Author: கிருபாநந்தினி
•Tuesday, December 01, 2009
னக்கு அப்போ 17 வயசு இருக்கும். துறுதுறுன்னு இருப்பேன். புஸ்தகங்கள்ல நிறைய்ய கதைங்க படிப்பேன். பெரும்பாலும் ஒரு பக்கக் கதைங்கதான் படிப்பேன். அனுராதாரமணன், தேவிபாலா, பாலகுமாரன் சிறுகதைகள்னா உடனே படிச்சுடுவேன். அதுதான் புரியும். ஜெயகாந்தன், சுஜாதால்லாம் புரியாது. இப்பவும்.

இப்படியே காலம் நல்லபடியே போயிட்டிருந்தது. ஒரு நாள் விதி விளையாடிடுச்சு. நான் என்னையும் ஒரு அனுராதாரமணனா கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தேன். ‘நானும் சிறுகதை எழுத்தாளராகணும்!’

உடனே உக்காந்து யோசிச்சேன். பரபரன்னு தலையைச் சொறிஞ்சேன். புராணத்துலேர்ந்து ஒரு ஐடியாவை உருவினேன். மடமடன்னு ஒரு கதையாக்கி, அதுக்கு ‘எனக்காக... என் மகனுக்காக...’ன்னு தலைப்பு வெச்சு ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். ஒரு மாசமாச்சு, ரெண்டு மாசமாச்சு... ஒரு தகவலையும் காணோம்! சூப்பர் கதையாச்சே, இதை இத்தனை நேரம் புஸ்தகத்துல போட்டிருக்கணுமேன்னு யோசனை வந்தது. கடிதம் எழுதிக் கேட்டேன். ‘தங்கள் சிறுகதை பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவுகளைத் தெரிவிக்கிறோம்’னு பிரிண்ட்டட் பதில் வந்தது. சரின்னு விட்டுட்டேன்!

ஆறு மாசமாச்சு! ஒரு முடிவும் தெரியலை. மறுபடி லெட்டர் போட்டேன். அப்பவும் அதே பதில்! ‘அடப் போங்கடா’ன்னு அதே கதையை காப்பி எடுத்து குமுதத்துக்கு அனுப்பினேன். அங்கேர்ந்தும் பதிலே இல்லை. மூணு மாசம் கழிச்சு என் கதை என்னாச்சுன்னு கேட்டு லெட்டர் போட்டேன். லெட்டருக்கும் பதில் இல்லை. மறுபடியும் அதே கதையை வேற காப்பி எடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படி அந்தக் கதை எல்லாப் பத்திரிகைக்கும் ஒரு ரவுண்டு போயிருச்சு. எங்கேர்ந்தும் திரும்பலை. எந்தப் பத்திரிகைலயும் பிரசுரமாகவும் இல்லை. வெறுத்துட்டேன்.

ஒண்ணு, பிடிச்சிருந்தா பிரசுரிக்கணும்; பிடிக்கலேன்னா, ‘இந்தாம்மா! உன் கதை பிரசுரிக்கிற அளவுக்கு ஒண்ணும் உசத்தியாயில்லை. நீயே வெச்சுக்கோ’ன்னு திருப்பியாச்சும் அனுப்பணும். இப்படிக் கிணத்துல கல்லு போட்டாப்ல அமுக்கமா இருந்தா எப்படி? அத்தோட ‘சரிதாம் போங்கடா’ன்னு விட்டுட்டேன்!

எனக்குக் கல்யாணமானபோது சீர் செனத்தியோடு, என் கதையையும் ஒரு கவர்ல போட்டு எங்கூட அனுப்பி வெச்சுட்டாங்க. அத்த ஒரு நாளு எங்கூட்டுக்காரரு எடுத்துப் படிச்சுட்டாரு. “ஹை! கத சூப்பரா இருக்கே! நல்லாத்தான் எழுதுற. இத ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புறதுதானே?”ன்னு வெவரம் புரியாம கேட்டாரு. நான் என்னத்தச் சொல்ல? கிணத்துல கல்லு கதையத்தான் சொன்னேன்.

