Author: கிருபாநந்தினி
•Sunday, January 17, 2010
க பதிவர் IIIரோமியோIIIவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - பத்து நாளாக நான் எதுவும் எழுதவில்லையே என்று அக்கறையோடு விசாரித்ததற்காக!

ன்னிக்கு எம்.ஜி.ஆரோட 94-வது பிறந்த நாள். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர்னெல்லாம் போற்றப் படும் அவருடைய பொற்கால ஆட்சியில்தான் நான் பிறந்தேன். நான் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது தான் அவர் மறைஞ்சாரு. அவரோட படம் எதையும் நான் தியேட்டர்ல போய்ப் பார்த்ததில்லை. டி.வி-யில துண்டுத் துண்டுக் காட்சிகளா சிலது பார்த்திருக்கேன். மத்தபடி அவரைப் பத்தி சொந்தமா எதுவும் எழுதுறதுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ கிடையாது. காந்தி, காமராஜர் போல இன்னிக்கும் அவர் மக்கள் மனசுல ஒரு ஐகானா நெறைஞ்சிருக்காருங்கிறது மட்டும் தெரியுது. எங்கே திரும்பினாலும் அவரோட பாடல்கள்தான் கேட்குது. படத்துல ஒரு மாதிரி, நெஜத்தில ஒரு மாதிரின்னு ரெட்டை வாழ்க்கையை அவர் வாழலை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்’னு படத்துல அவர் பாடினார். நெஜமாவே அவர் ஆட்சியைப் பிடிச்சு, முதலமைச்சரானதும் அவர் ஆட்சியில் ஜனங்க ரொம்ப சந்தோஷமாதான் இருந்தாங்கன்னு அப்பா சொல்வார். எம்.ஜி.ஆர். மட்டும் இன்னும் உயிரோட இருந்திருந்தா, இன்னிக்கும் அவர்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சரா இருந்திருப்பாருன்னு அடிச்சுச் சொல்வார் அப்பா.

வாழ்ந்துக்கிட்டிருந்தாலும் சிலர் மறைஞ்சு போயிடறாங்க; மறைஞ்சாலும் சிலர் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அப்படி, இன்னிக்கும் மறையாம மக்கள் மனசுல வாழ்ந்துக்கிட்டிருக்கிறவர் திரு.எம்.ஜி.ஆர். இதுக்கும் மேல இந்தச் சின்னவளுக்குச் சொல்லத் தெரியலே!

‘காலத்தை வென்றவன் நீ... காவியமானவன் நீ...
வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ... நீ... நீ..!’

ன் முந்தைய ஒரு பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்த ‘பின்னோக்கி’, என் பெயர் பேப்பர்ல வந்திருக்கிறதா சொல்லி, அதுக்குத் தன்னோட வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். அதுக்கு அடுத்த பதிவுல ‘ஆதிமனிதன்’, தினமணி பேப்பர்ல ‘வலையுலகப் படைப்பாளிகள்’ங்கிற தலைப்புல வந்த கட்டுரையிலிருந்து சில வரிகளை எடுத்து எனக்குப் பின்னூட்டமா போட்டு வாழ்த்துச் சொல்லியிருந்தார்.

//சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். // இதான் அந்த வரிகள்.


‘நெஜம்மாவா, நெஜம்மாவா? என்ன வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலையே?’ன்னு யோசிச்சேன். அப்புறம், ‘இட்லி வடை’யிலும் அந்தக் கட்டுரையை முழுசா போட்டிருந்தாங்க. அப்பவும் எனக்கு ஆறலை. கிருபாகிட்ட சொல்லி ஜனவரி 1-ந் தேதி ‘தினமணி’ பேப்பர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அதுல என் கண்ணால பார்த்ததுக்கப்புறம்தான், ‘ஆஹா... நம்மளையும் ஒரு பெரிய மனுஷியா மதிச்சுப் போட்டிருக்காங்களே! நாம என்னமோ நம்ம மனசுக்குத் தோணுறதைக் கிறுக்கிட்டுப் போற கிறுக்கியாட்டம் நெனச்சிக்கிட்டு இருக்கோம். அதைக்கூட ‘ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகள்’ லிஸ்ட்ல சேர்த்திருக்காங்களே!’ன்னு நெஜம்மாவே சிலிர்த்துப் போயிட்டேன் நான்.

