Author: கிருபாநந்தினி
•Saturday, November 28, 2009
தினம் தினம் பேப்பரைத் திறந்தாலே வேதனையாயிருக்குங்க. ஒவ்வொரு சமயம் எதுக்கு பேப்பர் வாங்கணும்னு தோணுது. சீரியல் பார்த்து அழுவுற மாதிரி, பேப்பர் படிச்சு ஐயோ... ஐயோன்னு நம்ம பி.பி-யை நாமே ஏத்திக்கணுமான்னு தோணுது. வேலியில போற ஓணானைப் பிடிச்சு இடுப்புல கட்டிக்கிட்டுக் குத்துதே, குடையுதேங்கிறாப்ல நாமே தேடிப் போய் பேப்பரைக் காசு கொடுத்து வாங்கி வந்து படிச்சுட்டு, ‘அட, நாசமாப் போறவனுங்களே! இப்படியுமா செய்வானுங்க’ன்னு வயித்தெரிச்சல் படுறதாயிருக்கு. இந்த மந்திரி ஊழல் பண்ணுனாரு, இவன் கள்ளக் காதலியை இவன் குத்திக் கொன்னான், இங்கே இத்தனை பேர் குண்டு வெடிச்சு செத்தாங்க, இங்கே நிலச்சரிவு, இத்தனை பேர் சாவு, கொலை, கொள்ளைன்னு பேப்பரைப் பிரிச்சாலே ரத்தம் கொட்டுது; கப்பு அடிக்குது!

பெரிய நியூஸ்தான் இப்படின்னா குட்டிக் குட்டிச் செய்திகள்கூடக் கடுப்பைக் கிளப்புது.

மதுரைல கோயில்கள் கிட்டேயும், பள்ளிக்கூடங்கள் கிட்டேயும் டாஸ்மாக் திறந்திருக்காங்களாம். அதை அகற்றணும்னு ஹைகோர்ட் உத்தரவு போட்டிருக்குது. இதுக்கெல்லாம் ஹைகோர்ட் வந்து பஞ்சாயத்து பண்ணணும்னு ஆகிப் போச்சே நம்ம ஜனங்களோட மனநிலைன்னு வேதனையா இருக்கு. ‘உன் உசிரைப் பாதுகாக்க ஹெல்மெட் போட்டுக்கோ’ன்னு கவர்ன்மென்ட் உத்தரவு போட்டாக்கூட அது நம்ம நல்லதுக்குதான்னு நம்ம ஆளுகளுக்கு உரைக்காது. செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா இத்தனை ரூபா அபராதம்னு சொன்னாத்தான் ஒழுங்கு மரியாதையா வண்டி ஓட்டுவான் நம்ம ஆளு. அவனுக்கா அந்த அறிவு இருக்காது. நம்ம ஊர் பஸ்கள்ல முதியோர் சீட்டுன்னு ஒதுக்குறதைப் பார்த்து வழிச்சுக்கிட்டுச் சிரிக்கிறான் வெள்ளைக்காரன். ‘அட என்னாங்க, பெரியவங்க வந்தா எழுந்திருச்சு இடம் விட வேண்டியதுதானே! இதுக்குக் கூடவா சீட்டு ஒதுக்குவாங்க’ன்னு அவன் நினைக்கிறான். நம்ம ஜனங்களைப் பத்தி அவனுக்குத் தெரியலை! கோயில் கிட்ட, ஸ்கூல் கிட்ட இருக்குற டாஸ்மாக்ல இந்தக் குடிமகன்கள் போய் எதுவும் வாங்கிக் குடிக்காம இருந்தா, உத்தரவு போடாமலே அவன் போணியாகலைன்னு கடையை மூட்டை கட்டிட மாட்டானா? நாய்க்கு செக்காவது, சிவலிங்கமாவதுங்கறாப்ல குடிமகன்களுக்குக் கோயிலாவது, பள்ளிக்கூடமாவது!

