Author: கிருபாநந்தினி
•Friday, November 27, 2009
ழு வாரத்துக்கும் மேல இழுத்துப் பறிச்சுக்கிட்டுக் கிடந்த பாட்டியம்மா உசுரு பொட்டுனு ஒரு நாள் போயிட்டா, அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு எத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படுமோ, அத்தனைச் சந்தோஷமும் நிம்மதியும் ஒரு மெகா, மகா சீரியல் முடியப் போவதைக் கேட்குறப்போ ஏற்படுது.

‘கோலங்கள்’ சீரியலைத்தான் சொல்றேன். ஏன், உனக்கு சீரியலே பிடிக்காதா, இல்லே ‘கோலங்கள்’ சீரியல் மட்டும்தான் பிடிக்காதா, அது முடியறதுல உனக்கு ஏன் இத்தனைச் சந்தோஷம்னு நீங்க கேட்கலாம்.

எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கணும். சிறுகதைன்னா அதிகபட்சம் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; நாவல் இத்தனைப் பக்கம் இருக்கலாம்; தொடர்கதைன்னா இத்தனை வாரங்கள் போகலாம்; சினிமான்னா இத்தனை மணி நேரம் ஓடலாம்னு முடிவு பண்ணிக்கணும். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தா தப்பில்லை. ஆனா, எந்தத் தீர்மானமும் இல்லாம, கதை எந்தத் திசையை நோக்கிப் போகுதுன்னே தெரியாம, எங்கெங்கேயோ வளைச்சு வளைச்சு இழுத்துட்டுப் போய், என்னவோ ஒரு வசனம் சொல்வாங்களே, வண்டி மாடு மூத்திரம் பேஞ்சாப்போலேன்னு, அது மாதிரி கொண்டு போய் முச்சந்தியில விடக்கூடாது இல்லையா? ஒரு சீரியல் டைரக்டர் சீரியலை மட்டும் கொண்டு போய் முச்சந்தியில நிறுத்துறார்ங்கிறது இல்லை; அதை வேலை மெனக்கிட்டுப் பார்க்கிற ரசிகர்களையும் அலைக்கழிச்சு இழுத்துட்டுப் போய் முச்சந்தியில நிறுத்துறார்னுதான் அர்த்தம்!

அந்த வேலையைத்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம்.

பொதுவா எல்லாக் கண்ணராவி சீரியல்களையும் பெண்கள் ரசிச்சுப் பார்க்குறாங்கன்னு ஒரு பேச்சிருக்கு. அப்படி இல்லை. வேலைக்குப் போகாம வீட்டோடு இருக்கிற பெண்கள்தான் வேற பொழுதுபோக்கு இல்லாம சீரியல்களை, அது எத்தனை அபத்தமா இருந்தாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கு. அதுக்காக அதையெல்லாம் அவங்க ஒத்துக்குறாங்கன்னோ, ரசிக்கிறாங்கன்னோ அர்த்தமில்லை. அவங்களுக்கு அதை விட்டா வேற வழியில்லை.

‘கோலங்கள்’ ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கடந்த ஒரு வருஷமாத்தான் கோலங்கள் அலங்கோலங்கள் ஆயிடுச்சு. திருச்செல்வத்துக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. மெகா சீரியல்ல இது ஒரு வசதி. புதுசு புதுசா சண்டையை உற்பத்தி பண்ணலாம். புதுசு புதுசா கேரக்டர்களைக் கொண்டு வரலாம். சாகடிக்கலாம். அல்லது, காணாம போக்கிடலாம். யாரும் கேட்பார் கிடையாது. அப்படித்தான் பண்ணியிருக்கார் திருச்செல்வம். யார் யாரோ வந்தாங்க; போனாங்க. பல பேரைப் பத்தித் தகவலே இல்லை. அதையெல்லாம் லிஸ்ட் போடணும்னா இடம் பத்தாது.