சந்தோஷமா இருந்தது. ‘தினமணி’காரங்களுக்குதான் எம்மாம் பெரிய மனசுன்னு தோணுச்சு. அதே சமயம், அந்த லிஸ்ட்ல இருக்கிற மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிச்சவங்க; உலக அனுபவம் வாய்ஞ்சவங்க. குறிப்பா தமயந்திக்கா, விக்னேஷ்வரி தங்கச்சி இவங்கள்ளாம் ரொம்ப நல்லா எழுதுறாங்க. கவிதை, சமூகப் பிரச்னைன்னு அலசுறாய்ங்க. எனக்கு அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நான் ஏதோ பொழுதுபோக்கா என் மனசுக்குத் தோணுனதைக் கிறுக்கிக்கிட்டிருக்கேன். “பிரபாகரனுக்கும் வீரமணிக்கும் வித்தியாசம் தெரியாத நீ அம்புலிமாமா பத்தி விமர்சனம் எழுதக்கூட லாயக்கு இல்லை”ன்னு துருவன் அண்ணாச்சி பின்னூட்டத்துல சொல்லியிருந்தாரு. எனக்குக் கோபமே வரலை. சரிதானே அவர் சொன்னது? எனக்கே தெரிஞ்ச விஷயம்தான்! அப்படியிருக்கிறப்போ தமயந்தி, (தமயந்தியக்காவுக்கு ஆனந்த விகடன் பத்திரிகை ‘சிறந்த பண்பலை தொகுப்பாளினி’ விருது வழங்கிக் கௌரவிச்சு, போட்டோவும் போட்டிருந்ததைப் பார்த்ததும், சந்தோஷமா இருந்துது. அவங்க கதை எழுதுவாங்கன்னு தெரியும். காம்பியர் பண்ற விஷயமெல்லாம் தெரியாது. தமயந்திக்கா! கங்கிராஜுலேஷன்ஸ்!) விக்னேஷ்வரி, ராமலக்ஷ்மியோடல்லாம் சேர்த்து என் பெயரும் பேப்பர்ல வந்துச்சுன்னா சும்மாவா? எவ்ளோ பெரிய அங்கீகாரம் இது! அதான் சொன்னேன் கிருபா கிட்ட, இன்னியிலேர்ந்து தினகரனை நிறுத்திட்டு ‘தினமணி’ பேப்பர் வாங்க ஆரம்பிக்கலாம்னு! “இதெல்லாம் ரொம்ப ஓவரு!”ன்னு சிம்பிளா ஒரு பதிலைச் சொல்லிட்டுப் போயிட்டாரு.

எது எப்படியோ, தினமணிக்கு ஒரு தேங்க்ஸ்!

திருநெல்வேலி பக்கம் வெற்றிவேல்ங்கிற ஒரு போலீஸ்காரரை நடுரோட்டுல கண்ணுமண்ணு தெரியாம வெட்டிப் போட்டுட்டுப் போயிருக்காங்க சில பேர். வெற்றிவேல் உயிருக்குப் போராடிக்கிட்டிருந்தப்போ அந்தப் பக்கமா நாலஞ்சு கார்ல வந்த அமைச்சருங்க எட்டத்துலேயே நின்னுக்கிட்டு, வேடிக்கை பார்த்துட்டிருந்தாங்களாம்! என்னடா உலகம் இதுன்னு வயித்தெரிச்சலா இருந்தது. ஏதோ ஒரு பிளாக்ல இது பத்திப் படிச்சேன். அதுல, அந்த போலீஸ்காரர் துடியாய்த் துடிப்பதையும், அமைச்சருங்க கையக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்ப்பதையும் வீடியோ படம் எடுத்த போட்டோகிராபரையும் தாளிச்சு எழுதியிருந்தாங்க. அடிபட்டவனுக்கு உதவி செய்யாம படம் எடுத்திட்டிருக்கானே, அவன் மனுஷனா அரக்கனான்னு கேட்டிருந்தாங்க. வீடியோ படம் எடுத்தவரைத் தப்பு சொல்ல எனக்குத் தோணலை. அமைச்சருங்க, அத்தனை அதிகாரிங்க, ஏகப்பட்ட போலீஸ் உயரதிகாரிங்க எல்லாரும் இருந்தும், யாருமே எதுவும் செய்யாதப்போ, இந்த வீடியோகிராபர் மட்டும் என்ன பண்ணிட முடியும் அந்த நேரத்துல? அவர் கடமை, வீடியோ எடுக்கிறது. அதைச் சரியா செய்திருக்கார். அப்படிச் செய்ததுனாலதான் மரம் மாதிரி நின்னுட்டிருந்த இந்த மரத் தமிழர்களின் யோக்கியதை ஊர் உலகத்துக்குத் தெரிய வந்துச்சு. அவங்கவங்களும் அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, அதுவே போதும்! அந்த வீடியோகிராபரை நான் பாராட்டுறேன்!

