Author: கிருபாநந்தினி
•Thursday, February 11, 2010
கொஞ்ச நாளா எதுவும் எழுதலை. காரணம், சார் (என் கணவர் கிருபாதான்!) ஊர்ல இல்லை. டெல்லி போயிருக்கார். இரண்டு மாச கேம்ப். அதனால எதுவும் எழுதத் தோணலை. அவர் இருந்தா ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கிட்டிருப்பார். இதை எழுதலாமே, அதை எழுதலாமேன்னு ஐடியா கொடுப்பார். எழுதினதைப் படிச்சுட்டுப் பாராட்டுவார். தப்பு இருந்தா திருத்துவார். எனக்கும் எழுதுறதுல ஒரு உற்சாகம் இருக்கும். தவிர, புஜ்ஜிம்மா (என் செல்ல வாரிசு) படுத்தல் அதிகமாயிடுச்சு. சதா நை... நை...ன்னு அழுதுட்டேயிருக்கா! (நைனா, நைனான்னு அழுவுறாளோ?!)

சரி, அதிருக்கட்டும்..! என்னை இப்ப எழுத வெச்சதே ‘டமில் ரிவர்’ அக்காதான். அதாங்க, தமிழ்நதி அக்கா! ‘படுத்தாதீங்க தமிழ்நதி’ன்னு நான் போட்டிருந்த பதிவுக்கு ஏற்கெனவே கடுப்பாகி அவங்க ஒரு பின்னூட்டம் இட்டுட்டாங்க. அதுக்கு நான் பதிலும் போட்டுட்டேன். அப்புறமும் அவங்க மனசு குமுறிக்கிட்டே இருந்திருக்குபோல! பிப்ரவரி 6-ம் தேதி நீள நீளமா மூணு பின்னூட்டம் இட்டிருக்காங்க.

டமில் ரிவர் அக்காவுக்கு என்னோட தேங்க்ஸ்! ஏன்னா, அக்கா பெரிய எழுத்தாளி. கவிதாயினி. அவங்க எழுதினா, வெக்கங்கெட்ட குமுதமும் ஆனந்தவிகடனும் அவங்க எழுத்தைப் பிரசுரிக்கக் காத்திருக்கு. என் எழுத்தை யாரு சீண்டுவாங்க? 110 கோடிப் பேரில் நான் ஒரு சுண்டைக்காய்! ம்ஹும்... சித்தெறும்பு. சித்தெறும்புகூடக் கிடையாது. எறும்பின் வாய் உணவு! அப்படியிருந்தும் என்னை ஒரு பொருட்டா மதிச்சுப் பின்னூட்டம் இட்டிருக்காங்கன்னா, என் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னுதானே அர்த்தம்! அதுக்குதான் தேங்க்ஸ்!

அவங்களும் ‘ரதி’யக்காவும் கொதிச்செழுந்து தண்டி தண்டியா பின்னூட்டம் இட்டதுல, நான் என் விளக்கத்தைச் சொல்லாம விட்டா, அவங்களை அலட்சியப்படுத்தறேன்னு ஆயிடுமேன்னு பயந்துதான் ரொம்ப யோசனைக்குப் பிறகு இப்ப இதை எழுதறேன். தன்னிலை விளக்கம்னு வெச்சுக்கோங்களேன்.

முதல்ல ‘ரதி’யக்காவோட பின்னூட்ட வரிகளைப் பார்ப்போம்.