ஆதிங்கிற கேரக்டர் அருமையான கேரக்டர். தொழிலில் திறமையும், மிடுக்கும் உள்ள கேரக்டர். அவனுக்கு அபியும், அபியைச் சேர்ந்தவங்களும் எதிரிங்க. அவங்களை அவன் எப்படி முன்னேறவிடாம தடுக்கிறான்னு காட்டாம, அவனை அபி எப்படி ஜெயிக்கிறாள்னு காட்டாம, அவனையும் கடைசியில கோட்டா சீனிவாசராவ் மாதிரி ஆக்கி, ‘ஏய்... ஏய்..’னு கத்த வெச்சு, (அந்த ஆளு ஆரம்பத்திலேர்ந்தே கத்திக்கிட்டுத்தான் இருந்தாரு. தொண்டைத் தண்ணி போகக் கத்தினதுக்கே அந்த ஆளுக்கு டபுள் சம்பளம் கொடுத்திருக்கணும்.) கண்டமேனிக்குச் சகலரையும் சுட்டுத் தள்ள வெச்சு, சைக்கோ மாதிரி ஆக்கி, கட்டட உச்சியிலேர்ந்து குதிக்க வெச்சு, மூளை குழம்பி, வெஜிடபிள் மாதிரி உட்கார்த்தி வெச்சா, இதுதான் ஒரு நல்ல சீரியலுக்கு லட்சணமா? அபி அவனை ஜெயிச்சதா அர்த்தமா? சகிக்கலை!

திருச்செல்வத்துக்கு திடீர்னு மூளை குழம்பி, திடீர்னு சுய நினைவு திரும்பிடுது. அதே போலவே ஆதிக்கும் திடீர்னு சுய நினைவு திரும்பி, “நான் சாகலடீ... சாகல... உங்களையெல்லாம் போட்டுத் தள்ளறதுக்காகத்தான் அப்படி நடிச்சேன்!”னு எழுந்து வந்து, இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு சீரியலை இழுத்துடுவாரோன்னு ஒரு பயம் திக் திக்னு நெஞ்சுக்குள்ள அடிச்சுக்குது.

லாஜிக் இல்ல, ஒரு மண்ணும் இல்ல. தோழர்னு ஒருத்தர் செந்தமிழ்ல பேசினார். செந்தமிழ்ல பேசுறது ஒண்ணும் தப்பில்ல. நல்ல விஷயம்தான்! சரித்திர நாடகமா இருந்தா ரசிக்கலாம். ஆனா, இதுல அவர் கேரக்டர் ஒட்டல. அந்தக் காலத்து அரசன் வேஷம் போட்டுக்கிட்ட ஒருத்தன் தவறுதலா சமூக நாடக மேடையில புகுந்து குழப்படி பண்ணின மாதிரி இருந்தது.

சரி, அதையாச்சும் மன்னிக்கலாம், நல்ல தமிழுக்காக! (ஆனால், தோழர் முழுக்க முழுக்கத் தனித் தமிழ்ல பேசலை. அவர் பேச்சுல வேற்று மொழிச் சொற்கள் நிறைய கலந்திருந்தது. உதாரணமா, விஷயம் என்கிற வார்த்தையை அவர் விசயம், விசயம்னுதான் உச்சரிச்சார். ‘ஷ’வை ‘ச’வாக்கிட்டா அது நல்ல தமிழ் வார்த்தையாயிடுமா என்ன?) ஆனா, ஏழு வருஷத்துக்கு மேல ஒரு கதையை இழு இழுன்னு இழுத்து வந்துட்டு, கடைசி ரெண்டு மூணு எபிஸோடுல அடுத்தடுத்து பல பேர் தடாலடியா திருந்திடறதா காண்பிச்சா, பார்த்துக்கிட்டிருக்கிற அத்தனை பேரும் இளிச்சவாயங்களா? ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த பழைய தமிழ்ப் படங்கள்லதான் இந்த மாதிரி கூத்து நடக்கும்.

அசட்டுத்தனமான காட்சிகள் நிறைய. தோழர் எதிரிகள்கிட்டேர்ந்து தப்பிக்க தாவித் தாவிக் குதிச்சு ஓடறார். அப்போ அபிக்கு போன் பண்றார். பெரிய தொழிலதிபரான அந்தம்மா (பிராஜக்ட் வொர்க்குக்காக அந்தம்மா இந்த ஏழு வருஷத்துல ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடலே. என்னவோ போய் கட்டடம் கட்ட இடம் பார்த்தாங்களாம். அத்தோட சரி! ஆதியும் இதே கேஸ்தான். என்ன பிராஜக்டோ, என்ன பில்டிங் காண்ட்ராக்டர்களோ! தேவுடா!) செல்போனை கார்லயே போட்டுட்டு வந்து, பாட்டியம்மாவை ஆறுதல் படுத்துது; படுத்துது; படுத்திக்கிட்டே இருக்குது. அட, அவராச்சும் ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்; அந்தப் பொம்பளை எடுக்க மாட்டேங்குது; வேற யாருக்காச்சும் ட்ரை பண்ணுவோம்னு பண்றாரா? அவரோட சக தோழருங்க யாருக்காச்சும் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே?

