Author: கிருபாநந்தினி
•Sunday, October 30, 2011
ணக்கங்ணா! வணக்கங்க்கா!

ரொம்ப காலத்துக்கப்புறம் எழுத வந்திருக்கேன். ஒரு வருஷமா எழுதாமலிருந்தப்பவும்கூட என் மேல அன்பும் நம்பிக்கையும் வெச்சு, நான் நல்லபடியா பிழைச்சு வரப் பிரார்த்தனை பண்ணினவங்க அத்தனை பேரின் நல்ல மனசும் ஆசீர்வாதமும்தான் என்னைக் காப்பாத்தியிருக்கு. உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யறது, செய்யமுடியும்னு தெரியல.

இனிமே யாரையும் விமர்சனம் பண்ணி எழுதறதா இல்லை. சும்மா, ஜாலியா, சந்தோஷமா சில விஷயங்களைப் பகிர்ந்துக்கிட்டா போதும்னு நினைக்கிறேன்.

அதுக்கு முன்னே ரொம்ப நாளா என் மனசுல அரிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயத்தை இன்னிக்கு, இங்கே கொட்டிடறேன். இதுகூட யாரையும் விமர்சனம் பண்றதுக்காக இல்லை. எனக்குத் தெளிவு கிடைக்கிறதுக்காக.

மூணு பேரைத் தூக்குல போடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே சேர்ந்து போராடிக்கிட்டிருக்கு. இதுல பத்திரிகைங்க, ஓய்வு பெற்ற நீதிபதிங்க, படிச்சவங்க, பண்பானவங்க எல்லாரும் அடக்கம். ஒரு உசிரை எடுக்கறதுக்கு இன்னொரு மனுஷனுக்கு உரிமை இல்லை; அது அரசாங்கமா இருந்தாலும் சரி. அதை நான் மனப்பூர்வமா ஒப்புக்கறேன்.

ஆனா, இது தொடர்பா சில கேள்விகள் என் மனசுக்குள்ள இருக்கு. அதுக்கு யார் கிட்டேயாவது பதில் இருந்தா, சந்தோஷப்படுவேன்.

1. உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனா, சிறையில் அடைச்சுக் கொடுமைப்படுத்த மட்டும் சக மனிதனுக்கு உரிமை இருக்கா? உடலைக் கொல்றதைவிட மனசைக் கொல்றது பெரிய கொலை இல்லையா? உடலைக் கொன்னா அதோடு அந்த வலி முடிஞ்சுடும். ஆயுள்தண்டனை கொடுத்து உள்ளேயே வெச்சிருந்தா, காலம் பூரா வேதனைதானே? அது மட்டும் சரியா?

2. மனிதனைக் கொல்லக்கூடாது. ஆனா, எந்தப் பாவமும் அறியாத மிருகங்களை அடிச்சுத் திங்கிறது சரியா? அது மட்டும் கொலை இல்லையா? அதுவும் தண்டனையாகக் கூட இல்லை; நம்ம வயித்தை ரொப்பிக்கிறதுக்கு.

ஆடு, மாடுகளை அல்லது மத்த ஜீவராசிகளைக் கொன்னா, அதைக் கொலைன்னு யாரும் சொல்றது இல்லையே, ஏன்? அதுங்களுக்காக யாரும் கவலைப்படறது இல்லையே, ஏன்? அதுங்களுக்கு மனுஷங்களைவிட அறிவு குறைவுங்கிறதுதானே காரணம்? அப்ப, மனுசங்கள்லயும் அறிவு குறைவானவங்களைக் கொன்னா தப்பில்லையா? அப்ப கொலைச் சதியில் ஈடுபடுற மனுஷனும் அறிவு குறைஞ்சவந்தானே? அவனைக் கொல்லக்கூடாதா?

(மிருகங்கள்லயும் பாருங்க, வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுங்களைக் கொன்னா, ஒரு பயலும் ஏன்னு கேட்க மாட்டான். அதுவே, காட்டுல உள்ள கொடூர மிருகமான புலி, சிங்கத்தைக் கொன்னா, அரசாங்கம் தண்டிக்கும். ஆக, மிருகங்கள்லயும் கொடூரமானதுக்குதான் சப்போர்ட் பண்றாங்க!)

3. சரி, கொல்றது தப்பு. நான் ஒப்புக்கறேன். ஆனா, இப்படியே தப்பு பண்றவனையெல்லாம் பிடிச்சு ஜெயில்ல வெச்சு சோறு போட்டுட்டிருந்தா, இருக்கிற ஜெயில்கள்ளாம் போதாது போலிருக்கே? எத்தனை பேரை வெச்சுக் காப்பாத்திக்கிட்டிருக்க முடியும்? ஏற்கெனவே இந்தியாவுல இருக்கிற ஜெயில்லாம் நிரம்பி வழியுது. இதுக்கு என்ன பண்றது?