ஜனவரி 23: \\காலத்தே செய்யும் உதவி ஞாலத்தில் பெரிது என்பார்களே. இனிமேல் நீங்கள் புத்தகம் விற்றாலும், உங்கள் தளங்களில் எங்களுக்காய் பதிவு தான் போட்டாலும் எங்கள் ஐம்பதாயிரம் அப்பாவி உயிர்கள் மீண்டு வரப்போவதில்லை. எப்படியோ போங்கள்.//

என் பதிவுல அப்பாவி ஈழத் தமிழர்கள் படுகொலையானதை நான் கேலியோ கிண்டலோ பண்ணியிருக்கிற மாதிரி ஏன் இந்தக் கோபம்? அவர்களைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசாங்கங்களின் கடமை. தமிழ்நாட்டு மக்கள் மனிதச் சங்கிலி நடத்தி எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அவங்க வேறென்ன செய்ய முடியும்? பத்திரிகைகள் ஈழப் படுகொலையைப் பத்திப் பக்கம் பக்கமா எழுதின. அவங்களும் வேறென்ன செய்ய முடியும்? அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு சொல்றது அயோக்கியத்தனம்! தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஈழச் சகோதரர்கள் மீதுள்ள ஈர உணர்வைக் கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. அந்தக் கோபத்தைதான் நான் என் வலைப் பதிவுல வெளிப்படுத்தினேன்.

ஜனவரி 25: \\ராஜீவ் கொலைங்கிற கொடுமையைத் தாண்டியும்...// அதெப்படிங்க உங்களைப்போன்ற சில இந்தியர்களால் கொஞ்சம் கூட கூசாமல் இப்படி பேசமுடிகிறது? அமைதிப்படை என்ற பெயரில் வந்து எங்களை கொடுமைப்படுத்தினீர்கள், கற்பழித்தீர்கள், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தீர்கள்.//

திருத்தம். என்னைப் போன்ற சில இந்தியர்களால் அல்ல; பல கோடி இந்தியர்களால்! எங்கிருந்தோ வருவீங்க; எங்க பிரதமரை (அந்தச் சமயம் பிரதமராக இல்லாவிட்டாலும்) எங்கள் மண்ணிலேயே கொன்று குவிப்பீங்க. இந்தச் செயலுக்கு நீங்க கூசமாட்டீங்க. பின்னாடி ‘துன்பியல்’ ’துடைப்பைக்கட்டை இயல்’னு புதுசா ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சு நீலிக் கண்ணீர் வடிப்பீங்க. அதை நாங்க கண்டுக்காம சகிச்சுக்கிட்டிருக்கணுமா? அமைதிப் படை வேணும்பீங்க. அப்புறம், ‘வேணாம்; இது எங்க நாட்டுப் பிரச்னை. இதுல இந்தியா போன்ற அந்நிய நாடு தலையிட வேணாம்’பீங்க. உங்களுக்குத் தேவைன்னா தமிழ்நாடு தொப்புள்கொடி உறவு; வேண்டான்னா அங்கே நடப்பது ‘சகோதர யுத்தம்’ ஆயிடும்; சிங்களவர்கள் சோதரர்கள் ஆகிடுவாங்க. தமிழ்நாடு அந்நிய தேசமாயிடும். அப்படியா? அப்பாவி ஈழத் தமிழர்களைப் பகடைக்காயாக்கி, யுத்தம் பண்ணி, தப்புக்கு மேல தப்பு பண்ணி, இன்னிக்கு அவங்களை இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் பழியை மாத்திரம் ஏன் அடுத்தவங்க மேல தூக்கிப் போடுறீங்க?

\\தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தம் இனம் என்ற ரீதியில் ஓர் கடப்பாடும் உண்டு. அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால் தான் அவமானம். அது தவிர இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இதில் பங்கு உண்டு என்கிற கவலையில் அதை சுட்டிக்காட்டும் தார்மீக கடமை தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு உண்டு என்பதால் எழுதினார்கள்.//

