Author: கிருபாநந்தினி
•Sunday, January 31, 2010
விருது கொடுத்து கௌரவிக்கிறது ஒரு வகை; விருது கொடுத்துக் கேலி பண்றது ஒரு வகை! ‘பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜுக்குச் ‘சிறந்த குழந்தைகள் பட இயக்குநர்’ விருது கொடுத்தது அவரை கேலி பண்ற மாதிரின்னு போன பதிவுல எழுதியிருந்தேன்.

இந்தக் குடியரசு தினத்தையொட்டி நம்மாளுங்க 13 பேருக்கு ‘பத்ம’ விருது அறிவிச்சிருக்கு மத்திய அரசு. இதைப் பத்தி எனக்குத் தோணினதை எழுதப் போறேன். இது என் கருத்து. எனக்குச் சரின்னு பட்டதை எழுதியிருக்கேன். இதுவே சரியான கருத்தா இருக்கணும்கிற அவசியமில்லே!

‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது’ங்கிறாரு வள்ளுவரு.

‘காலந்தாழ்த்தித் தரும் விருது பெரிதெனினும்
கடுகினும் மாணச் சிறிது’ங்கிறேன் நான்.

பத்ம விருதுக் கமிட்டியில இருக்கிறவங்களுக்கு சுய புத்தியே கிடையாதோன்னு ஒவ்வொரு முறை பத்ம விருதுகள் அறிவிக்கும்போதும் நம்மளை யோசிக்க வெச்சுடறாங்க. விஞ்ஞானி வெங்கடராமனுக்கு பத்ம விபூஷண் கொடுத்திருக்காங்க. வேற ஒரு காரணமும் இல்லே; அவர் சமீபத்துல நோபல் பரிசு வாங்கிட்டாரில்லையா, அதான்!

தகுதியானவங்களுக்கு விருது கொடுத்து, அவங்களை மரியாதை செய்யுறது ஒரு வகை. விருது பெற்றவங்களுக்கே விருது கொடுத்து அந்த விருதுக்கே மரியாதையைத் தேடிக்கிறது இன்னொரு வகை. வெங்கடராமனுக்குக் கொடுத்த விருது இந்த ரெண்டாவது வகையைச் சேர்ந்ததுதான். அதே போலத்தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்ம பூஷண் கொடுத்ததும்.

உலகின் உச்சபட்ச விருதான ஆஸ்கரை ஒண்ணுக்கு ரெண்டா தட்டிக்கிட்டு வந்துட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். (போதாக்குறைக்கு ரெட்டை கிராமி விருது வேற! சரியான மச்சக்காரன்! எல்லாமே ரெட்டை ரெட்டையா வந்து கொட்டுது அவர் மடியில! இப்ப நெனைச்சிருப்பாங்க நம்மாளுங்க, அவருக்கு பாரத ரத்னாவே கொடுத்திருக்கலாம் போலிருக்கேன்னு!) அவருக்கு பத்ம பூஷணோ, விபூஷணோ கொடுக்கலைன்னு இங்கே யாரும் அழப்போறது இல்லை. அவரும் கேக்கப் போறது இல்லை. ஆனா, கொடுத்திருக்காங்கன்னா நெஜம்மாவே அவங்கவங்க தகுதியைப் பார்த்துதான் கொடுக்குறாங்களான்னு டவுட்டா இருக்கு. ஆஸ்கர் வென்ற நாயகனுக்கு நாமும் நம்ம சார்புல ஒரு விருது கொடுக்கலைன்னா நமக்கு மரியாதையா இருக்காதுன்னு நெனைச்சுக் கொடுத்தாப்பல இருக்கு. குட்டிக் குட்டிக் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் ‘நான் தரேன் டாக்டர் பட்டம், வாங்கிக்க... வாங்கிக்க...’னு கூப்பிட்டுக் கூப்பிட்டு சிலருக்கு விருது கொடுப்பாங்க பார்த்திருக்கீங்களா, அது அவங்களுக்குச் செய்யுற மரியாதை இல்லை. அவங்களுக்குக் கொடுக்கிறதன் மூலம் தனக்குத் தானே தேடிக்கிற மரியாதை! மத்திய அரசும் அந்த லிஸ்ட்ல வந்துட்டதுதான் வருத்தமா இருக்கு. (அப்படித்தான் மிகப் பெரிய இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது கிடைச்சவுடனே, நம்மாளுங்க ஓடோடிப் போய் அவர் கையிலே ‘பாரத ரத்னா’வைத் திணிச்சுட்டு வந்தாங்க. நாளைப்பின்ன யாரும் நாக்குல பல்லு போட்டுப் பேசிடக் கூடாது பாருங்க!)

