கும். (பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலைதான்... வேறென்ன?) குல தெய்வத்துக்குப் பிரார்த்தித்துக்கொண்டு நிறைவேற்றாமல் விட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தால் (இத்தனை கோயில்ல மண் எடுக்கிறேன்னு எக்குத்தப்பா ஒண்ணும் வேண்டிக்கலையே?) உடனே நிறைவேற்றிவிடவும்.

7: யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவர் நீங்கள். (எப்படி பிட்டைப் போட்டேன் பாருங்க! பின்னே, இன்னாருக்குக் கெடுதி நினைச்சேன்னு நீங்க ஒப்புக்கவா போறீங்க!) செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். (அப்ப திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆறும் சாதகமா இல்லைன்னா பரவாயில்லையான்னு கேக்கப்படாது!) பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். (பொல்லாதுங்க! எப்ப என்ன செய்யும்னு தெரியாது. ஜாக்கிரதை!) சுக்கிரனால் திடீர் பயணம், வீண் செலவு ஆகியவை ஏற்படும். (யாரவன் சுக்கிரன்னு கேக்கறீங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவன் எவனாவது மண்டையப் போட்டால் அவன் சுக்கிரன்; எவனாவது கல்யாணம் கட்டிக்கிட்டா அவனும் சுக்கிரன்தான். மொத்தத்துல, நீங்க புடுங்குற ஆணி எல்லாமே வேண்டாத ஆணிங்கதாங்கிறாப்ல, உங்களுக்குச் செலவு வைக்கிறவன் எல்லாருமே வக்கிரம் புடிச்ச சுக்கிரன்கள்தான்!)

8: அமைதியாக இருந்தே சாதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். பெண்கள் புதிய டிசைனில் நகையோ அல்லது புடவையோ வாங்குவீர்கள். ஆண்களுக்குப் புதிய வாகனப் பிராப்திரஸ்து! கடன் தொல்லைகள் அதிகரிக்கும். (பின்னே, நகையும் புடவையும் வாகனமும் வாங்கினா கடன் தொல்லை அதிகரிக்காம என்ன செய்யுமாம்?) தம்பதிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்க வாய்ப்புண்டு. (‘என்னடி சமையல் இது, வாயில வைக்க வழங்கலே!’ என்றோ, ‘ஆபீஸ்லேர்ந்து நேரா வீட்டுக்கு வராம இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வரீங்க?’ என்றோ கேட்காமலிருந்தால்!)

9: பொறுமையின் சிகரம் நீங்கள்! பாதச் சனி நடைபெறுவதால் கையிருப்பு குறையும்! (பெங்களூர் போய் வந்ததுல என் கையிருப்பு கணிசமா குறைஞ்சு போனது உண்மை! ஆனா, பாதச் சனின்னு போட்டிருக்கே? நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே!) எவரையும் விமர்சித்துப் பேசவோ எழுதவோ வேண்டாம். (ஆஹா! வெச்சுட்டாங்கய்யா ஆப்பு! நமக்கு அதானே பொழப்பு! அது சரி, இதுக்கு என்ன சனி? வாய்ச் சனி, கைச் சனியா?) அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். (கண்டிப்பா! எனக்கு சோப்பு, பவுடர், நெயில் பாலீஷ் போன்ற முக்கியமான செலவுகள் தவிர, வெளியில டீ குடிக்கிறது, புக்ஸ் வாங்குறது மாதிரியான அநாவசிய செலவு எதையும் செய்யக் கூடாதுன்னு என் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்!) மகன், மகள் ஆகியோரால் மனக் கஷ்டம் ஏற்படும். (ஆமாங்க! ரொம்பப் படுத்தறா என் செல்லக் குட்டி!). அதே போல், உங்களையும் அறியாமல் நண்பர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்தி விடவும் வாய்புண்டு! (பிளாகால இருக்கலாமோ?!)

.
Author: கிருபாநந்தினி
•Friday, December 11, 2009
ன் அபிமான சீனியர் நடிகர் ரஜினிகாந்துக்கு என்னோட 60-வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!

ரஜினியைப் பத்தித் தனியே ஒரு பதிவே போடணும்னு நினைச்சிருக்கேன். அது நாளைக்கு!

ட்பு, காதல், கல்யாணம்கிற வார்த்தைக்கெல்லாம் ஆளாளுக்குப் புதுப்புது விளக்கமும் வியாக்கியானமும் கொடுத்துட்டிருக்காங்கப்பா... தாங்கலை!

‘பாண்டவர் பூமி’ படத்துல ஒரு பாட்டு வரும்... ‘தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்...’னு. ரொம்ப நல்ல பாட்டுதான்! ஆனா, அதுல சில கருத்துக்கள் எனக்குச் செரிமானமாகலை.

நட்புங்கிறது ஒரு நிலை; காதல்ங்கிறது ஒரு நிலை; கல்யாணம்கிறது ஒரு நிலை.

ஒரு ஆணும் ஆணும் நட்பா இருந்தா, ஒரு பெண்ணும் பெண்ணும் நட்பா இருந்தா அது அந்த அளவிலேயே நிக்கும். காதல், கல்யாணம்னு அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்குப் போகாது. அதுவே ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருந்தா, அது இன்னும் கொஞ்சம் இறுகி காதலா மாறுறதுக்கு சான்ஸ் இருக்கு. காதல் உறுதியா இருந்தா அது கல்யாணத்துல முடியவும் வாய்ப்பிருக்கு. அதுல தப்பு ஒண்ணும் இல்ல.

நட்பிலிருந்துதான் காதல் பிறக்கும். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ வகைக் காதல் எல்லாம் சரியான காதல்தானாங்கிறதுல எனக்கு டவுட்!

‘தோழா, தோழா’ பாட்டுக்கு வருவோம். நட்பைப் பத்தி சிலாகிச்சுப் பாடுற அதுல ஒரு வரி... ‘காலம் பூரா காதல் இல்லாம வாழ்ந்துக்கலாம்; அது ஆயுள் வரைக்கும் களங்கப்படாம பார்த்துக்கலாம்...’ அதாவது, அவங்க நட்பு களங்கப்படாம பார்த்துக்குவாங்களாமா!

இப்படித்தான் ‘கோலங்கள்’ சீரியல்லயும் (‘ஆஹா! ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டானு வேலன், மகா... ரெண்டு பேரும் கோவிச்சுக்காதீங்க. அந்த சீரியல் பத்தி எழுதி அறுக்க மாட்டேன்.) கடைசி எபிசோட்ல நட்பு, நட்புன்னு உருகினாங்க திருச்செல்வமும் அபியும்! (கடைசி எபிசோட் பாக்கலேன்னு எழுதியிருந்தியேன்னு கேக்கறீங்களா? சிம்பா கருணையோட அதுக்கான யூ-டியூப் லின்க் அனுப்பி, வம்படியா என்னைப் பார்க்கச் சொல்லி, விக்கி விக்கி அழ வெச்சுட்டாரே!) அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நட்பு களங்கப்பட்டுடுமாம். அதனால, கடைசி வரைக்கும் உனக்கு நான், எனக்கு நீனு இருந்துடறாங்களாம். நட்பு புனிதமாயிடுதாம்! அடங் கொக்கமக்கா!

நட்பு காதலா மலர்ந்தா அது களங்கப்பட்டுடுமா? அதெப்படிங்க. எனக்குப் புரியலை. அப்ப, நட்பு ஒரு சந்தனம், காதல் ஒரு சாக்கடைன்னு சொல்றாங்களா இவங்க?

ஆண்-பெண்ணின் நட்பின் அடுத்த மேல் படி காதல்; காதலின் அடுத்த மேல் படி கல்யாணம். இதுல களங்கம் எங்கேருந்து வந்துச்சுன்னு எனக்குப் புரியலீங்க.

நான் என் வீட்டுக்காரரைக் காதலிச்சுதாங்க கட்டிக்கிட்டேன். அவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிய நட்புக் குடும்பங்கள். நான் பிராமின். அவரு சைவ வேளாளர் குலம். நாங்க அடுத்தடுத்த குடித்தனம். எங்க குடும்பத்துக்கு அவரு ரொம்பவே உதவியிருக்காரு. அவர் முயற்சியிலதான் என் தம்பியை நல்ல காலேஜில் சேர்க்க முடிஞ்சுது. என்னைப் பெண் பார்க்க வர்றப்ப எல்லாம், வந்தவங்க உட்கார தன் வீட்டுலேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டு வந்து போடுவாரு. தன் வீட்டு ஃப்ரிஜ்லேர்ந்து எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து உபசரிப்பாரு. நாலஞ்சு பேரு என்னைப் பெண் பார்க்க வந்துட்டு, சொஜ்ஜி பஜ்ஜி மொக்கிட்டு, ‘போய் லெட்டரு போடறோம்’னு போய், ஜாதகம் சரியில்ல, சகுனம் சரியில்லன்னு ஏதாவது நொட்டைக் காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க.

அப்பத்தான் முதல் முறையா எனக்கு அந்த யோசனை வந்தது. அதுவரைக்கும் கிருபாகரனும் நானும் சினிமாக்கள்லயும் சீரியல்கள்லயும் சொல்ற மாதிரி நல்ல நட்போடதான் பழகிட்டிருந்தோம். நான்தான் முதல் முதல்ல கிருபா கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். “கிருபா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?”ன்னேன். “கேளு! நீ தப்பாவே கேட்டாலும் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”னாரு. “யாரோரோ வந்து என்னைப் பொண்ணு கேட்டுட்டுப் போறாங்களே, நீயும்தான் வந்து என்னைப் பொண்ணு கேளேன். போய் லெட்டர் போடறேன்னுட்டு போயேன்”னேன். “ஏய், நீ சீரியஸா சொல்றியா? மத்தவங்க மேல இருக்குற கடுப்புல சொல்றியா?”ன்னாரு. “ஏன், சீரியஸாதான் சொல்றேன். உனக்குப் புடிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!”ன்னேன்.

சினிமாக்கள்ல காட்டுற மாதிரி வெக்கப்பட்டோ, நெளிஞ்சுக்கிட்டோ நான் இதைக் கிருபா கிட்ட கேட்கலை. ஒரு நல்ல நண்பன் கிட்ட யதார்த்தமா கேட்கிற மாதிரிதான் இயல்பா கேட்டேன். கிருபாவும் ஒண்ணும் ஷாக்கான மாதிரி தெரியலை. “நந்தினி! எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. எங்க வீட்டுலயும் ஒத்துப்பாங்க. ஆனா, உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே!”ன்னார்.

இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. ஏன்னா, எங்களை நல்ல நண்பர்களா பழக அனுமதிச்சிருக்கிற எங்க அப்பா, அம்மா, கல்யாணம் வந்தா என்ன சொல்வாங்களோங்கிற பயம் எனக்கும் இருந்துது.

“மொதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட கேளு. அவங்க சம்மதிச்சா கல்யாணம் செஞ்சுப்போம். நான் தயார். ஆனா, அவங்க மறுத்துட்டா, அதை மீறி சினிமாவுல வர்றாப்ல நீ என் கூட ஓடி வர்றதுங்கிறதெல்லாம் சரிப்படாது. அவங்கவங்க அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்போம். நாம தொடர்ந்து நண்பர்களா இருக்க முடியும். ஏன்னா, நாம இப்ப வரைக்கும் காதலர்கள் இல்லை”ன்னாரு.

இதுக்காக நேரம், காலெமெல்லாம் பார்க்கலை. அடுத்த நிமிஷமே எங்க அப்பா, அம்மா கிட்ட போனேன். விஷயத்தைச் சொன்னேன். “அப்பா! போறும்ப்பா யார் யாரோ என்னைப் பொண் பார்க்க வந்தது. பேசாம நம்ம கிருபாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுருங்க. அவன் கிட்டயும் கேட்டுட்டேன். அவன் ஓ.கே-ன்னுட்டான்” என்றேன் தடாலடியாக.

“லவ் பண்றியாடி?”ன்னாங்க அப்பாவும், அம்மாவும். “ஐயே! அதெல்லாம் கிடையாது. ஏதோ தோணித்து. அவன் கிட்ட கேட்டேன். அவனும் சரின்னுட்டான். ரொம்ப நல்ல பையன்மா. உங்களுக்குதான் தெரியுமே!”ன்னேன்.

கிருபாவைக் கையோட கூப்பிட்டு வரச் சொன்னாங்க. குஷியா ஓடிப் போய்க் கூப்பிட்டேன். வந்தார். “என்னப்பா, இவ என்னவோ சொல்றாளே!”ன்னாங்க.

“ஆமா சார்! திடீர்னு வந்து கேட்டா. மொதல்ல எனக்கும் ஒண்ணும் புரியலை. அப்புறம்... ஏன், இவளைக் கட்டிக்கிட்டா என்னன்னு தோணுச்சு. சரின்னுட்டேன். எங்களுக்கு ஓ.கே-தான். இனிமே உங்க முடிவைப் பொறுத்துதான் எல்லாம் நடக்கும்”னாரு.

“நீங்க சைவம்தானே?”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.

“உங்க குடும்பம் பத்தித் தெரியும்ப்பா. நான் உன்னைக் கேட்டேன். வெளியில சாப்பிடுவியோ?”ன்னாரு அப்பா. “சேச்சே! அசைவம் தொட மாட்டேன். சிகரெட் பழக்கம், தண்ணியடிக்கிற பழக்கம் எதுவும் என் கிட்ட இல்லை. உங்களுக்குதான் தெரியுமே?”ன்னாரு.

அவ்வளவுதான். அடுத்தபடியா நேரே அவங்க வீட்டுக்கு எல்லாருமா போனோம். அவங்க அப்பா, அப்பா அம்மா கிட்ட பேசினோம். நாள் குறிச்சோம். அடுத்த மூணாவது மாசம் ஒரு சுப யோக, சுப முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடந்தே நடந்துடுச்சு. அந்த மூணு மாசமும் நாங்க சுத்தாத இடமில்ல; போகாத சினிமா இல்ல. முழுமையான ஒரு காதல் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தோம். கல்யாணத்துக்குப் பிறகும் எங்களைக் காதலர்களாதான் நினைச்சுக்கறோம். நண்பர்களாத்தான் பழகிட்டு வரோம்.

இப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா? கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா? இல்லையே! அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க?

இந்தக் கேள்விகளுக்கு யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா எழுதுங்கய்யா! உங்க குடும்பத்துல சண்டை, சச்சரவில்லாம ஆயுசு முழுக்க ஆனந்தமா வாழுவீங்க!


Author: கிருபாநந்தினி
•Tuesday, December 08, 2009
நான் கொஞ்சம் புஸ்தகம் படிக்கிறவள்னு அப்பப்ப எல்லாருக்கும் ஞாபகப்படுத்திக்கிறேன். லேட்டஸ்ட்டா ரெண்டு புது புஸ்தகம் வாங்கினேன். ஏன் வாங்கினேன்? புதுசா கண்ல பட்டுது; வாங்கினேன். வேற விசேஷ காரணம் ஒண்ணுமில்ல.

நான் வழக்கமா குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், அவள் விகடன், மங்கையர் மலர், துக்ளக் இந்த புஸ்தகங்கள் மட்டும்தான் படிக்கிறது. எப்பவாவது ஜூனியர் விகடன் புரட்டறதுண்டு. அதை முழுசா படிச்சா நாலு நாளு சோறு உள்ள இறங்காது. அதுக்காகவே படிக்கிறதில்லை. இவன் இத்தனை ஊழல் பண்ணி இத்தனை கோடி சேர்த்திருக்கான், இவன் இவளை வெச்சிருக்கான், அவள் அவனைப் போட்டுத் தள்ளிட்டா, இந்த ஊர்ல இத்தனைக் குழந்தைங்க செத்துதுன்னு புஸ்தகம் முழுக்க இதான் நியூஸ். காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கிற கதையா இது எனக்குத் தேவையா? வர வர டெய்லி பேப்பரைப் பார்க்கிறதுக்கே கண்ணெல்லாம் காந்துது.

சரி, அத விடுங்க! என் கண்ணுல புதுசா பட்ட புஸ்தகங்கள் என்னன்னு சொல்லலியே? ஒண்ணு, புதிய தலைமுறை; இன்னொண்ணு, சூரிய கதிர்.

முதல்ல ‘புதிய தலைமுறை’யைப் பத்திச் சொல்றேன். பேரே நல்லால்ல! அதாவது புதிய - தலைமுறை எல்லாம் ஓ.கே! வார்த்தைகள்ல தப்பு இல்ல. ஆனா, ஒரு பத்திரிகையோட பேரு சுவாரசியமா இருக்கணும். வளரும் தலைமுறை, வாழ்த்தும் வையகம், புதிய சமுதாயம், புரட்சி பாரதம், ஆர்த்தெழும் சமூகம், ஆர்ப்பரிக்கும் உலகம், தமிழ் அரசு, தமிழ் முரசு, பைந்தழிழ், பாரதப் பெண்... இப்படியெல்லாம் பேரு வெச்சா வாங்கிப் படிக்கத் தோணுமா? இந்த வார்த்தைகள் எல்லாம் மேடையில வீரமா பேசுறதுக்கு உதவும். அல்லது, ஏதாவது கட்சி ஆரம்பிச்சா வெச்சுக்கலாம். பத்திரிகைக்குச் சரிப்படாது. மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ்னு முழங்குற தானைத் தலைவர், முத்தமிழ் அறிஞர் தன் பத்திரிகைக்கு எப்படி அழகா, மங்களகரமா ‘குங்குமம்’னு பேரு வெச்சிருக்காரு! அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்க வேணாமா? இன்னும்கூட மங்களகரமா ‘சுமங்கலி’ன்னு ஒரு பத்திரிகை வந்துட்டிருந்தது. அது இப்ப வருதான்னு தெரியலை. என் கண்ணுல படலை.

சரி, ‘புதிய தலைமுறை’ பத்திரிகைக்கு வருவோம்.

கையில எடுக்கும்போதே மொழமொழன்னு யம்மா யம்மா..! எல்லாப் பக்கமும் வழவழ, பளபளன்னு ஜொலிக்குது. எப்படியும் இருபது ரூபா, இருபத்தஞ்சு ரூபாயாச்சும் இருக்கும்னு திருப்பி வைக்கப் போனேன். “அஞ்சு ரூபாதாங்க்கா! எடுத்துக்கோங்க”ன்னான் கடைப் பையன். “சின்னப் புள்ள. தெரியாம சொல்றான்”னு புக்ல விலையைப் பார்த்தேன். அட, ஆமாம்! அஞ்சே ரூபாதான். என்னால நம்பவே முடியலை. எப்படி? எப்படி அஞ்சு ரூபாய்க்கு இத்தனை உசத்தியான பேப்பர்ல, எல்லாப் பக்கமும் கலர்ல தர முடியும்?

ஆனந்தவிகடன் 15 ரூபா விலை. ஆரம்பத்துல எல்லாப் பக்கமும் வழவழப்பா, வண்ண மயமா ஜொலிக்கப் போகுதாக்கும்னு ஆசை காட்டி விலையேத்தி, அப்புறம் நைஸா மட்டமான பேப்பரை உள்ள நுழைச்சுட்டாங்க. பெரிய நிறுவனம்னு பேரு. அதுக்கே 15 ரூபாய்க்கு எல்லாப் பக்கத்தையும் வழவழப்பா கொடுத்துக் கட்டுப்படியாகலை போல! அப்படியிருக்குறப்ப, புதுசா வர்ற ஒரு பத்திரிகைக்கு மட்டும் எப்படிக் கட்டுப்படியாகும்னு புரியலை. இல்லேன்னா மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் இப்படிக் கொடுத்துட்டு அப்புறம் விலையை உசத்திடுவாங்களோ? அதுக்குள்ளே இதன் முதலாளி ரெண்டு மூணு பங்களாவை விக்க வேண்டி வந்துரும்னு நினைக்கிறேன். வேணாம், பாவம். நல்லாருக்கட்டும்!

சரி, இந்தப் பத்திரிகை மார்க்கெட்டைப் புடிக்குமா? மார்க்கெட்டைப் புடிக்கிறதுன்னா என்ன? குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சம் காப்பிகளாச்சும் போகணுமில்லையா? போகுமா? எனக்கு டவுட்டாத்தான் இருக்கு.

