Author: கிருபாநந்தினி
•Friday, April 30, 2010
தானந்த் அங்கிள் தன் வலைப்பூவுல, என் பெயரைத் தலைப்புல போட்டு ‘கிருபாநந்தினியும் ரிப் வான் விங்கிளும்’னு ஒரு பதிவே போட்டுருக்காரு. அதுக்கு நன்றி சொல்ல வேணாமா? அதான்... விங்கிளும் அங்கிளும்னு எதுகைமோனையோட ஒரு பதிவு போட்டுட்டேன். அவர் பத்துக் கேள்விகள் கேட்டிருந்தாரு. அதுக்கான பதில்கள்தான் இது.

லதானந்த் அங்கிள் பத்தி எனக்கு அதிகம் தெரியாது. கிருபா எனக்கு பிளாக் பத்தி அறிமுகம் பண்ணி, சுவாரசியமான சில பேரோட பிளாக்குகளைப் பத்திச் சொன்னப்போ, நான் ஆரம்பத்துல படிச்ச சில பிளாக்குகள்ல லதானந்த அங்கிளோட பிளாகும் ஒண்ணு. அவர் மக வயசுதான் இருக்கும் எனக்கு. அந்த உரிமைல அங்கிள்... அங்கிள்னு அவர் பிளாக்ல கமெண்ட் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் என்னவோ கேள்வி-பதில் போட்டி வெச்சாரு. அதுக்கு நானும் கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு அவரு, ‘பிளாக் எழுதாதவங்க கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்றதில்லை’னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருந்தாரு. வருத்தமாயிடுச்சு எனக்கு. கிருபா கிட்ட சொன்னேன். உடனே பிளாக் ஆரம்பிச்சுக் கொடுத்து, எழுதுன்னு ஊக்குவிச்சாரு.

ஆக, நான் பிளாக் ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் எத்தையாச்சும் உளறிக்கொட்டிட்டு இருக்கிறதுக்கான புண்ணியம் அல்லது பாவம் எல்லாம் அங்கிளைத்தான் சேரும். அதனால, எனக்கு வர்ற பாராட்டுகள்லயும் திட்டுகள்லயும் பாதி அவருக்குப் போயிடுறதாத்தான் நான் நெனைச்சுக்கறேன்.

சரி, அவர் கேட்டிருந்த கேள்விகளும் அதுக்கான என்னோட பதில்களும் கீழே:

1. அவசரமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
கிடையாது. இயற்கை உபாதைகளை ஆம்பிளைங்களாலதான் அடக்க முடியாது. ஒரு விஷயம் சொல்றேன். மன்னர் காலத்துல தூதுவர்களை அனுப்புவாங்க தெரியுமா, அவன் போற குதிரை பொம்பளைக் குதிரையாதான் இருக்கும். ஏன்னா, ஆம்பிளைக் குதிரையா இருந்தா, அங்கங்கே ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போறதுக்காக நின்னுடும். பொம்பளைக் குதிரை நிக்காம ஓடிட்டே இருக்கும். இப்ப புரியுதா?

2. யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
லதானந்த அங்கிளைப் பாத்துதான்! இந்த வயசுலயும் பாருங்களேன், சின்னப்புள்ள மாதிரி என்னமா ஜாலியா பிளாக் எழுதிட்டிருக்குறாரு!

3. எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?

என் கணவர் கிருபாவை நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பத்தி என் வலைப்பூவுல ஏற்கெனவே எழுதியிருக்கேன். கல்யாணம் நிச்சயமான பிற்பாடு, அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்கிறப்போ ஒரு நாள் அவர் எங்க வீட்டுக்கு வந்தாரு. கல்யாணத்துக்குப் புடவை எடுத்திருக்கிறதா சொல்லி எங்கப்பா, அம்மா கிட்ட காண்பிச்சாரு. கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டுக் கிளம்பிப் போனாரு. நானும் அவரை வழியனுப்புறதுக்காகக் கூடவே போனேன். வெளி வராண்டாவுக்குப் போனதும் கிருபா சட்டுனு திரும்பி என்னை இறுக்க அணைச்சுக்கிட்டு ‘ஐ லவ் யூ நந்தினி’ன்னாரு. திடுக்குனு ஆயிருச்சு எனக்கு. உதறி விலகிட்டேன். ‘சாரி... சாரி நந்தினி! ஐ யம் சாரி!’ன்னு அவர் பதறினதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது எனக்கு. அதுக்கப்புறம் கல்யாணம் முடியிற வரைக்கும் அவர் விரல் கூட எம்மேல பட்டதில்லே. எதிர்பாராம கிடைச்ச கிளுகிளு அனுபவம் இதுதான்.

4. நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
காலேஜ் படிக்குறப்போ நானும் ப்ரியதர்ஷினிங்கிற என் சிநேகிதியுமா ஒரு ஓட்டலுக்குப் போனோம். சென்னாபட்டூரா ஆர்டர் பண்ணோம். அதுக்கு முன்னே பின்னே நாங்க சென்னாபட்டூரா தின்னதில்லே. முதல்ல ஒரு அகலமான தட்டுல சுண்டல் மாதிரி கொண்டு வந்து வெச்சான் சர்வர். அப்புறம் ரொம்ப நேரமா ஆளையே காணோம். சரி, இதாம் போலிருக்கு சென்னாபட்டூரான்னு நெனைச்சுக்கிட்டு நானும் அவளும் போட்டி போட்டுக்கிட்டு தட்டைக் காலி பண்ணோம். அப்புறமா நிதானமா பூரி மாதிரி கொண்டு வரான். நாங்க சுண்டலைத் தின்னு முடிச்சதைப் பாத்து குபுக்குனு சிரிச்சுட்டான். நான் ரொம்ப அசடு வழிஞ்ச சம்பவம் அது. ப்ரியதர்ஷினி அவன் சிரிச்சது பொறுக்காம வுடு வுடுன்னு செம டோஸ் வுட்டா. மேனேஜர் வந்து சமாதானம் பண்ணும்படியாயிருச்சு!

5. இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

இருக்கு. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது என் இங்கிலீஷ் புக்கைத் தொலைச்சுட்டேன். அப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரேன்னு, என் சிநேகிதி ரம்யாவோட இங்கிலீஷ் புக்கைத் திருடிக்கிட்டுப் போயிட்டேன். மறுநாள், புக் இல்லாம அவ கிளாஸ் டீச்சர் கிட்ட ஸ்கேலால அடி வாங்கினா. எனக்குப் பாவமாயிடுச்சு. அவளோட தொலைஞ்ச புக்கை நானே தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்த மாதிரி அவ கிட்டே திருப்பிக் கொடுத்துட்டேன். அவ வாத்தியார்கிட்ட அடிவாங்கினப்போ பாவமா இருந்துது. அதைவிட, புக்கைக் கண்டுபிடிச்சு(!)க் கொடுத்தப்போ அவ என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘தேங்க்ஸ்டி... தேங்க்ஸ்டி...’னு நூறு தேங்க்ஸ் சொன்னாளே, அப்பதான் ரொம்பப் பாவமா இருந்துது. இன்னிய வரைக்கும் என் மனசுல உறுத்திக்கிட்டிருக்குற குற்ற உணர்வு இதுதான்!

6. சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
ம்... யார் படத்துக்குன்னு சொன்னா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!

7. நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
இல்லை. அப்படி எதுவும் தெரியலை. ஒரு தடவை ரயில்வே லைனை கிராஸ் பண்ணி கோயமுத்தூர் ஸ்டேஷனுக்குப் போனேன். அப்படி கிராஸ் பண்ணக் கூடாதாமே! அது சட்டப்படி தப்புன்னு பிளாட்பாரத்துல இருந்த பெரியவர் ஒருவர் சொன்னாரு. அது உண்மையா இருந்தா, அதுதான் நான் செஞ்ச பெரிய சட்ட மீறலா இருக்கும்.

8. அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
யுவகிருஷ்ணாவுக்குப் போட்டிருக்கேன். எதுக்குன்னு ஞாபகம் இல்லே. அவர் போட்டிருந்த பதிவு ஒண்ணு என்னை ரொம்ப உறுத்திச்சு. கடுப்பாகி போட்டேன்.

9. அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
நா வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!

10. எனது வலைப்பூவில் லிங்க் தரட்டுமா?
தாங்களேன் அங்கிள்! அப்படியாவது நம்ம புகழ் பெருகட்டுமே! என்ன சொல்றீங்க?

.
Author: கிருபாநந்தினி
•Thursday, April 29, 2010
ட்டம், தர்மம் இதப் பத்தியெல்லாம் அடிக்கடி இப்ப ரொம்பப் பேச்சு அடிபடுது! சட்டத்துக்கும் தர்மத்துக்கும் சம்பந்தமே இல்லாதவங்ககூட இது பத்தி நிறையப் பேசுறாங்க. அதனால, இந்த அரைவேக்காட்டுக்காரியும் சைடுல கொஞ்சம் உளறி வைப்போமேன்னுதான் இதை எழுதறேன்.

சட்ட ரீதியா தப்பு இல்லாததெல்லாம் தர்ம ரீதியாவும் தப்பு இல்லாததுன்னு சொல்லிட முடியாது. தர்ம ரீதியா சரியானது எல்லாம் சட்ட ரீதியாவும் சரியானது ஆகிடாது.

உதாரணமா, நம்ம நித்தி மேட்டரையே எடுத்துக்குவோமே! அவர் மேல இப்ப எத்தனையோ வழக்குகள். தங்கம் கடத்தினார், பண மோசடி பண்ணினார்னெல்லாம் புகார்கள் குவிஞ்சிட்டிருக்கு. இதெல்லாம் சட்ட ரீதியான தப்புகள். மாட்டினார்னா (மாட்டினாதான்!) இருக்கு ஆப்பு! ஆனா, இதெல்லாம் மக்கள்ட்ட எடுபடாது. ‘ஆமா! இப்ப எவன் ஊழல் பண்ணலை! இந்தக் கட்சித் தலைவர் குடும்பத்துக்கு இத்தனைக் கோடி ரூபாய் எப்படி வந்துச்சு? ரொம்ப யோக்கியமாதான் சம்பாரிச்சாரா? நித்தி சாமியார் ஏதோ நல்ல காரியம்(!) பண்ணி, பக்தர்கள் அன்பளிப்பா கொடுத்த பணம்தானே அது? கோடி கோடியா வந்து கொட்டுதேன்னு இவனுங்களுக்குப் பொறுக்கலே! அதனால அப்பாவி சாமிய மடக்கி உள்ள போட்டுட்டாங்க’ன்னு மன்னிச்சு விட்டுடுவாங்க. அதனாலதான், அவர் ஒரு நடிகையோடு குஷியா இருக்கும் படங்களை டி.வி-யிலும் பத்திரிகையிலும் மாத்தி மாத்திப் போட்டுட்டிருந்தாங்க.

ஒரு ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு, சம்மதப்பட்டு உறவு வெச்சுக்கிட்டா தப்பே இல்லைன்னு அடிச்சு சொல்லுது சட்டம். அப்படிப் பாத்தா நித்தி-ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகளை ஒளிஞ்சிருந்து போட்டோ எடுத்தவன்தான் சட்டப்படி குற்றவாளி. அது ஒண்ணும் சினிமா காட்சி இல்லை. அதனால, அவங்க சம்மதம் இல்லாம அதை ஒளிபரப்பின தொலைக்காட்சி மேல கேஸ் போடணும். சின்னக் குழந்தைங்க பார்க்கிற நேரத்துல ‘ஏ’ சர்ட்டிபிஃகேட்கூட போடாம ஒளிபரப்பினதுக்குச் சட்டரீதியா அவங்களைத்தான் தண்டிக்கணும்.

சரி, சட்ட ரீதியா நித்தி-ரஞ்சி செஞ்சது தப்பில்லை. ஆனா, தர்ம நியாயப்படி சரியா? இங்கேதான் சட்டம் வேற, தர்மம் வேறன்னு ஆகுது. மனோதர்மப்படி நித்தி செஞ்சது மகா துரோகம். தன்னை நம்பின பக்தர்களை ஏமாத்தியிருக்கார். ஆஷாடபூதி வேஷம் போட்டிருக்கார். அதனாலதான் மக்கள் கொதிச்செழுந்தாங்க.