“பரவால்ல. மறுபடியும் அனுப்பிப் பாரு. அப்ப இருந்தவங்களுக்குப் புடிக்காம இருந்துருக்கலாம். இப்ப படிக்கிறவங்க இதுல உள்ள அருமையப் புரிஞ்சுக்குவாங்க”ண்ட்டு, அவரே அங்கங்க கதையில கொஞ்சம் கை வெச்சு செப்பனிட்டு, தலைப்பையும் மாத்தி அனுப்பி வெச்சாரு.

அதுக்கு நல்ல பலன் இருந்துது. அட, அவசரப்படாதீங்க! சட்டுனு போன வேகத்துல கதை திரும்பி வந்துடுச்சு! மறுபடி வேற பத்திரிகைக்கு அனுப்பினாரு. அங்கேர்ந்தும் திரும்பிடுச்சு. எனக்கு அழுகை அழுகையா வந்துது. “வேணாம், விட்டுருங்க. என் மானம் போவுது!”ன்னாலும் கேக்க மாட்டேன்னுட்டாரு.

திருப்பியும் ஒரு ரவுண்டு எல்லா பத்திரிகைக்கும் அந்தக் கதை போயித் திரும்பிடுச்சு. முன்னே அதுங் கதி தெரியவே இல்லை. இப்ப அந்தக் கதை யாருக்கும் பிடிக்கவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!

“விடு நந்தினி! ஒரு நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்திக்க அந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பினை இல்லை”ன்னு கண்ணத் தொடச்சு விட்டாரு. “ஆனா, அதுக்காக நீ சோர்ந்து போயிராத! கஜினி முகம்மது 17 தடவை படையெடுத்து 18-வது தடவைதான் வெற்றி பெற்றாரு! இத்தத் தூக்கிப் போட்டுட்டு இன்னொரு கதை எழுது”ன்னாரு.

“அடப் போங்க! இன்னும் எத்தன காலத்துக்குதான் கஜினி உதாரணத்தையே சொல்லிட்டிருப்பீங்க. கஜினி படமே வந்துருச்சு”ன்னேன். “சரி, வேற உதாரணம் சொல்றேன். உனக்குப் புடிச்ச லக்ஷ்மிம்மா 100 கதைங்க எழுதிப் பிரசுரமாகாம, 101-வது கதைதான் பிரசுராமாச்சாம்”னாரு. “ஐயையோ! 100 கதை எழுதுற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது சாமி! வேணாம், நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!”ன்னு கையெடுத்துக் கும்புட்டேன்.

“சரி, தமிழ்ப் பத்திரிகைகளுக்குதான் உன் எழுத்தோட அருமை புரியலை. இதை நான் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி, இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறேன்”னு கெளம்பினாரு.

உள்ளூர்ல மானம் போனது பத்தாதா; வெளியூர்லயும் என் பேரு சந்தி சிரிக்கணுமான்னு அவர் கையிலேர்ந்து அந்தக் கதையைப் பிடுங்கி, சுக்கல் சுக்கலா கிழிச்சு ஃப்ளஷ் அவுட்ல போட்டுத் தண்ணிய அடிச்சு ஊத்திட்டேன்!

“சரி, மத்த எழுத்தாளர்கள் பிழைச்சுப் போகட்டும்! விடு கழுதைய”ன்னு அவரும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து அதும் மேல ஊத்தினாரு!

ஆக மொத்தத்துல, எழுத்தாளர்களும் பிழைச்சாங்க; வாசகர்களும் தப்பிச்சாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! எப்பூடி?!!

போன பதிவுல போட்ட புதிர்களுக்கு விடை சொல்றேன்னு சொல்லியிருந்தேனில்லையா... இதோ!

புதிர் 1: ஸ்ரேயா சிவப்பு நிற டிரெஸ் போட்டிருக்காங்க. அதனால அவங்க ‘சிவப்பி’ கேரக்டர்ல நடிக்கலை. சரியா? அவங்க ஒரு விஷயம் சொல்ல, அதுக்கு ‘பச்சையம்மா’வா நடிக்கிற நடிகைதான் பதில் சொல்றாங்க. அதனால, ஸ்ரேயா பச்சையம்மாவாவும் நடிக்கலை. ஓ.கே-வா? ஆக, ஸ்ரேயா ‘நீலா’ங்குற கேரக்டர்லதான் நடிக்கிறாங்க. இனிமே மத்த ரெண்டு பேர் கேரக்டரையும் கண்டுபிடிக்கிறது ஜுஜுபி! அசின் பச்சைக் கலர் போட்டிருக்கிறதால, அவங்கதான் சிவப்பி. த்ரிஷாதான் பச்சையம்மா!