இது இளைஞர்களுக்கான பத்திரிகைனு அடிச்சு சொல்லணும்னுதான் ‘புதிய தலைமுறை’ன்னு பேரு வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கவர்ச்சி நடிகைகள் படங்கள் இல்லேங்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக கொஞ்சம்கூட மசாலா சேர்க்கலேன்னா எப்படி? ரமேஷ் பிரபா கட்டுரை, வெ.இறையன்பு கட்டுரை, சோம.வள்ளியப்பன் கட்டுரைன்னு உள்ளே விஷயங்களும் கனம் கனமாத்தான் இருக்கு. கனம்னா உங்க வீட்டு கனம், எங்க வீட்டு கனம் இல்லே; செம கனம்! படிக்கிறப்பவே கண்ணக் கட்டுது. உடம்பு வலிக்குது. ஏதோ பாட புஸ்தகத்தைப் படிக்கிறாப்ல போரடிக்குது. ‘உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன்களை கி.மு.2800லேயே எகிப்தியர்கள் பீனிசிய மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கரீபியன் தீவுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பொருளாக உப்பு இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட...’ - சொல்லுங்க, இப்படிப் போச்சுன்னா எப்படிப் படிக்கிறது? நாலு வரி படிக்கிறதுக்குள்ள எனக்குத் தூக்கம் வந்துடுது.

இந்தப் புத்தகத்துல எனக்குப் புடிச்ச, புரிஞ்ச ஒரே மேட்டர் - ‘நாகேஷ்’ பத்தி எம்.பி.உதயசூரியன் எழுதின ஒரு பக்கக் கட்டுரை.

இன்னிய இளைஞர்களுக்கு இதையெல்லாம் படிக்குறதுக்குப் பொறுமை இல்லே. நடுத்தர வயசுக்காரங்களுக்கு இது தேவையில்லே. வயசானவங்க படிக்கவே போறதில்லே! அதையும் மிஞ்சி இந்தப் பத்திரிகை சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா, நாடு திருந்திடுச்சுன்னு அர்த்தம்.

சூரிய கதிருக்கு வருவோம். இந்தப் பேரும் ஒண்ணும் கவர்ச்சியா (கவர்ச்சின்னா நான் அந்தக் கவர்ச்சியைச் சொல்லலீங்க!) இல்லே. ஆனா, மோசம்னு சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். போகப் போகப் பழகிடும்னு நினைக்கிறேன்.

ஆனந்த விகடன் கொடுத்த தைரியத்துல, எடுத்த எடுப்புலயே விலை ரூ.15-ன்னு தைரியமா களம் இறங்கியிருக்காங்க. பேப்பரும் சுமார் ரகம்தான். புதிய தலைமுறையோடு ஒப்பிடும்போது இந்தப் புஸ்தகம் கொஞ்சம் கலகலன்னு இருக்கிற மாதிரி தெரியுது. போன இதழ்ல குட்டி ரேவதி ஏதோ எழுதினதுக்கு இந்த இதழ்ல லீலா மணிமேகலை பதில் சவால் விட்டிருக்காங்க. நாட்டு நடப்புகளைச் சொல்ற மாதிரி காங்கிரஸ் பிரச்னை, இலங்கைப் பிரச்னை, நெடுமாறன் பேட்டி, வைரமுத்து பேட்டி, சல்மா பேட்டி, மதன் கட்டுரை, இலக்கியத்துக்கு சா.கந்தசாமி கட்டுரை, கலகலப்புக்கு சினிமா கட்டுரைகள், கவிதைகள், ஜோக்குகள்னு ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு (எப்புடி வார்த்தையைப் புடிச்சேன் பாருங்க) தேவையான அத்தனை விஷயங்களும் கலந்துகட்டி இருக்கு.

பூரா படிக்கலை. கொஞ்சம் படிச்சேன். படிச்ச வரையில் பிடிச்சது என்னன்னா, ‘கலைஞர் மட்டும்தான் தானே கேள்வி, தானே பதில் எழுதிக்கணுமா? ராஜபக்‌ஷே எழுதினா எப்படி இருக்கும்’னு வால்பையன் எழுதின கற்பனைக் கட்டுரை. ‘இந்த இதழில் ராஜபக்‌ஷே’ன்னு போட்டதால, வாராவாரம் எழுதுவார் போலத் தெரியுது. (வால்பையன்னா வலைப்பூ எழுதுற வால்பையனுங்களா?! அட்றா சக்கை! அட்றா சக்கை!!)

‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு’ங்கிற கொள்கை மொழிக்கு ஏத்தாப்லதான் இருக்கு பத்திரிகை.

‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியரா இருக்குற மாலனும், சூரிய கதிருக்கு ஆசிரியரா இருக்குற ராவும் கொஞ்ச காலம் ‘குமுதம்’ பத்திரிகையில வேலை செஞ்சிருக்காங்க. ஆனாலும், வாசகர்களுக்கு விஷயங்களை எப்படி ஜாலியா கொடுக்குறதுங்கிறதை அவங்க ரெண்டு பேருமே அங்க ஒழுங்கா கத்துக்கலையோன்னு தோணுது!

நல்ல மாணவனா இல்லைன்னா, நல்ல ஆசிரியர்களா இருக்குறது எப்படி?

Author: கிருபாநந்தினி
•Monday, December 07, 2009
நிறைய விடுகதைங்க கைவசம் இருந்துது. அதுல ரெண்டு ஒண்ணு எடுத்து விடுவோமேன்னு நினைச்சேன். அது சரி, பக்கத்துல யார் யார் படமெல்லாமோ போட்டிருக்கேனேன்னு பார்க்கிறீங்களா? பின்னே, வெறுமே விடுகதை போட்டா நல்லாருக்குமா? கூட ஏதாவது படம் இருந்தாத்தானே கலர்ஃபுல்லா, பார்க்கவும் படிக்கவும் சுவாரசியமா இருக்கும்? என்னது... அந்த விடுகதைக்கும் பக்கத்துல உள்ள படத்துல இருக்குறவங்களுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி தெரியுதா? ஐயையோ! அதெல்லாம் இல்லீங்க. நீங்களா அப்படி நெனைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லே. அது உங்க தப்பு!

1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது! அது என்ன?

2. பளிங்கு மண்டபம் கட்டி, பாலாறு ஒன்று வெட்டி, மகாராணி ஒருத்தி மஞ்சள் நீராடுகிறாள். அவள் யார்?

3. குண்டு முழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல். அது என்ன?

4. மரத்துக்கு மரம் தாவுவான்; குரங்கல்ல. பட்டை போட்டிருப்பான்; சாமியும் அல்ல. அவன் யார்?

5. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை. அது என்ன?

6. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்! அது என்ன?

7. கிணற்றில் அம்புகள் போடுவாரே தவிர, எடுக்க மாட்டார். அவர் யார்?

8. என்னை நீங்கள் பார்க்கலாம்; தொடலாம். ஆனால், பிடிக்கவே முடியாது. நான் யார்?

9.
அண்ணன் போவான் முன்னே; தம்பிகள் போவார்கள் பின்னே! அவன் யார்?

10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை; அவன் யார்?

11. என்னை எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கலாம்; ஆனால், ஒடிக்கவே முடியாது. நான் யார்?

12. பச்சை உடலுக்காரி; பழுத்த உதட்டுக்காரி. அவள் யார்?

13.
நான் மயிலிறகைவிட மென்மையானவள். ஆனால், என்னை அதிக நேரம் பிடித்து வைக்க முடியாது. நான் யார்?

14. பேசாதவரை நான் இருப்பேன். பேசினால் உடைந்துவிடுவேன். நான் யார்?

விடைகள்:
1. பட்டாசு; 2. முட்டை; 3. மாதுளம்பழம்; 4. அணில்; 5. தீக்குச்சி; 6. வெங்காயம்; 7. மழை; 8. நிழல்; 9. ரயில் இன்ஜின், பெட்டிகள்; 10. செருப்பு; 11. தலைமுடி; 12. கிளி; 13. சுவாசம்; 14. அமைதி

Author: கிருபாநந்தினி
•Friday, December 04, 2009
“ஏற்கெனவேதான் எழுதியாச்சே... மறுபடியும் விமர்சனம்கிற பேர்ல கிழிக்கணுமா? அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு?”ன்னு நீங்க கேக்கலாம்.

ஓடாத படத்துக்கு யாராச்சும் விமர்சனம் எழுதுவாங்களா? அது மாதிரிதான் இதுவும். என்னவோ இந்த சீரியலைப் போல இதுவரைக்கும் வந்ததே இல்லையாக்கும், ஏழு வருஷம் ஒரு சீரியலை எடுத்துட்டு (இழு இழுன்னு இழுத்துட்டு) வந்ததே ஒரு திறமையாக்கும், கின்னஸ் ரிக்கார்டுல பதிய வேண்டிய சாதனையாக்கும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்து இத்தனைக் காலம் ஓட்டியிருக்கிற சீரியல்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க வேணாமா?

தேவயானி அபியாவே வாழ்ந்துட்டாங்களாம். பின்னே, ஏழு வருஷத்துக்கு இந்த இழுவை இழுத்தா, சொந்தப் பேரேகூட மறந்து போகும்தான்! ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை! கோலங்கள்ல அதைத் தவிர, எல்லாமே நடந்துது.

நினைச்சபோது நினைச்சவங்களையெல்லாம் பொட்டு பொட்டுனு போட்டுத் தள்ளிக்கிட்டே இருந்தாங்க ஆதியும், அவன் கையாள் தில்லானும். தில்லான் ஏன் ஆதிக்காக அத்தனை கொலை பண்ணினான்னே தெரியலை. இத்தனைக்கும் அவனுக்கு ஆதி ஒண்ணுமே பண்ணலை. ஒரு சமயம் பெரிய பங்களா தரேன், சிங்கப்பூர்ல வீடு வாங்கித் தரேன்னு என்னென்னவோ சொல்லித் தராம ஏமாத்தவும் செஞ்சிருக்கான். அப்படியிருந்தும் இந்தத் தில்லான் மரை கழண்டவன் மாதிரி எதுக்கு ஆதிக்கு சேவகம் செஞ்சான்னு புரியலை. அதே மாதிரிதான் ஆதியின் பி.ஏ. கிரியும். ‘பாஸ்... பாஸ்...’னு அவன் கூப்புடறதே புளியேப்பம் விடுறது மாதிரிதான் இருந்துது. (பழைய நடிகர் பாலையா பேரனாமே! பாவம், பாலையா!)