அப்புறம்... தோழர் மறைவுக்கு இரங்கல் அஞ்சலி மீட்டிங். எல்லாரும் ஆவேசமான குரல்ல கத்திப் பேசிட்டிருக்காங்க. அப்போ அபிம்மாக்கு போன் வருது, தொல்ஸ் கிட்டேர்ந்து. எடுத்துப் பேசுதாம். குரல் கேக்கலையாம். “ஆ... சொல்லுங்க, சொல்லுங்க... கேக்கல...” இப்படியே பேசி பொழுதப் போக்கிடுச்சு. இடத்தை விட்டுக் கொஞ்சம் நகர்ந்து போய்க் கேட்போம்கிற அறிவுகூட அந்தம்மாவுக்கு இல்லே. அப்புறம் லேட்டா ஞானோதயம் ஏற்பட்டு, வெராண்டாவுக்கு வருது. அப்பவும் கத்தல் சத்தத்துல காதுல கேக்கல. படியில இறங்கிப் போய்க் கேட்க அதிக பட்சம் ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்காது. ஆனா, இந்த ஸீன் டி.வி-யில பத்து நிமிஷம் ஓடிச்சு.

கார்ல போயிட்டிருக்கும்போது, ஆதி போன் பண்றான் அபிக்கு, உன் வீட்டார் எல்லாரையும் போட்டுத் தள்ளிடுவேன்னு. இந்தம்மா உடனே என்ன பண்ணணும்? தன் வீட்டுக்கு போன் போட்டு, விஷயத்தைச் சொல்லி, உடனே வேறெங்காவது போயிடுங்கன்னு சொல்லிட்டு அப்புறம் இல்லே போலீஸுக்கோ புடலங்காய்க்கோ சொல்லணும்? அதான் இல்லே! முதல்ல சி.பி.ஐ-க்கு போன் போடுது. அந்தாளு எதையுமே சீரியஸா எடுத்துக்காம பாட்டுப் பாடிக்கிட்டுத் திரியறவரு. போயும் போயும் அவருக்கா சொல்லணும்? அவர் என்னடான்னா நான் மயிலாப்பூர்ல இருக்கேன், மாமண்டூர்ல இருக்கேன்கிறாரு. அப்புறமா வீட்டுக்குப் போன் போடுதாம் அபிம்மா. நம்பரை மாத்திட்டாங்களாம். ‘சே... சே...’ங்குது. நமக்குத்தான் சேச்சேன்னு சொல்லத் தோணுது. இவங்களே சொல்லிக்கிட்டா எப்படி?

இந்தக் கூத்துல, கிளைமாக்ஸை யாரு கரெக்டா கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு அசத்தலான பரிசுகள் உண்டுன்னு ‘அவள் விகடன்’ பத்திரிகையில போட்டிருக்குது.

அதெப்படி கரெக்டா கண்டுபிடிக்கிறது? இந்நேரம் வரைக்கும் கரெக்டான முடிவு எதுன்னு திருச்செல்வத்துக்கே தெரியுமோ, தெரியாதோ!

எனக்குப் பரிசு வேணாம்ப்பா! எனக்கு அவ்ளோ சாமர்த்தியம் பத்தாது!

எனது அடுத்த பதிவு: செய்திகள் வாசித்து எரிச்சல்படுவது உங்கள் கிருபாநந்தினி.
|
This entry was posted on Friday, November 27, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

32 comments:

On Nov 27, 2009, 11:32:00 PM , பின்னோக்கி said...

நான் இந்த சீரியல் ஆரம்பிச்ச புதுசுல ஒரு 10 எபிசோட் பார்த்திருக்கேன். 7 வருஷம் கழிச்சு நீங்க முழுக் கதை (???)யும் சொல்லியிருக்கீங்க. ஆனா, முதல் 10 எபிசோட்ல வந்த கதையதான் 7 வருஷமா காண்பிச்சுருக்காங்க. பாவங்க இத பார்த்தவங்க.