புதிர் 2: ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்குற தூரம் 20 கி.மீ. வடிவேலு, விவேக் ரெண்டு பேரும் 10 கி.மீ. வேகத்துல வந்தாங்கன்னா, சரியா ஒரு மணி நேரத்துல சந்திச்சுக்குவாங்க. பட்டாம்பூச்சியின் வேகம் மணிக்கு 15 கி.மீ. அப்ப அது மொத்தம் 15 கி.மீ. தூரம்தான் பறந்திருக்கும் இல்லையா?

விடைகளைச் சரியாக் கண்டுபிடிச்சவங்க என் சார்பா உங்க முதுகுல நீங்களே தட்டிக் கொடுத்துக்குங்க!


.
|
This entry was posted on Tuesday, December 01, 2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On Dec 2, 2009, 9:04:00 AM , Rekha raghavan said...

நீங்க கதை எழுதின கதை விறுவிறுப்பா இருக்கு.

ரேகா ராகவன்.

 
On Dec 2, 2009, 9:26:00 AM , தமிழ் உதயம் said...

உங்களுக்கு என் கதை சொல்றேன். நானும் ஒரு எழுத்தாளர். (யோகி)மிக பெரிய போராட்டத்திற்கு பிறகு என் கதைகள் வர ஆரம்பிச்சது(190 கதைகள் பிரசுரமாச்சு. இப்ப எழுதல) உங்க படைப்பகள் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா எழுதுங்க. பத்திரிகைல படைப்புகள் வர்றது கஷ்டம் தான்

 
On Dec 2, 2009, 10:08:00 AM , SenthilMohan K Appaji said...

அந்தக் கதைய இங்க பிரசுரம் பண்ணியிருக்கலாமே?
புதிராடியவர்களில் எத்தனை பேர் விடை சொன்னாங்க? நிச்சயம் Response அதிகம் வந்திருக்காது என்று நம்புகிறேன். :)

 
On Dec 2, 2009, 10:15:00 AM , வெங்கட் நாகராஜ் said...

எல்லோருக்கும் இருக்கும் இந்த தாகத்தினை பற்றி அழகாக கூறி இருக்கிறீர்கள். கவலைப்படவேண்டாம். உங்கள் வலைப்பூவின் மூலம் நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்களே நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று!

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

 
On Dec 2, 2009, 12:44:00 PM , கமலேஷ் said...

நீங்க புதுசா எழுத ஆரம்பிச்ச ஆள்னு சொன்னா நம்பவே முடியல...
உங்களோடைய எழுத்து நடை அவ்வளவு நேர்த்தியா இருக்கு...
சாதாரண ஒரு நிகழ்ச்சியை (சாதாரணம் இல்ல) எவ்வளவு அழகா எழுதுறிங்க...
கிருபா நந்தினி..கலக்கறிங்க....வாழ்த்துக்கள்...

 
On Dec 2, 2009, 12:44:00 PM , விக்னேஷ்வரி said...

பரபரன்னு தலையைச் சொறிஞ்சேன். //
உடனே நல்ல டாக்டரா பாருங்க நந்தினி.

‘சரிதாம் போங்கடா’ன்னு விட்டுட்டேன்! //
இது நல்ல பிள்ளைக்கு அழகு.

“விடு நந்தினி! ஒரு நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்திக்க அந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பினை இல்லை”ன்னு கண்ணத் தொடச்சு விட்டாரு. //
இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது...

உள்ளூர்ல மானம் போனது பத்தாதா; வெளியூர்லயும் என் பேரு சந்தி சிரிக்கணுமான்னு அவர் கையிலேர்ந்து அந்தக் கதையைப் பிடுங்கி, சுக்கல் சுக்கலா கிழிச்சு ஃப்ளஷ் அவுட்ல போட்டுத் தண்ணிய அடிச்சு ஊத்திட்டேன்! //
ஐ, முடிவு நல்லாருக்கே.

ஆக மொத்தத்துல, எழுத்தாளர்களும் பிழைச்சாங்க; வாசகர்களும் தப்பிச்சாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! எப்பூடி?!! //
சூப்பரப்பு.

உஷா, அப்படியே அந்த கதையை திருப்பி யோசிச்சு எழுதி, ப்ளாக்ல போடுங்கப்பா. நாங்க கமென்ட்டுறோம்.