உண்மைதான்! அந்த தார்மிகக் கடமையில்தான் தமிழ்ப் பத்திரிகைங்க ஈழத்து மக்களின் வலிகளையும் வேதனைகளையும் பக்கம் பக்கமா எழுதித் தள்ளின. அதுக்குக் கிடைச்ச பரிசுதாங்க ‘காசு பார்க்கும் கயமைத்தனம்’கிற அபவாதப் பேச்சு! அதையும் தமிழ்நாட்டுல மிகப் பிரபல தமிழ்ப் பத்திரிகையான ‘குமுதம்’தான் வெளியிட வேண்டியிருக்கு. ஏன், டமில் ரிவரக்கா கனடாவிலோ, மலேசிய முரசிலோ போய் எழுத வேண்டியதுதானே? \\அப்படி அவர்கள் அதை செய்திராவிட்டால்தான் அவமானம்.// செய்ததுக்கும்தான் அவமானக் கரியை அள்ளிப் பூசிட்டீங்களே! ஈர இதயமுள்ள தமிழ்நாட்டுத் தமிழனின் அனுதாப உணர்வுகளைக் கொச்சைப் படுத்திப் பேசிட்டீங்களே? போதாதா?

\\நீரெல்லாம் எங்களுக்காக நேரத்தை வீணடிக்கவில்லை என்று எந்த அப்பாவி ஈழத்தமிழன் உம்மிடம் அழுதான்? //

ஈழத் தமிழருக்காக உண்மையிலேயே மனம் விட்டு அழுத, அவங்க நல்வாழ்வுக்காகத் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதித்த தமிழகத் தமிழனுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!

ஜனவரி 26: \\தமிழ்நதி குறித்த எழுத்துக்களிலும், ஷோபாசக்தியையெல்லாம் தேடி எடுத்து இணைத்த விதத்திலும் ஒரு வன்மம் இருக்கிறது சகோதரி! // இது செல்வேந்திரன் அண்ணாச்சியின் பின்னூட்டம்.

மன்னிக்கணும் அண்ணா! சத்தியமா ஷோபாசக்தி யார்னே எனக்குத் தெரியாது - அவரது வலைப் பதிவை இணைச்சப்போ! தமிழ்நதின்னு தேடினப்போ வந்து சிக்கினதுதான் அது. படிச்சேன். என் கருத்துக்களோடு ரொம்பவும் ஒத்துப் போகுற மாதிரி இருந்ததால, என் கட்டுரைக்கு வலிமை சேர்க்க அதை இணைச்சேன். மத்தபடி வன்மம்கிறதெல்லாம் பெரிய வார்த்தைங்ணா!

இனி, டமில் ரிவர் அக்காவோட பின்னூட்டங்களுக்கு வர்றேன்.

\\கேலி செய்யக்கூடாத விடயங்களும் உலகத்தில் இருக்கின்றன என்பதை உங்கள் நாட்டில் பேரழிவு வருங்காலம் நீங்களாகவே தெரிந்துகொள்வீர்கள்.//

டமில் ரிவர் அக்கா! சத்தியமா எனக்குப் புரியத்தான் இல்லை. என் பதிவில் எதைக் கேலி பண்ணினேன்? உங்கள் துயரங்களையா? இல்லையே! ஈழத்தில் நடந்து முடிந்த இனப் படுகொலை எங்கள் இதயங்களில் எத்தனை ஆழமான ரணத்தை ஏற்படுத்தியிருக்குன்னு உங்களுக்குத்தான் புரியலை. அதனாலதான் அதைக் காசு பார்க்கும் கயமைத்தனம்னு கொச்சைப்படுத்துறீங்க. இதைச் சொன்னா, உங்களுக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருது. விகடனுக்கும் குமுதத்துக்கும் உங்களுக்கும் சிண்டு முடியறேன்கிறீங்க. இவங்களை இல்லைன்னா பின்னே யாரைக் குறிப்பிடுறீங்கன்னு அந்தப் பத்திரிகைங்க பெயர்களை அந்த பேட்டியில் தெளிவாச் சொல்ல வேண்டியதுதானே அக்கா? அதை விட்டுட்டு சாபம் எல்லாம் எதுக்கு?