சரி, ரஹ்மானுக்கு ஒரு பூஷண் கொடுத்தாச்சு! கூடவே, கொறையில்லாம இளையராஜாவுக்கும் கொடுத்தாச்சு! பின்னே, ரஹ்மானுக்குக் கொடுத்துட்டு இளையராஜாவுக்குக் கொடுக்கலையான்னு கேக்க தமிழ்நாட்டுல ஒரு கோஷ்டியே இருக்கே! அதனால அவருக்கும் ஒரு பூஷண் கொடுத்துடுவோம்னு கொடுத்தாப்லதான் இருக்கு இது. என்னைக் கேட்டா சிந்து பைரவி காலத்திலேயே ராஜாவுக்கு பத்ம விருது கொடுத்திருக்கணும். இப்ப ரஹ்மானோட சேர்த்துக் கொடுத்தா, தகுதியைப் பார்த்துக் கொடுத்த மாதிரியே தெரியலை. திட்டு வாங்கிக் கட்டிப்பானேன்னு கொடுத்த மாதிரிதான் இருக்கு.

சரி, இவருக்காவது எப்படியோ ஒரு விதத்துல பூசணியை, ஸாரி, பூஷணைக் கொடுத்துட்டாங்க. பாவம், எம்.எஸ்.வி. வாயில்லாப் பூச்சி! அவருக்காவும் வாய் விட்டுக் கேக்கத் தெரியாது; அவருக்காகக் குரல் கொடுக்கவும் இங்கே யாரையும் காணோம்! சரி விடுங்க, மகா இசை மேதையான அவருக்கு ஒரு விருது கொடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக்க மத்திய அரசுக்கு யோக்கியதை இல்லை. வேறென்ன சொல்றது?

‘மு.கருணாநிதியா, ஏ.கருணாநிதியா?’ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். ‘ஒரு தலைவன் இருக்கிறான்’னு எம்.ஜி.ஆர். பாடினது தன்னைத்தான்னு கூசாம சொல்லிக்கிட்டாரே முதல்வர் கருணாநிதி, அதைக் கிண்டல் பண்ணி எழுதினதுதான் அது. ஆனா, புரட்சித் தலைவியம்மா சும்மா விடுவாங்களா, ‘அம்மான்னா சும்மாவா?’ன்னு தலைப்புப் போட்டு ஒரு பதிவு எழுத என் கையைத் துறுதுறுக்க வெச்சுட்டாங்க.

‘திருவளர்ச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ?’ன்னு பாடினது என்னைத்தான்’னு திருவாய் மலர்ந்தருளியிருக்காங்க. எனக்கு நெஜம்மாவே புரியலீங்க, இவங்க ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்டு நம்மளையெல்லாம் முட்டாளாக்குறாங்களா, இல்லே, சீரியஸாதான் இதையெல்லாம் சொல்றாங்களான்னு புரியவே இல்லே! யார் யாரோ எழுதின சினிமா பாட்டுக்கெல்லாமா இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து முட்டி மோதுவாங்க?

சரி, அப்படின்னா நான் ஒரு பாட்டு சொல்றேன். அதையும் எம்.ஜி.ஆர். இந்தம்மாவைப் பார்த்துதான் பாடியிருக்காரு. அதையும் ஒத்துக்குறாங்களா?

‘என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ?
ஏறி வந்த ஏணி தேவையில்லை என்று ஏழை பக்கம் சாடுகின்றதோ?
பட்டோடு பருத்தியைப் பின்னியெடுத்து
உங்க பகட்டுக்குப் புத்தாடை யார் கொடுத்தா?
கட்டாந்தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைச்சா?’ன்னு அந்தக் கதாபாத்திரத்தை நினைச்சுப் பாடலே, ஜெயலலிதாவைத்தான் அப்படிக் குற்றம் சொல்லிப் பாடுறார் எம்.ஜி.ஆர்.னு எடுத்துக்கலாமா?