ஹைதி தீவுல பூகம்பம் ஏற்பட்டு, ரெண்டு லட்சம் பேர் இறந்துட்டாங்கன்னு பேப்பர்ல படிச்சப்போ, பக்குனு இருந்துச்சு. கடவுளுக்கு இரக்கமில்லையானு கேக்குறது வீண் வேலை. நம்ம சௌகரியத்துக்கு நாமளா ஏற்படுத்திக்கிட்ட பணம் (ரூபாய்த் தாள்) எப்படியோ, அப்படித்தான் கடவுளும்! மன அழுத்தத்திலிருந்து நாம விடுபட, எதிர்காலத்தில் இந்தக் கஷ்டங்கள் எல்லாம் விலகி நல்லதே நடக்கும்னு ஒரு தைரியம் பிறக்க, நம்பிக்கை கொள்ள, நாமளா ஏற்படுத்திக்கிட்ட ஒரு விஷயம்தான் கடவுள்! (ஆஹா..! கெளம்பிட்டாய்யா கிருபாநந்தினியானந்தம்மா!) பசிக்குச் சோறு கிடைக்காதப்போ, இத்தனை ரூபாய்த் தாள்களைச் சேர்த்து வெச்சிருந்தும் இத்தைத் தின்னு பசியை ஆத்திக்க முடியலையேன்னு பணத்தை வெறுக்கிறது எப்படியோ, அப்படித்தான் இயற்கைப் பேரழிவுகள் வர்றப்ப கடவுளைத் திட்டுறதும்! இங்கே சுனாமி, அங்கே பூகம்பம்னு பேரழிவுகள் வர்றப்ப எல்லாம் மனசு கஷ்டப்படுறது தவிர, எனக்கு வேற வழி தெரியலை! எங்கேயோ நடந்தாலும் அவங்களும் நம்மைப் போல மனுஷங்கதானே! ஒரு தடவை, பூகம்ப போட்டோக்கள் ஒண்ணுல, இடிபாடுகளுக்கிடையில ஒரு குழந்தையின் கை வெளியே நீட்டிக்கிட்டிருக்குற மாதிரி படம் ஒண்ணு பார்த்தேன். சத்தியமா சொல்றேன், அன்னிக்கு எனக்குச் சோறே திங்கப் பிடிக்கலை.

மு
த்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா சில சமயம் தெரிஞ்சுதான் பேசுறாரா, இல்ல, அவரை அறியாமயே வாய்ல வந்ததைச் சொல்லித் தொலைச்சுடறாரான்னு புரிய மாட்டேங்குது! “நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!”ன்னு சொல்லியிருக்கார். நல்ல காலம் எது, கெட்ட காலம் எதுன்னு பிரிச்சுப் பார்க்குற பகுத்தறிவு(!) முத்தமிழ் அறிஞருக்கு இருக்குறது பத்திச் சந்தோஷம்தான்! ‘என் தலைவிதி, இவ எல்லாம் கிண்டல் பண்ணி நான் கேட்டுக்கணும்னு இருக்கு!’ன்னுகூட ஐயா சொல்லலாம்; ‘இதெல்லாம் என் தலைவிதி’ன்னு ஏற்கெனவே சொன்னவர்தானே!

சரி, அத்த விடுங்க! பாயிண்ட்டுக்கு வருவோம். ‘நல்ல காலம், பெரியார் அரசியலுக்கு வரலை!’ன்னு ஏன் சொன்னார் கலைஞர் ஐயா, எதனால அப்படிச் சொன்னார்னு ரெண்டு நாளா என் மண்டைக்குள்ள சிந்தனைப் பூரான்கள் பிறாண்டிக்கிட்டே இருந்துச்சு. (ஹையா! நானும் கொஞ்சம் இலக்கிய நயத்தோட எழுத ஆரம்பிச்சுட்டேன்ல? வேறென்ன, வசிஷ்டர் ‘தினமணி’ கையால் குட்டு!)