அம்மாவைச் சுட்ட பின்பு ஆதி எங்கே அந்த ஓட்டம் ஓடினான்? எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான்? டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான்? தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே? நமக்கும் ஒரு எபிஸோடு மிச்சமாகியிருக்குமே?

ஆதி செத்தது மாதிரி காட்டாம, மூளை குழம்பிய பிண்டமாய்க் காட்டியது ஏன்? வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி! கோலங்கள் இரண்டாம் பாகம் வரும்னு கற்பனையில நினைக்குறப்பவே, என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..!

ஆதி டரியல் ஆனப்பவே கதை முடிஞ்சுடுச்சு. அப்புறம் பார்க்குறதுக்கு ஒண்ணுமில்லே. (சரி, முன்னே மட்டும் ஏதாவது இருந்ததாக்கும்?) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா? இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன்? புரியலை. சரி, கதையை ஒருவழியா முடிச்சா போதும்னு திருச்செல்வம் நினைச்சிருப்பார் போல!

‘நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்’னு அபி தொல்காப்பியன் கிட்ட சொல்லும்போது, ‘நான் ஒரு நல்ல நண்பனாதான் இருக்க முடியும். நல்ல கணவனா இருக்க முடியாது’ங்கிறாரு தொல்ஸ். காரணம், தன் கணவன் வேற ஒரு பொண்ணோட நட்பு வெச்சிருக்கிறதை எந்தப் பெண்ணாலும் ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாரு. இதுவே உளறல். நிஜமான நட்பை இந்தக் காலத்துப் பெண் ஏத்துக்கவே செய்வா. சரி, அப்படியே இருக்கட்டும். அடுத்த காட்சியில, அபியின் அம்மா தொல்ஸ் கிட்டே, ‘அபிக்கு கல்யாணமாகி நல்லபடியா ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்றப்போ, ‘என் கையிலயா? நான் என்ன பண்ணணும்?’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறாரே, ஏன்? உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம்! இத்தனைக்கும் இந்தப் பிரச்னை ஏற்கெனவேயும் ஒரு முறை வந்து, அபி கிட்டேர்ந்து விலகித் தனியா இருந்தவர்தான் தொல்ஸ்.

நேற்றைய காட்சியில அபியைத் தியாகத்தின் திருவுருவா கொண்டாடிட்டாங்க. தங்கச்சி பேர்ல இத்தனை கோடியாம், தம்பி பேர்ல இத்தனைக் கோடியாம், மாமனுக்கு வீடாம், கடையாம்னு சகலருக்கும் கோடிக் கோடின்னு பத்திரம் எழுதி வெச்சிருக்காளாம் அபி. ஆடிட்டர் நீளமா படிச்சுக்கிட்டே போறார். புராஜெக்டை முடிக்கக் காசில்லேன்னு தவிச்ச அபி, கட்டட வேலையா ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அபி எங்கேர்ந்து இத்தனைக் கோடிகளைச் சேர்த்தா... அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. சரி, ஆதி கதை முடிஞ்சதுமே மளமளன்னு எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டாள்னு ரெண்டொரு சீன்ல காமிச்சாச்சுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் தம்பியும், தங்கச்சியும் என்ன பண்ணிட்டிருந்தாங்க, அப்போ தனியாப் போற பிரச்னையைக் கிளப்பலியா, பத்திரம் ரெடியானதுமே அவங்க கிட்ட அபி கொடுத்திருக்கலாமே? ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை! தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி! அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்!

‘எனக்குக் குழந்தைங்க இருக்கும்மா’ன்னு அபி சொன்னதும் அம்மா, ஆடிட்டர், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் புரியாம மலைச்சு மலைச்சுப் பார்க்குறாங்க! இதுல என்ன குழப்பம் வேண்டியிருக்குன்னு புரியலை. அபியே பல தடவை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தைப் பத்திச் சொல்லியிருக்கா; கடைசியாவும் அவங்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா சொன்னா. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு?

நான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது இந்தியில ‘ஜுனூன்’னு ஒரு சீரியல் வந்தது. இப்படித்தான் இழு இழுன்னு அஞ்சாறு வருஷம் இழுத்தாங்க. கடைசியில, ‘சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும்’னு சொல்லி, அத்தோடு ஊத்தி மூடிட்டாங்க. அந்த மாதிரியெல்லாம் இல்லாம, சொதப்பலா இருந்தாலும் ஒரு சீரியலை முழுசா முடிச்சாரே திருச்செல்வம், அதுக்காக அவரைப் பாராட்டலாம்! பின்னே... அபிக்கு என்ன ஆச்சு, ஆதிக்கு என்ன ஆச்சு, அபி ஜெயிச்சாளா தோத்தாளான்னு யாரு ஆயுசு முழுக்கக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது!

மத்தபடி, இதுல நடிச்சிருந்த தேவயானி, ஆதி, திருச்செல்வம், மோகன்ராவ் (அபியோட அப்பாவா வர்ற இவரு நடிகை லட்சுமியோட மாஜி புருஷனாமே, அப்படியா!), சத்தியப்ரியா, தில்லான் (சமயத்துல கலாபவன் மணி மாதிரி ஓவர் கிறுக்குத்தனம் பண்ணினாலும்), தோழர் பாலகிருஷ்ணனா வந்த டைரக்டர் ஆதவன், அபிஷேக் (பிராங்கைடிஸ் குரல்ல பேசிக் கடுப்படிச்சாலும்), நளினின்னு அத்தனை பேருமே தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சாங்க. அருமையா நடிச்சாங்க. ‘கோலங்களை’ நான் விடாம பார்க்க அதுதான் முக்கியக் காரணம். பாராட்டுக்கள்.

ஐயோடா சொக்கி! இன்னிக்கு முடிவையும் பார்த்துப்புட்டு அதைப் பத்தியும் நாலு வார்த்தை எழுதலாம்னு நெனைச்சிருந்தேனே... இப்படி என் நெனைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிட்டியே ராசா! கேபிள் புட்டுக்குச்சே! நான் என்ன செய்வேன்... ஏது செய்வேன்... பார்த்த மகராசிங்க யாராச்சும் அபிக்கு என்ன ஆச்சு, காப்பகக் குழந்தைகளோட போயி செட்டிலாயிட்டாளான்னு சொல்லுங்களேன்! இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே!


.
Author: கிருபாநந்தினி
•Wednesday, December 02, 2009
னக்குப் புடிச்ச நடிகர் விஜய். சும்மா துறுதுறு விறுவிறுன்னு அவர் பேச்சும், ஆட்டமும், ஸ்டைலும் எனக்கு ரொம்பப் புடிக்கும். காமெடிகூட அவருக்கு நல்லா வருது. அவரோட ‘கில்லி’ என் ஃபேவரைட் படம்!

இதத் தெரிஞ்சுக்கிட்ட என் ஃப்ரெண்ட்ஸுங்க சும்மா சும்மா விஜய்யைக் கிண்டல் பண்ணி எனக்கு எஸ்.எம்.எஸ்ஸுல ஜோக்ஸா அனுப்பிக் கடுப்பேற்படுத்திக்கிட்டு இருக்காங்க. பதிலுக்கு அஜீத்தைக் கிண்டல் பண்ணி ஏதாச்சும் ஜோக்ஸ் அனுப்பலாம்னா தெரியமாட்டேங்குது. இத்தப் படிக்கிறவங்க யாருக்காச்சும் ‘தல’யக் கேலி பண்ற மாதிரி ஜோக்ஸ் தெரிஞ்சா, கொண்டு வந்து பின்னூட்டத்துல கொட்டுங்கய்யா!

விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:

1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.

2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?

3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!

4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

Author: கிருபாநந்தினி
•Tuesday, December 01, 2009
னக்கு அப்போ 17 வயசு இருக்கும். துறுதுறுன்னு இருப்பேன். புஸ்தகங்கள்ல நிறைய்ய கதைங்க படிப்பேன். பெரும்பாலும் ஒரு பக்கக் கதைங்கதான் படிப்பேன். அனுராதாரமணன், தேவிபாலா, பாலகுமாரன் சிறுகதைகள்னா உடனே படிச்சுடுவேன். அதுதான் புரியும். ஜெயகாந்தன், சுஜாதால்லாம் புரியாது. இப்பவும்.

இப்படியே காலம் நல்லபடியே போயிட்டிருந்தது. ஒரு நாள் விதி விளையாடிடுச்சு. நான் என்னையும் ஒரு அனுராதாரமணனா கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தேன். ‘நானும் சிறுகதை எழுத்தாளராகணும்!’

உடனே உக்காந்து யோசிச்சேன். பரபரன்னு தலையைச் சொறிஞ்சேன். புராணத்துலேர்ந்து ஒரு ஐடியாவை உருவினேன். மடமடன்னு ஒரு கதையாக்கி, அதுக்கு ‘எனக்காக... என் மகனுக்காக...’ன்னு தலைப்பு வெச்சு ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். ஒரு மாசமாச்சு, ரெண்டு மாசமாச்சு... ஒரு தகவலையும் காணோம்! சூப்பர் கதையாச்சே, இதை இத்தனை நேரம் புஸ்தகத்துல போட்டிருக்கணுமேன்னு யோசனை வந்தது. கடிதம் எழுதிக் கேட்டேன். ‘தங்கள் சிறுகதை பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவுகளைத் தெரிவிக்கிறோம்’னு பிரிண்ட்டட் பதில் வந்தது. சரின்னு விட்டுட்டேன்!

ஆறு மாசமாச்சு! ஒரு முடிவும் தெரியலை. மறுபடி லெட்டர் போட்டேன். அப்பவும் அதே பதில்! ‘அடப் போங்கடா’ன்னு அதே கதையை காப்பி எடுத்து குமுதத்துக்கு அனுப்பினேன். அங்கேர்ந்தும் பதிலே இல்லை. மூணு மாசம் கழிச்சு என் கதை என்னாச்சுன்னு கேட்டு லெட்டர் போட்டேன். லெட்டருக்கும் பதில் இல்லை. மறுபடியும் அதே கதையை வேற காப்பி எடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படி அந்தக் கதை எல்லாப் பத்திரிகைக்கும் ஒரு ரவுண்டு போயிருச்சு. எங்கேர்ந்தும் திரும்பலை. எந்தப் பத்திரிகைலயும் பிரசுரமாகவும் இல்லை. வெறுத்துட்டேன்.