----

நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் புதிதாக எழுதுபவர் போல தெரியவில்லை. எ.காட்டாக
//நிறுத்துறார்ங்கிறது இல்லை; அதை
இதில் ; பெரும்பாலானவர்களின் எழுத்தில் பார்த்ததில்லை. ஆனால் இதை உபயோகப்படுத்தியதிலிருந்து, தமிழை, வாக்கியத்தை அமைக்கும் முறை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கிறது என்பது புரிகிறது. நல்ல எழுத்து நடை. தொடருங்கள்.

 
On Nov 28, 2009, 6:35:00 AM , ரிஷபன் said...

கோலங்கள் சீரியல் பத்தி சீரியசா எழுதி கண் கலங்க வச்சுட்டீங்க எத்தனை பேரோட கோபத்தை வாங்கிக்க போறீங்களோ (எனக்கு தெரிஞ்சு அதை யாரும் ரசிச்சு பார்த்த மாதிரி தெரியல. திட்டிகிட்டே தான் பார்த்தாங்க. ஆனா 'பார்த்தாங்க'. அந்த துணிச்சல்தான் 'திருச்செல்வத்துக்கு' இப்படி மானாவாரியா கதை பண்ணதுக்கு) விகடன் டாப் டென்ல இந்த சீரியல முதல் இடத்துல போட்டாங்க அப்ப.. வடிவேலுகிட்ட ஒரு பாட்டி கேட்டுச்சாம் "ஏம்பா நீங்க எடுக்கற படத்தை போட்டு பார்ப்பீங்களா .. அப்புறம் எப்படி தியேட்டருக்கு அனுப்பறீங்க தைரியமா ' - திருச்செல்வத்திற்கும் அதே கேள்விதான் !

 
On Nov 28, 2009, 6:57:00 AM , செயல் அறிந்தான் said...

ஐயோ பாவம்! எழுவருசமா விடாம பார்த்துட்டு முடியப்போகுதேன்னு கவலையில பேசுரமாதிரி இருக்கே நண்பரே , சீன் பை சீன் கலக்கலா சொல்றீங்க, ஒருவேளை வேறு வழியில்லாம பார்த்தே ஆகவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களோ என்னமோ, (வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதை நாமும் பார்த்தாக வேண்டுமே ) இருந்தாலும் உங்களின் கருத்தகளையும் இயக்குனர் யோசித்து செயல்பட்டு இருக்கலாம், உங்கள் ஆதங்கம் ஞயாயம் தான்

 
On Nov 28, 2009, 8:05:00 AM , CS. Mohan Kumar said...

முதல் பதிவே அதிரடியா இருக்கு. நிச்சயம் நல்லா வரும் எழுத்து உங்களுக்கு. பயப்படாம மேலே போங்க

 
On Nov 28, 2009, 11:58:00 AM , Rajeswari said...

சாரிங்க ..நான் சீரியெல்லாம் பார்க்கிறது இல்லை.ஆனா ,ரசித்து அதைப்பற்றி எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்..

அச்சீரியலின் சில காட்சிகளை (தோழர் என்ற ஒருவர் இறந்து போய்விடுவதுபோல)மட்டும் பதிவர் நர்சிம் அவர்களின் தளத்தில் பார்த்திருக்கிறேன்...

 
On Nov 28, 2009, 12:15:00 PM , Gokul said...

//நான் இந்த சீரியல் ஆரம்பிச்ச புதுசுல ஒரு 10 எபிசோட் பார்த்திருக்கேன். 7 வருஷம் கழிச்சு நீங்க முழுக் கதை (???)யும் சொல்லியிருக்கீங்க. ஆனா, முதல் 10 எபிசோட்ல வந்த கதையதான் 7 வருஷமா காண்பிச்சுருக்காங்க. பாவங்க இத பார்த்தவங்க.//

repeatu


//அவங்களுக்கு அதை விட்டா வேற வழியில்லை//

பாவம்..
இப்பவாவது தப்பித்தீர்களே..

 
On Nov 28, 2009, 12:32:00 PM , கிரி said...

நல்லா எழுதி இருக்கீங்க.. கோலங்கள் சீரியல் பலரை டெர்ரர் ஆக்கி இருந்தாலும் பலரை வேறு வழில்லாமல் "பார்க்க" வைத்த பெருமைக்குரியது :-)

கொஞ்ச மாதம் முன்பு நான் எழுதிய பதிவு

"கோலங்களும் அரசியும்" என்னை படுத்தும் பாடு :-((

 
On Nov 28, 2009, 12:38:00 PM , லதானந்த் said...