இன்னொரு கேஸைப் பார்ப்போம். குஷ்பு ஆன்ட்டி சொன்னது தப்பில்லைன்னு சொல்லிடுச்சு சட்டம். ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே உறவு வெச்சுக்கலாம், அதுல ஒண்ணும் தப்பில்லை; படிச்ச இளைஞர்கள் யாரும் தங்களோட மனைவி கற்புள்ளவளா இருக்கணும்னு நினைக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்க சொன்னதுல தப்பு இல்லை, தண்டிக்க சட்டத்துல இடமில்லைன்னு சொல்லிடுச்சு நீதிமன்றம். நியாயம்தான். சட்டத்துல இடமில்லைதான். ஆனா, இன்னிக்கு எந்தப் படிச்ச இளைஞர்கள் அப்படி நினைக்கிறாங்க? தன் மனைவி தனக்குத் துரோகம் பண்றாளான்னு ஆள் போட்டு செக் பண்றாங்க. ஒரு கணக்கு எடுத்துப் பாத்தீங்கன்னா தெரியும், கள்ளக்காதல் தொடர்பான கொலைங்க 1995-2000-ல் இருந்ததைவிட 2001-2005-ல் ரெண்டு மடங்கு அதிகமாகி இருக்கு; 2006-2010-ல் நாலு மடங்காகியிருக்கு.

குஷ்பு என்னா சொல்றது... பெரியார் அன்னிக்கே சொல்லிட்டார், ‘கல்யாணம்கிற தளையிலிருந்து பெண்கள் விடுபடணும்’னு. ஆனா, கல்யாணம் இல்லேன்னா குடும்ப அமைப்பு இல்லே; அப்பா, அம்மா, அண்ணன், தங்கைங்கிற எந்த உறவுகளும் இருக்காது. அப்புறம் காட்டுமிராண்டி வாழ்க்கைதான்!

பெண்ணை அடிமைப்படுத்த ஆண் குயுக்தியா கொண்டு வந்த அமைப்புதான் திருமணம்கிறது சிலரோட வாதம். ஆதி நாள்ல அப்படி இருக்கலாம். ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு. கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா, சந்தோஷமா லைஃபை எஞ்ஜாய் பண்ற இளைஞர்கள் கல்யாணம் ஆன பிறகு முன்னைப் போல ஃப்ரெண்ட்ஸ்களோடு ஊர் சுத்த முடியாம, தன் விருப்பப்படி காசை செலவழிக்க முடியாம, சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெண்டாட்டி கிட்ட கொடுக்குறவங்கதான் அதிகம்.

திருமண அமைப்பே வேண்டாம்னா, அது ஆண்களுக்குக் கொண்டாட்டம்தான். இருக்கிற வரைக்கும் ஒரு பெண்ணோடு ஜாலியா, சந்தோஷமா இருந்துட்டு, அப்புறம் மனசு ஒத்துப் போகலே, திருமணம் வேண்டாம்னு பிரிஞ்சுடலாம். எந்த கமிட்மென்ட்டும் கிடையாதுன்னா சந்தோஷம்தானே! ‘ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர, வேறு பெண்களோடு ரகசியத் தொடர்பு வெச்சுக்கலாம்; ஆனா, ஒரு மனைவிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?’ன்னு, ஆடு நனையுதேன்னு அழுகிற ஓநாய்கள் இங்கே நிறைய இருக்கு. தப்பு செய்யற ஆணைத் திருத்துங்கப்பா; பெண்ணையும் ஆணுக்குச் சரியா தப்பு செய்யத் தூண்டாதீங்க ராசா!

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.

அதுவே, ஒரு பெண்ணுக்கு வேறு ஆம்பிளையோடு தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு வைங்க, அவ தன் புருஷனையும், ஏன், மணி மணியான பிள்ளைங்களையும்கூட கொன்னு போடத் தயங்க மாட்டா. நான் சொல்றது தப்பா சரியான்னு சமீப கால பேப்பர்களை எடுத்துப் பாருங்க. கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்.