என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சுப் பார்த்ததுல, கீழ்க்கண்ட யோசனைகள் வந்துச்சு.

* பெரியார் அரசியலுக்கு வந்திருந்தா, அப்படியே ஆட்சிப் பொறுப்பு மணியம்மை, ஈ.வி.கே.சம்பத்னு கை மாறி, கடைசியா பெரியாரின் பேரப்புள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கைக்கு வந்து, அவர் முதலமைச்சராகி, தான் அவர்கிட்டே சீட்டு கேட்டுக் கையேந்தி நிக்க வேண்டி வந்திருக்குமேன்னு கலைஞர் ஐயா யோசிச்சுப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கலாம்.

* அல்லது, “வாரிசு அரசியல் கூடாதுன்னுட்டுச் சொன்னவர் பெரியார். அரசாங்க பணத்தைத் தானும் திங்காம, மத்தவங்களையும் திங்க விடாம பண்ணியிருப்பாரே மனுஷன்! புள்ளைங்க, பொண்ணுங்க, பேரப் புள்ளைங்கன்னு எல்லாருக்கும் இப்ப மாதிரி சப்ஜாடா செட்டில் பண்ணி வைக்க முடியாமத் திண்டாடித் தெருவுல நின்னிருப்பேனே நானு”னு நெனைச்சு கலைஞர் ஐயா அப்படிச் சொல்லியிருப்பாரோ!

* ‘எம்.ஜி.ஆரை எதிர்த்துக்கிட்டுப் பதிமூணு வருஷத்துக்கு ஒண்ணுமே பண்ணாம சும்மாக் கெடந்தோம்; பெரியாரும் தன் பங்குக்கு அரசியலுக்கு வந்திருந்தார்னா, அவரையும் எதிர்த்துக்கிட்டு இன்னும் பதினஞ்சு வருஷம் காணாம போயிருப்பமேடா சாமி’(அந்த சாமி இல்ல; ஈ.வே.ராமசாமி!)ன்னு நெனச்சுப் பீதியில அப்படிச் சொல்லிட்டாரோ?

* பெரியாருக்குச் சினிமான்னாலே புடிக்காது. அவர் இருந்திருந்தார்னா,
பாசக் கிளிகள், உளியின் ஓசை போன்ற காவியங்களைப் படைச்சிருக்க முடியுமா? அல்லது, சினிமாக்காரங்களை விட்டு இப்படி விழா கொண்டாடிக்கத்தான் முடியுமா? சும்மா இல்லாம எதையாவது சொல்லி வைப்பாரே மனுஷன்! இப்படி நினைச்சுத்தான் அப்படிச் சொன்னாரோ ஐயா!

* தமிழ் காட்டுமிராண்டி மொழின்னு சொன்னவரு பெரியார். புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கணும்னு சொன்னவரு. அவர் அரசியலுக்கு வந்திருந்தா, பய புள்ளைக தமிழ்ப் பற்றோட இல்லாம ஆங்கிலம் பேசிக்கிட்டுத் திரிஞ்சிருக்குமே! அப்புறம் நாம எப்படி தமிழ் உணர்வைக் காட்டுறது? தமிழ்ல பேர் வெச்சா எந்தக் குப்பைப் படத்துக்கும் வரிவிலக்கு, தமிழைச் செம்மொழியாக்குறேன், செம்மொழி மாநாடு நடத்தப்போறேன்னெல்லாம் ஆட முடியாதே! ‘முத்தமிழ் அறிஞரே’ன்னு இப்ப மாதிரி தன்னைக் கூச்ச நாச்சமில்லாம எவன் புகழ்வான்?

கலைஞர் ஐயா என்ன நெனச்சு அப்படிச் சொன்னாரோ, அதை அவரே பின்னாடி விளக்குவாரு. இப்படித்தான் வில்லங்கமா எத்தையாவது சொல்லி, நம்மையெல்லாம் மண்டையைப் பிச்சுக்க வெச்சு, அப்புறமேல்ட்டு சாவகாசமா ரோசனை பண்ணித் தானும் புரிஞ்சுக்கிட்டு, நமக்கும் புரிய வைப்பாரு. அதான் அவர் வழக்கம். அதுவரைக்கும் யார் யாருக்கு எப்படி எப்படியெல்லாம் தோணுதோ, அப்படியப்படி கற்பனை பண்ணிக்கிட்டே இருங்க. ஜாலியா பொழுது போவும்! அந்த ரெண்டு அமைச்சருங்க, அதாங்க மரத் தமிழருங்க பண்ணின காரியம் மறந்துரும்!
.
|
This entry was posted on Sunday, January 17, 2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Jan 17, 2010, 10:52:00 PM , Romeoboy said...