சபாஷ் நந்தினி!
அட்டகாசம். அற்புதம். ஆரம்ப இடுகைனு நம்பவே முடியலை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒரு விஷயம்.
எனக்கு மகா மகா எரிச்சல் ஊட்டுனது தோழர் கேரக்டர் (அப்பப்ப நாமளும் கோலம் பாப்பம்ல?)
அவருக்கு உச்சரிப்புல தகராறு. ‘ஷ’ வராது. அவ்வளவு ஏன்? தொல்ஸுக்கும் உச்சரிப்பு சைபர்.

 
On Nov 28, 2009, 12:41:00 PM , கிரி said...

இயக்குனர் ஷண்முகப்ரியன் படித்துறை என்ற தலைப்பில் எழுதி வருகிறார்

 
On Nov 28, 2009, 1:26:00 PM , Anonymous said...

100% sariyana vimarsanam.nandri

 
On Nov 28, 2009, 5:27:00 PM , லதானந்த் said...

மேலும் ஓர் ஆலோசனை!
டெம்ப்ளேட்டிலும் நதி - படித்துறைப் படம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே?

 
On Nov 28, 2009, 10:02:00 PM , பொன்னியின் செல்வன் said...

என்னது கோலங்கள் முடியப்போதா! அப்ப '2012' அதுக்குள்ள வரப்போதா !

// அதுக்காக அதையெல்லாம் அவங்க ஒத்துக்குறாங்கன்னோ, ரசிக்கிறாங்கன்னோ அர்த்தமில்லை. அவங்களுக்கு அதை விட்டா வேற வழியில்லை. //

இதில் ஒரு நியாயம் இருக்கிறது.

// ஆனா, ஏழு வருஷத்துக்கு மேல ஒரு கதையை இழு இழுன்னு இழுத்து வந்துட்டு, கடைசி ரெண்டு மூணு எபிஸோடுல அடுத்தடுத்து பல பேர் தடாலடியா திருந்திடறதா காண்பிச்சா, பார்த்துக்கிட்டிருக்கிற அத்தனை பேரும் இளிச்சவாயங்களா? //

:-) :-)

// ஆனா, இந்த ஸீன் டி.வி-யில பத்து நிமிஷம் ஓடிச்சு. //

அப்புறம் எப்படி ஏழு வருஷம் இழுக்கிறதாம் !



இந்த இடுகையைப் படித்தவுடனும் கோலங்கள் கதை புரியவில்லை, ஆனாலும் தலைப்பிற்கு ஏற்ற அலங்-கோலங்கள் நாடகத்தில் நன்றாகவே இருக்கிறது என்பது மட்டும் எழுத்தின் கோர்வை மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது !!


வாழ்த்துக்கள்...

 
On Nov 28, 2009, 11:09:00 PM , கிருபாநந்தினி said...

பீர் மொஹம்மது, கிருஷ்ண பிரபு... நீங்க ரெண்டு பேரும்தான் சொன்னீங்க... ஃபாலோயர்ஸ் விட்ஜெட் வைங்கன்னு. அப்ப முயற்சி பண்ணேன். என்னவோ பிரச்னை. முடியலை. ஆனா, இப்ப வெச்சுட்டேன். என்ன, ஃபாலோயர்ஸா சேர்ந்து எனக்கு உற்சாகமூட்டுவீங்களா? அட்வான்ஸ் தேங்க்ஸ்!

பின்னூட்டம் இடுவதில் மட்டுமில்லாம, ஃபாலோயர்ஸா சேருவதிலும் முதல்ல இடம் பிடிச்ச பின்னோக்கிக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ்! உங்களுக்கு நான் ஏதாவது பரிசு தரணும்னு நினைக்கிறேன். என்ன தரலாம்?

 
On Nov 28, 2009, 11:57:00 PM , vettippayapullaiga said...

நான் கல்லுரி ல படிக்கும் போது ஆரம்பிச்சாங்க இந்த நாடகத்த. ஆனா சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி கொடுமையை நான் பாத்ததே இல்லை. கதையை எங்கே எங்கயோ கொண்டு பொய் கடைசில இப்டி கொண்டு வந்து நிறுத்தி அவங்களும் குழம்பி நம்மளையும் குழப்பி விட்டுட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா இதை 7 வருஷமா தொடர்ந்து பாத்துட்டு இன்னும் இது முடியபோவுதுன்னு நெறைய பேரு வருத்தமா இருக்காங்க. என்ன கொடும திருச்செல்வம் இது ???!!!!!

