•Sunday, March 18, 2012
ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு தெரியலை. அதனால என் வலைப்பூ நண்பர்கள் கிட்டேர்ந்து ரெக்வெஸ்ட்களை வரவேற்கிறேன்!
வாங்க பழகுவோம். பிடிச்சுதுன்னா லைக் கொடுங்க. இல்லாட்டி வெறுமே நட்பாவே இருப்போம்.
வாங்கண்ணா... வாங்கக்கா! வந்து உங்க சகோதரியை வாழ்த்துங்கக்கா!
***
படித்துறை வலைப்பூ தொடங்கினபோது நான் போட்ட பதிவை ஒரு ஃபீலிங்குக்காக இங்கே மறுபடியும் மறுபதிவா போட்டிருக்கேன்.
எல்லாரும் மன்னிச்சுக்குங்க... நானும் வலைப்பூ எழுத வந்துட்டேன்.
நான் அதிகம் படிச்சவள் இல்லை. எனக்குச் சுவையாக எதுவும் எழுதத் தெரியாது. கதை, கட்டுரை என எதுவும் எழுதியது இல்லை. அவ்வளவு ஏன், வாசகர் கடிதம்கூட எந்தப் பத்திரிகைக்கும் எழுதிப் போட்டது இல்லை. கணினி அறிவும் அவ்வளவாகக் கிடையாது.
என் கணவர் கிருபாகரன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினீயர். மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி என்று பறந்துகொண்டிருப்பார். திருமணமாகி வந்ததற்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே கண்ணால் பார்த்தேன். நான் வீட்டில் சும்மா இருக்கிற நேரங்களில் பொழுதுபோவதற்காக இணையத்தில் உலவக் கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் வலைப்பூ என்று சொல்லக்கூடிய பிளாகுகளைப் படிக்கவும், அவற்றுக்கு பதில் அளிக்கவும் கற்றுக்கொண்டேன்.
எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். எனவே, சமையல் குறிப்புகளை வலைப்பூவில் போடலாமா என்று கணவரிடம் கேட்டேன். ஆனால், ‘அதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிளாக் ஆரம்பிக்காதே! சுவாரசியமாக இருக்காது. உன் எண்ணங்களை, கருத்துக்களை எதையாவது எழுது!’ என்று சொல்லி, எனக்கு ஒரு வலைப்பூ வடிவமைத்துத் தந்தார். எப்படிப் பதிவிட வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்.
முதலில் ‘அசரீரி’ என்று என் பிளாகுக்குப் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன். அந்தப் பெயரில் வேறு யாரோ வைத்திருக்கிறார்களாம். எண்ணங்கள், என் மன வானில், மனசு, என் உலகம் என்று என்னென்னவோ பெயர்கள் சொன்னேன். எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும் எல்லாவற்றிலும் ஏற்கெனவே வலைப்பூக்கள் இருந்தன. மிகச் சோர்ந்துபோய் கடைசியாக இந்தப் ‘படித்துறை’ என்ற பெயரை முயற்சி செய்யச் சொன்னேன். என் அதிர்ஷ்டம், இது கிடைத்தது.
‘படித்துறை’ என்பதைத் தேர்ந்தெடுக்கக் காரணம், இது ஒரு இலக்கியப் பெயர் மாதிரி தோன்றுகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து, ஒருவரோடொருவர் அளவளாவி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடம் படித்துறை. எனவே, என் வலைப் பூவுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
தமிழில் தப்பில்லாமல் எழுதுவேன். அது ஒன்றுதான் என்னிடம் உள்ள பலம். மற்றபடி இலக்கியத்திலோ சினிமாவிலோ அரசியலிலோ எனக்கு அதிகம் பரிச்சயம இல்லை. தவிர, நான் எழுத்தாளரும் இல்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியாது. அதனால்தான் ஆரம்பத்திலேயே வலைப்பூ எழுத வந்ததற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
ஏதோ என் மனதில் பட்டதை இதில் அவ்வப்போது எழுதி வைக்கிறேன். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். ‘ஐயையே! இவளெல்லாம் பிளாக் எழுதலைன்னு யார் அழுதது?’ என்று முகம் சுளிக்காதீர்கள். அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். சுருக்கமாகத்தான் எழுதுவேன்.
இதில் நான் எழுதப் போவதெல்லாம் என் சொந்தக் கருத்துக்கள். இதுவே சரி என்று நான் அடித்துக் கூறப் போவதில்லை. என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.
மற்றபடி உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்,
கிருபாநந்தினி.
3 comments:
வாழ்த்துக்கள் !
என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
'அன்புடன் ஒரு நிமிடம்'
முதல் பகுதி.
'எண்ணிச் சிந்திடுவோம்...'
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
கிருபாநந்தினி....நல்லாதான் எழுதிரீங்க.என்னை மாதிரி தைரியமா எழுதுற பெண்களை பிடிக்கும்....நீங்கள் நலம் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்.....
Sorry only today i have seen ur post - welcome back ... keep up the good work.