இதுல என்ன சைக்காலஜின்னா, ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’! ஆண்களுக்கு வேற பொண்ணு மேல ஆசை வந்தாலும், பெரும்பாலானவங்களுக்குக் குடும்பமும் மனைவியும்தான் முக்கியம். அந்தப் பொண்ணு இரண்டாம்பட்சம்தான். ஆனா, வேற ஆண் மேல ஆசை வைக்கிற பொண்களுக்கு அவன்தான் முக்கியம்; கணவனும், குழந்தைங்களும் இரண்டாம்பட்சம்தான்!

அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, கல்யாணம் பண்ணிக்காமலே ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு வெச்சுக்கிறது சட்டப்படி தப்பில்லாததா இருக்கலாம்; ஆனா, மனோதர்மப்படி தப்புதான்! அம்மாவும் பிள்ளையும், அப்பாவும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும்தான் சட்டம் எட்ட நின்னு கைகட்டி வேடிக்கை பார்க்கும். அதுக்காக அதையும் சரின்னு சொல்லிடலாமா?

சட்டப்படி தப்பு இல்லேன்னாலே, தர்மப்படியும் அது தப்பு இல்லேன்னு ஆகிடாது. அதே போல, சட்டப்படி தப்புங்கிறதுக்காக மனோதர்மப்படியும் அது தப்புன்னு ஆகிடாது.

பிரபாகரனின் தாயார் இங்கே தமிழ்நாட்டுல சிகிச்சை பெற வந்தாங்க. அவங்களை விமானத்தை விட்டுக் கீழேயே இறங்க விடாம அப்படியே திருப்பி அனுப்பிச்சுடுச்சு தமிழக அரசாங்கம். இது சட்டப்படி தப்பில்லைன்னு வாதிடுது ஒரு கூட்டம்.

பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கு. தேடப்படும் கைதியா அறிவிச்சுது இந்திய அரசு. அவர் கொல்லப்பட்டார்னு சிங்கள அரசு அறிவிச்சு ஒரு வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, இன்னமும் அவர் இறந்தாரா, உசுரோட இருக்காரான்னே புரியலை. மர்மமா இருக்கு. புத்த பிட்சு வேஷத்துல இருக்கார்னும் வதந்தி.

அதெல்லாம் இருக்கட்டும். பிரபாகரனோட அம்மா பண்ணின பாவம் என்ன? அவங்களை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவங்க என்ன, தேடப்படும் குற்றவாளியா? நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாதவர்கள் பட்டியல்ல அவங்க பேரும் இருக்காம். எதுக்காக அந்தப் பட்டியல்ல அவங்க பேர் இருக்கணும்?

ஏன்... தமிழ்நாட்டை விட்டா அவங்க சிகிச்சை பெற வேற இடமே இல்லையான்னு கேள்வி எழுப்பியிருக்காரு ஒரு படிச்சவரு. வெளிநாட்டுலதான் அவங்க பிள்ளைங்க இருக்காங்க இல்லே, அவங்க வெச்சு, சிகிச்சை அளிச்சுக் காப்பாத்த வேண்டியதுதானேன்னு கேட்டிருக்காரு இன்னொருத்தரு. ‘இட்லிவடை’ன்னு ஒரு பிளாக்ல நான் படிச்சப்போ, எனக்குக்கூட ‘அதானே?’ன்னு தோணுச்சு. ‘நீங்க தைரியமா சொல்லிட்டீங்க; என்னால சொல்ல முடியலையே’ன்னு பின்னூட்டம் போட்டேன். யோசிச்சுப் பார்க்குறப்போ, நான் போட்ட பின்னூட்டம் தப்புன்னு தோணுது.

இங்கே, 80 வயசான இந்தம்மாவுக்கே சொந்த நாட்டுல கால் வைக்க இத்தனை நெருக்கடி இருக்குறப்போ, அவங்க நிலை என்னவோ?

அவங்க எப்படி வேணா இருந்துக்கட்டும்க; சட்டப்படி அவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயம்னு ‘சோ’ சார் சொல்றது சரியாவே இருக்கட்டும்க; சிகிச்சைக்குன்னு வந்தவங்களைத் திருப்பி அனுப்பினது நியாயமா? என் மனோதர்மப்படி அது மகா தப்புன்னுதான் சொல்லுவேன்.