போங்கய்யா, போங்கம்மா... வேற வேலை வெட்டி இல்லே!

நான் பதிவெழுத வந்ததே இப்பக் கொஞ்ச நாளாதான்! ‘எனது ரசனை’ங்கிற வலைப்பூவுல ‘ரசிக்கும் சீமாட்டி’யம்மா ஒரு போட்டோவைக் கொடுத்து, அதுக்குத் தோதா ஒரு கமென்ட் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தாங்க. கீழே இருக்கு பாருங்க, அதான் அந்தப் படம்! அதுக்கு நான் எழுதின கமென்ட்: “யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”

நான் என்னவோ சும்மா ஜாலியாதான் எழுதிப் போட்டேன். அட, என்ன ஆச்சரியம்! ரசிக்கும் சீமாட்டியம்மா என் கமென்ட்டை செலக்ட் பண்ணி, ‘கமென்ட் குயின்’கிற அவார்டையும் கொடுத்து கௌரவிச்சுட்டாங்க! நான் எழுதின ஒண்ணு நல்லாருக்குன்னு மத்தவங்களால செலக்ட் ஆனது முதல் முறையா இதுதான்கிறதால, எனக்கு ரெட்டை ஆஸ்கர், ரெட்டை கிராமி விருது கிடைச்ச மாதிரி இருந்துது. மறுபடி ஒருக்கா, ரசிக்கும் சீமாட்டியக்காவுக்கு என் நன்றிகளைச் சொல்லிக்கிறேன்.

அடுத்தபடியா எனக்கு ரொம்பச் சந்தோஷம் தந்த விஷயம், பிரபலமான ‘இட்லிவடை’ பிளாக்ல, நான் என் பதிவுல எழுதியிருந்த நடிகர் விஜய் சம்பந்தமான ஜோக்ஸையெல்லாம் எடுத்துப்போட்டு, என் பிளாகுக்கு லின்க்கும் கொடுத்து என்னைப் பிரபலமாக்கினது. இட்லிவடைக்கு தேங்க்ஸ்!

மூணாவது சந்தோஷம், என் பேர் நல்லா எழுதும் வலைப்பதிவர்கள் லிஸ்ட்ல ‘தினமணி’ பேப்பர்ல வந்தது!

தொடர்ந்து, மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரன் ஐயா என் பதிவை நேரம் ஒதுக்கிப் படிச்சதோடல்லாம, வேலை மெனக்கிட்டு அதைப் பாராட்டிப் பின்னூட்டமும் இட்டிருக்காரு. இது என் நாலாவது சந்தோஷம்.

இப்ப அஞ்சாவதா ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு. ‘என் டயரி’ பதிவுல ரவிபிரகாஷ் தன்னோட ஒரு புத்தகத்துக்குப் பேர் வைக்கச் சொல்லிக் கேட்டிருந்தாரு. ஏதோ எனக்குத் தோணினதையெல்லாம் எழுதி அனுப்பினேன். சத்தியமா என்னோடதை அவங்க செலக்ட் செய்வாங்கன்ற நம்பிக்கையே எனக்குக் கிடையாது. நான் பிளாக்னு முதல்முதலா படிக்க ஆரம்பிச்சது ரவிபிரகாஷோட ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ பிளாக்குகளைத்தான். அதுல முன்னே அவர் தான் விரும்பிப் படிக்கிற பிளாகுகளையெல்லாம் லின்க் கொடுத்திருந்தாரு. அதன் மூலமாதான் லதானந்த் பக்கம், இட்லிவடை, யுவகிருஷ்ணானு மத்த வலைப்பூக்களையெல்லாம் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். அதனால ஒரு ஆர்வத்துல எனக்குத் தோணின பேர்களையெல்லாம் எழுதினேன். அதுல ஒண்ணை (புதுமொழி 400) செலக்ட் பண்ணிட்டதா இப்ப அறிவிச்சிருக்காரு. அதுக்குப் புத்தகப் பரிசும் அனுப்புறதா சொல்லியிருக்காரு. அதைவிட சந்தோஷம் என்னன்னா, தலைப்பு கொடுத்ததுக்காக அந்தப் புத்தகத்துலேயே எனக்கு நன்றியும் சொல்லியிருக்காராம்.

ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது. நன்றிங்ணா! நன்றிங்கக்கா! என் பதிவைப் படிக்கிற, பாராட்டுற, குட்டு வைக்கிற ‘தமிழ்நதி’யக்கா உள்பட எல்லாருக்கும் நன்றி!
.
|
This entry was posted on Sunday, January 31, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On Feb 4, 2010, 12:21:00 AM , butterfly Surya said...

இந்த பதிவுக்கும் கமெண்ட் போட்டிருக்கேன். அது ஆறாவது சந்தோஷமாக இருக்கட்டும்.

 
On Feb 4, 2010, 1:36:00 AM , பிரியமுடன்...வசந்த் said...

தொடர்ந்து சிறப்பா எழுதிட்டு வாரிங்க சார் பாராட்டும் சிறப்பும் கரெக்க்டாத்தான் கிடைக்குது... வாழ்த்துகள்...ஆனா விஜயை கலாய்ப்பதை குறைச்சுக்கங்களேன் ப்ளீஸ்...

 
On Feb 4, 2010, 10:33:00 AM , வி. நா. வெங்கடராமன். said...

வலைப்பூ எழுத ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே இத்தனை பாராட்டுக்களா! இது உங்களது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மற்றவர்களும் உங்களைப்பார்த்து கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்த்துக்கள்.

குறிப்பு: உங்கள் முகவரி ரவிப்ரகாஷ் சாருக்கு அனுப்பியாச்சா? அவரோட அடுத்த பதிவிலேயும் கேட்டு இருக்கார்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

 
On Feb 4, 2010, 4:06:00 PM , சத்ரியன் said...

//ம்ஹூம்... மேல எழுத முடியலீங்க. கண்ணுல தண்ணி முட்டுது.//

பார்ர்ர்ர்ர்ர்ரா...! இம்பூட்டு நட்னதுப் போச்சா.

வாழ்த்துகள் சகோதரி.

 
On Feb 4, 2010, 7:39:00 PM , ரவிபிரகாஷ் said...

என் மதிப்புக்குரிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. அவர்களுக்கு யாரும் எந்தவொரு விருதும் கொடுத்துக் கௌரவிக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. முழு கர்னாடகமாக இருந்த திரை இசையை பல ராக, ஸ்வரங்களையும் கலந்து ஜனரஞ்சகமாகக் கொடுத்தவர் அவர். அவரது இசையமைப்பில் எனக்குப் பிடித்த பாடல்களைப் பட்டியல் இடுவதென்றால் இந்த இடம் போதாது. ஒரு பதிவே நான் தனியாக எழுதியாகவேண்டும். நீங்கள் இளையராஜாவின் ரசிகையாக இருந்தும், என்னைப் போன்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சவுக்கடியாக எழுதியதற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்!
எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே விறுவிறுவென முன்னேறி, பலரும் விரும்பிப் படிக்கும் வலைப்பூவாக மாற்றியிருக்கிறீர்கள். அதற்கும் என் பாராட்டுக்கள்!

 
On Feb 5, 2010, 9:49:00 AM , ||| Romeo ||| said...

ஒரு சேர இவ்வளவு சந்தோசத்தை இந்த குழந்தை எப்படி தாங்கும் ?? ஓவரா இருக்கோ ???

 
On Feb 6, 2010, 12:19:00 AM , பத்மநாபன் said...

விருதுகள் பதிவிலே அந்த எதிர்குறள் அருமை ( எதிர்ப்பு குரலும் சேர்த்து )..
தாத்தாவை விட்டுட்டு ''அம்மா'' வை புடிச்சிட்டிங்க ... விட்டுருங்க அவங்க ஒய்வு எடுத்து,எடுத்து ''டயர்டா'' இருக்காங்க.
அப்புறம் சிறப்புகள் கூடியமைக்கு வாழ்த்துக்கள் ..'' பேர் போட்டி ''பரிசுக்கு வாழ்த்துக்கள் .. ( முதல் வாழ்த்து ''உங்கள் ரசிகன்'' பின்னூட்டத்தில் அப்பவே ) ...