ஒண்ணு, பிடிச்சிருந்தா பிரசுரிக்கணும்; பிடிக்கலேன்னா, ‘இந்தாம்மா! உன் கதை பிரசுரிக்கிற அளவுக்கு ஒண்ணும் உசத்தியாயில்லை. நீயே வெச்சுக்கோ’ன்னு திருப்பியாச்சும் அனுப்பணும். இப்படிக் கிணத்துல கல்லு போட்டாப்ல அமுக்கமா இருந்தா எப்படி? அத்தோட ‘சரிதாம் போங்கடா’ன்னு விட்டுட்டேன்!

எனக்குக் கல்யாணமானபோது சீர் செனத்தியோடு, என் கதையையும் ஒரு கவர்ல போட்டு எங்கூட அனுப்பி வெச்சுட்டாங்க. அத்த ஒரு நாளு எங்கூட்டுக்காரரு எடுத்துப் படிச்சுட்டாரு. “ஹை! கத சூப்பரா இருக்கே! நல்லாத்தான் எழுதுற. இத ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புறதுதானே?”ன்னு வெவரம் புரியாம கேட்டாரு. நான் என்னத்தச் சொல்ல? கிணத்துல கல்லு கதையத்தான் சொன்னேன்.

“பரவால்ல. மறுபடியும் அனுப்பிப் பாரு. அப்ப இருந்தவங்களுக்குப் புடிக்காம இருந்துருக்கலாம். இப்ப படிக்கிறவங்க இதுல உள்ள அருமையப் புரிஞ்சுக்குவாங்க”ண்ட்டு, அவரே அங்கங்க கதையில கொஞ்சம் கை வெச்சு செப்பனிட்டு, தலைப்பையும் மாத்தி அனுப்பி வெச்சாரு.

அதுக்கு நல்ல பலன் இருந்துது. அட, அவசரப்படாதீங்க! சட்டுனு போன வேகத்துல கதை திரும்பி வந்துடுச்சு! மறுபடி வேற பத்திரிகைக்கு அனுப்பினாரு. அங்கேர்ந்தும் திரும்பிடுச்சு. எனக்கு அழுகை அழுகையா வந்துது. “வேணாம், விட்டுருங்க. என் மானம் போவுது!”ன்னாலும் கேக்க மாட்டேன்னுட்டாரு.

திருப்பியும் ஒரு ரவுண்டு எல்லா பத்திரிகைக்கும் அந்தக் கதை போயித் திரும்பிடுச்சு. முன்னே அதுங் கதி தெரியவே இல்லை. இப்ப அந்தக் கதை யாருக்கும் பிடிக்கவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!

“விடு நந்தினி! ஒரு நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்திக்க அந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பினை இல்லை”ன்னு கண்ணத் தொடச்சு விட்டாரு. “ஆனா, அதுக்காக நீ சோர்ந்து போயிராத! கஜினி முகம்மது 17 தடவை படையெடுத்து 18-வது தடவைதான் வெற்றி பெற்றாரு! இத்தத் தூக்கிப் போட்டுட்டு இன்னொரு கதை எழுது”ன்னாரு.

“அடப் போங்க! இன்னும் எத்தன காலத்துக்குதான் கஜினி உதாரணத்தையே சொல்லிட்டிருப்பீங்க. கஜினி படமே வந்துருச்சு”ன்னேன். “சரி, வேற உதாரணம் சொல்றேன். உனக்குப் புடிச்ச லக்ஷ்மிம்மா 100 கதைங்க எழுதிப் பிரசுரமாகாம, 101-வது கதைதான் பிரசுராமாச்சாம்”னாரு. “ஐயையோ! 100 கதை எழுதுற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது சாமி! வேணாம், நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!”ன்னு கையெடுத்துக் கும்புட்டேன்.

“சரி, தமிழ்ப் பத்திரிகைகளுக்குதான் உன் எழுத்தோட அருமை புரியலை. இதை நான் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி, இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறேன்”னு கெளம்பினாரு.

உள்ளூர்ல மானம் போனது பத்தாதா; வெளியூர்லயும் என் பேரு சந்தி சிரிக்கணுமான்னு அவர் கையிலேர்ந்து அந்தக் கதையைப் பிடுங்கி, சுக்கல் சுக்கலா கிழிச்சு ஃப்ளஷ் அவுட்ல போட்டுத் தண்ணிய அடிச்சு ஊத்திட்டேன்!

“சரி, மத்த எழுத்தாளர்கள் பிழைச்சுப் போகட்டும்! விடு கழுதைய”ன்னு அவரும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து அதும் மேல ஊத்தினாரு!

ஆக மொத்தத்துல, எழுத்தாளர்களும் பிழைச்சாங்க; வாசகர்களும் தப்பிச்சாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! எப்பூடி?!!

போன பதிவுல போட்ட புதிர்களுக்கு விடை சொல்றேன்னு சொல்லியிருந்தேனில்லையா... இதோ!

புதிர் 1: ஸ்ரேயா சிவப்பு நிற டிரெஸ் போட்டிருக்காங்க. அதனால அவங்க ‘சிவப்பி’ கேரக்டர்ல நடிக்கலை. சரியா? அவங்க ஒரு விஷயம் சொல்ல, அதுக்கு ‘பச்சையம்மா’வா நடிக்கிற நடிகைதான் பதில் சொல்றாங்க. அதனால, ஸ்ரேயா பச்சையம்மாவாவும் நடிக்கலை. ஓ.கே-வா? ஆக, ஸ்ரேயா ‘நீலா’ங்குற கேரக்டர்லதான் நடிக்கிறாங்க. இனிமே மத்த ரெண்டு பேர் கேரக்டரையும் கண்டுபிடிக்கிறது ஜுஜுபி! அசின் பச்சைக் கலர் போட்டிருக்கிறதால, அவங்கதான் சிவப்பி. த்ரிஷாதான் பச்சையம்மா!

புதிர் 2: ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்குற தூரம் 20 கி.மீ. வடிவேலு, விவேக் ரெண்டு பேரும் 10 கி.மீ. வேகத்துல வந்தாங்கன்னா, சரியா ஒரு மணி நேரத்துல சந்திச்சுக்குவாங்க. பட்டாம்பூச்சியின் வேகம் மணிக்கு 15 கி.மீ. அப்ப அது மொத்தம் 15 கி.மீ. தூரம்தான் பறந்திருக்கும் இல்லையா?

விடைகளைச் சரியாக் கண்டுபிடிச்சவங்க என் சார்பா உங்க முதுகுல நீங்களே தட்டிக் கொடுத்துக்குங்க!


.
Author: கிருபாநந்தினி
•Sunday, November 29, 2009
புதிர் 1:
சின், த்ரிஷா, ஸ்ரேயா மூணு பேரும் ஒரு ‘பப்’ல... - வேணாம், கோவிச்சுப்பாங்க; - ஒரு காபி ஷாப்ல யதேச்சையா ஒண்ணா சந்திச்சாங்க.

நடிகைகள் மூணு பேரு ஒண்ணாச் சந்திச்சா கேக்கணுமா... என்னென்னவோ அரட்டைகள்!

பேச்சு நடுவுல திடீர்னு ஸ்ரேயா சொன்னாங்க... “ஹாய்! ஒரு விஷயம் கவனிச்சீங்களா? நாம மூணு பேரும் இப்ப நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் மூணுமே கிராமத்து சப்ஜெக்ட். நம்ம கேரக்டர் பேரெல்லாமே பச்சையம்மா, சிவப்பி, நீலான்னு வேடிக்கையா, விநோதமா இருக்கு. கேரக்டர் பேர்ல கலர்கள் இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதே கலர் டிரெஸ்களைத்தான் நாம இப்ப போட்டுக்கிட்டிருக்கோம்!”

மத்த ரெண்டு பேரும் இதை அப்பத்தான் கவனிச்சு, “அட, ஆமால்ல?”னாங்க.

“இன்னொண்ணையும் கவனிங்க. நாம யாரும் நம்ம கேரக்டர் பேர்ல இருக்கிற அதே கலர் டிரெஸ்ஸைப் போட்டுக்கலை. மாத்திப் போட்டுக்கிட்டிருக்கோம்!”

ஸ்ரேயா இப்படிச் சொன்னதும், “ஆமா ஸ்ரேயா! இப்பத்தான் நாங்களே இதைக் கவனிக்கிறோம். நீ சொல்றது கரெக்டுதான்! உனக்கு நல்ல மூளைடீ! உன் கிட்ட நல்ல ஆப்சர்வேஷன் பவர் இருக்கு!”ன்னாங்க பச்சையம்மாவா நடிச்சுட்டிருக்கிற நடிகை.

சரி, இப்ப நீங்க சொல்லுங்க... எந்தெந்த நடிகை என்னென்ன கேரக்டர்ல நடிச்சுட்டிருக்காங்க?


புதிர்
2:வைகைப் புயல் வடிவேலுவும், சின்னக் கலைவாணர் விவேக்கும் வெவ்வேறு ஊர்கள்லேருந்து சைக்கிள்ல கிளம்புறாங்க. ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்கிற தூரம் சரியா 20 கி.மீ. ரெண்டு ஊருக்கும் நடுவுல நேர்க் கோடு போட்டதுபோல தார் ரோடு. ரெண்டு பேரும் எதிரெதிர் திசையில, அதாவது ஒருத்தரை நோக்கி ஒருத்தர் அந்தத் தார் ரோடுல சைக்கிளை ஓட்டிக்கிட்டு வந்துட்டிருக்காங்க. ரெண்டு பேருமே ஒரே நேரத்துல கிளம்பி, சரியா 10 கி.மீ. வேகத்துலதான் சைக்கிளை ஓட்டறாங்க.