 
On Nov 29, 2009, 10:58:00 AM , கௌதமன் said...

கோலங்கள் - என் உறவினர் வீட்டிற்குச் சென்றபொழுது,
அந்த உறவினர்கள் - கோலங்கள் நேரத்தில் எங்கள்
வீட்டுக்கு வந்தால் மட்டும் - வேறு வழி இல்லாமல்
பார்த்தது உண்டு.
கவரவில்லை.
ஆனா உங்க விமரிசனம் நல்லா இருக்கு.

 
On Nov 30, 2009, 7:14:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கியண்ணே! வஞ்சனையில்லாம பாராட்டினதுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல. ஆனா, ஒரு உதாரணம் கொடுத்துருக்கீங்க. அது என்னன்னு சரியாப் புரியல!

 
On Nov 30, 2009, 7:15:00 PM , கிருபாநந்தினி said...

மோகன்குமார், உங்க சப்போர்ட்டும் அதிரடியா இருக்கு. தேங்க்ஸ்!

 
On Nov 30, 2009, 7:17:00 PM , கிருபாநந்தினி said...

செயல் அறிந்தான்! நாந்தான் சொன்னேனுங்களே, இழுத்துப் பறிச்சுக்கிட்டுக் கிடக்கிற பெரிசு பொட்டுனு ஒரு நா போய்ச் சேர்ந்தா, நிம்மதி இருந்தாலும், கொஞ்சம் வருத்தமும் இருக்கும் இல்லையா! அப்படின்னு வெச்சுக்கோங்க.

 
On Nov 30, 2009, 7:19:00 PM , கிருபாநந்தினி said...

ரிஷபன்! என்னது... கண்கலங்க வெச்சுட்டேனா? சிரிப்புலதானே? எதுக்கும் ஒரு டவுட்டுக்குக் கேட்டுக்கறேன். :)

 
On Nov 30, 2009, 7:21:00 PM , கிருபாநந்தினி said...

Paraatturathukku anonymous porvai ethukku thozhare? Thitturathaa irundhakkooda porvai illaama thittalaame?

 
On Nov 30, 2009, 7:23:00 PM , கிருபாநந்தினி said...

கிரி, அது ஷண்முகப்ரியனின் படித்துறை. இது என் படித்துறை. படுத்தறீங்களே! :)) குமுதம் சிநேகிதி, மஞ்சுளாவின் சிநேகிதின்னு ரெண்டு புத்தகம் வரலையா? அட, விடுங்கண்ணே!

 
On Nov 30, 2009, 7:26:00 PM , கிருபாநந்தினி said...

லதானந்த் அங்கிள்! (உங்களை அண்ணாச்சின்னும் அங்கிள்னும் மாத்தி மாத்திக் கூப்ட்டுக் கொழப்புறேன்ல?) தொல்ஸுக்கு உச்சரிப்பு சரியா வரலேன்னா பரவாயில்லீங்க. தமிழ் தமிழ்னு கத்துறவர் தமில் வால்கன்னா எப்படிச் சகிச்சுக்கிறது?

 
On Nov 30, 2009, 7:31:00 PM , கிருபாநந்தினி said...

கிரி! உங்க ‘கோலங்களும் அரசியும்’கிற பதிவை இப்பத்தான் படிச்சேன். ஹையோ... ஹையோ... ஹையோ..! என் மனசுல இருந்ததையெல்லாம் அப்படியே புட்டுப் புட்டு வெச்சிருக்கீங்க! சரி, நம்ப ரெண்டு பேர்த்துக்கும் ஒரே அலைவரிசை இருக்குதுன்னு உடனே உங்க ஃபாலோயராகிட்டேன்!

 
On Nov 30, 2009, 7:33:00 PM , கிருபாநந்தினி said...

கோகுல்! ஒரு அலைக்குத் தப்பிச்சாலும் இன்னொரு அலை வந்து இழுத்துட்டுப் போயிடும் சாமி!

 
On Nov 30, 2009, 7:34:00 PM , கிருபாநந்தினி said...