நல்ல வேலை இது மொக்கை பதிவு இல்ல. அதனால நான் தப்பிச்சேன். ரொம்ப நன்றிங்க..

\\ அவர் கடமை, வீடியோ எடுக்கிறது. அதைச் சரியா செய்திருக்கார். அப்படிச் செய்ததுனாலதான் மரம் மாதிரி நின்னுட்டிருந்த இந்த மரத் தமிழர்களின் யோக்கியதை ஊர் உலகத்துக்குத் தெரிய வந்துச்சு. அவங்கவங்களும் அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, அதுவே போதும்! அந்த வீடியோகிராபரை நான் பாராட்டுறேன்//

விலங்குகளை பற்றி டாக்குமெண்டரி படம் எடுப்பவர்கள் அவைகள் செய்யும் கொலைகளையும்(வேட்டை) எடுகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் பார்வையில் அது ஒரு 5 அறிவு படைத்த ஒரு உயரினம் அதை தனது கேமராவில் பதிவு செய்து டிவிக்கு விற்பனை செய்து சம்பாதிர்கிரர்கள் . ஒரு சிங்கம் மானை வேட்டை ஆடும் போது அதை தூர நின்று கேமராவில் படம் பிடிப்பது டாகுமெண்டரி அதே சக மனிதன் வீழ்ந்து கிடக்கும் போது அதை படம் எடுக்கும் இவரை என்னவென்று சொல்ல்வது?? என்னை பொருத்தவரை அந்த கேமராமேன் தான் மிக பெரிய கொலைகாரன். அவர் உதவி என்று அலறும் போது கேமராவில் அதை பதிந்து கொண்டு இருந்த நேரத்தில் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து இருந்தால் ஒருவேளை அவர் உயிர் பிழைத்து இருப்பார் தானே?? அங்கு இருந்த மற்றவர்களும் அதற்கு உடந்தை தான்.

 
On Jan 18, 2010, 4:11:00 PM , பின்னோக்கி said...

//மரம் மாதிரி நின்னுட்டிருந்த இந்த மரத் தமிழர்களின்

அருமை.

எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே, எம்.ஜி.ஆர், பெரியார், கலைஞர் மூணு பேர் பத்தியும் ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு எப்படி சொல்றது.

ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா ? இயற்கை பேரழிவுகள் அதிகமாக நடக்கும் மாதங்கள் டிசம்பர்-ஜனவரி. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 
On Jan 19, 2010, 2:25:00 AM , PADMANABAN said...

வணக்கம் ,
பொன்மனசெம்மல் , புரட்சி தலைவரை பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிங்க .. அவருடைய பாடலை வைத்து சட்டசபையில் 'என்னைத்தான்'' இல்லையில்லை என்னைத்தான் '' என்று ஒரே காமெடி பார்த்திருப்பீர்கள் ....

தினமணிகதிர் '''ஹை நான் பாஸ் ஆயிட்டேன் ''' உற்சாக துள்ளலுக்கு வாழ்த்துக்கள் ..''' வாங்கிட்டு வாங்க்ன்ன வாங்க'', கிருபா தினமணி தேடி புடிக்க சிரம பட்டிருப்பார்னு நினைக்கிறேன் அவர்க்கும் வாழ்த்துக்கள்.

ஹைடி பூகம்பம் பெரும் மனித சோகம்... சில விஷயங்களுக்கு காரணம் கண்டுபிடிக்க முடிவதில்லை , அது பேரறிவிற்கு போய்விடுகிறது
அந்த கை பார்த்து உணவு இறங்காத நிலை தான் ''சாமி'' தத்துவமாக இருக்கிறது . கடவுள் தான் நம்மை வைத்திருக்கிறது.. இந்த மாபெரும்
ராட்சத ராட்டின விளையாட்டில், நாம் ஒவ்வொரு நொடியும் நிலை தடுமாறாமல் உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பது தான் செய்தி .