கோவை மத்திய சிறையில் சல்யூட் அடிக்கத் தெரியாத 90 காவலருக்கு மெமோ கொடுத்திருக்காராம் ஏடிஜிபி. அந்த லட்சணத்துல இருக்குது நம்ம தமிழக காவல் படை! நம்ம காவலர்கள்ல எத்தனை பேரால தலையைக் குனிஞ்சு தங்கள் கால் கட்டை விரலைப் பார்க்க முடியும்? ‘பானை வயிற்றோன் பக்தர்களைக் காப்பானா?’ன்னு கறுப்புச் சட்டைக்காரங்க கேக்குறாங்க. இந்தத் தொந்திக் கணபதிகள் திருடன்களையும், தீவிரவாதிகளையும் ஓடிப் போய்ப் பிடிப்பாங்களான்னு நான் கேக்குறேன். கெடு டயம் கொடுத்து, அதுக்குள்ள தொப்பையைக் குறைக்காத போலீஸ்காரங்க எல்லாரையும் டிஸ்மிஸ்ஸே பண்ணலாம்னு சட்டம் கொண்டு வரணும்.

மதுகோடா எக்கச்சக்கமான பணம் ஊழல் பண்ணியிருக்கார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; கோடிக்கணக்கில் ஹவாலா பணம் கைமாறியிருக்குது; ஆள் அப்ஸ்காண்டுன்னு தினம் தினம் வானிலை அறிக்கை மாதிரி மதுகோடா செய்தி ஒண்ணாவது வராம இருக்கிறதில்ல! மதுகோடா... அட, போடா!

அடுத்த சிலிண்டர் பதிவு பண்ண 21 நாள் ஆகியிருக்கணும்னு ஒண்ணும் விதியில்லையாம்; ஐஓசி மண்டல துணை மேலாளர் ராஜசேகரன் சொல்லியிருக்காரு! ஐயா, நீங்க சொல்றீங்கய்யா! கேக்க நல்லாத்தான் இருக்குது. கேஸ் ஏஜென்சிக்காரங்க கேக்கமாட்டேங்குறாங்களே! 21 நாள் ஆகலைன்னா சிலிண்டர் ரின்யூவைப் பதிவுக்கே எடுத்துக்க மாட்டேங்கிறாங்களே! அவங்களைக் கூப்புட்டு வெச்சுக் கொஞ்சம் அட்வைஸ் பண்ணினீங்கன்னா உபகாரமா இருக்கும். இதுல ஒரு வேதனை என்ன தெரியுங்களா... நாம ஒரு சிலிண்டரை பதிவு பண்ணின தேதிக்கு 21 நாள் கழிச்சு இன்னொரு சிலிண்டரை பதிவு பண்ணலாம்னு சொன்னாக் கூடப் பரவாயில்லீங்க. அவங்க சிலிண்டரைக் கொண்டு வந்து போட்ட தேதிக்கு அப்பால 21 நாள் கழிச்சுதான் பதிவு பண்ணணுமாம். சிலிண்டரைக் கொண்டு வரவே பத்துப் பதினைஞ்சு நாள் ஆக்கிடறாங்க. இதனால ரெண்டு சிலிண்டர் வெச்சிருந்தாக்கூட மாசத்துல ரெண்டொரு நாள் குமிட்டி, கரியடுப்பு மூட்டிச் சமைக்க வேண்டியதாயிருக்கு.

சிங்கப்பூர்ல உள்ள கெல்லாங் நதியைப் போல, நாறிப்போன நம்ம சென்னை கூவம் நதியைச் சுத்தப்படுத்தப் போறாராம் துணை முதல்வர் ஸ்டாலின். சிங்கப்பூர் போயிட்டு வந்திருக்காப்ல. அந்த கேரிங்ல கொஞ்ச நாள் அப்படித்தான் பேசுவாப்ல. இதே கண்டி லண்டன் போயிட்டு வந்திருந்தார்னா தேம்ஸ் நதி மாதிரி ஆக்கிருவோம்னு சொல்லியிருப்பாரு. அறுபது வருஷமா நாறிக்கிட்டு இருக்குது கூவம். ஆவுற கதையப் பாருங்க!