4. சரி, ஜெயிலுக்குள்ளே அடிதடி, வன்முறை அடிக்கடி நிகழுது. ஒருத்தனை ஒருத்தனை வெட்டிக் கொன்னுக்கறான். இப்பவே இப்படின்னா, நாளைக்கு ஜெயில்ல கூட்டம் அதிகமாகும்போது, இந்தக் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகமாகுமே? அதுக்கு என்ன செய்யறது?

5. ஒரு பெரிய தீவிரவாதியைப் பிடிச்சு உள்ளே போட்டுர்றாங்கன்னு வையுங்க. கொலைத் தண்டனை கொடுக்கணும். ஆனா, கொலை கூடாதுங்கிறதால, ஆயுள் தண்டனையா கொடுத்து வெச்சிருக்காங்கன்னு வெச்சுக்குங்க. ஆக, ஆள் உசுரோட இருக்கான்னு உலகத்துக்கே தெரியுது. அது அவன் கூட்டத்துக்கும் தெரியுது. உடனே அவங்க என்ன பண்ணுவாங்க, ஏதாச்சும் விமானத்தைக் கடத்துவாங்க; அல்லது, முக்கியமான வி.ஐ.பி-யைக் கடத்துவாங்க. எங்க ஆளை வெளியே விட்டாத்தான் இவனை நாங்க விடுவோம்னுவாங்க. அப்ப அரசாங்கம் என்ன செய்யும்? நம்ம ஆளைக் காப்பாத்தியே ஆகணும்கிறதுக்காக, ஜெயில்ல இருக்கிற அந்தத் தீவிரவாதியை வெளியே விட்டுடும். விடுமா, விடாதா? இப்படியான விவகாரங்கள், கடத்தல்கள் நிச்சயம் அதிகரிக்கும். அதுக்கு என்ன செய்யப் போறோம்?

6. அத விடுங்க. ஒருத்தன் ஒரு குடும்பத்தைச் சீரழிச்சுடறான். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரும் வர்ணிக்கவே முடியாத துயரத்துலயும், அந்தப் பாவியின் மீது கோபத்துலயும் இருப்பாங்க. ஆனா, பெரும்பாலான ஜனங்க யாரும் பழிவாங்குற நடவடிக்கையில இறங்குறது இல்லை. அரசாங்கம் இருக்கு, சட்டம் இருக்கு, அது பார்த்துக்கும், அது தகுந்த தண்டனை கொடுக்கும்னு இருக்காங்க. ஆனா, தூக்குத் தண்டனைங்கிற விஷயமே இல்லை, அந்தப் பாவி ஒரு பத்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு, அப்புறம் வெளியே வந்து செட்டிலாயிடுவான்னா, அதைப் பார்த்துக்கிட்டு பாதிக்கப்பட்ட யாராச்சும் சும்மா இருப்பாங்களா? கேஸ் நடக்கும்போதே அவனைப் போட்டுத் தள்ளிட மாட்டாங்களா?

அதுவும், ஆயுள் தண்டனைன்னா, அவன் காலம் முழுக்க ஜெயில்ல இருப்பான்னு அர்த்தம் கிடையாது. பதினாலு வருஷமோ, பத்து வருஷமோ... இடையில காந்தி பொறந்த நாள், அண்ணா பொறந்த நாள்னெல்லாம் வருது... அவன் இன்னும் சீக்கிரமே வெளியே வந்துடுவான். அது மட்டுமில்லை, அவன் ஜெயிலுக்குள்ளே பகவத் கீதையோ, குர்ரானோ, பைபிளோ நாள் முழுக்கப் படிச்சுக்கிட்டிருந்தா போதும், நன்னடைத்தை சர்டிஃபிகேட் கொடுத்து சீக்கிரமே வெளியே அனுப்பிடுவாங்க. நாட்டுக்குள்ள அவன் தியாகியா உலா வருவான்.

அப்பப்ப தேர்தல் வேற வந்துட்டு இருக்கு. எலெக்‌ஷன் ‘பணி’களைக் கவனிக்கிறதுக்கு வேற ஆள் வேணும். அதுக்கும் கதவுகளைத் திறந்துவிட்டுடுவாங்க.

கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது, சரி, தப்புப் பண்ணவனைக் கடவுள் தண்டிப்பார்னு மனசைத் தேத்திக்கலாம். ஆனா, இப்ப உள்ள அறிவுஜீவிகளுக்கெல்லாம் அது கூட இல்லையே? கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தன் இழப்பை, தன்க்கு ஏற்பட்ட கொடுமையை எப்படி ஜீரணிப்பான்? அரசாங்கம் மரண தண்டனை கொடுக்கலேன்னா என்ன, நான் கொடுக்குறேன்னு கிளம்பிட மாட்டானா? நாட்டுல வெட்டு, குத்து இன்னும் பலப் பல மடங்கு அதிகமாகிடாதா?

கடவுள் நம்பிக்கை உள்ளவன் கூட, ‘கடவுள் என் மூலமா தண்டனை கொடுக்குது. நான் வெறும் கருவிதான்’னு அந்தப் பழியையும் கடவுள் மேல தூக்கிப் போட்டுட்டு, பழி வாங்க மாட்டான்கிறது என்ன நிச்சயம்?

இதுக்கெல்லாம் என்ன செய்யப்போறோம்?

7. ‘ஜெயில்ங்கிறது தண்டனை கொடுக்குற இடமில்லை, அது திருத்துற இடம்; பக்குவப்படுத்துற இடம்’னு அறிவுஜீவிக் கூட்டம் ஒண்ணு சொல்லிக்கிட்டு அலையுது. சந்தானம் காமெடி மாதிரி இருக்கு. வெளியே அத்தனை பெரியவங்க, சமுதாயம், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், நல்லவர்கள் இருந்தபோதும் ஒருத்தனைத் திருத்த முடியலையாம்; அவன் தப்புப் பண்ணுவானாம். ஜெயிலுக்குப் போவானாம்; அங்கே சில மாசம் அல்லது சில வருஷம் இருந்தா, திருந்திடுவானாம். முடியல!

8. குறிப்பிட்ட வயசுக்குக் கீழே இருந்தா, அவனை அல்லது அவளை சிறுவர் கணக்குல சேர்த்து, தூக்குத் தண்டனை கொடுக்கக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு. அவன் தனக்குத் தெரிஞ்சு வேணும்னே செய்திருக்கமாட்டான், விளைவுகள் பத்தி அறிஞ்சிருக்க மாட்டான், அவனைத் திருத்திடலாம்கிற நம்பிக்கைதான் காரணம். இது சரி, ஆனா, பெண்கள்னாலும் தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாதுன்னு சில பேர் பாய்ஞ்சுக்கிட்டு வராங்களே, அது ஏன்? பாருங்க, இன்னிக்கு சீரியல்கள்ல பெரும்பாலான கொலைகளைப் பெண்கள்தான் செய்யுறாங்க. நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கிறதுதானேங்க சீரியல்?

9. இந்த நாட்டுல எப்பவுமே கொலைகாரனுக்கும், கொள்ளைக்காரனுக்கும், தீவிரவாதிக்கும்தான் ஒரு கோஷ்டி வரிஞ்சு கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்கிட்டு வருதே தவிர, பாதிக்கப்பட்ட அப்பிராணிகளுக்கு, நல்ல மனுஷங்களுக்கு ஆதரவா ஏன் அவங்க கை நீளமாட்டேங்குது?

10. ஒருமுறை தூக்குத் தண்டனை கொடுத்துட்டா, அப்புறம் அவன் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்சா, போன உயிரைத் திருப்பி எடுக்க முடியாதுங்கறது அறிவுஜீவிகளோட ஒரு வாதம். நியாயம்தான். ஆனா, நம்ம நாட்டுச் சட்டப்படி, யாருக்கும் அத்தனை லேசுல தூக்குத் தண்டனை கொடுத்துட முடியாது. குற்றாவளிக்கு எதிரா எல்லாமே 100 சதவிகிதம் இருக்குதுன்னு சந்தேகமில்லாம நிரூபிக்கப்பட்ட பிறகுதான், தூக்குத் தண்டனைங்கிற பேச்சே வரும். அப்படியும், ஒண்ணு ரெண்டு கேஸ்ல அப்பிராணிகள் அநியாயமா சதி வலையில சிக்கி, தூக்குதண்டனை வரைக்கும் வந்துடலாம். ஆனா, அந்த ஒண்ணு ரெண்டு கேஸ்களுக்காக ஒட்டு மொத்தமா தூக்குத் தண்டனைங்கிறதையே தூக்கிட்டா, வன்முறையாளர்களுக்கு, திட்டமிட்டுக் கொலைச் சதிகள்ல ஈடுபடுறவங்களுக்குக் குளிர் விட்டுப் போயிடாதா?