அப்ப ஒரு பட்டாம்பூச்சி என்னா பண்ணிச்சு தெரியுமா? வடிவேலு கெளம்புறதுக்கு முன்னாடி அவரோட சைக்கிள் ஹேண்ட்பார்ல உட்கார்ந்திருந்த அது, அவர் சைக்கிள் மெதிக்க ஆரம்பிச்சதுமே பறக்க ஆரம்பிச்சு, எதிரே வந்துட்டிருந்த விவேக்கை நோக்கிப் போச்சு! அவரைத் தொட்டதுமே மறுபடி எதிர்த் திசையில திரும்பிப் பறந்து, இங்கே வந்துட்டிருந்த வடிவேலுவைத் தொட்டுச்சு. உடனே மறுபடி திரும்பிப் பறந்து விவேக்கை நோக்கிப் போய், அவரைத் தொட்டுச்சு. கடைசி வரைக்கும் அது ஒரே சீரான வேகத்துலதான் (மணிக்கு 15 கி.மீ.) பறந்துச்சு.

இப்படியே அந்தப் பட்டாம்பூச்சி வடிவேலுவும் விவேக்கும் மீட் பண்ற வரைக்கும் மாறி மாறிப் பறந்துட்டிருந்தது. அப்படின்னா, அது மொத்தம் எத்தனைக் கிலோ மீட்டர் தூரம் பறந்திருக்கும்?


து போல நிறைய புதிர்கள் உள்ள ஒரு புஸ்தகம் என் கிட்டே இருக்கு. அதுல எனக்குப் பிடிச்ச, சுலபமா விடை கண்டுபிடிக்கக்கூடிய புதிர்களைத்தான் இங்கே வரிகளை வேற மாதிரி புதுசா மாத்திக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சீங்கன்னா, ரெண்டு புதிர்களுக்குமே நீங்க ரொம்ப ஈஸியா விடை சொல்லிடலாம். அடுத்த பதிவு வரைக்கும் காத்திருங்க. விடை சொல்றேன்.

அதுவரைக்கும் யோசிங்க... யோசிங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க!

Author: கிருபாநந்தினி
•Saturday, November 28, 2009
தினம் தினம் பேப்பரைத் திறந்தாலே வேதனையாயிருக்குங்க. ஒவ்வொரு சமயம் எதுக்கு பேப்பர் வாங்கணும்னு தோணுது. சீரியல் பார்த்து அழுவுற மாதிரி, பேப்பர் படிச்சு ஐயோ... ஐயோன்னு நம்ம பி.பி-யை நாமே ஏத்திக்கணுமான்னு தோணுது. வேலியில போற ஓணானைப் பிடிச்சு இடுப்புல கட்டிக்கிட்டுக் குத்துதே, குடையுதேங்கிறாப்ல நாமே தேடிப் போய் பேப்பரைக் காசு கொடுத்து வாங்கி வந்து படிச்சுட்டு, ‘அட, நாசமாப் போறவனுங்களே! இப்படியுமா செய்வானுங்க’ன்னு வயித்தெரிச்சல் படுறதாயிருக்கு. இந்த மந்திரி ஊழல் பண்ணுனாரு, இவன் கள்ளக் காதலியை இவன் குத்திக் கொன்னான், இங்கே இத்தனை பேர் குண்டு வெடிச்சு செத்தாங்க, இங்கே நிலச்சரிவு, இத்தனை பேர் சாவு, கொலை, கொள்ளைன்னு பேப்பரைப் பிரிச்சாலே ரத்தம் கொட்டுது; கப்பு அடிக்குது!

பெரிய நியூஸ்தான் இப்படின்னா குட்டிக் குட்டிச் செய்திகள்கூடக் கடுப்பைக் கிளப்புது.

மதுரைல கோயில்கள் கிட்டேயும், பள்ளிக்கூடங்கள் கிட்டேயும் டாஸ்மாக் திறந்திருக்காங்களாம். அதை அகற்றணும்னு ஹைகோர்ட் உத்தரவு போட்டிருக்குது. இதுக்கெல்லாம் ஹைகோர்ட் வந்து பஞ்சாயத்து பண்ணணும்னு ஆகிப் போச்சே நம்ம ஜனங்களோட மனநிலைன்னு வேதனையா இருக்கு. ‘உன் உசிரைப் பாதுகாக்க ஹெல்மெட் போட்டுக்கோ’ன்னு கவர்ன்மென்ட் உத்தரவு போட்டாக்கூட அது நம்ம நல்லதுக்குதான்னு நம்ம ஆளுகளுக்கு உரைக்காது. செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா இத்தனை ரூபா அபராதம்னு சொன்னாத்தான் ஒழுங்கு மரியாதையா வண்டி ஓட்டுவான் நம்ம ஆளு. அவனுக்கா அந்த அறிவு இருக்காது. நம்ம ஊர் பஸ்கள்ல முதியோர் சீட்டுன்னு ஒதுக்குறதைப் பார்த்து வழிச்சுக்கிட்டுச் சிரிக்கிறான் வெள்ளைக்காரன். ‘அட என்னாங்க, பெரியவங்க வந்தா எழுந்திருச்சு இடம் விட வேண்டியதுதானே! இதுக்குக் கூடவா சீட்டு ஒதுக்குவாங்க’ன்னு அவன் நினைக்கிறான். நம்ம ஜனங்களைப் பத்தி அவனுக்குத் தெரியலை! கோயில் கிட்ட, ஸ்கூல் கிட்ட இருக்குற டாஸ்மாக்ல இந்தக் குடிமகன்கள் போய் எதுவும் வாங்கிக் குடிக்காம இருந்தா, உத்தரவு போடாமலே அவன் போணியாகலைன்னு கடையை மூட்டை கட்டிட மாட்டானா? நாய்க்கு செக்காவது, சிவலிங்கமாவதுங்கறாப்ல குடிமகன்களுக்குக் கோயிலாவது, பள்ளிக்கூடமாவது!

கோவை மத்திய சிறையில் சல்யூட் அடிக்கத் தெரியாத 90 காவலருக்கு மெமோ கொடுத்திருக்காராம் ஏடிஜிபி. அந்த லட்சணத்துல இருக்குது நம்ம தமிழக காவல் படை! நம்ம காவலர்கள்ல எத்தனை பேரால தலையைக் குனிஞ்சு தங்கள் கால் கட்டை விரலைப் பார்க்க முடியும்? ‘பானை வயிற்றோன் பக்தர்களைக் காப்பானா?’ன்னு கறுப்புச் சட்டைக்காரங்க கேக்குறாங்க. இந்தத் தொந்திக் கணபதிகள் திருடன்களையும், தீவிரவாதிகளையும் ஓடிப் போய்ப் பிடிப்பாங்களான்னு நான் கேக்குறேன். கெடு டயம் கொடுத்து, அதுக்குள்ள தொப்பையைக் குறைக்காத போலீஸ்காரங்க எல்லாரையும் டிஸ்மிஸ்ஸே பண்ணலாம்னு சட்டம் கொண்டு வரணும்.

மதுகோடா எக்கச்சக்கமான பணம் ஊழல் பண்ணியிருக்கார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; கோடிக்கணக்கில் ஹவாலா பணம் கைமாறியிருக்குது; ஆள் அப்ஸ்காண்டுன்னு தினம் தினம் வானிலை அறிக்கை மாதிரி மதுகோடா செய்தி ஒண்ணாவது வராம இருக்கிறதில்ல! மதுகோடா... அட, போடா!

அடுத்த சிலிண்டர் பதிவு பண்ண 21 நாள் ஆகியிருக்கணும்னு ஒண்ணும் விதியில்லையாம்; ஐஓசி மண்டல துணை மேலாளர் ராஜசேகரன் சொல்லியிருக்காரு! ஐயா, நீங்க சொல்றீங்கய்யா! கேக்க நல்லாத்தான் இருக்குது. கேஸ் ஏஜென்சிக்காரங்க கேக்கமாட்டேங்குறாங்களே! 21 நாள் ஆகலைன்னா சிலிண்டர் ரின்யூவைப் பதிவுக்கே எடுத்துக்க மாட்டேங்கிறாங்களே! அவங்களைக் கூப்புட்டு வெச்சுக் கொஞ்சம் அட்வைஸ் பண்ணினீங்கன்னா உபகாரமா இருக்கும். இதுல ஒரு வேதனை என்ன தெரியுங்களா... நாம ஒரு சிலிண்டரை பதிவு பண்ணின தேதிக்கு 21 நாள் கழிச்சு இன்னொரு சிலிண்டரை பதிவு பண்ணலாம்னு சொன்னாக் கூடப் பரவாயில்லீங்க. அவங்க சிலிண்டரைக் கொண்டு வந்து போட்ட தேதிக்கு அப்பால 21 நாள் கழிச்சுதான் பதிவு பண்ணணுமாம். சிலிண்டரைக் கொண்டு வரவே பத்துப் பதினைஞ்சு நாள் ஆக்கிடறாங்க. இதனால ரெண்டு சிலிண்டர் வெச்சிருந்தாக்கூட மாசத்துல ரெண்டொரு நாள் குமிட்டி, கரியடுப்பு மூட்டிச் சமைக்க வேண்டியதாயிருக்கு.

சிங்கப்பூர்ல உள்ள கெல்லாங் நதியைப் போல, நாறிப்போன நம்ம சென்னை கூவம் நதியைச் சுத்தப்படுத்தப் போறாராம் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் போயிட்டு வந்திருக்காப்ல. அந்த கேரிங்ல கொஞ்ச நாள் அப்படித்தான் பேசுவாப்ல. இதே கண்டி லண்டன் போயிட்டு வந்திருந்தார்னா தேம்ஸ் நதி மாதிரி ஆக்கிருவோம்னு சொல்லியிருப்பாரு. அறுபது வருஷமா நாறிக்கிட்டு இருக்குது கூவம். ஆவுற கதையப் பாருங்க!


வரதட்சணை கேக்குறதும் குற்றம், கொடுக்குறதும் குற்றம்னு ஒரு பக்கம் அனத்திக்கிட்டே இருக்கோம். இன்னொரு பக்கத்துல மாப்பிள்ளை யாரு, எப்படி, நல்லவனா, பொறம்போக்கானு தெரியாமலேயே, அவன் வெளிநாட்டுல எக்கச்சக்கமான சம்பளத்துல வேலையில இருக்கான்னு நெட்டுல பார்த்துட்டு, அதை நம்பி கல்யாணத்துக்கு முன்னாடியே அவனுக்கு பத்து லட்ச ரூபா, இருபது லட்ச ரூபான்னு கொண்டு போய்க் கொட்டியழுவுற ஏமாந்தகுளிகளும் இருக்காங்கன்றதை நெனைச்சா எரிச்சல் எரிச்சலா வருது. அப்படித்தான் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நளினிங்கிறவங்க எவனோ ஒரு லண்டன்(!) மாப்பிள்ளை கிட்டே 4 கோடி ரூபாயை இழந்துட்டு மதுரை ஐஜி அலுவலகத்துல போய் மூக்கால அழுதுருக்காங்க. எத்தனை பட்டாலும் அறிவே வராதா இவங்களுக்கெல்லாம்? சே..!