தன் கிட்டே சிகிச்சைக்குன்னு வந்தவன் ஒரு கொலைகாரனே ஆனாலும், அவனைக் காப்பாத்த வேண்டியது ஒரு டாக்டரோட கடமைன்னு அவங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கு. அப்படியிருக்குறப்போ, சிகிச்சைக்குன்னு வந்த இந்தம்மாவை தமிழ்நாடு அரசாங்கம் திருப்பி அனுப்பினது எந்த வகையில நியாயம்னு எனக்குப் புரியலே.

இங்கே சிகிச்சைகூட எடுத்துக்க முடியாதபடிக்கு அவங்க பண்ணின தப்பென்ன? வயசான ஒரு பாட்டியம்மாவால தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே கெட்டுடும்னா அதைவிட காமெடி வேற இல்லீங்க.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் சொந்த நாட்டானையே சுரண்டுவது எப்போது?’ன்னு வசனம் எழுதினார் கருணாநிதி. ‘இப்போது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருக்கு எனக்கு.

.
Author: கிருபாநந்தினி
•Friday, April 23, 2010
திவு எழுதி ரொம்ப நாளாச்சுங்ணா... நாளச்சுங்கக்கா!

புடிக்கலை; எழுதுறதையே உட்டுடலாம்னு இருந்தேன். கிருபாதான், ‘சும்மா எழுது! தப்பா ஒண்ணும் எழுதலியே? உன்னோட அபிப்ராயங்களத்தானே எழுதறே? அது சில பேருக்குப் புடிக்கலேன்னா, அதுக்கு நாமென்ன பண்றது?’ங்கிறாரு.

பொதுவா எல்லாரும், உங்க கருத்த தகிரியமா சொல்லோணும்கிறாங்க; அப்படிச் சொன்னா, உனக்கு ஒரு கருமமும் தெரியலங்கிறாங்க; சிலர் நாம எழுதுறதைப் பாராட்டுறாங்க; அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க! கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது? ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்! நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம்! இதான் நாட்டுல நியாயமாட்டம் இருக்குது!

அதான், நான் மத்தவங்க வலைப்பூக்களைப் படிச்சிட்டு, கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துர்றது. தமிழ்நதியோட வலைப்பூவுல சில மேட்டர் பாத்தேன். எனக்குச் சிலது புரியலை. விளக்கம் கேட்டேன். சொல்லிச்சு. மறுபடி புரியலை. திரும்பக் கேட்டேன். ‘உனக்குப் பதில் சொல்லிட்டிருக்கிறதே எனக்கு வேலை இல்லை’ன்னு அக்கா கோவிச்சுக்கிச்சு. சரின்னு, கட்டக் கடைசியா ஒரே வரி கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துட்டேன். அதை தமிழ்நதி பப்ளிஷ் பண்ணலை. அவ்ளோ காண்டு எம் மேல!

ரொம்ப ரசிச்சுப் போட்ட அந்த கமெண்ட்டை மட்டும் என் ஆசைக்கு இங்கே போட்டுட்டு, அடுத்த மேட்டருக்கு நகந்துர்றேன்.

//ஆறுவது சினம்; கூறுவது தமிழ்(நதியல்ல)! நன்றி தமிழ்நதி!//

ஓகே! நான் இனிமே ஒருத்தர் வம்புக்கும் போறதா இல்ல. உட்டேன்... உட்டேன்... உட்டுட்டேன்..!

உருப்படியா(!) சில கட்டைங்களைப் பத்திப் பேசலாம்.

‘கட்ட... கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட...’ன்னு ஒரு பாட்டு இருக்குது. விக்ரமும் கிரணும் ஆடுற பாட்டு. கிரணக்காவ நாட்டுக்கட்டன்னு சொல்லிப் பாடுறாரு விக்ரம். அத எந்தத் தாய்க்குலமும், மனைவிகுலமும், மகள்குலமும் எதிர்த்த மாதிரி தெரியல. நேத்துக்கூட அந்தப் பாட்டு டி.வி-யில ஓடிச்சு. மேல்மாடியில குடும்பத்தோட ஒக்காந்து ரசிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.