கடைசியில என்ன ஆகுது... ‘யாரும் யாரையாச்சும் வெட்டிக்கோங்க, குத்திக் கொன்னுக்கோங்க. வெடி வெச்சு ஒட்டு மொத்தமா ஐந்நூறு பேர், ஆயிரம் பேர்னு போட்டுத் தள்ளுங்க; நாங்க கண்டுக்க மாட்டோம். உள்ளே சொகுசா வெச்சு சோறு போடறோம்’னு அரசாங்கம் சொல்ற மாதிரியில்ல ஆகுது.

நல்லா கவனியுங்க; இதனாலெல்லாம் தூக்குத் தண்டனை இருந்தேதான் ஆகணும்னு நான் வாதிட வரலை. ஆனா, மேலே உள்ள என் சந்தேகங்களுக்கு என்ன பதில்? இதுக்கெல்லாம் என்ன தீர்வு தரப் போறோம்?

தூக்குத் தண்டனை பத்தி காந்தி அப்பவே அப்படி சொன்னார், ராஜாஜி இப்படி சொன்னார், அம்பேத்கரும் அப்படிச் சொல்லியிருக்கார்னு தங்களோட வாதத்துக்கு வலு சேர்க்கிற அறிவுஜீவிங்க, என்னோட கேள்விகளுக்கும் அந்த மகான்கள் ஏதாவது பதில் சொல்லியிருக்காங்களான்னு தேடி, பதில் வாங்கிக் கொடுத்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

|
This entry was posted on Sunday, October 30, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On Oct 30, 2011, 5:45:00 PM , SURYAJEEVA said...

நீங்கள் மறுபடியும் பதிவுலகில் காலடி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். நீங்களும் பின்னூட்டம் இட்டதை கண்டேன். நன்றி.. முதல் பகுதியை படித்தவுடன், இனி விவாதம் கிளப்பும் பதிவுகளை எழுப்ப போவதில்லை என்று கூறியவுடன், சிறு சுணக்கம் வந்தது.. பின் வரும் பகுதியை படித்தவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்... புலி எப்படி பூனையாக முடியும்? அருமையான விவாதம்... ஒருவன் தவறு செய்கிறானா? அல்லது தப்பு செய்கிறானா என்பதில் உள்ளது.. தப்பு செய்பவன் உள்ளே செல்வதில்லை, தண்டனை அனுபவிப்பதில்லை... தவறு செய்பவன் தான் தண்டனை அனுபவிக்கிறான், உள்ளே செல்கிறான்... தவறுக்கும் தப்புக்கும் வித்தியாசம் தெரியும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்... அடுத்த பதிவில் சந்திப்போம்

 
On Oct 30, 2011, 9:06:00 PM , raji said...

welcome back kirupa !

now u r with us that too with a gud post.thank god. keep sharing your thoughts :-))

and take care.

 
On Nov 2, 2011, 7:59:00 PM , creativemani said...

Welcome back! Hope All is Well!

 
On Nov 3, 2011, 5:52:00 PM , லதானந்த் said...

மறுபடியும் எழுத வந்தமைக்கு எனது வாழ்த்துக்கள். இரண்டு விஷயம் சொல்லலாம்னு நினைக்கிறேன்.
1) காட்டில் உள்ள கொடூர விலங்குகளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுறதா சொன்னீங்க. லேசாத் தப்புங்க. மான் கொடூர விலங்கா என்ன?
2) இப்பத்தான் சொஸ்தமாகி வந்திருக்கீங்க. அதுவும், தலையும் தலை சார்ந்த பிரச்னையிலும் இருந்து மீண்டு வந்திருக்கீங்க. ஓவரா திங்க் பண்ணாதீங்க. சாலியா எதையாச்சும் எளுதுங்க. நீங்க சொன்னீங்கனா நானும் என்ர பிளாக்குல மறுக்காவும் எளுத ஆரமிக்கறன்.

 
On Nov 5, 2011, 4:47:00 PM , சேக்காளி said...

//கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது, சரி, தப்புப் பண்ணவனைக் கடவுள் தண்டிப்பார்னு மனசைத் தேத்திக்கலாம். ஆனா, இப்ப உள்ள அறிவுஜீவிகளுக்கெல்லாம் அது கூட இல்லையே? கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தன் இழப்பை, தன்க்கு ஏற்பட்ட கொடுமையை எப்படி ஜீரணிப்பான்? அரசாங்கம் மரண தண்டனை கொடுக்கலேன்னா என்ன, நான் கொடுக்குறேன்னு கிளம்பிட மாட்டானா?//
அவனவன் மன நிலை,மற்றும் சூழ்நிலையை பொறுத்தது கொலைவெறி என்பது. இதில் கடவுளுக்கு என்ன வேலை.

 
On Dec 26, 2011, 11:25:00 PM , Ranjit said...

Welcome back!! Hope you are doing good after the operation!!!