இது பரவால்ல... ஒரு இன்ஜினீயரு பேங்க்ல ஒன்றரை லட்ச ரூபா பணம் எடுத்தாராம். அதை ஒரு மஞ்சப் பையில போட்டு, சைக்கிள் ஹேண்ட்பார்ல மாட்டினாராம். அப்போ ஒருத்தன், “ஐயா, அங்க ஒரு பத்து ரூபா நோட்டு விழுந்து கிடக்குது. உங்களுதான்னு பாருங்க”ன்னானாம். இந்த வீணாப் போனவரும் அதைக் குனிஞ்சு எடுத்தாராம். ஹேண்ட்பார்ல இருந்த மஞ்சப் பையை ஒன்றரை லட்ச ரூபாயோட காணமாம். கோயிந்தா கோயிந்தா! ஆனா, இந்த டெக்னிக் அரதப் பழசான டெக்னிக். நான் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்தே இந்த அல்பத்தனமான டெக்னிக்கைக் கையாண்டு பணத்தைக் களவாடியிருக்காங்க. ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, ஏமாறுறதுக்கு நாம தயாரா இருக்குற வரைக்கும் ஏமாத்துறவனுக்கு பெரிய சயின்டிஃபிக் டெக்னாலஜி முறை எதுவும் தேவையில்ல. ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு ஹைதர் அலி காலத்து டெக்னிக்கையே கையாண்டு, நம்ம பணத்தை லபக்கிக்கிட்டு போயிட்டே இருப்பான். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு பாடினாரு பட்டுக்கோட்டையாரு! நாமதான் ஏமாறுறதுக்கு ரெடியா இருக்கோமே! திருடங்களே திருந்த நினைச்சாலும் விட்டுருவோமா என்ன?!

1330 குறளையும் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா, அந்தப் பிள்ளைக்கு 21 வயசு வரைக்கும் மாசம் 1000 ரூபா உதவித் தொகை வழங்குறாராம் நம்ம கலைஞரு! தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா வரி விலக்குன்னு சொன்ன அபத்தத்தைவிட இது கொஞ்சம் பெட்டர் மாதிரி தெரியுதா? அதான் இல்லே! இதுவும் படு பேத்தலான திட்டம்தான். ‘மனப்பாடம் பண்ணாதீங்க; புரிஞ்சுக்கிட்டு எழுதுங்க’ன்னு மாணவர்களுக்கு அட்வைஸ் பண்றாங்க கல்வியாளருங்க. கலைஞரு என்னடான்னா திருக்குறள் மொத்தத்தையும் மனப்பாடம் பண்ணுங்கன்றாரு. திருக்குறளை மனப்பாடம் பண்ணி ஆகப்போறது என்னன்னு புரியல. சரி, ஒரு தடவை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா போதுமா? அப்புறம் மறந்துட்டா பரவால்லியா? இல்லே, 21 வயசு வரைக்கும் அப்பப்ப போய் பாங்க் மேனேஜர்கிட்ட, இல்லாட்டி கலைஞர் கிட்டே மொத்தத்தையும் ஒரு தபா கடகடன்னு சொல்லிக் காட்டணுமா? வெறுமே மனப்பாடம் பண்ணினா போதுமா இல்லே அர்த்தமும் சொல்லணுமா? அதுல காமத்துப் பால் எல்லாம் வருதே, அதைக்கூட பசங்க படிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கணுமா?

திருக்குறள் உலகப் பொதுமறைங்கிறதெல்லாம் சரி! பெரியவங்களுக்குக் கொடுக்குற மரியாதையை அதுக்குக் கொடுப்போம். ஆனா, அதில் உள்ள எல்லாக் குறளையும் படிச்சு அதன்படிதான் இப்ப நடக்கணும்னு சொன்னா அது சரிவராது. பெரியவங்களோட புத்திமதிகளைக் கேட்டுக்கலாம். ஆனா, எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இப்ப உள்ள சூழ்நிலைக்கு எது பொருந்துமோ, சரியா இருக்குமோ அதை மட்டும்தான் கடைப்பிடிக்க முடியும். திருக்குறளும் அப்படித்தான்! அதுல இருக்குற பல குறள்களை இப்ப ஏத்துக்கவே முடியாது. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ங்குறாரு வள்ளுவரு. கடவுளைக்கூடக் கும்பிடாம புருசனைக் கும்பிடுற பொம்பளை பெய்னு சொன்னா உடனே மழை பெஞ்சுடுமாம்! நம்புறீங்களா? அப்படி அவ சொல்லி மழை பெய்யலைன்னா அவ கெட்ட பொம்பளைன்னு சொல்லி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா? சரி விடுங்க, நாம சொல்லியா கேக்கப் போறாரு கலைஞரு!

பசங்களா! காமத்துப்பால் குறள்களை மனப்பாடம் பண்ணுங்க; ஆனா, அர்த்தத்தை நோண்டி நோண்டிக் கேக்காதீங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!

என் அடுத்த பதிவு: புதிராடுவோம் வாங்க!
Author: கிருபாநந்தினி
•Friday, November 27, 2009
ழு வாரத்துக்கும் மேல இழுத்துப் பறிச்சுக்கிட்டுக் கிடந்த பாட்டியம்மா உசுரு பொட்டுனு ஒரு நாள் போயிட்டா, அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு எத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுமோ, அத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஒரு மெகா, மகா சீரியல் முடியப் போவதைக் கேட்குறப்போ ஏற்படுது.

‘கோலங்கள்’ சீரியலைத்தான் சொல்றேன். ஏன், உனக்கு சீரியலே பிடிக்காதா, இல்லே ‘கோலங்கள்’ சீரியல் மட்டும்தான் பிடிக்காதா, அது முடியறதுல உனக்கு ஏன் இத்தனைச் சந்தோஷம்னு நீங்க கேட்கலாம்.

எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கணும். சிறுகதைன்னா அதிகபட்சம் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; நாவல் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; தொடர்கதைன்னா இத்தனை வாரங்கள் போகலாம்; சினிமான்னா இத்தனை மணி நேரம் ஓடலாம்னு முடிவு பண்ணிக்கணும். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தா தப்பில்லை. ஆனா, எந்தத் தீர்மானமும் இல்லாம, கதை எந்தத் திசையை நோக்கிப் போகுதுன்னே தெரியாம, எங்கெங்கேயோ வளைச்சு வளைச்சு இழுத்துட்டுப் போய், என்னவோ ஒரு வசனம் சொல்வாங்களே, வண்டி மாடு மூத்திரம் பேஞ்சாப்போலேன்னு, அது மாதிரி கொண்டு போய் முச்சந்தியில விடக்கூடாது இல்லையா? ஒரு சீரியல் டைரக்டர் சீரியலை மட்டும் கொண்டு போய் முச்சந்தியில நிறுத்துறார்ங்கிறது இல்லை; அதை வேலை மெனக்கிட்டுப் பார்க்கிற ரசிகர்களையும் அலைக்கழிச்சு இழுத்துட்டுப் போய் முச்சந்தியில நிறுத்துறார்னுதான் அர்த்தம்!

அந்த வேலையைத்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம்.

பொதுவா எல்லாக் கண்ணராவி சீரியல்களையும் பெண்கள் ரசிச்சுப் பார்க்குறாங்கன்னு ஒரு பேச்சிருக்கு. அப்படி இல்லை. வேலைக்குப் போகாம வீட்டோடு இருக்கிற பெண்கள்தான் வேற பொழுதுபோக்கு இல்லாம சீரியல்களை, அது எத்தனை அபத்தமா இருந்தாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு. அதுக்காக அதையெல்லாம் அவங்க ஒத்துக்குறாங்கன்னோ, ரசிக்கிறாங்கன்னோ அர்த்தமில்லை. அவங்களுக்கு அதை விட்டா வேற வழியில்லை.

‘கோலங்கள்’ ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கடந்த ஒரு வருஷமாத்தான் கோலங்கள் அலங்கோலங்கள் ஆயிடுச்சு. திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. மெகா சீரியல்ல இது ஒரு வசதி. புதுசு புதுசா சண்டையை உற்பத்தி பண்ணலாம். புதுசு புதுசா கேரக்டர்களைக் கொண்டு வரலாம். சாகடிக்கலாம். அல்லது, காணாம போக்கிடலாம். யாரும் கேட்பார் கிடையாது. அப்படித்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம். யார் யாரோ வந்தாங்க; போனாங்க. பல பேரைப் பத்தித் தகவலே இல்லை. அதையெல்லாம் லிஸ்ட் போடணும்னா இடம் பத்தாது.

ஆதிங்கிற கேரக்டர் அருமையான கேரக்டர். தொழிலில் திறமையும், மிடுக்கும் உள்ள கேரக்டர். அவனுக்கு அபியும், அபியைச் சேர்ந்தவங்களும் எதிரிங்க. அவங்களை அவன் எப்படி முன்னேறவிடாம தடுக்கிறான்னு காட்டாம, அவனை அபி எப்படி ஜெயிக்கிறாள்னு காட்டாம, அவனையும் கடைசியில கோட்டா சீனிவாசராவ் மாதிரி ஆக்கி, ‘ஏய்... ஏய்..’னு கத்த வெச்சு, (அந்த ஆளு ஆரம்பத்திலேர்ந்தே கத்திக்கிட்டுத்தான் இருந்தாரு. தொண்டைத் தண்ணி போகக் கத்தினதுக்கே அந்த ஆளுக்கு டபுள் சம்பளம் கொடுத்திருக்கணும்.) கண்டமேனிக்குச் சகலரையும் சுட்டுத் தள்ள வெச்சு, சைக்கோ மாதிரி ஆக்கி, கட்டட உச்சியிலேர்ந்து குதிக்க வெச்சு, மூளை குழம்பி, வெஜிடபிள் மாதிரி உட்கார்த்தி வெச்சா, இதுதான் ஒரு நல்ல சீரியலுக்கு லட்சணமா? அபி அவனை ஜெயிச்சதா அர்த்தமா? சகிக்கலை!