வரதட்சணை கேக்குறதும் குற்றம், கொடுக்குறதும் குற்றம்னு ஒரு பக்கம் அனத்திக்கிட்டே இருக்கோம். இன்னொரு பக்கத்துல மாப்பிள்ளை யாரு, எப்படி, நல்லவனா, பொறம்போக்கானு தெரியாமலேயே, அவன் வெளிநாட்டுல எக்கச்சக்கமான சம்பளத்துல வேலையில இருக்கான்னு நெட்டுல பார்த்துட்டு, அதை நம்பி கல்யாணத்துக்கு முன்னாடியே அவனுக்கு பத்து லட்ச ரூபா, இருபது லட்ச ரூபான்னு கொண்டு போய்க் கொட்டியழுவுற ஏமாந்தகுளிகளும் இருக்காங்கன்றதை நெனைச்சா எரிச்சல் எரிச்சலா வருது. அப்படித்தான் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நளினிங்கிறவங்க எவனோ ஒரு லண்டன்(!) மாப்பிள்ளை கிட்டே 4 கோடி ரூபாயை இழந்துட்டு மதுரை ஐஜி அலுவலகத்துல போய் மூக்கால அழுதுருக்காங்க. எத்தனை பட்டாலும் அறிவே வராதா இவங்களுக்கெல்லாம்? சே..!

இது பரவால்ல... ஒரு இன்ஜினீயரு பேங்க்ல ஒன்றரை லட்ச ரூபா பணம் எடுத்தாராம். அதை ஒரு மஞ்சப் பையில போட்டு, சைக்கிள் ஹேண்ட்பார்ல மாட்டினாராம். அப்போ ஒருத்தன், “ஐயா, அங்க ஒரு பத்து ரூபா நோட்டு விழுந்து கிடக்குது. உங்களுதான்னு பாருங்க”ன்னானாம். இந்த வீணாப் போனவரும் அதைக் குனிஞ்சு எடுத்தாராம். ஹேண்ட்பார்ல இருந்த மஞ்சப் பையை ஒன்றரை லட்ச ரூபாயோட காணமாம். கோயிந்தா கோயிந்தா! ஆனா, இந்த டெக்னிக் அரதப் பழசான டெக்னிக். நான் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்தே இந்த அல்பத்தனமான டெக்னிக்கைக் கையாண்டு பணத்தைக் களவாடியிருக்காங்க. ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, ஏமாறுறதுக்கு நாம தயாரா இருக்குற வரைக்கும் ஏமாத்துறவனுக்கு பெரிய சயின்டிஃபிக் டெக்னாலஜி முறை எதுவும் தேவையில்ல. ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு ஹைதர் அலி காலத்து டெக்னிக்கையே கையாண்டு, நம்ம பணத்தை லபக்கிக்கிட்டு போயிட்டே இருப்பான். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு பாடினாரு பட்டுக்கோட்டையாரு! நாமதான் ஏமாறுறதுக்கு ரெடியா இருக்கோமே! திருடங்களே திருந்த நினைச்சாலும் விட்டுருவோமா என்ன?!

1330 குறளையும் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா, அந்தப் பிள்ளைக்கு 21 வயசு வரைக்கும் மாசம் 1000 ரூபா உதவித் தொகை வழங்குறாராம் நம்ம கலைஞரு! தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா வரி விலக்குன்னு சொன்ன அபத்தத்தைவிட இது கொஞ்சம் பெட்டர் மாதிரி தெரியுதா? அதான் இல்லே! இதுவும் படு பேத்தலான திட்டம்தான். ‘மனப்பாடம் பண்ணாதீங்க; புரிஞ்சுக்கிட்டு எழுதுங்க’ன்னு மாணவர்களுக்கு அட்வைஸ் பண்றாங்க கல்வியாளருங்க. கலைஞரு என்னடான்னா திருக்குறள் மொத்தத்தையும் மனப்பாடம் பண்ணுங்கன்றாரு. திருக்குறளை மனப்பாடம் பண்ணி ஆகப்போறது என்னன்னு புரியல. சரி, ஒரு தடவை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சா போதுமா? அப்புறம் மறந்துட்டா பரவால்லியா? இல்லே, 21 வயசு வரைக்கும் அப்பப்ப போய் பாங்க் மேனேஜர்கிட்ட, இல்லாட்டி கலைஞர் கிட்டே மொத்தத்தையும் ஒரு தபா கடகடன்னு சொல்லிக் காட்டணுமா? வெறுமே மனப்பாடம் பண்ணினா போதுமா இல்லே அர்த்தமும் சொல்லணுமா? அதுல காமத்துப் பால் எல்லாம் வருதே, அதைக்கூட பசங்க படிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கணுமா?