\\ரசித்து அதைப்பற்றி எழுதிய// ரசிச்சு(?) எழுதினேனா? என்னங்க ராஜேஸ்வரி இப்படிக் கவுத்திட்டீங்க?

 
On Nov 30, 2009, 7:37:00 PM , கிருபாநந்தினி said...

லதானந்த் அண்ணாச்சி! உங்க ஆலோசனை, உங்க பாஷையிலேயே சொன்னா, நெம்ப பிரமாதம்! அப்படித்தான் டெம்ப்ளேட் தேடினேன். கிடைக்கலை! :( நீங்க அனுப்பின படித்துறை போட்டோ சூப்பரு. ஆனா, அதை எப்படி என் டெம்ப்ளேட்டுல ஏத்துறதுன்னு தெரியலை. வூட்டுக்காரருகிட்ட கேட்டாக்க, ‘எல்லாம் நீ எழுதுற லட்சணத்துக்கு இதுவே போதும்; நல்லாத்தான் இருக்குது. ஆள விடு!’ங்கிறாரு! :((

 
On Nov 30, 2009, 7:39:00 PM , கிருபாநந்தினி said...

\\என்னது கோலங்கள் முடியப்போதா! அப்ப '2012' அதுக்குள்ள வரப்போதா!// பொன்னித் தம்பி! அசத்திட்டீங்க!

 
On Nov 30, 2009, 7:42:00 PM , கிருபாநந்தினி said...

பேரு வெட்டிப்பய புள்ளைகன்னு வெச்சுக்கிட்டாலும், நீங்க சொல்ற கருத்து அம்சமா இருக்குது!

 
On Nov 30, 2009, 7:45:00 PM , கிருபாநந்தினி said...

கே.ஜி.கௌதம், கவித மாதிரி ஏதோ எழுதியிருக்கீங்க. எனக்குக் கவிதன்னா கொஞ்சம் கேரிங்கா இருக்கும்க! ஸாரி! கடைசி வரி மட்டும் பாராட்டுறீங்கன்னு பளிச்சுனு புரியுது. தாங்க்ஸ்!

 
On Nov 30, 2009, 8:45:00 PM , லதானந்த் said...

படித்துறை போட்டோவை ப்ரொஃபைல்லகூட சேக்கலாம். இல்லேனா என்ர பிளாக்குல என்ர படமெல்லாம் இருக்குதலோ அந்த மாதிரியுங்கூடிச் சேத்தலாம்.
அந்தப் படித்துறையின் நதி கங்கை நதி. போட்டோ புடிச்சது ஒரு காமிரா மேதை.ஹிஹி

 
On Dec 2, 2009, 5:43:00 PM , gayathri said...

iyoooooooo naaum 1-12-2009 friday voda intha nadagam mudiumnu asaiya pathtu irunthen

enga javvu mettati mathiri ezuthute iurkaga

sari lsotla tholkapiyan pesinatha patha , abi avara than kalyanam pannipaganu nenachen lostla athuvum illa

marupadium abi avaga vetuku karuke ok sollitraga

ok solli 10 nimisam kuda akala odane nee en ketta poi sollita unna mannika mudiyathunu vendamnu solraga

pavam abi husbend nejamalume therunthetaru kadisila avarum iranthutaru

ippadiye pona intha mudikka innum 1 varusam akum

 
On Dec 6, 2009, 2:13:00 PM , காரணம் ஆயிரம்™ said...

தினம்தினம் அரைமணி நேரத்திற்கு சுமார் ஏழு வருடம்.. சனி ஞாயிறு நீங்கலாகப்பார்த்தால், சுமார்
574 மணிநேரங்கள்.. நாட்கணக்கில், பார்த்தால் சுமார் 24 நாட்கள்(பகல் இரவு என்று தூங்காமல் ஒரே மூச்சில் பார்த்தால்!). பகலில் மட்டும் என்றால், சுமார் 48 நாட்கள்.. இந்தக்கணக்கு ஒரு தனி மனிதனுக்கு!

தமிழகத்தில் டிவி பார்க்கிற 2-3 கோடி மக்களில், கோலங்கள் பார்ப்பவர்கள் மட்டும் 1.5 கோடி என்றாலே, அவர்களின் மொத்த நாட்கள் - 72 கோடி வாழ்நாட்கள் !!!

அம்மாடி தல சுத்துதே !!!

http://kaaranam1000.blogspot.com