பொம்பளைங்களை ‘கட்ட’ன்னு சொல்றது, ‘ஃபிகர்’னு சொல்றதுல ஆம்பளைங்களுக்கு அவ்ளோ ஆசை. கணக்குப் பண்ணிடலாம்கிற ஆசையில ஃபிகர், உணர்ச்சியே இருக்கக்கூடாதவ பொண்ணுங்கிற மனோபாவத்துல ‘கட்ட’... இப்படி பொம்பளைங்களை மட்டப்படுத்திப் பேர் வைக்கிறதைக்கூடப் புரிஞ்சுக்காம சில பொம்பளைங்க அதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிக்குறதைப் பாத்தா, எனக்குப் பத்திக்கிட்டு வருது.

சரி, அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க! நாம கட்ட ஆராய்ச்சிக்குப் போகலாம்.

முந்தியெல்லாம் ‘கட்டை’யானவன்னு சொன்னா, கொஞ்சம் அகலமா, ஆனா குள்ளமா வளர்ந்தவனைக் குறிக்கும். கட்டை விரல் மத்த விரல்களைவிடக் கட்டையா, குட்டையாதானே இருக்கு!

பாகவதர் ஏழரைக்கட்டை சுருதியிலே பாடறார்னு சொல்லுவாங்க. அந்தக் கட்டை எதைக் குறிக்குதுன்னு எனக்குத் தெரியலே. நாலு கட்டையில பாடுறதும்பாங்க. குரல் தொனியோட அதிர்வு எண்ணைக் குறிக்குதா அந்தக் கட்டைன்னு யோசிக்கிறேன்.

கிராமத்துல பாட்டிமார்களெல்லாம் ‘அடக் கட்டைல போறவனே’ன்னு சர்வ சாதாரணமா திட்டி நான் பாத்திருக்கேன். திருவிளையாடல் படத்துல ‘கட்டைல போகாம நீ மட்டும் கழுதை மேலயா போவே?’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது! ‘கட்டைல போகாம நான் கரண்ட்ல போவண்டா பேராண்டி’ன்னு ஆயா சொல்லிடும்.

பாவம், பச்சக் கொழந்தை! வாயில கட்ட விரலைக் கொடுத்தாக்கூடக் கடிக்கத் தெரியாதுங்கிற மாதிரி சில பேர் நடந்துக்குவாங்க (‘நீதான்... நீதான் அது!’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது!) பயில்வான்கிட்டே கர்லாக் கட்டை இருக்கும். பயில்வான் ரங்கநாதன்கிட்டே இருக்குமான்னு தெரியலே. ‘கர்லா’ன்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலே!

டி.வி-யில மாமியார்-மருமக சண்டை இல்லாத சீரியலே இல்லே. நேத்திக்கு ஒரு சீரியல்லே, ‘ஏண்டி மரக்கட்டை மாதிரி நிக்கிறே! சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ!’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே?”ன்னு மருமக கையை முறுக்கி, மணிக்கட்டை உடைப்பா. சீரியல் பாத்துப் பாத்து எல்லா வீடுகள்லேயும் டெய்லி நெஜம்மாவே நடக்கிற கதையாயிடுச்சு இது.

“பையனுக்குக் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போடுங்க. எவ்வளவு நாள்தான் அவன் ஒண்டிக்கட்டையா இருப்பான்?”ன்னு அம்மாக்கள் நச்சரிக்கிறதுக்குக் காரணம், வெறும் காத்துல எவ்வளவு நாள்தான் நாம குத்து விட்டுப் பழகுறது, எதிர்ல ஒரு ஆள் இருந்தாத் தேவலையேன்னு நினைக்கிறதுதானோன்னு ஒரு யோசனை வருது. அப்புறம் அடிதடியில மருமக கை ஓங்கிச்சுன்னா, மாமியார் உடம்புதான் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிக்கும்.

சரி, கட்டை ஆராய்ச்சியை இத்தோட நிறுத்திக்குவோம். இனிமே இப்படியேதான் எழுதப்போறேன். இப்ப யாரும் போட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் என் எழுத்துக்கு முட்டுக்கட்டை?

.