திருக்குறள் உலகப் பொதுமறைங்கிறதெல்லாம் சரி! பெரியவங்களுக்குக் கொடுக்குற மரியாதையை அதுக்குக் கொடுப்போம். ஆனா, அதில் உள்ள எல்லாக் குறளையும் படிச்சு அதன்படிதான் இப்ப நடக்கணும்னு சொன்னா அது சரிவராது. பெரியவங்களோட புத்திமதிகளைக் கேட்டுக்கலாம். ஆனா, எல்லாத்தையும் கடைப்பிடிக்க முடியாது. இப்ப உள்ள சூழ்நிலைக்கு எது பொருந்துமோ, சரியா இருக்குமோ அதை மட்டும்தான் கடைப்பிடிக்க முடியும். திருக்குறளும் அப்படித்தான்! அதுல இருக்குற பல குறள்களை இப்ப ஏத்துக்கவே முடியாது. ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ங்குறாரு வள்ளுவரு. கடவுளைக்கூடக் கும்பிடாம புருசனைக் கும்பிடுற பொம்பளை பெய்னு சொன்னா உடனே மழை பெஞ்சுடுமாம்! நம்புறீங்களா? அப்படி அவ சொல்லி மழை பெய்யலைன்னா அவ கெட்ட பொம்பளைன்னு சொல்லி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா? சரி விடுங்க, நாம சொல்லியா கேக்கப் போறாரு கலைஞரு!

பசங்களா! காமத்துப்பால் குறள்களை மனப்பாடம் பண்ணுங்க; ஆனா, அர்த்தத்தை நோண்டி நோண்டிக் கேக்காதீங்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!

என் அடுத்த பதிவு: புதிராடுவோம் வாங்க!
|
This entry was posted on Saturday, November 28, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On Nov 28, 2009, 11:42:00 PM , SenthilMohan K Appaji said...

பின்றீங்களே கிருபாக்கா. எனக்கு தெரியாது, தெரியாதுன்னு சொல்லிட்டு வூடு கட்டி அடிக்குறீங்களே. Njoy Maadi. அப்புறம் திருக்குறள் விஷயத்துல எனக்கு ரொம்ப காலமாகவே, திருக்குறளைப் பாடத்திட்டத்தில் வைத்தவர்கள் மேலே ஒரு வருத்தம். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை மற்ற இரண்டு பால்களிலுள்ள அதிகாரத்தினை வைத்து விட்டு குறைந்தது +1, +2 - விலாவது காமத்துப் பாலின் அதிகாரங்களை வைத்திருந்திருக்கலாம் என்று தான். அல்லது இனிமேலாவது வைக்கலாம். வைப்பதுடன் நின்றுவிடாமல் அறிவியல் பூர்வமாக விளக்கி விடுவது நலம். எவ்வளவோ பண்றோம்(LGBT Rights). இதை பண்ண மாட்டோமா?

 
On Nov 28, 2009, 11:49:00 PM , SenthilMohan K Appaji said...

//* பசங்களா! காமத்துப்பால் குறள்களை மனப்பாடம் பண்ணுங்க; ஆனா, அர்த்தத்தை நோண்டி நோண்டிக் கேக்காதீங்க. **/

அதென்னக்கா...?!?!? பசங்களுக்கு மட்டும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

 
On Nov 29, 2009, 1:13:00 AM , butterfly Surya said...