\\உங்களை நான் அறிந்ததில்லை. உங்கள் எழுத்தை நான் முன்பின் படித்ததுமில்லை. எதற்காக என்னை நீங்கள் வந்து தாக்குகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.//

அறிந்திருக்க முடியாதுதாங்க்கா. காரணம், நான் ஒண்ணும் உங்களைப் போல உலகம் அறிஞ்ச எழுத்தாளர் இல்லியே! ஒரு சாதாரண ஹவுஸ் வொய்ஃப்! இதுக்கும் பெண்ணியவாதிங்க என்னைக் கேலி பண்ணலாம். அதனால, ஹோம் மேக்கர்னு ஸ்டைலா வேணும்னா வெச்சுக்கோங்க. உங்களை நான் தாக்கவே இல்லை அக்கா! தமிழகப் பத்திரிகைங்களோட ஆத்மார்த்த உணர்வுகளை நீங்க காயப்படுத்தினதுதான் என்னை வருத்தப்பட வெச்சுது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு.

\\"அந்தச் செய்திகளையெல்லாம் புத்தகமா போட்டு விக்கிறதுகூட, தமிழ் மக்கள் மனசுல ஈழத்து மக்களின் வேதனைகளை அழுத்தமா பதிய வைக்கிற ஒரு முயற்சிதான்."

அப்பூடியா? பதியவைச்சு அப்புறம் என்ன நடக்கும்? ஈழத்தமிழர்களுக்கு அநியாயம் பண்ணின மத்திய, மாநில அரசாங்கங்களைப் போட்டுக் காச்சு காச்சுன்னு காய்ச்சி ஆட்சில இருந்து தூக்கிடுவீங்களா? சும்மா போங்க கிருபாநந்தினி.//

ஈழப் படுகொலை தொடர்பா உங்களுக்கு யாரையாவது திட்டணும்போல் இருந்தா, ஒண்ணே முக்காலரைக்கா மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தவரைத் திட்டுங்க; கை கட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசைத் திட்டுங்க. பாவம், உங்க மேல கருணையோடு உள்ள உங்க தொப்புள் கொடி உறவான (இந்த வார்த்தைங்க எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்ததுதான்!) எங்களையும், எங்க பத்திரிகைங்களையும் திட்டாதீங்க.

\\ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனித் தனியான பின்னூட்டங்களின் வழி பதில் சொல்வதன் வழியாக உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன். மேலும் டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் வந்து பின்னூட்டும்போது 'ஐயகோ நீங்களா...?'என்று ஓவராகக் குதிப்பதைப் பார்த்ததும் மேலும் விளங்கியது.//

தனித் தனியா பதில் சொல்றதுதான் பண்பாடுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன் - ஒவ்வொருத்தருக்கும் நாமே நேரடியா போய் அழைப்பிதழ் வைக்கிற மாதிரி! அப்படி இல்லியா? சரி, விட்டுட்டா போச்சு! ஆனா, ‘உங்களை ஓரளவு அறிந்துகொண்டேன்’னு ஏன் குன்ஸா சொல்றீங்க? அப்படி என்னதான் அறிஞ்சுக்கிட்டீங்கன்னு உடைச்சே சொல்லியிருக்கலாமே அக்கா! ருத்ரன் பெரிய மனோதத்துவ மேதை. நான் சாமானியள். என் பதிவை அவர் படிச்சுப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட சந்தோஷத்தில் ஓவரா குதிச்சுட்டேன்தான். அது ஒரு தப்பாக்கா? (உங்க பின்னூட்டம் வந்தப்பவும்கூட நான் குதிச்சேன்கிறதுதான் உண்மை.) அதுல உங்களுக்கு ‘மேலும் விளங்கியது’ என்னன்னுதான் இந்த மடைச்சிக்குப் புரியலை.

\\கவிதைப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டிருப்பது உண்மைதான். அதற்கான தகுதி எனக்கிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். //

உங்களுக்குத் தகுதி இருக்குன்னு நீங்களாவே நெனச்சுக்கிட்ட மாதிரி, தங்களுக்கும் தகுதி இருக்குன்னு தமிழ்ப் பத்திரிகைங்க நெனைச்சுக்கக் கூடாதா? மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன்குடமா?