என்னம்மா புதிர் போடுறீங்க, பெரிய ஆளுங்க நீங்க.

 
On Dec 2, 2009, 5:12:00 PM , புளியங்குடி said...

இப்பகூட நீங்க வந்தா தமிழ் எழுத்து உலகத்த அதகளப்படுத்தலாம். வாலிக்கும் வைரமுத்துவுக்கும் ரிட்டயர்மென்ட் கொடுத்திரலாம்.

 
On Dec 2, 2009, 5:31:00 PM , கிரி said...

நந்தினி செம காமெடி (என் கஷ்டம் உங்களுக்கு காமெடியான்னு கேட்காதீங்க)

//“சரி, மத்த எழுத்தாளர்கள் பிழைச்சுப் போகட்டும்! விடு கழுதைய”ன்னு அவரும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து அதும் மேல ஊத்தினாரு!//

ஹா ஹா இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு :-))

 
On Dec 2, 2009, 6:12:00 PM , மகா said...

//அடப் போங்க! இன்னும் எத்தன காலத்துக்குதான் கஜினி உதாரணத்தையே சொல்லிட்டிருப்பீங்க. கஜினி படமே வந்துருச்சு”ன்னேன்//

அருமையான பதிவு , வெகு இயல்பாக இருக்கிறது ......

 
On Dec 2, 2009, 7:17:00 PM , கிருபாநந்தினி said...

எழுதின கதை இல்லீங், ரேகா ராகவ் சார்! எழுதாத கதை! :)

 
On Dec 2, 2009, 7:21:00 PM , கிருபாநந்தினி said...

ஹைய்யோ யோகி! உங்க கதைங்களை நான் படிச்சிருக்கேன் யோகி! சத்தியமா படிச்சிருக்கேன். ஆனா, ஏதாவது ஒரு கதை சொல்லுன்னு மடக்காதீங்க. தெரியாது. உங்க அட்வைஸுக்கு ரொம்ப தேங்க்ஸ்! எனக்கொரு சந்தேகம், தமிழ் உதயம்கிறது புனைபெயரா? யோகிங்கிறது புனைபெயரா? இரண்டில் எது நிஜப் பெயர்?

 
On Dec 2, 2009, 7:23:00 PM , கிருபாநந்தினி said...

கமலேஷ்! உங்க பாராட்டு எனக்குத் தைரியத்தை ஊட்டுறதுக்குப் பதிலா பயத்தைதாங்க ஊட்டுது! அந்த அளவுக்கெல்லாம் இல்லீங்க. ஏதோ, எனக்குத் தெரிஞ்சதை எழுதறேன். உங்க பாராட்டை என்னை உற்சாகப்படுத்துறதுக்காகன்னு எடுத்துக்கறேன். வாழ்த்துக்களுக்கு தேங்ஸுங்க!

 
On Dec 2, 2009, 7:27:00 PM , கிருபாநந்தினி said...

விக்னேஷ்வரியக்கா! (அக்காவா தங்கச்சியான்னு உங்க புரொஃபைலைப் போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கறேன். அதுவரைக்கும் அக்காவாவே இருங்க!)நீளமான பின்னூட்டம் போட்டு நெகிழ வெச்சுட்டீங்க. கண்ணுல தண்ணி தண்ணியா வருதுக்கா! ஆனா, அந்தக் கதையைத் திருப்பி யோசிச்சு பிளாக்ல போடச் சொன்னீங்க பாருங்க, அப்பத்தான் அழுகை அழுகையா வந்துச்சு!

 
On Dec 2, 2009, 7:28:00 PM , கிருபாநந்தினி said...

புளியங்குடின்னு பேர் வெச்சுக்கிட்டாலும் வெச்சுக்கிட்டீங்க, வயித்துல புளியைக் கரைக்கறீங்களே! ஒரு வார்த்தைல கை காலெல்லாம் ஆடிப் போக வெச்சுட்டீங்களே!

 
On Dec 2, 2009, 7:31:00 PM , கிருபாநந்தினி said...

\\இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு :-))// நான்கூடச் சொன்னேன் கிரி, ‘ஏற்கெனவே நிறையத் தண்ணி ஊத்திட்டேங்க. இன்னமும் ஊத்தாதீங்க’ன்னு. அவருதான் கேக்காம இன்னும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து ஓவரா ஊத்திட்டாரு! :))

 
On Dec 2, 2009, 7:36:00 PM , கிருபாநந்தினி said...