நல்லாயிருக்கு கிருபா நந்தினி.. கொஞ்சம் சுருக்கி எழுதலாம் அல்லது இரண்டு பதிவா போடலாம்.


வாங்க .. கலக்குங்க..

 
On Nov 29, 2009, 10:18:00 AM , kggouthaman said...

வாழ்த்துவதற்கு வயது இருந்தபோதும் - வணங்குகிறேன்.
நல்ல பதிவு. சிறந்த சிந்தனைகள்.
நாளேடுகளில் நாம் பார்ப்பது எது,
அதை வைத்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்,
எதை எப்படி பார்க்கிறோம் என்றெல்லாம்
சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

 
On Nov 29, 2009, 12:43:00 PM , puliangudi said...

விமர்சனத்துக்காக நீங்க தேர்ந்தெடுத்தசெய்திகள் நச். அந்தந்த தேர்வுக்காக உங்களுக்கு ஒரு பாராட்டு.

சல்யூட் அடிக்கத் தெரியாததற்காக காவலர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது அபத்தம். என்னைக் கேட்டால், சல்யூட் அடிப்பதையே தடை செய்யச் சொல்வேன். காவலர்களை அடிமைகளாக நடத்திவிட்டு, அவர்களிடமே மக்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொடுத்தால் எப்படி? விடுதலை உணர்வு இல்லாதவன் எப்படி மற்றவர்களைக் கட்டுப்படுத்த முடியும்?

அட, இவ்வளவு நீளமா எப்படித்தான் எழுதினீங்க?

அப்புறம் முதல் பாரவில சொன்ன மாதிரி கப்படிக்கிறதனால பேப்பர் வாங்காம இருந்திராதீங்க. பலபேர் பொழப்பு ஓடுது. படிச்சுப் படிச்சு எழுதுங்க.

 
On Nov 29, 2009, 7:46:00 PM , லதானந்த் said...

அன்புடையீர்!
ஷண்முகப்ரியனின் படித்துறை என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பிளாக் இருக்கிறது.
http://shanmughapriyan.blogspot

எனவே இன்னும் சிறப்பாக ஒரு புதுப் பெயர் தேர்வு செய்து உங்கள் பிளாக்குக்கு வைக்கலாமே!
சில போஸ்டுகள்தானே போட்டிருக்கிறீர்கள்?
எனவே புதுப் பெயர் வைப்பதில் சிரமம் இருக்காது. இவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்.
பெயர் மட்டும் ஏன் இன்னொருவர் வைத்ததிருப்பதை வைத்திருக்க வேண்டும்?

 
On Nov 29, 2009, 7:58:00 PM , அன்புடன்-மணிகண்டன் said...

அட்டகாசம்ங்க... இத்தனை மேட்டர்களையும் நீங்கள் கையாண்ட விதம் அருமை... அதிலும் பேங்க் கொள்ளை மேட்டர் நிதர்சனம்...
வாழ்த்துக்கள்!!!

 
On Nov 29, 2009, 11:07:00 PM , பின்னோக்கி said...

படிக்க சுவாரஸ்யமாக இருக்கிற்து.சூர்யா சொன்னது போல கொஞ்சம் சுருக்கி எழுதலாம். எனினும் எழுத்து நடையில், கட்டுரையின் அளவு பெரிதாகப் படவில்லை.

 
On Nov 30, 2009, 7:58:00 AM , Anonymous said...

Nalla erukku, but neeeeraiya eluthidinka, koncham kuraichu erukalam. vaalthukal.

 
On Nov 30, 2009, 6:54:00 PM , கிருபாநந்தினி said...