 
On Feb 9, 2010, 11:31:00 AM , ஆதி மனிதன் said...

‘கமென்ட் குயின்’ - க்கு கமெண்டா?

//“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!” //

சூப்பர் கமென்ட்.

 
On Feb 9, 2010, 12:47:00 PM , பேநா மூடி said...

ஆமா.., பொரட்சி தலைவி பத்தி எழுதும் போது மட்டும் ஏங்க பச்ச கலர் எதும் உள்குத்து இருக்கா...

நம்ம ஊர்ல விருதெல்லாம் குச்சு மிட்டாய் கணக்கா மாறி பல வருஷமாச்சு தாயி

 
On Feb 9, 2010, 12:48:00 PM , பேநா மூடி said...

பதிவு எழுதி கொஞ்ச நாளுலயே நீங்களும் நெறய விருது வாங்கிட்டிங்களோ

 
On Feb 10, 2010, 4:14:00 PM , பின்னோக்கி said...

சரிங்க. நீங்களும் ரெண்டு கிராமி வாங்கிட்டீங்க. அதுனால உங்களுக்கும் பூஷண் குடுக்க சொல்லிடுவோம்.

அம்மாவை விமர்சனம் செய்து எழுதிய படித்துறை உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 
On Feb 11, 2010, 7:22:00 PM , கிருபாநந்தினி said...

+ ‘ஆறாவது’ வேண்டான்னுவாங்களா பட்டர்ஃப்ளை சூர்யா? :)

+ விஜய்யை நான் கலாய்க்கிறேனா? அடடா! மனச புண்படுத்திட்டீங்களே பிரியமில்லாத வசந்த்? :) நான் விஜய்யோட பரம ரசிகை ஆச்சுங்களே!

+ \\மற்றவர்களும் உங்களைப்பார்த்து கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.// இதானே வேணாங்குறது..! வீணா லந்து பண்ணாதீங்க வி.நா.வெங்கடராமன்!

+ சத்ரியன் வாழ்த்து சத்திய வாழ்த்தா இருக்கும்னு நம்பறேன்! நன்றி சத்ரியன்!

+ நேரம் ஒதுக்கி நீண்ட பின்னூட்டம் இட்டு ஊக்குவித்தமைக்கு ரொம்ப நன்றி ரவிபிரகாஷ் சார்!

+ ரோமியோ! கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டிருக்கு! :)

+ நன்றி பத்மநாபன்!

+ ஆதி மனிதன் பாராட்டினா பாதி ராஜ்யம் கிடைச்ச மாதிரி! :)

+ \\ஆமா.., பொரட்சி தலைவி பத்தி எழுதும் போது மட்டும் ஏங்க பச்ச கலர் எதும் உள்குத்து இருக்கா...// ஐயையோ! எதேச்சையா நடந்து போச்சுங்ணா! வம்புல மாட்டி விட்ராதீய! பேநா மூடின்னு பேர வச்சுக்கிட்டு பேனா முனையால பேர்த்துராதீக என்னய!

+ பேநா! எல்லாம் உங்க ஆசீர்வாதங்ணா!

+ ஏங்க பின்னோக்கி! சிபாரிசு பண்றதுதான் பண்றீங்க, பூஷணும் பூசணிக்காயும் எதுக்குங்க? பேசாம பாரத ரத்னாவுக்கே என்னை சிபாரிசு செஞ்சா கொறைஞ்சா போயிடுவீங்க? :) அப்புறம்... மன்னிப்பு... தமிழ்ல, தெலுங்குல, இந்தியில, மலையாளத்துல, கன்னடத்துல, உருதுல, அரபில, துளுல, போர்த்துக்கீசிய மொழியில, இரானியில, இங்கிலீஷ்ல, சான்ஸ்க்ரிட்ல.. சகலத்துலயும் எனக்குப் பிடிக்காத வார்த்தைங்க அது! :))

 
On Feb 12, 2010, 4:12:00 PM , ரோஸ்விக் said...

இதையும் முடிஞ்சா படிங்க நந்தினி. :-) உங்களை இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.


http://thisaikaati.blogspot.com/2010/01/vikatanname.html