\\ஷோபா சக்தி கட்டுரைதான் உங்களுக்கு உவப்பாக இருந்ததா? ஒருவரைத் தூற்றவேண்டுமென்றால், உங்கள் சுயபலத்தில் நின்று தூற்றுங்கள். பக்கபலம், பின்பலம் தேடாதீர்கள்.//

இப்படிச் சொன்ன நீங்கதான்...

\\எனது நண்பர்களில் ஒருவர் எழுதிய கடிதத்தை எனது வலைப்பூவில் பிரசுரித்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது போய் வாசித்துப் பாருங்கள். //னும், \\நான் சொல்லவேண்டிய பலவற்றை ரதி பேசியிருப்பது ஆசுவாசம் அளிக்கிறது.//னும் பிறர் பலத்தைச் சார்ந்து நிக்கிறீங்க டமில் ரிவர்! மகா பெரிய எழுத்தாளினி-கம்-கவிதாயினியான நீங்களே பிறரைத் துணைக்கு அழைக்குறப்போ, ஈழத் தமிழர்களின் வலிகளை அறிந்த ஷோபா சக்தியை நான் துணைக்கு அழைக்கிறது மட்டும் உங்களுக்கு ஏங்க்கா கசக்குது?

இதே தேதியில், மூணாவதா டமில் ரிவர் இட்ட பின்னூட்டம் குப்பன் யாஹூக்கான மறுமொழி. அதுல நான் கருத்துச் சொல்ல விரும்பலை.

தமிழ்நதி அக்காவை ‘டமில் ரிவர்’னே கட்டுரை முழுக்கக் குறிப்பிட்டிருக்கேனேன்னு பாக்கறீங்களா? அக்கா அளவுக்கு எனக்குத் தமிழ் உணர்வு கொஞ்சமும் கிடையாதுங்க. அதான்!

(மறுபடி டமில் ரிவர் அக்கா படத்தை நெட்ல தேடப் போறேன். ஷோபா சக்தி மாதிரி வேற எந்தச் சக்தியும் வந்து சிக்கிறக்கூடாதுன்னு முப்புடாதியம்மனை வேண்டிக்கிறேன்!)

ஆஹா..! சிக்கிடுச்சுய்யா, சிக்கிடுச்சு! நான் ஒண்ணு தேடினா அதுவா வந்து விழுதே, நான் என்ன பண்ணுவேன்? இந்த வலைப்பூ யாருதுன்னு எனக்குத் தெரியலை. கண்ணுல பட்டுது. (அது சரி, என் கெரகம்... என் கண்ணுல படுறதெல்லாம் இப்படி அக்காவுக்கு எதிர்ப்பாவே இருக்கணுமா?) அதிலிருந்து சில வரிகளை காப்பி பண்ணிக் கீழே கொடுத்திருக்கேன்.

\\ஆனால் அவ்வாறு அரசியல் பார்வை கொண்டவர்களையும் தமிழ்நதி வசைபாடுகிறார். அந்த பதிவில் உள்ள சிலவரிகள் தமிழ்நதியின் அரசியல் பார்வை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு உதாரணம். ‘‘விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… ” என்னும் தமிழ்நதியின் அப்பதிவிலுள்ள வரிகள். ஆக, தமிழ்நதிக்கு மேற்கண்ட புலிகள் இழைத்த கொடுமைகள் எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ நொட்டாங்கையால் தள்ளக்கூடிய விஷயங்கள். இப்போது புலிகள் வீழ்ந்துபோனதால்தான் இதுகுறித்தாவது தமிழ்நதி எழுதுகிறார். புலிகள் போரில் வென்றிருந்தால் சோணகத்துரோகிகள் என எம் மக்களைத் துரத்தத்தான் செய்வார்கள், மாற்று இயக்கங்களை, ஜனநாயகப் போராளிகளைக் கொன்றுதான் போடுவார்கள். ஆனால் தமிழ்நதி அதுகுறித்து ஒரு சொல்லும் எழுதமாட்டார். //

போதுங்க்கா... இந்த ஆட்டத்துக்கு இனி நான் வரலை!


.