\\கொஞ்சம் சுருக்கி எழுதலாம்.// மொதல்ல, தப்பு பண்றாங்களே, அவங்களைச் சுருக்கமா தப்பு பண்ணச் சொல்லு, நான் பண்றேன். அந்த மாதிரி கெட்ட செய்திகளைப் போடறாங்களே, பேப்பர்காரங்க, அவங்களைச் சுருக்கமா போடச் சொல்லு, நான் போடறேன்! :)) வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி பட்டர்ஃப்ளை!

 
On Nov 30, 2009, 6:56:00 PM , கிருபாநந்தினி said...

செந்தில்மோகன் கே.அப்பாஜி! பசங்கதான் ஆர்வத் துடிப்புல இருப்பாங்க. அதான்! :)

 
On Nov 30, 2009, 6:58:00 PM , கிருபாநந்தினி said...

செ.மோ.கே.அப்பாஜி! அதையெல்லாம் பாடமா வெச்சா, அப்புறம் கிளாஸ்ல பசங்கதான் பாடம் நடத்துவாங்க. வாத்தியாருங்க கேட்டுக்கணும். புரியுதா?

 
On Nov 30, 2009, 7:01:00 PM , கிருபாநந்தினி said...

\\வாழ்த்துவதற்கு வயது இருந்தபோதும் - வணங்குகிறேன்.// கே.ஜி.கௌதமன், என்னாதிது பேட்டை அரசியல்வாதி மாதிரி?! வந்ததுக்கும் நன்றி; வாழ்த்துனதுக்கும் நன்றிங்ணா!

 
On Nov 30, 2009, 7:02:00 PM , கிருபாநந்தினி said...

\\சல்யூட் அடிக்கத் தெரியாததற்காக காவலர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது அபத்தம். என்னைக் கேட்டால், சல்யூட் அடிப்பதையே தடை செய்யச் சொல்வேன். காவலர்களை அடிமைகளாக நடத்திவிட்டு, அவர்களிடமே மக்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொடுத்தால் எப்படி? விடுதலை உணர்வு இல்லாதவன் எப்படி மற்றவர்களைக் கட்டுப்படுத்த முடியும்?// போட்டுத் தாக்கு... புளியங்குடி அண்ணே, போட்டுத் தாக்கு!

 
On Nov 30, 2009, 7:05:00 PM , கிருபாநந்தினி said...

வனப்பாதுகாவலர் அங்கிள்! மொத தடவை ஒரு கருத்து சொன்னீங்க. சரின்னு சிரமேற்கொண்டு பண்ணிட்டேன். இப்ப வலைப்பூ தலைப்பையே மாத்துங்கறீங்க! லதானந்த் அண்ணாச்சி! என்னவோ தெரியல உங்களுக்கு. வம்பு புடிச்சு அலையறீங்க. பாவம், அண்ணி எப்படித்தான் உங்களை வெச்சு சமாளிக்குதோ!

 
On Nov 30, 2009, 7:06:00 PM , கிருபாநந்தினி said...

அன்புடன் மணிகண்டன், நீங்க சொல்லியிருக்கிறதைப் பார்த்தா நீங்களே எப்பவோ பணத்தைப் பறிகொடுத்திருப்பீங்க போலத் தெரியுதே! :)

 
On Nov 30, 2009, 7:09:00 PM , கிருபாநந்தினி said...

Anonymous Annaacchi/Akka, unga peraikkooda chollappadaathaa? irunthaalum unga karuththaik kadaippidikkiren. thanksngnaa... (or) thankskkaa!

 
On Nov 30, 2009, 7:10:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கியண்ணே! உங்க பின்னூட்டத்துல கடைசி வரி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

 
On Dec 30, 2009, 2:19:00 AM , Anonymous said...

//‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ங்குறாரு வள்ளுவரு. கடவுளைக்கூடக் கும்பிடாம புருசனைக் கும்பிடுற பொம்பளை பெய்னு சொன்னா உடனே மழை பெஞ்சுடுமாம்! நம்புறீங்களா?//
ரொம்ப நல்லா எதுதறீங்க..... கவிதையை/ இலக்கியத்தை அப்பிடியே படிச்சி அர்த்தம் எடுத்துக்க வேண்டாம்.. Please