செ.மோ.கே.அப்பாஜி! (உங்களைச் சுருக்கமா எப்படிக் கூப்பிடறதுன்னு சொல்லிடுங்க, ப்ளீஸ்!) என்னாது... அந்தக் கதைய இங்க பிரசுரம் பண்ணியிருக்கணுமா... ஏங்க, நான் ஏதோ நல்லபடியா பிளாக் எழுதிக்கிட்டு, அதை உங்களை மாதிரி நாலு பேர் பார்த்துப் பாராட்டுறது புடிக்கலையா உங்களுக்கு? :)

 
On Dec 2, 2009, 7:39:00 PM , கிருபாநந்தினி said...

வெங்கட் நாகராஜ்! நான் என்னை எழுத்தாளர்னு நிரூபிச்சுட்டேன்னு கூசாம சொல்லி என்னை ஊக்குவிக்கணும்னா உங்களுக்கு எத்தனைப் பரந்த மனசு இருக்கணும்! ஹக்... ஹக்... தொண்டையை அடைக்குதுங்க. வேறில்ல!

 
On Dec 2, 2009, 7:44:00 PM , கிருபாநந்தினி said...

மகா! ஒரு மகா தப்பு நடந்துபோச்சு! இந்தப் பதிவுல விவரிச்ச சம்பவம் நடந்தப்போ ‘கஜினி’ படமே வரலை. இப்ப எழுதுறப்போ உணர்ச்சி வேகத்துல அப்படி எழுதிட்டேன். இப்படித் தப்புத் தப்பா எழுதுறதுனாலதான் என் கதையக் குப்பைக் கூடைக்கு அனுப்பியிருப்பாங்களோ?!

 
On Dec 2, 2009, 10:19:00 PM , SRK said...

ஒரு கதை எழுதி முடித்து அனுப்பிய பின், அதை மறந்து விட்டு அடுத்த கதை எழுத ஆரம்பித்தால் கூடிய சீக்கிரம் அச்சில் பார்க்கலாம்.

 
On Dec 3, 2009, 11:40:00 AM , SenthilMohan K Appaji said...

//* உங்களைச் சுருக்கமா எப்படிக் கூப்பிடறதுன்னு சொல்லிடுங்க, ப்ளீஸ்! **/
சொல்லிடுங்க-னு கொடுத்த மரியாதைக்கு நன்றி. நான் உங்களை விட சின்ன பையன் தான்.
செந்தில்மோகன்-னு சொல்லுங்கோ. அதுவும் பெருசா தெரிந்தால் sm-னு Short-ஆ கூப்டுக்கோங்கக்கா.
//* செ.மோ.கே.அப்பாஜி! **/
ஆனாலும் என் பேர இதுக்கு மேல நீங்க குதறியிருக்க வேணாம்க்கா. கண்ணில் தண்ணி வெச்சிண்டேன் தெரியுமோ? :(

 
On Dec 3, 2009, 7:19:00 PM , பின்னோக்கி said...

கதையின் கதையை ஒரு கதையின் சுவாரசியத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

 
On Dec 3, 2009, 8:00:00 PM , கிருபாநந்தினி said...

ஹை SRK, இது புது டெக்னிக்கா இருக்கே! ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். ஆலோசனைக்கு தேங்க்ஸ்! ஆலோசனை சக்ஸஸ் ஆச்சுன்னா மறக்காம கூப்புட்டு டபுள் தேங்க்ஸ் சொல்லுவேன்!

 
On Dec 3, 2009, 8:04:00 PM , கிருபாநந்தினி said...

ஹாய் எஸ்ஸெம்! இது நல்லாருக்கே! \\கண்ணுல தண்ணி வெச்சுண்டு...// என்னதிது, சின்னப்புள்ளத்தனமா! தொடச்சுக்கோப்பா! மனசு கஷ்டமாயிருக்கோன்னோ!

 
On Dec 3, 2009, 8:06:00 PM , கிருபாநந்தினி said...

பின்னோக்கி, என் கத பத்திரிகையில வராட்டாலும் போகுதுங்க. உங்க பாராட்டே போதும்! அதுவே சந்தோஷம்!