மந்திரிகளுக்கு , அந்த கணக்கு ,இந்த கணக்கு சிந்தனையே இருக்கறப்ப .. யார் போனா இவர்களுக்கு என்ன ?நீங்க வைரமுத்துவின் 'மரம்''
பற்றிய கவிதை படித்திருந்தால் , மரத்தை உதாரணமாக பயன்படுத்தி இருக்க மாட்டிர்கள் ...

அப்புறம் தாத்தாவையும் அவருடைய பகுத்த அறிவையும் புடி புடின்னு புடிச்சிட்டிங்க... அவருதான் கோயமுத்தூர் வந்துட்டு போனவுடனே வீட்டுக்கு போய் ஒய்வு எடுக்கிறேன் சொல்லிட்டாருல்ல ........
(
எப்படித்தான் மட மடன்னு பதிவுகளை போடறிங்களோ ... தொடர வாழ்த்துக்கள் . நானும் சின்னதா ஒரு வலை போட்டிருக்கிறேன் .. இப்போதைக்கு போக்குவரத்து தொந்தரவு இல்லாமல் '', நிலா..... வானம் காற்று , மழை''ன்னு போயிட்டு இருக்கிறேன் ...welcome ... சின்ன விசிட் அடிக்கலாம் , அதில் செயற்கை மீன் தொட்டியில் மீன்களுக்கு மௌஸ் பொரி வைக்கலாம் ... கச்சா எண்ணை விலை பார்க்கலாம் , you tube car பயணம் போகலாம் அப்படியே LKG UKG பதிவுகளையும் பார்க்கலாம் )

 
On Jan 19, 2010, 11:52:00 AM , ஆதி மனிதன் said...

//...பெரியார் அரசியலுக்கு வந்திருந்தா, அப்படியே ஆட்சிப் பொறுப்பு மணியம்மை, ஈ.வி.கே.சம்பத்னு கை மாறி, கடைசியா பெரியாரின் பேரப்புள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கைக்கு வந்து,.......//ஆமா இந்த வீரமணிய விட்டுட்டீங்க? அப்படி ஒன்னு நடந்திருந்தா இந்த வீரமணிய மீறி வேறு யாரும் பெரியாருக்கு வாரிசா வந்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். நல்ல வேலை அப்படி ஒன்னு நடக்கலை.

பாத்து சூதானமா இருந்துக்கங்கக்கா... வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட போறாங்கோ.

 
On Jan 19, 2010, 10:56:00 PM , creativemani said...

நான் சின்னப் பிள்ளையாய் இருந்தபோது, ஒரு தடவை எங்கள் ஏரியாவில் பிளாஸ்டிக் குடம், இலவச ரிக்க்ஷா எல்லாம் கொடுத்தார்கள்.. என்னன்னு கேட்டப்போ, தலைவர் MGR தந்ததுன்னு ஒவ்வொருத்தரும் பெருமை பொங்க சொன்னது இன்னும் எனக்கும் ஞாபகம் இருக்குங்க.. உண்மையில் அவர் போற்றப்பட வேண்டிய தலைவரே..

நானும் தினமணி செய்தி பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.. (லேட் பட் லேட்டஸ்ட்.. இது நம்ம தலைவர் போல..)

ஹைதி பூகம்பம் வருத்தமான சம்பவம்தான்..

அநாகரீகப் பின்னூட்டங்களுக்கு வழிவகுக்கும், அரசியல் வேண்டாம்னு எனக்குப் படுது.. முடிவு உங்கள் கையில்..

 
On Jan 19, 2010, 11:00:00 PM , creativemani said...

பின்னோக்கி Said....
//
ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? இயற்கை பேரழிவுகள் அதிகமாக நடக்கும் மாதங்கள் டிசம்பர்-ஜனவரி. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
//
பின்னோக்கி சார்..
நானும் இதை யோசிச்சேன்.. நீங்களும் அதைப் பற்றி கேட்டிருப்பது ஆச்சர்யம் அளித்தது..

 
On Jan 20, 2010, 10:44:00 AM , தமிழ் உதயம் said...

அரசியல வைச்சு காமெடி பண்றதுல துக்ளக் சோவை தூக்கி சாப்பிட்டுட்டீங்க

 
On Jan 20, 2010, 10:22:00 PM , kanagu said...

MGR unmaiyilaye periya thalaivar than... athuvum makkal nayagan apdina athu avar than :) :)

dinamani-yil paratapattamaikku vazthukkal :) :)

kalaingar news thool... sema comedy... :) :) avar adutha comedy piece-ah aayitar :)