திருச்செல்வத்துக்கு திடீர்னு மூளை குழம்பி, திடீர்னு சுய நினைவு திரும்பிடுது. அதே போலவே ஆதிக்கும் திடீர்னு சுய நினைவு திரும்பி, “நான் சாகலடீ... சாகல... உங்களையெல்லாம் போட்டுத் தள்ளறதுக்காகத்தான் அப்படி நடிச்சேன்!”னு எழுந்து வந்து, இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு சீரியலை இழுத்துடுவாரோன்னு ஒரு பயம் திக் திக்னு நெஞ்சுக்குள்ள அடிச்சுக்குது.

லாஜிக் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. தோழர்னு ஒருத்தர் செந்தமிழ்ல பேசினார். செந்தமிழ்ல பேசுறது ஒண்ணும் தப்பில்ல. நல்ல விஷயம்தான்! சரித்திர நாடகமா இருந்தா ரசிக்கலாம். ஆனா, இதுல அவர் கேரக்டர் ஒட்டல. அந்தக் காலத்து அரசன் வேஷம் போட்டுக்கிட்ட ஒருத்தன் தவறுதலா சமூக நாடக மேடையில புகுந்து குழப்படி பண்ணின மாதிரி இருந்தது.

சரி, அதையாச்சும் மன்னிக்கலாம், நல்ல தமிழுக்காக! (ஆனால், தோழர் முழுக்க முழுக்கத் தனித் தமிழ்ல பேசலை. அவர் பேச்சுல வேற்று மொழிச் சொற்கள் நிறைய கலந்திருந்தது. உதாரணமா, விஷயம் என்கிற வார்த்தையை அவர் விசயம், விசயம்னுதான் உச்சரிச்சார். ‘ஷ’வை ‘ச’வாக்கிட்டா அது நல்ல தமிழ் வார்த்தையாயிடுமா என்ன?) ஆனா, ஏழு வருஷத்துக்கு மேல ஒரு கதையை இழு இழுன்னு இழுத்து வந்துட்டு, கடைசி ரெண்டு மூணு எபிஸோடுல அடுத்தடுத்து பல பேர் தடாலடியா திருந்திடறதா காண்பிச்சா, பார்த்துக்கிட்டிருக்கிற அத்தனை பேரும் இளிச்சவாயங்களா? ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த பழைய தமிழ்ப் படங்கள்லதான் இந்த மாதிரி கூத்து நடக்கும்.

அசட்டுத்தனமான காட்சிகள் நிறைய. தோழர் எதிரிகள்கிட்டேர்ந்து தப்பிக்க தாவித் தாவிக் குதிச்சு ஓடறார். அப்போ அபிக்கு போன் பண்றார். பெரிய தொழிலதிபரான அந்தம்மா (பிராஜக்ட் வொர்க்குக்காக அந்தம்மா இந்த ஏழு வருஷத்துல ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடலே. என்னவோ போய் கட்டடம் கட்ட இடம் பார்த்தாங்களாம். அத்தோட சரி! ஆதியும் இதே கேஸ்தான். என்ன பிராஜக்டோ, என்ன பில்டிங் காண்ட்ராக்டர்களோ! தேவுடா!) செல்போனை கார்லயே போட்டுட்டு வந்து, பாட்டியம்மாவை ஆறுதல் படுத்துது; படுத்துது; படுத்திக்கிட்டே இருக்குது. அட, அவராச்சும் ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்; அந்தப் பொம்பளை எடுக்க மாட்டேங்குது; வேற யாருக்காச்சும் ட்ரை பண்ணுவோம்னு பண்றாரா? அவரோட சக தோழருங்க யாருக்காச்சும் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே?

அப்புறம்... தோழர் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி மீட்டிங். எல்லாரும் ஆவேசமான குரல்ல கத்திப் பேசிட்டிருக்காங்க. அப்போ அபிம்மாக்கு போன் வருது, தொல்ஸ் கிட்டேர்ந்து. எடுத்துப் பேசுதாம். குரல் கேக்கலையாம். “ஆ... சொல்லுங்க, சொல்லுங்க... கேக்கல...” இப்படியே பேசி பொழுதப் போக்கிடுச்சு. இடத்தை விட்டுக் கொஞ்சம் நகர்ந்து போய்க் கேட்போம்கிற அறிவுகூட அந்தம்மாவுக்கு இல்லே. அப்புறம் லேட்டா ஞானோதயம் ஏற்பட்டு, வெராண்டாவுக்கு வருது. அப்பவும் கத்தல் சத்தத்துல காதுல கேக்கல. படியில இறங்கிப் போய்க் கேட்க அதிக பட்சம் ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்காது. ஆனா, இந்த ஸீன் டி.வி-யில பத்து நிமிஷம் ஓடிச்சு.

கார்ல போயிட்டிருக்கும்போது, ஆதி போன் பண்றான் அபிக்கு, உன் வீட்டார் எல்லாரையும் போட்டுத் தள்ளிடுவேன்னு. இந்தம்மா உடனே என்ன பண்ணணும்? தன் வீட்டுக்கு போன் போட்டு, விஷயத்தைச் சொல்லி, உடனே வேறெங்காவது போயிடுங்கன்னு சொல்லிட்டு அப்புறம் இல்லே போலீஸுக்கோ புடலங்காய்க்கோ சொல்லணும்? அதான் இல்லே! முதல்ல சி.பி.ஐ-க்கு போன் போடுது. அந்தாளு எதையுமே சீரியஸா எடுத்துக்காம பாட்டுப் பாடிக்கிட்டுத் திரியறவரு. போயும் போயும் அவருக்கா சொல்லணும்? அவர் என்னடான்னா நான் மயிலாப்பூர்ல இருக்கேன், மாமண்டூர்ல இருக்கேன்கிறாரு. அப்புறமா வீட்டுக்குப் போன் போடுதாம் அபிம்மா. நம்பரை மாத்திட்டாங்களாம். ‘சே... சே...’ங்குது. நமக்குத்தான் சேச்சேன்னு சொல்லத் தோணுது. இவங்களே சொல்லிக்கிட்டா எப்படி?

இந்தக் கூத்துல, கிளைமாக்ஸை யாரு கரெக்டா கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு அசத்தலான பரிசுகள் உண்டுன்னு ‘அவள் விகடன்’ பத்திரிகையில போட்டிருக்குது.

அதெப்படி கரெக்டா கண்டுபிடிக்கிறது? இந்நேரம் வரைக்கும் கரெக்டான முடிவு எதுன்னு திருச்செல்வத்துக்கே தெரியுமோ, தெரியாதோ!

எனக்குப் பரிசு வேணாம்ப்பா! எனக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது!

எனது அடுத்த பதிவு: செய்திகள் வாசித்து எரிச்சல்படுவது உங்கள் கிருபாநந்தினி.
Author: கிருபாநந்தினி
•Thursday, November 26, 2009
ல்லாரும் மன்னிச்சுக்குங்க... நானும் வலைப்பூ எழுத வந்துட்டேன்.

நான் அதிகம் படிச்சவள் இல்லை. எனக்குச் சுவையாக எதுவும் எழுதத் தெரியாது. கதை, கட்டுரை என எதுவும் எழுதியது இல்லை. அவ்வளவு ஏன், வாசகர் கடிதம்கூட எந்தப் பத்திரிகைக்கும் எழுதிப் போட்டது இல்லை. கணினி அறிவும் அவ்வளவாகக் கிடையாது.

என் கணவர் கிருபாகரன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர். மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று பறந்துகொண்டிருப்பார். திருமணமாகி வந்ததற்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே கண்ணால் பார்த்தேன். நான் வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் பொழுதுபோவதற்காக இணையத்தில் உலவக் கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் வலைப்பூ என்று சொல்லக்கூடிய பிளாகுகளைப் படிக்கவும், அவற்றுக்கு பதில் அளிக்கவும் கற்றுக்கொண்டேன்.

எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். எனவே, சமையல் குறிப்புகளை வலைப்பூவில் போடலாமா என்று கணவரிடம் கேட்டேன். ஆனால், ‘அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிளாக் ஆரம்பிக்காதே! சுவாரசியமாக இருக்காது. உன் எண்ணங்களை, கருத்துக்களை எதையாவது எழுது!’ என்று சொல்லி, எனக்கு ஒரு வலைப்பூ வடிவமைத்துத் தந்தார். எப்படிப் பதிவிட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்.

முதலில் ‘அசரீரி’ என்று என் பிளாகுக்குப் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். அந்தப் பெயரில் வேறு யாரோ வைத்திருக்கிறார்களாம். எண்ணங்கள், என் மன வானில், மனசு, என் உலகம் என்று என்னென்னவோ பெயர்கள் சொன்னேன். எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏற்கெனவே வலைப்பூக்கள் இருந்தன. மிகச் சோர்ந்துபோய் கடைசியாக இந்தப் ‘படித்துறை’ என்ற பெயரை முயற்சி செய்யச் சொன்னேன். என் அதிர்ஷ்டம், இது கிடைத்தது.

‘படித்துறை’ என்பதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இது ஒரு இலக்கியப் பெயர் மாதிரி தோன்றுகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து, ஒருவரோடொருவர் அளவளாவி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடம் படித்துறை. எனவே, என் வலைப் பூவுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். மற்றபடி இலக்கியத்திலோ சினிமாவிலோ அரசியலிலோ எனக்கு அதிகம் பரிச்சயம இல்லை. தவிர, நான் எழுத்தாளரும் இல்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியாது. அதனால்தான் ஆரம்பத்திலேயே வலைப்பூ எழுத வந்ததற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

ஏதோ என் மனதில் பட்டதை இதில் அவ்வப்போது எழுதி வைக்கிறேன். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ‘ஐயையே! இவளெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதது?’ என்று முகம் சுளிக்காதீர்கள். அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். சுருக்கமாகத்தான் எழுதுவேன்.

இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.

மற்றபடி உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,

கிருபாநந்தினி.

என் அடுத்த பதிவு: ‘கோலங்கள்’ சீரியல் பற்றி...